ராஜா.எம்.சண்முகம், தலைவர், வார்சா குழுமம், திருப்பூர்
நேர்காணல்: வ.மு.முரளி
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா.எம்.சண்முகம், ஐ.ஏ.எஸ்.அதிகாரியாகி இருக்க வேண்டியவர். காலம் இவரை திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளராக்கி இருக்கிறது. தொழில்துறைக்கு வழிகாட்டியாக விளங்கும் இவர், “தவறுகளுக்கு பிறரைக் குறை கூறாமல் பொறுப்பேற்கும்போதுதான், உன்னால் கற்கவும் முன்னேறவும் முடியும்” என்கிறார். அவருடனான சந்திப்பிலிருந்து…

உங்கள் குடும்பப் பின்னணி குறித்து…
திருப்பூர் தான் எனது சொந்த ஊர். விவசாயம் தான் பாரம்பரியத் தொழில். நடுத்தரமான குடும்பம். அப்பா முத்துசாமி; அம்மா ஜானகி. 1965இல் பிறந்தேன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். என்னை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்பதே என் அம்மாவின் கனவாக இருந்தது. அதற்கான முயற்சிகளிலும் நான் ஈடுபட்டேன்….
யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதினீர்களா?
ஆமாம். அதற்காகவே தில்லி சென்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இரண்டாண்டுகள் படித்தேன். தில்லியில் தங்கி இருந்தது எனக்கு புதிய வாசல்களைத் திறந்தது. உலகம் பற்றிய எனது கண்ணோட்டம் மாறியது. ஆரம்பத்தில் திகைப்பாக இருந்தாலும், வெகு விரைவில் தில்லியில் ஒன்றிவிட்டேன். இதனிடையே யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக ராவ் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்து பயிற்சி பெற்றேன். அங்கு இதேபோல படித்துக் கொண்டிருந்த ரவி அவர்களுடன் நண்பரானேன். அவரது வீட்டிலேயே தங்கிக் கொண்டு குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகி வந்தேன். அந்த ரவி வேறு யாருமல்ல, பின்னாளில் ஐ.பி.எஸ். அதிகாரியாகி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர் தான். எங்கள் அறையில் இருந்து படித்தவர்கள், இறையன்பு, சைலேந்திரபாபு, ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர். 1988இல் குடிமைப் பணித் தேர்வில் முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் வென்று நேர்காணல் வரை சென்று விட்டேன். ஆனால் அந்தத் தேர்வில் நான் வெல்லவில்லை. எனினும், எனக்கு மேலும் இரு முறை தேர்வெழுத வாய்ப்புகள் இருந்தன. ஆனால் காலம் என்னை வேறு திசையில் செல்ல வைத்தது.
அந்தச் சமயம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு அம்மாவுடன் நான் சென்றிருந்தேன். அங்கு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது அங்கே ஒரு அம்மா அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து, “உனக்கெதற்கு அடிமைத் தொழில்? உனக்குக் கீழ் ஆயிரம் பேர் வேலை செய்யக் காத்திருக்கிறார்கள்” என்றார். நானும் அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். என் அம்மா அருளாளியிடம் “அவன் ஐ.ஏ.எஸ். படிக்கப் போகிறான். அவனை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று மன்றாடினார். ஆனால், அருள்வாக்கு கூறிய அம்மா மாறவே இல்லை. அந்த அருளாளி “நீ பெரிய ஆளாகி பிற்காலத்தில் எனக்கு கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்யணும்” என்று ஆணையிட்டு மூர்ச்சையாகிவிட்டார். அது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (அவரது ஆணையை பின்னாளில் நிறைவேற்றினேன்). இச்சம்பவம் யதேச்சையாக நடந்திருந்தாலும், ஐ.ஏ.எஸ். ஆளுமைத் தேர்வில் நான் தோல்வி அடைந்தவுடன் சிந்தித்தேன். மீண்டும் தில்லியில் தங்கிப் படிக்க வேண்டாமென்று முடிவு செய்தேன். ஊர் திரும்பினேன்.
அதுதான் உங்கள் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லலாமா?

அப்படியும் சொல்லலாம். ஆனால் அதற்காக இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்தது வீணாகலாமா என்ற ஊசலாட்டம் இருந்தது. என்னுடன் தங்கிப் படித்தவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாகிவிட்டார்கள். எனவே மறுமுயற்சி செய்யலாம் என்ற எண்ணமும் இருந்தது. பிறகு தீர்மானமாக முடிவெடுத்தேன். அப்போது திருப்பூரில் பனியன் தொழில் அதிவேகமாக வளர்ந்துவந்தது. எனது உறவினர்கள் பலரும் அதில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தனர். எனவே பனியன் தொழிலில் இறங்குவது என்று முடிவு செய்தேன்.
