நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம்

-மாலன், ராஜேஷ் குமார், காலச்சக்கரம் நரசிம்மா, சோ.தர்மன், முரளி சீதாராமன்.

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நடந்த புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலை எழுத்தாளர் திரு. பெருமாள்முருகன் அம்பலப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள் சிலரது கண்டனங்கள் இங்கே…

1 எப்படி நடந்திருக்கும் பகற்கொள்ளை?

-மாலன்

முதலில் பெருமாள் முருகனுக்கு நன்றி.

ராஜா ராம்மோகன்ராய் நூலக அறக்கட்டளை (RRLF) என்ற தேசிய நிறுவனத்தின் அறக்கட்டளை உறுப்பினராக நான் ஐந்து ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அந்த அமைப்பின் பணிகளில் ஒன்று, நாடு முழுக்க உள்ள நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது.

நான் இருந்த பதவிக்காலத்தில் நூல்கள் வாங்குவதற்கான வழிமுறைகளில் சில சீர்திருத்தங்களைச் செய்தோம். முதலாவது RRLFக்கு புத்தகங்கள் விற்க விரும்பும் பதிப்பகங்கள் தங்கள் பதிப்பகத்திற்கு என்று ஒரு இணையப் பக்கம் உருவாக்க வேண்டும். பதிப்பகத்தின் வரலாறு, அதன் நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், அவர்கள் பெற்ற அங்கீகாரம் (விருதுகள், பட்டங்கள், எழுதிய மொத்த நூல்கள்),  நூல்கள் பற்றி இதழ்களில் பிரசுரமான விமர்சனங்கள், நூல்கள் வேறு நூலகங்களுக்கு விற்கப்பட்டிருந்தால் அதன் விவரம், இவற்றோடு அடிப்படைத் தகவல்களான முகவரி, ஜிஎஸ்டி பதிவு எண், வருமான வரிக் கணக்கு எண் போன்ற அரசின் பதிவுகள் ஆகியவை அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். என் யோசனையின் பேரில் நூலாசரியரோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்களும் பின்னர் அதில் இடம் பெற வற்புறுத்தப்பட்டது.

நூல்கள் வந்தபின் அறங்காவலர்கள் ஐந்து பேர், நூல்களை ஒவ்வொன்றாக எடுத்து, புரட்டிப் பார்த்து தேர்வுக்குரியதன் கடைசிப் பக்கத்தில் கையொப்பமிடுவோம். நான் பார்த்த நூல்களை இன்னொருவர் பார்ப்பார். மற்றொருவர் பார்த்ததை நான் பார்ப்பேன். நிராகரிக்கப்பட்ட நூல்கள், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நூல்கள் தனியாக வைக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள நூல்களை மூவர் பரிந்த்துரைக்க வேண்டும்.ஒரு நீண்ட மேசையின் முன் நாங்கள் வட்டமாக அம்ர்ந்து அதனைச் செய்வோம். ஐந்து நாள் தொடர்ந்து அந்த வேலை நடக்கும்.

அலுவலகம் போவது போல காலை 9 மணிக்குப் போய் இரவு ஆறுஅல்லது ஏழு மணி வரை வேலை செய்வோம். பெண்டு கழன்று விடும் வேலைதான்.அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலர் ஜவஹர்லால் நேரு பல்கலைப் பேராசிரியர்கள், வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், முன்னாள் இந்திய தூதர் ஒருவர்.

சொகுசு நாற்காலிகளில் ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்து பழக்கப்பட்டவர்கள் புத்தக தூசி நிறைந்த அறையில் அமர்ந்து வேலை செய்தோம். எங்கள் எல்லோருக்கும் ஒரே நோக்கம் ஊழலைத் தடுப்பது.

கோவை அறிவுலகத்தில் நடந்திருப்பது பகற்கொள்ளை என்று அப்பட்டமாகத் தெரிகிறது. அது எப்படி நடந்திருக்கும்? நூல்கள் வாங்க ஒதுக்கப்பட்ட தொகை ரகசியமாக, அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு சிலருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதைக் கைப்பற்ற புத்தகத்தைத் தயாரித்திருப்பார்கள். புத்தகத்தின் விலைகளைப் பாருங்கள். 1295 (1300க்கு குறைவு) 1495 (1500க்கு குறைவு) இதில் ஒரு pattern இருக்கிறது. இதுவே கோல்மாலின் முதல் தடயம்.

