சிவகளிப் பேரலை – 50

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

50. மல்லிகையும் மல்லிகார்ஜுனரும் (சிலேடை)

.

ஸந்த்யாரம் விஜ்ரும்பிதம் ச்’ருதிசி’ரஸ்தானாந்த- ராதிஷ்டிதம்

ஸப்ரேம ப்ரமராபிராம மஸக்ருத் ஸத்வாஸனா சோ’பிதம்/

போகீந்த்ராபரணம் ஸமஸ்த-ஸுமன: பூஜ்யம் குணவிஷ்க்ருதம்

ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்ம் சிவாலிங்கிதம்//

.

அந்திமலரே செவித்தலை சிறப்பே அன்புசூழ்

வண்டழகே எஞ்ஞான்றும் நல்லோர் நறுமணமே

போகியணியே பெருந்தேவர் பூசனையே குணமணியே

தாவியன்னை தழுவிய மல்லிகார்ச்சுன மகாலிங்கமே!   

.

     சிவானந்த லஹரியை ஆதிசங்கரர் அருளிச்செய்த ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் சிவபெருமான், மல்லிகார்ஜுனராகவும், அம்பாள் பிரமராம்பிகையாகவும் அருள் பாலிக்கிறார்கள். இந்த 50-வது ஸ்லோகம், மல்லிகைக்கும், மல்லிகார்ஜுனருக்குமான சிலேடை.

.சூரியன் மறைகின்ற அந்திப் பொழுதிலே மலர்கின்ற பூ மல்லிகை. பக்தர்கள் தங்களது செவிகளிலும், மாதர்கள் தங்களது  தலைகளிலும் சூடி மகிழ்கின்ற பெருமை உடையது. காதல் கொண்டு வண்டு சுற்றிக்கொண்டிருக்கும் அழகு உடையது. எப்போதும் நல்லதொரு நறுமணத்தை வீசிக்கொண்டிருக்கும். போகத்தை விரும்புபவர்கள் தங்களது கைகளில் மல்லிகைப்பூவைச் சுற்றி அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள். பெரிய கடவுள்களுக்குப் பூசைப் பொருளாக விளங்கும் மல்லிகைப்பூ, அழகு, நறுமணம் ஆகிய குணங்களால் பிரகாசிக்கிறது. இப்படிப்பட்ட மல்லிகைப்பூவை வண்டு தாவி அணைக்கிறது.

     சிவபெருமான் பிரளயக் காலம் எனப்படும் அந்திக் காலத்திலும் அழிவின்றி மலர்ந்திருப்பவர். ஒருகாலத்தில் செவிகளால் கேட்டே மனனம் செய்யப்பட்ட ஸ்ருதி எனப்படும் வேதம், அதன் சிரசுபோல் போற்றப்படும் உபநிஷதம் ஆகியவற்றில் சிறப்பாகத் துதிக்கப்படுபவர். வண்டு (ப்ரமரம்) உருவெடுத்து வழிபட்ட அம்மனுடன் இணைந்திருக்கும் அழகர் மல்லிகார்ஜுனர். நல்லோர்களாகிய சாதுக்கள், பக்தர்களால் எப்போதும் பக்தி மணம் கமழப் பெறுபவர். பாம்புகளையே (போகி) அணிகலன்களாக அணிந்தவர். பிரம்மா, விஷ்ணு,. இந்திரன் முதலிய பெரிய தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்ற மகாதேவன் சிவபெருமான். இரக்கம், தியாகம், கருணை, வரம் அருளல், தீமைகளை அழிக்கும் வல்லமை ஆகிய நற்பண்புகளால் குணமணியாகப் பிரகாசிப்பவர். இப்படிப்பட்ட அம்பிகை தழுவிய அந்த மல்லிகார்ஜுனரை வணங்குவோமாக!

$$$

Leave a comment