திருப்பூரில் வாய்க்கால் தோட்டம்தான் எங்கள் பகுதி. அங்கேயே சிறிய அளவில் ரூ. 5 லட்சம் முதலீட்டில் ‘வார்சா இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் பனியன் கம்பெனியைத் தொடங்கினேன். அதற்கு அப்பா ரூ. 2 லட்சம் தந்தார். கடனாக ரூ. 3 லட்சம் பெற்றேன். தம்பி ராமசாமியையும் என்னுடன் தொழிலில் சேர்த்துக் கொண்டேன்.
ஆரம்பத்தில் மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட்டராக (ஏற்றுமதி செய்யும் முகவருக்கு ஆடைகளைத் தயாரித்துக் கொடுத்தல்) தான் இருந்தோம். மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு ஆடைகளைத் தயாரித்து அனுப்பி வைப்போம். ஆரம்பத்திலேயே நல்ல விற்றுமுதலுடன் தொழில் வளரத் தொடங்கியது. இவ்வாறு 1992 வரை தொழில் நடந்தது.
திருப்பூரைப் பொருத்த வரை எந்தத் தொழில் ரகசியமும் இல்லை. பாடுபடுபவர் முன்னேற முடியும். அறிவுரை கூறி வழிகாட்டவும், தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்தவும் சுற்றிலும் நிறையப்பேர் இருந்தார்கள். இது திருப்பூரின் தனிச்சிறப்பு என்றே சொல்வேன். அத்துடன் எனது தில்லி வாழ் அனுபவமும் என்னை செம்மைப்படுத்தியது. அங்கு கற்ற பகுப்பாய்வுத் திறன் எனது தொழிலில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

‘வார்சா இன்டர்நேஷனல்’ என்று பெயரிடக் காரணம்?
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்றபோது குழு விவாதங்களில் சர்வதேச அரசியலும் இருக்கும். வார்சா என்பது போலந்தின் தலைநகரம். முந்தைய சோவியத் ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே தற்காப்பு ராணுவக் கொள்கை சார்ந்த உடன்பாடு 1987இல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் தான் ரஷ்யாவில் கோர்பசேவ் அதிபராக இருந்து, சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகள் பிரிந்துசெல்ல வழிவகுத்தார். அச்சமயம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு ‘வார்சா உடன்படிக்கை’ என்றே பெயர். அந்த ஒப்பந்தம் குறித்து எங்கள் குழு விவாதங்களில் அதிக அளவில் சர்ச்சை இருக்கும். நான் வார்சா உடன்படிக்கைக்கு ஆதரவாக வாதிடுவேன். அப்படித்தான் வார்சா மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அடுத்த ஆண்டு தொழில் தொடங்கியபோது அந்தப் பெயரையே எனது நிறுவனத்திற்கு வைத்தேன்.
நீங்கள் எப்போது நேரடி ஏற்றுமதிக்கு மாறினீர்கள்?
மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட்டராக இருந்தாலும், அதை விட நேரடி ஏற்றுமதியாளராக இருந்தால் தான் கூடுதல் பயன் என்பது அனுபவத்தில் தெரியவந்தது. எனவே 1992இலிருந்து நேரடி ஏற்றுமதியில் ஈடுபடத் தொடங்கினோம். ஆரம்பத்தில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தோம்.
1996இல் ஒரு முக்கியமான முடிவெடுத்தோம். அது, ஜெர்மனியில் ‘டாம் டெய்லர்’ என்ற பிராண்ட் நிறுவனத்துடன் மட்டுமே இனி ஏற்றுமதி செய்வது என்ற முடிவுதான். இது ஒரு வகையில் ஆபத்து. ஒருவரை மட்டுமே சார்ந்திருப்பது எப்போதும் சிக்கலாது. ஆனால், அவர்களின் தரம், தொழில்நேர்மை ஆகியவற்றைப் பரிசீலித்து இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். அவர்களும் எங்களிடமிருந்து மட்டுமே இறக்குமதி செய்தார்கள். ஆண்டுக்கு ரூ. 80 கோடி என்ற திருப்திகரமான அளவில் ஏற்றுமதி செய்துவந்தோம். இது 2018 வரை நீடித்தது.