கைப்பற்ற விரும்பிய தொகையைக் கூறு வைத்து அத்தனை தலைப்புக்களைத் தீர்மானித்து, அதை செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் வைத்து “எழுதி” இருக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பிவிடக்கூடாது. அது தனக்குத் தெரியாது என்று சொல்லாமல் பல நேரங்களில் ஜல்லி அடிக்கும். என் அனுபவம் இது. “பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை மெய்யென்றான் மெய்யாய்விடுமோ?’ இது யாருடைய பாடல்?” என்று கூகுளிடம் கேட்டேன் . அது சற்றும் தயங்காமல் “இந்தக் கவிதை வரிகள் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன”.  “இது தாயுமானவர் வரியாயிற்றே?” என்று நான் கேட்டதும் .  “I was incorrect when I initially attributed it to Mahavidwan Meenakshisundaram Pillai” என்று அது தவறை ஒப்புக் கொண்டது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நம் அறிவையும் கொஞ்சம் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் இதனால் அறியப்படும் நீதி.

அதற்கு கலாசார அறிவு கிடையாது. தமிழில் ‘ஆர்’ என்ற விகுதி சில பெயர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (உ-ம்: ஆர்காட்டார்) அதே விகுதி பன்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது . (உ-ம்: சிவனடியார் ) இந்த நுட்பம் அதற்குத் தெரியாது. அது நாலடியார் என்பதை பெயராக கருதியிருக்கும்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு எழுதி, அதை மிகச் சில பிரதிகளே அச்சடிக்கக் கூடிய POD முறையில் அச்சிட்டுக் காசு பார்த்திருக்கிறார்கள்

யார் இதைச் செய்திருப்பார்கள் ? இதைக் கண்டுபிடிக்கும் திறவுகோல் அரசிடம் இருக்கிறது. யார் பரிந்துரைத்தார்கள்? அல்லது பரிந்துரையே இல்லாது வாங்க முடிவு செய்யப்பட்டதா? எந்தத் தேதியில் நூல்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது?, ஆர்டரில் கையெழுத்திட்டிருப்பது யார்? எந்த தேதிக்குள் நூல்கள் நூலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது? என்று கொடுக்கப்பட்டது? (டெலிவரி சலான் இருக்குமே?) என்று அது நூலகத்தில் எண்ணிடப்பட்டு, கேட்லாக்கில் சேர்க்கப்பட்டு அலமாரிக்கு வந்தது? போன்ற தகவல்கள் அரசிடமும் நூலகத்திடமும் நிச்சயம் இருக்கும்.

நூல்களில் முத்திரை குத்தப்பட்ட தேதிகள் நூல்கள் வாங்கப்பட்ட அல்லது சப்ளை செய்யப்பட்ட தேதிகள் அல்ல. அவை அநேகமாக கேட்லாகில் பட்டியலிடப்பட்ட தேதிகளாக இருக்கும். ஏப்ரல் மாதம் தேதியிடப்பட்டவை அதற்கு முன்னர் பிப்ரவரி, மார்ச்சில் வந்திருக்கும் ஜூன் தேதியிடப்பட்டவை ஏப்ரல், மேயில் வந்திருக்கும்.

இந்த விவரங்களை அரசு பொது வெளியில் வெளியிட வேண்டும். அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர், பதிப்பகத்தின் வரலாறு ஆகியவையும் வெளியிடப்பட வேண்டும். பித்தலாட்டம் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். போலிப் புத்தகங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்த வருடமே யாராவது தமிழ்கப் பல்க்லைக்கழங்கள் ஏதேனும் ஒருவர் நாலடியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பிஎச்.டி .வாங்கிவிடவும் கூடும்!

  • குறிப்பு: திரு. மாலன், மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர். இது இவரது முகநூல் பதிவு…

$$$

2 அரசியல் சர்ச்சை அல்ல, அறம் சார்ந்த பிரச்சினை!

-ராஜேஷ் குமார்

புத்தகம் என்பது காகிதம் அல்ல.

அது ஒரு தலைமுறையின் சுவாசம்.

பெரியார் அறிவுலகம் போன்ற பெரும் அறிவுக் கூடங்கள், ஒரு அரசாங்கத்தால் கட்டப்படுவதில்லை; மக்களின் வரிப்பணத்தாலும், நம்பிக்கையாலும் கட்டப்படுகின்றன.

