அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் வேண்டுகோள்.

தாராபுரத்தில் செப். 6,7, 8 தேதிகளில் நடைபெற்ற ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வுக்கு அகில பாரதிய சன்யாசிகள் சங்கத்தின் தலைவர் தவத்திரு. ராமானந்த மஹராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார். தவத்திரு. விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். சன்யாசிகள் சங்கத்தின் அகில பாரத செயலாளர் தவத்திரு. வேதானந்த சுவாமிகள் தீர்மானங்களை வாசித்தார். பல்வேறு மடங்களைச் சார்ந்த துறவியர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள் மீது, வழக்குப் பதியவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகைகளை, தற்போதைய நிலவரப்படி உயர்த்தி வசூலிக்க வேண்டும்; நிலங்களுக்கு உரிமையான இறைவன் பெயரில், கட்டணமில்லா கல்லூரிகள் அமைக்க வேண்டும்.
3. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாற்று மதம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள், கோயில் மீது நம்பிக்கை தொடர்பாக, கோயில் பதிவேட்டில் கையொப்பமிடுவதைக் காட்சிப்படுத்த வேண்டும்.
4. சமீப காலமாக அதிகரித்து வரும் மதமாற்றத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. திருக்கோயில் கும்பாபிஷேகங்களின் போது, அப்பகுதியில் உள்ள மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள், துறவிகள், சன்னியாசிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
6. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.
7. மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் 11 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது சரியல்ல. பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க அரசு ஏற்பாடு செய்வதோடு, மக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
8. வேலூரில் துறவி ஒருவர் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காவலரை, உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
9. கோயில்களில் செல்போன் வைக்கும் இடத்தில், பக்தர்களிடம் அரசு, கட்டணம் பெறக் கூடாது. கோயில், சுற்றுலாத்தலம் அல்ல.


10. அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வர இருக்கின்ற 2028 கும்பகோணம் மகாமகத்தை ‘தென்பாரத கும்ப மேளா’வாக அகில உலக அளவில் நடத்த இருக்கிறோம் ஆதீன குருமா சன்னிதானங்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், மகா மண்டலேஷ்வரர்கள் அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், துறவியர் பெருமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து 18 நாட்கள் 18 கருத்தரங்குகளாக நடத்த இருக்கிறோம்.
11. மேலும் மகாமக தீர்த்தம் ஆடுவதற்கு 30 நாட்களும் ஏற்பாடுகள் செய்வதென அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது
12. அமராவதி மகாதீப ஆரத்தி பெருவிழா-2026 ஆகஸ்ட், செப்டம்பர் இரண்டு மாதங்களில் அமராவதி அணை, கொழுமம், தாராபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அமராவதியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும், மணல் கொள்ளையைத் தடுப்பதற்கும் என்று தனியாக ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த ஒரு மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
13. ‘தென் பாரத கும்பமேளா’ – கும்பகோணம் மகாமகத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காக அனைத்துத் துறவிகளும் ஒருங்கிணைந்து முயற்சி செய்வதாகவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய துறவியர்களின் மடங்கள், ஆசிரமங்கள், குடில்கள் அவரவர்களின் முகவரிகள் தொடர்பு எண்களை எல்லாம் அச்சடித்து, இந்த தென்பாரத கும்பமேளாவை வெகு ஜனங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக திட்டப் பணிகளைத் தீட்டி அதை செயல்படுத்துவதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14.நதிகள் அனைத்தும் நவீன இயந்திரங்களின் உதவியோடு தூர்வாரப்படவேண்டும். 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும்; நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும்.
-மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
$$$