இதனிடையே, 2003இல் ஜப்பானிய நிறுவனமான ‘பிகாசஸ்’ தங்கள் இயந்திரங்களை விற்பனை செய்ய முகவராகுமாறு எங்களைக் கேட்டது. அவர்களின் தரம், தொழில்பண்பாடு ஆகியவற்றை அறிந்திருந்ததால், அதனை ஏற்றோம். ‘அல்பைன் நிட்ஸ் இந்தியா’ என்ற துணை நிறுவனம் உதயமானது. அந்த நிறுவனத்தின் மூலம் இப்போது ஆண்டுதோறும் ரூ. 250 கோடிக்கு வியாபாரம் செய்து வருகிறோம். இப்ப்போது தென்னிந்திய முகவராக நாங்கள் உயர்ந்திருக்கிறோம்.
அல்பைன் நிட்ஸின் சார்பில், 2007இல் கேத்தனூரில் 25,000 கதிர்களுடன் கூடிய ஸ்பின்னிங் மில்லையும், துறையூரில் சூரியஒளி மின்திட்டத்தையும் (30 மெ.வா.) ஆரம்பித்தோம்.
2017 இறுதியில் டாம் டெய்லர் பிராண்டை ஜெர்மனி நிறுவனம் சீன நிறுவனத்திற்கு விற்றது. அதற்கு முன்னதாகவே தகவல் தெரிவித்ததால், இருந்த இருப்புகள் அனைத்தையும் விற்று முடித்தோம். ஆனால், 2018இல் மீண்டும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வேறெந்த ஏற்றுமதி ஆர்டரும் இல்லை. ஆனால், எங்களை நம்பி ஆயிரக் கணக்கானோர் இருந்தனர். எனவே ஜெர்மனியில் வேறு சில நிறுவனங்களிடம் பேசினோம். தொழிலில் நாங்கள் பெற்றிருந்த நற்பெயர் எங்களுக்கு உதவியது. 4 ஜெர்மனி பிராண்ட்களும் ஒரு ஸ்பெயின் பிராண்டும் எங்களுடன் ஒப்பந்தம் செய்தன. இடைப்பட்ட சில மாதங்கள் நஷ்டம் என்றாலும் சமாளித்தோம்.
நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
பின்னலாடை ஏற்றுமதி என்பது உலகளாவிய புவிசார் அரசியலால் பாதிக்கப்படக் கூடியது. ரஷ்ய –உக்ரைன் போர்கள் (2014 – 2026), கொவிட் தொற்றுக்காலம் (2019 – 2023), வளைகுடா போர்கள் (1991 மற்றும் 2025) ஆகியவை வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் அதனை சமாளித்துவிட்டோம். தற்போது பனியன் ஆடை ஏற்றுமதியில் மட்டும் சென்ற நிதியாண்டில் 150 கோடி விற்றுமுதலை எட்டி இருக்கிறோம்.
2004 வரை இருந்த கோட்டா முறை நிறுத்தப்பட்டபோது சில இடர்ப்பாடுகள் இருந்தன. 2011இல் சாய ஆலை பிரச்சினை தொழிலில் இரண்டாண்டுகள் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. அவற்றை வென்றோம்.
2008இல் சில வங்கிகளால் ஏற்பட்ட டெரிவேட்டிவ் பிரச்சினையால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரூ. 400 கோடி அளவுக்கு பாதிப்படைந்தார்கள். அதிலிருந்து மீள, திருப்பூர் ஃபாரெக்ஸ் டெரிவேட்டிவ் பயனாளிகள் சங்கம் (Tirupur Forex Derivatives Consumer Forum – TFDCF) என்ற அமைப்பை உருவாக்கி அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் போராடி வென்றோம். அதன் தலைவராக நான் செயல்பட்டேன். எங்கள் போராட்டத்தால், நாடு முழுவதும் உள்ள பல ஏற்றுமதியாளர்களும் பயனடைந்தனர்.


தேங்காயிலிருந்து உபபொருள்களைப் பெறும் நிறுவனம் குறித்து…
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஒரு தீர்வாக, 2012இல் ஏழு பேர் சேர்ந்து ‘அபெக்ஸ் கோகோ அண்ட் சோலார் எனர்ஜி’ என்ற கூட்டு நிறுவனத்தைத் தொடங்கினோம். இது தேங்காயிலிருந்து 14 விதமான உப பொருட்களைப் பெறும் அதிநவீனத் தொழிலகமாகும். இதன் இயக்குநராக ஸ்ரீனிவாசன் இருக்கிறார். எனது மகன் விஷாலும் இக்குழுவில் உள்ளார்.