அங்கு அடுக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்திற்குப் பின்னாலும் மூன்று கேள்விகளுக்கான பதில்கள்…

எப்போதும், தயார் நிலையில், உண்மையோடு இருக்க வேண்டும் –

1. ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் எதற்காக?

2. என்ன விலையில் பெறப்பட்டது?

3. அதன் தரம் யாரால் எந்த அளவுகோலில் உறுதி செய்யப்பட்டது?

தற்போது தேவை, இந்த மூன்று கேள்விகளுக்கும் ஆவணங்களோடு கூடிய வெளிப்படையான பதில்கள்.

அவை கிடைத்துவிட்டால், அது ஊழலுக்கான முற்றுப்புள்ளி மட்டுமல்ல.

வருங்காலப் பிள்ளைகளுக்கு நாம் கற்றுத்தரும் நேர்மைக்கான பாடமும் கூட.

இது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற சர்ச்சை அல்ல. இது அறிவை எப்படி பாதுகாக்கிறோம் என்கிற அறம் சார்ந்த பிரச்சினை.

வரிப்பணத்தில் வாங்கப்படும் அறிவு,  கண்ணாடி போல தெளிவாக இருக்க வேண்டும்.

  • குறிப்பு: இது எழுத்தாளர் திரு. ராஜேஷ் குமார் அவர்களின் முகநூல் பதிவு…

$$$

3 எழுதும் ஆசையே அடியோடு போய் விட்டது!

-காலச்சக்கரம் நரசிம்மா

ஜோதி சரவணன் ,

ஜோதி ஹரிஹரன்

ஜோதிலட்சுமி ,

அன்பழகன் ,

நிவேதா அன்பழகன் ,

தாமரை பன்னீர் ,

ராணி பன்னீர்,

தாமரை சிவா ,

தாமரை கார்த்தி ,

தாமரை முரளி ,

சூரியா பாலு ,

மங்களேஸ்வரி பாலு ,

விஜய பாலு ,

திரிஷா விஜய்,

மோனிகா ரவி ,

பிருந்தா சேதுராமன் ,

மனிஷா தினேஷ் ,

திவ்யா தினேஷ்

தர்ஷினி சேதுராமன்,

மனிஷா சரவணன்

-இவை கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நூல்களில் காணப்படும் போலி எழுத்தாளர்களின் பெயர்களாம்.

ஏம்பா ! விஜய், திரிஷா , மோனிகா னு இவ்வளவு போலி பெயர்களை வச்சிருக்கீங்களே! என் பெயரை ஞாபகபடுத்திற மாதிரி  ‘வண்டிச்சக்கரம் ஜெயசிம்மா’னு ஒரு போலிப் பெயரை வச்சிருக்க கூடாதா?

ஆன்மிக வரலாற்று நூல்களை எழுதுகிறேன் என்பதற்காக , போலி எழுத்தாளர்கள் நடுவே கூட என் புத்தகங்களை வைக்க மாட்டீர்களா?

நல்ல பாலிசிதான்!

ஒரு சின்ன டவுட்! மேலே குறிப்பிடப்பட்டுள்ள போலி எழுத்தாளர்களில் யாருக்காவது டெல்லி சாஹித்ய அகாடமி கொடுத்துவிட்டால், (அவர்கள் நிச்சயம் கொடுப்பார்கள் ) பரிசை வாங்க யாரை அனுப்புவீங்க?

‘இனிமேல் எல்லா நூலகங்களின் வாசலிலும் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்’ என்று போர்டு வைக்க வேண்டும் .

‘நான் அசலான அக்மார்க் ஐஎஸ்ஐ எழுத்தாளர்’ என்று எல்லா எழுத்தாளர்களும் போர்ட் எழுதி கழுத்தில் தொங்க வைத்து கொள்ள வேண்டியதுதான்.

பின்குறிப்பு:

மேலே உள்ள பெயர்களில் எழுதி கொண்டிருக்கும் உண்மையான எழுத்தாளர்கள் யாராவது இருந்தால் உடனடியாக பெயரை மாற்றி கொள்ளும்படி கோரப்படுகிறார்கள் .

