சிவகளிப் பேரலை- 19

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

19. சிவனருளால் விடுதலை

.

துராஷா பூயிஷ்டே துதிக்ருஹ-த்வார டகே

துரந்தே ஸம்ஸாரே துரித நிலயே துக்கஜனகே//

தாயாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருதயே

தேயம் ப்ரீதிச்’சேத் தவ சிவ க்ருதார்த்தா: கலு வயம்//

              

தீயாசை சூழ்ந்ததாய் தீயோர்பணி ஏற்பதாய்

தீமுடிவாய் தீப்பழியாய் துன்பந்தரு சுழலாம்

அயனெழுத்து பொய்க்காமல் உபகாரம் செய்தீரோ?

சிவனருள் அதுவென்றால் விடுதலையும் அதுதானே?    

.

     இந்தப் பிறவியானது எப்படி இருக்கிறது? தீய ஆசைகள் சூழ்ந்ததாக இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக தீயோர்களை அண்டி நின்று அவர்களுக்காகப் பணியாற்றுவதாய் இருக்கிறது. இதன் காரணமாக நமக்குத் தீய முடிவைத் தருவதாகவும், கெட்ட பழியை ஏற்படுத்துவதாகவும் மிகுந்த துன்பமயமாகவும் பிறவிச்சுழல் அமைந்துவிடுகிறது. நமது வினைகளால் நமக்கு ஏற்படும் இந்த அனுபவங்களைத்தான் விதி என்றும், பிரம்மன் எழுதிய தலையெழுத்து என்றும் கூறுகிறோம். பிரம்மா மீது கருணை கொண்டு, அவர் எழுதிய இந்தத் தலையெழுத்து பொய்த்துப்போய் விடக் கூடாதே என்பதற்காக, இந்தத் துன்பங்களைப் போக்கடிக்காமல் வேடிக்கை பார்க்கிறீரா, சிவபெருமானே? என்று ஆதிசங்கரர் வினவுகிறார். பிரம்மனுக்கு உபகாரம் செய்வதற்காக சிவன் இப்படிச் செய்கிறார்  என்றால், அதுவே நமக்கு முக்தி தருவதாகவும் அமைந்துவிடும் என்று சமாதானமும் கூறுகிறார். எப்படி?

     நமது பாவங்களுக்கு, குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை, துன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் சிவபெருமானின் எண்ணம் என்றால், அவற்றின்மூலம் நமது தீவினைகள் தீர்ந்துபோய், பிறவிப் பெருந்தளையிலிருந்து விடுதலையை அதுவே தந்துவிடுமே! என்கிறார். “அலகிலா விளையாட்டுடையவன்” சிவபெருமான். “அன்னவர்க்கே சரண்“ என நாம் புகுந்துவிட்டால் அவனருளால் நமக்கு முக்தி நிச்சயம்தானே!

$$$

Leave a comment