இத்தொழிலில் ரூ. 450 கோடி முதலீடு செய்துள்ளோம். இப்போதைக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி விற்றுமுதலுடன் வர்த்தகம் நடந்து வருகிறது. விரைவில் ரூ. 1000 கோடியை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது தினசரி 5 லட்சம் தேங்காய்களை தொழிற்சாலையில் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதனை 10 லட்சமாக உயர்த்த உள்ளோம். இதன்மூலம், பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலை பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
தேங்காயிலிருந்து நார், தொட்டி போன்ற வெளிப்புறப் பொருட்கள் கிடைக்கின்றன. தவிர, தேங்காய்ப் பருப்பு, தேங்காய்த் தண்ணீர் ஆகியவை கிடைக்கின்றன. அவற்றை முறையாகப் பதப்படுத்துவதன்மூலமாக இளநீர், தேங்காய்ப் பால், தயிர், துருவல், பனீர், மில்க்ஷேக், ஐஸ்கிரீம் போன்ற 10 வகையான உணவுப் பொருட்களைத் தயாரிக்க முடியும். தேங்காயை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் அதிநவீன தொழிற்சாலையில் நாட்டிலேயே இதுதான் முதல் நிறுவனமாகும். தேங்காயின் ஆரோக்கியப் பயன்பாட்டையும் மருத்துவ குணங்களையும் உலகம் உணர்ந்து வருகிறது. இப்போது உலக நாடுகள் பலவற்றுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. பாலில்லாத உணவுப் பொருட்களை (வேகன்) விரும்புவோருக்கான சிறந்த உணவு இது.
வார்சா குழுமத்தின் தற்போதைய நிலை என்ன?
டையிங் தவிர்த்து அனைத்து துணைத்தொழில்களும் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம். வார்சா குழுமத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ. 500 கோடியாக உள்ளது. வார்சா இன்டர்னேஷனலில் 2,000 பேரும், அபெக்ஸ் நிறுவனத்தில் 1,500 பேரும் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எங்களுக்குச் சொந்தமான வார்சா காற்றாலை மூலமாக 3 மெ.வா. மின்சாரமும், சோலார் ஆலை மூலமாக 1 மெ.வா. மின்சாரமும் உற்பத்தி செய்கிறோம்.
உங்கள் வழிகாட்டிகள் யார்?
எனது பெற்றோர் தான் முதல் வழிகாட்டிகள். அதையடுத்து எனது சகோதரர் தொழிலில் உறுதுணையாக இருக்கிறார். அவர்தான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். திருப்பூர் தொழில் துறை முழுவதுமே எங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்களும் ஒருவகையில் எங்களுக்கு ஊக்கமளிப்பவர்கள் தான்.
உங்கள் சமூகப் பங்களிப்பு…
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக (2016 – 2022) இருந்திருக்கிறேன். ஏ.இ.பி.சியின் செயற்குழு உறுப்பினர், பருத்தி வாரிய உறுப்பினர், மத்திய வர்த்தக வாரியத்தின் அரசுசாரா உறுப்பினர், சி.ஐ.ஐ.யின் தமிழகக் குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து வருகிறேன்.
திருப்பூரில் செயல்படும் நிஃப்ட்-டீ கல்லூரியை, சொந்த இடத்தில் சொந்த கட்டடத்தில் இயங்கும்வகையில் மேம்படுத்தியது எனது முக்கியமான பணி. அதனை 2008இல் அப்துல் கலாம் அவர்கள் திறந்துவைத்தார். அதன் சிறப்பு ஆலோசகராக உள்ளேன். இங்கு 2016இல் அடல் இன்குபேசன் மையம், மத்திய அரசின் ரூ. 10 கோடி உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. 2017இல் ரூ.15 கோடி மத்திய அரசு உதவியுடன் டிசைன் ஸ்டுடியோ இங்கு தொடங்கப்பட்டுள்ளது. ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தில் இங்கு 25,000 பேருக்கு தொழிற்பயிற்சி அளித்துள்ளோம். நிப்ட்-டீ கல்லூரி இன்று திருப்பூரின் கௌரவச் சின்னமாக மாறி இருக்கிறது.
இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை?
3டி கோட்பாட்டை எனது வாழ்வில் நான் கடைபிடிக்கிறேன். அவை: Discipline (சுய கட்டுப்பாடு), Dedication (தீவிர அர்ப்பணிப்பு), Determination (உறுதிப்பாடு) ஆகியவை. இதைக் கடைப்பிடித்தாலே வெற்றியாளர் ஆகலாம். நமது தவறுகளுக்கு பிறரைக் குற்றம் சாட்டாமல் தாமே பொறுப்பேற்கும்போதுதான், அதிலிருந்து பாடம் கற்கவும் வளரவும் முடியும். இளைஞர்கள் தனக்குத் தானே சுய போட்டியாளார் ஆக வேண்டும். அதன்மூலமாகவே நிலையான வெற்றியைப் பெற முடியும்.
- நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர்- 2026
$$$