***

ஒரு பதிப்பகத்தில் (பெயர் அகல் விளக்கு பதிப்பகம் ! மடிப்பாக்கம், பிரம்மபுத்ரா தெரு என்று இருக்கிறது )ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டு உள்ளன . மடிப்பாக்கத்தில் அப்படி ஒரு தெருவே இல்வை. அந்த பதிப்பகத்தை வலை வீசி தேடியும் அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை: அமைச்சர் ராஜ்மோகன்

இது உண்மையாக இருந்தால் வெட்கக்கேடுதான்.

எழுத்தின் மீது விரக்தி ஏற்பட்டு எழுதுவதை நிறுத்திவிடலாமே என்று நினைக்கும்படியான சம்பவங்கள்தான் தொடர்ந்து நடைபெறுகின்றன .

இது போல போலி பதிப்பகங்கள் வெளியிடும் போலி எழுத்தாளர்கள் தான் சம்பாதிக்கின்றனர் என்று நினைக்கும் போது, நமக்கு இதெல்லாம் தேவையே இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது .

எப்போது உண்மையான பதிப்பகங்களுக்கு லைப்ரரி ஆர்டர் வந்து அவர்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தருவது?

***

ஒரு துறையையும் விட்டுவிடக் கூடாது என்று சென்ற ஆட்சியாளர்கள்  loot அடித்திருக்கிறார்கள் .

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால், ஒரு போலி நாவலுக்கு சாஹித்ய அகாதெமி பரிந்துரை செய்து , ஷண்முகப்ரியாவை அனுப்பி அதை வாங்க வைத்து அவர் விருது வாங்கிய அந்தக் கதையை ஆகாஷ் பாஸ்கர் வாங்கி படமாகத் தயாரித்து, ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் அதை வாங்கி ரஜினியை நடிக்க வைத்து, பட பாடல் ஆடியோ லாஞ்ச் இத்தாலி அமால்பி கோஸ்ட்டில் நடந்து , படப்பிடிப்பு கிரீஸ் நாட்டில் நடந்து, பெரிய அளவில் ரிலீஸ் ஆகி இருக்கும் .

தி ஹிந்து  உள்ளிட்ட பத்திரிகைகள் சாஹித்ய அகாதெமி பரிசு வென்ற ஷண்முகப்பிரியாவை பேட்டி கண்டு போட்டிருக்கும் .

அவரும் சனாதனம் எங்களை எழுத விடவில்லை என்று உவேசா தொடங்கி கிவாஜ வரையில் திட்டித் தீர்த்து, திமுக வந்த பிறகுதான் எங்களால் சாஹித்ய அகாதெமி எல்லாம் வாங்க முடிகிறது என்று பேட்டி கொடுப்பார்.

என்னைப் போன்ற பைத்தியக்காரர்கள், வரலாற்று டைம் டிராவல் எழுதுகிறோம் என்று மூலை முடுக்கெல்லாம் தேடிச்சென்று ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்து, இரண்டு பாகங்கள், மூன்று பாகங்கள் என்றெல்லாம் சேகரித்து நூலை வெளியிட்டு, நூல் வந்திருக்கிறது என்று முகநூலில் போட்டால்,  ‘லிங்க் அனுப்புங்க படிக்கிறேன்’  என்பார்கள் .

இந்த மாதிரி போலி எழுத்தாளர்களின் நூல்களை புத்தகக் கண்காட்சியில் அள்ளிக்கொண்டு போவார்கள். போலி நூல்களை வாங்கிக் கொண்டு , இந்த வருஷ கோட்டா நூல் வாங்கிட்டேன் . அடுத்த வருஷம் பார்க்கலாம் என்று நம் நூல்களை திரும்பிப் பார்க்காமல் போவார்கள் .

அந்த போலி நூல்களைப் படித்துவிட்டு , ”பாரதியார் மனைவி செல்லம்மா பாரதியை சவுக்கால் அடிப்பாராமே, வஉசி செக்கு இழுத்தது இருக்கட்டும் . அவர் கப்பல் கம்பெனி செக் பவுன்ஸ் ஆகிவிட்டதாமே, காரைக்கால் அம்மையாரை தலை கீழாக நடக்க வைச்சாராமே பரமசிவன் . பெண்களை ஏன் சிவன் கேவலமாக நடத்தறாரு, எழுத்தாளர் சுஜாதா மனைவியை அடக்கி ஆண்டாராமே – என்றெல்லாம் பதிவு போடுவார்கள்.

போதாத குறைக்கு, அந்த போலி நூல்களை விற்க ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கும் . .

