வில்லினை எடு வீரா! (கவிதை)

-இராம.கோபாலன்

நூற்றாண்டு நாயகர் அமரர் இராம.கோபாலன் அவர்கள் ஏராளமான தேசபக்திப் பாடல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. தேசப் பிரிவினையின் சோக வரலாற்றை நினைவுறுத்தி, ஒருங்கிணைந்த பாரதம் காண ஏங்கும் இப்பாடல் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பாடப்பட்டு வரும் பாடலாகும்.

நரபலி கொடுத்த வீரவங்கமும் பாஞ்சாலமும் இன்று
நானிலமசைக்க வினவிடும் கேள்வி நெஞ்சை உருக்கிடுதே!

நரபலி கொடுத்த வீரவங்கமும் பாஞ்சாலமும் இன்று
நானிலமசைக்க வினவிடும் கேள்வி நெஞ்சை உருக்கிடுதே!
பிளந்த இந்நாடு மீண்டும் பிணைந்தெழுவ தெப்போ?
வெற்றி முழங்கிடவே பகவா வானில் பறப்பதெப்போ?
மதவெறியோரை, விஷநெஞ்சோரை, கொடுமையாளரை
அடக்கிடுவாருண்டோ?
வில்லினை எடு வீரா!

(நரபலி)

சித்தூர் கோட்டையில் தீக்குளித்த நல்மாதரின் ஆவிகளும்
ஹல்திகாட்டிலே போரில் மடிந்த வீரரின் ஆவிகளும்
பந்தா பைராகி, சம்பூ சத்ரபதி…
நவகாளியும் நம்மைக் கூவியழைத்திடுதே!
அமைதியிழந்தே, தாகம் கொண்டே ஆவிதுடிக்குது,
எங்கே உன் வீரம்?
வில்லினை எடு வீரா!

(நரபலி)

எவரோ வென்றிடுவார், உன்னை எவரோ கொன்றிடுவார்?
நஞ்சையுண்டபின்னும் சங்கரன் உலகினைத் தாங்கினனே!
ஆர்த்திடும் கடலினையே அணையால் தடுத்திடுவாருண்டோ?
ஆதவன் எழுந்திட்டால் கொடும் அந்தகாரம் எங்கோ?
ஹிந்து எழுந்தால், தன்னையுணர்ந்தால், பகைவரெல்லாம்
நடுங்கியே ஓடிடுவார்!
வில்லினை எடு வீரா!

(நரபலி)

உலகத்தரசே பலப்பல முறைகள் நீ விழித்தெழுந்தாயே!
மனித குலத்தின் வைரிகள் அன்று தலைவணங்கி நின்றார்!
சகரர், ஹூணர்களை ஜீரணம் செய்தாயே!
கிரேக்கப் படையினரை விரட்டி அடித்தாயே!
மமதை கொண்டோரின், வெறி கொண்டோரின் சிங்காதனத்தை
சிதற உடைத்தாயே!
வில்லினை எடு வீரா!

(நரபலி)

உலக சகோதர, மனித சமத்துவ தத்துவம் பேசுகிறாய்!
பலவீனர்களின் சொற்களுக்கெவரும் செவிசாய்த்திடுவாரோ?
போதும் போதுமினி! வெற்றுரைகள் போதும்!
வீண்பறை அடிப்பெதெல்லாம் போதும் நிறுத்திடுவாய்!
பாரதீயமே உலகதத்துவம்! தாரகமிதனை
பாரில் முழக்கிடுவாய்!
வில்லினை எடு வீரா!

(நரபலி)

வகுப்பு வெறியர் வெற்றி கொண்டதால் வங்கம் பிளந்திடினும்,
பஞ்ச நதமுமே உதிரம் தோய்ந்து துண்டாய் ஆகிடினும்,
கிரகணகால மிதுவும் இனி என்றும் நிலைத்திடுமோ?
அமர நம் ஆன்மா இனி பிரிந்து நின்றிடுமோ?
இளங்கதிராதவன் எழுந்து விட்டான், இருட்கணமொழியும்
சந்திரப்பிறை மறையும்!
வில்லினை எடு வீரா!

(நரபலி)

$$$

Leave a comment