நம் தலையெழுத்து –

முகநூலில் எழுதினால் சர்ச்சை ஏற்படுகிறது.

நூல் வெளியிட்டால், போலிகளின் எதிரே மல்லுக்கு நிற்க வேண்டி உள்ளது

என்ன கண்றாவியோ!

எழுதும் ஆசையே அடியேனுக்கு அடியோடு போய் விட்டது. எழுத்தாளர் என்கிற பெயருக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது .

நிம்மதியாக நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டு, செடி கொடிகளுடன் பேசிக் கொண்டு, திவ்ய தேச யாத்திரைகளை செய்து கொண்டு, எஞ்சிய காலத்தை கழித்து விட வேண்டியதுதான்.

தெரியாமல் இலக்கிய உலகில் நுழைந்து விட்டேன். ஓசைப்படாமல் நழுவ வேண்டியது தான்.

அப்பா சித்ராலயா கோபு எழுதிய காசேதான் கடவுளடா சுக்ராநந்தா சாமியார் வசனம் தான் நினைவுக்கு வருகிறது:  “என்னை விட்டுடுங்கோ! எல்லாத்தையும் கழட்டிகோங்கோ! ”

***

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் போலி புத்தகங்கள் ஒருபுறம் இருக்கட்டும் .

சென்னை, கோர்ட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்  ஆகிய நூலகங்களில் உள்ள நூல்களிலும் போலி இருக்கின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும் .

வருங்காலத் தலைமுறையினரை திசைதிருப்பும்படி கயிறு திரித்திருக்கும் நூல்களைக் களை எடுக்க வேண்டும்.

***

பிப்ரவரி 14, 2026, திமுக ஆட்சியில்தான் நூல்கள் கொள்முதல் அரசாணை அகல் விளக்கு பதிப்பகத்திற்கு அனுப்பப்பட்டது – விஜய் அரசு ஆதாரம் வெளியீடு.

மார்ச் 30, 2026 ல்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது . கவர்னர் பொறுப்பு ஏற்றது அதன் பின்தான் .

எனவே ஊழல் திமுக ஆட்சியில்தான் நடந்தது –  என்று விஜய் அரசு கொள்முதல் அரசாணை பிரதியை வெளியிட்டது .

  • குறிப்பு: திரு காலச்சக்கரம் நரசிம்மா மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர். இது இவரது முகநூல் பதிவுகளின் தொகுப்பு.

$$$

4 தவெக அரசுக்கு 10 கேள்விகள்

-சோ.தர்மன்

கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை: தவெக அரசிடம் கவனப்படுத்த விரும்பிய 10 கேள்விகள்

அகல்விளக்கு, பீனிக்ஸ் என்று திடீரென முளைத்த பெயரில்லாத பதிப்பகங்கள் அச்சிட்ட புத்தகங்கள், கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் மைய நூலகத்திற்கு அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். நல்லது. ஆனால், இந்த சர்ச்சை வெறும் பனிமலையின் முனை மட்டுமே!

தமிழ்நாட்டின் வாசிப்புச் சூழலையும், நூலகத் துறையையும் உண்மையாகவே நேசிக்கும் ஒரு எழுத்தாளனாக, அரசுக்கும் தேர்வுக் குழுவிற்கும் சில தெளிவான, நேர்மையான கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன். இதற்குப் பதில்கள் சொல்லப்பட வேண்டும்:

1. ஆதாய முரண் (Conflict of Interest):  எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு பேராசிரியர். அவரும் அவருடைய மனைவியும் ‘காலச்சுவடு பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக (Shareholders) இருக்கிறார்கள் என்பது பரவலாகத் தெரிந்த செய்தி. ஒரு தனியார் பதிப்பகத்தில் நிதி முதலீடு செய்திருப்பவர், அரசு புத்தகத் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இடம்பெறலாமா? அப்படி இடம்பெற்றிருந்தால், அவர் மூலம் அந்தத் தனியார் பதிப்பகத்தின் எத்தனை தலைப்புகள் தேர்வாகி அரசு நூலகங்களுக்குள் சென்றுள்ளன?

2. முதலீட்டாளர்களும் அரசுப் பதவிகளும்: காலச்சுவடு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேறு யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள்? அவர்களில் யாரெல்லாம் திமுக அரசின் கீழ் அமைக்கப்பட்ட புத்தகத் தேர்வுக் குழுக்களிலோ அல்லது கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளிலோ இடம் பெற்றிருந்தார்கள்?

3. அரசியல் பின்னணி கொண்ட பதிப்பகங்கள்: பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) போன்ற நிறுவனங்கள் நேரடி அரசியல் பின்னணி கொண்டவை. கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் இந்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் புத்தகக் கொள்முதல் ஆணைகளின் (Purchase Orders) மொத்த மதிப்பு எவ்வளவு?

4. வெளிப்படைத்தன்மை எங்கே? வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கை என்று பேசப்படுகிறதே, அப்படியானால் எந்தெந்த பதிப்பகத்திடம் எவ்வளவு தொகைக்கு, எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற பட்டியலை அரசு ஏன் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை? (எதிர்காலத்தில் அமையவிருக்கும் தவெக அரசு உள்ளிட்ட எந்த அரசாக இருந்தாலும் இந்த வெளிப்படைத்தன்மையைச் செய்யத் தயாரா?

5. முன்னறிவிப்பில்லாத கொள்முதல் மாற்றங்கள்: திடீர் திடீரென ஆங்கிலப் புத்தகக் கொள்முதல், மொழிபெயர்ப்பு நூல்கள் கொள்முதல் என்று முடிவுகளை மாற்றுவதும், அதைப் பற்றிப் பதிப்பாளர்களிடம் எவ்வித முன்னறிவிப்போ வெளிப்படைத்தன்மையோ இன்றி மறைமுகமாகச் செயல்படுவதும் ஏன்?

6. சமக்ர சிக்ஷா திட்டமும் கமுக்கமான ஆர்டர்களும்: ஒன்றிய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் கமுக்கமாக புத்தகக் கொள்முதல் ஆணைகளைப் பெற்ற அந்தப் பதிப்பகங்கள் யார் யார்? இந்த ஆணைகளை வழங்கிய அதிகாரிகள் யார்? ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தக் கொள்முதல் ஆணைகளை ஏன் இதுவரை இணையதளத்தில் (Online) வெளிப்படையாகப் பதிவேற்றவில்லை?

7. பன்னாட்டு புத்தகக் காட்சி நிதி: ‘சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி’ என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் அடங்கிய குழு பெரும் தொகையை மானியமாகவும் அரசு நிதியாகவும் பெறுகிறதே… இவர்களின் பின்னணி என்ன? இவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்த நிறுவனங்கள் பெற்ற நூலகக் கொள்முதல் ஆணைகளின் மதிப்பு என்ன?

8. கலைஞர் மருத்துவ நூல் மொழிபெயர்ப்பு திட்டம்: மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகப் பல கோடிகள் ஒதுக்கப்பட்டனவாமே! இதுவரை எத்தனை மருத்துவ நூல்கள் அச்சாகி வெளிவந்திருக்கின்றன? அந்தப் புத்தகங்கள் பொதுமக்களின் விற்பனைக்குக் கிடைக்கிறதா? கிடைக்கவில்லை என்றால், ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் பணம் எங்கே போனது?

9. சொற்பக் கொள்முதலும் மறைந்திருக்கும் விதிகளும்: வெளிப்படைப் புத்தகக் கொள்முதல் என்ற பெயரில் ஒவ்வொரு பதிப்பகத்திடமும் வெறும் 4 அல்லது 5 படிகள் மட்டுமே வாங்கும் நிலை ஏன் நீடிக்கிறது? பதிப்பாளர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது, கணினிக்குள் மறைந்திருக்கும் இந்த வெளிப்படையற்ற நடைமுறைகளையும் விதிகளையும் சாதாரணப் பதிப்பாளர்கள் எப்படி அறிந்துகொள்வது?

10. பதிப்புரிமையற்ற நூல்களும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கணக்கும்: பதிப்புரிமை அற்ற (Public Domain / நாட்டுடைமையாக்கப்பட்ட) பல நூல்களைத் தாங்களே அச்சிட்டு வெளியிட்டு விற்பனையாகக் காட்டும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அசல் விற்பனைக் கணக்கு என்ன? இதில் அரசுக்கு வந்த வருவாய் எவ்வளவு, அரசு நூலகங்களுக்கு அள்ளித் தரப்பட்ட தள்ளுபடி கணக்குகள் என்ன?

புத்தகக் கொள்முதல் என்பது ஏதோ சில பதிப்பகங்களும், அதிகாரிகளும், தேர்வுக் குழு உறுப்பினர்களும் சேர்ந்து நடத்தும் வியாபாரம் அல்ல! அது மக்களின் வரிப்பணத்தில், தலைமுறைகளுக்கான வாசிப்பை உருவாக்கும் அறப்பணி.

அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அனைத்துக் கொள்முதல் பட்டியல்களையும், வெளிப்படையற்ற கணக்குகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்!

  • குறிப்பு: திரு. சோ.தர்மன், சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர். இது இவரது முகநூல் பதிவு…

$$$

5 முற்போக்கு அறிவுஜீவிகளின் அலறல்கள்…

-முரளி சீதாராமன்

அதில் பாருங்கள்! இந்த முற்போக்கு லெஃப்டு அறிவுஜீவி எழுத்தாளர் அத்தனை பேரும்…

திமுக ஆட்சி மட்டும் இந்நேரம் இருந்திருந்தால், கோவை பெரியார் அறிவுலக மையம் – புத்தகங்கள் கொள்முதல் விவகாரத்தைப் பற்றி வாயையே திறந்திருக்க மாட்டார்கள்!

இப்போது திமுக ஆட்சி போய்விட்டது என்று குளிர் விட்டுப் போனதால் குதிக்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இவர்கள் புஸ்தகம் – “அந்நியமாதல்”- “பொருள்முதல்வாதப் படிமங்களின் மீட்டுருவாக்கம்”- “தாஸ்தாவெஸ்கி கண்ட தத்துவப் பேருலகம்” – “விளிம்பு நிலை மனிதர்களின் விழுமியங்கள்”-… இப்படி ஏதாவது லொட்டு லொசுக்கு என்று தலைப்பு வைப்பார்களே – அந்த மாதிரி புஸ்தகம் எதுவும் கொள்முதல் ஆகவில்லை போலிருக்கிறது!

அதுதான் உடனே இவர்களுக்கு புரட்சி கொப்பளித்து வந்து, பேனா லீக் ஆகி சட்டை வேட்டியை நனைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

இவர்களின் தத்துவார்த்த விழுமியங்களின் உள்முக பிரதிபலிப்புகளை, அதன் பன்முகப் பரிமாணங்களோடு – ஒற்றைப் பார்வை சாய்மானம் ஏதுமில்லாமல், பெரும்பான்மை மத நம்பிக்கைகளின் அகக் கூராய்வின் திரட்சியாக…

வேணாம்! சுருக்கமாகச் சொல்கிறோம் – இவர்கள் பேனா வழியாகப் பெற்றுப் போட்ட ஏட்டுச் சுரைக்காய்கள் சிலவற்றை இரண்டாயிரமோ மூவாயிரமோ பிரதிகள் வாங்கிப் போட்டிருந்தால்…

அந்த உள்முக அகவயப் புரட்சிகளின் மீட்டுருவாக்கத்துக்கு – 600 பக்கம் தடிமனாக புஸ்தகத்துக்கும் -1000/ 1500 ரூபாய் என்று விலை வைத்துக் கொள்முதல் செய்திருந்தால்…

இவர்கள் திராவிடப் புராணம் பாடியபடி – மோடியை திட்டிக் கொண்டு – ஹிந்துத்வாவை விமர்சித்தபடி – “பார்ப்பனீயத்தை” ஒரு ஓரமாக உட்கார்ந்து அறுத்துத் தள்ளிக் கொண்டு இருப்பார்கள்!

எவனோ ஒருவன் அகல்விளக்கோ – ஆயிரம் விளக்கோ அள்ளிக் கொண்டு போய் விட்டானே என்ற ஆதங்கம்தானே தவிர…

இவர்கள் புத்தகங்கள் ஒரு பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் காப்பி கொள்முதல் செய்திருந்தால் கப்சிப் என்றாகி இந்த விஷயம் வெளியே வந்திருக்கவே வந்திருக்காது!

முதல்வர் விஜய் எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை!

இடதுசாரி முற்போக்கு அறிவுஜீவிகளின் அலறல்கள் ஒதுக்கித் தள்ளத் தக்கவை!

  • குறிப்பு: திரு. முரளி சீதாராமன், முகநூல் எழுத்தாளர்.

$$$

Leave a Reply