-வ.மு.முரளி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளியின் சிறப்புக் கட்டுரை.

குள்ளக் குள்ளனே, குண்டு வயிறனே,
வெள்ளிக் கொம்பனே, விநாயகனைத் தொழுவோம்!
-குழந்தையாக இருக்கும்போது நம்மில் பலரும் பாடி மகிழ்ந்த பாடல் இது. நமது குடும்பங்களில் பிள்ளையார் வழிபாடு, நம் மனதோடு பின்னிப் பிணைந்தது. விநாயக சதுர்த்தி அன்று ஆற்றங்கரையிலோ, அரச மர நிழலிலோ வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, அருகம்புல் சார்த்தி மகிழ்ந்தவர்கள் தான் நாம்.
பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! ஆற்றங்கரை ஓரத்தில், அரச மரத்து நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்! அரிசி கொழுக்கட்டையும், அவல் பொரி கடலையும் கவலையின்றித் தின்னுவார், கருணை புரிந்து காட்டுவார்! ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்! நேரும் துன்பம் யாவையுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்! ஊரைக் காக்கும் பிள்ளையார், உலகைக் காக்கும் பிள்ளையார்! பாரிலுள்ள அனைவருக்கும் பலனளிக்கும் பிள்ளையார்! மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும், ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்!
-இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறோம். கொழுக்கட்டையும் எள்ளுருண்டையும் அவல் பொரியும் அவருக்கு மட்டுமல்ல, மழலைப் பருவத்தில் நம் அனைவருக்குமே பிடித்தமானவை. எனவேதான், பிள்ளையாரை கடவுளாக மட்டும் கருதாமல் நம்மில் ஒரு தோழராக பாவித்துக் கொண்டு வழிபடுகிறோம்.
கொஞ்சம் மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணத்தில் நீரைக் குழைத்துப் பிடித்துவைத்தால் பிள்ளையார் தயாராகி விடுவார் அருள்பாலிக்க. எதுவும் கிடைக்கவில்லையா? களிமண் போதும். சிறிது வெல்லமும் அருகம்புல்லும் படைத்தால் போதும், இந்த யானைமுகக் கடவுளுக்கு. இது தான் விநாயகரின் பெருமை.
எந்தக் கோயிலிலும் முதலிடம் இவருக்குத் தான். சிவன் கோயில்களில் கன்னிமூல கணபதியை வழிபட்ட பிறகே பிரதான தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது நெறி. பெருமாள் கோயில்களிலும் தும்பிக்கை ஆழ்வானாக அருள் பாலிப்பவர் இவர்.
திருக்கோயிலில் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரத்திலும் எளிமையாக வீற்றிருக்கும் தூயவர், குழந்தைமனம் கொண்ட பிள்ளையார். வெள்ளெருக்கு மாலை போதும், இவரை மகிழ்விக்க. காட்சிக்கு எளியவராகவும், பூசிக்க இனியவராகவும் இருப்பதால் தான், பாரதம் முழுவதும் முழுமுதற்கடவுளாக இவர் வணங்கப்படுகிறார்.
கணபதி வழிபாடு பாரதத்தில் பன்னெடுங்காலம் தொட்டே இருந்துவருகிறது. இதனை ‘கணாபத்தியம்’ என்ற வழிபாட்டுமுறையாக முறைப்படுத்தியவர், பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர். அவர் இயற்றிய ‘கணேச பஞ்சரத்தினம்’ வழிபாட்டுப் பாடல்களில் முதன்மையானது. சங்கரருக்கு முன்னரே கணபதி வழிபாடு இருந்தமைக்கு, பழமையான கோயில்களில் காணப்படும் சிற்பங்களும் தனிச் சன்னிதிகளும் கட்டியம் கூறுகின்றன.
புராணங்களில் கணேசர்:
மிகப் பழமையான ரிக் வேதத்தில் ‘கணபதி’ என்று விநாயகனைப் போற்றும் சுலோகம் இருக்கிறது. பன்னிரு புராணங்களிலும் கணநாயகர் பற்றிய கதைகள் உள்ளன. தமிழ்க் கடவுளான முருகனுக்கு எழுந்த கந்த புராணத்தில், குன்றக் குமரனின் காதல் கைகூட அவரது தமையனான கணேசன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
தமிழின் முதல் இலக்கண நூலான ‘பேரகத்தியம்’ நூலை எழுதிய குறுமுனி அகத்தியருடன் சிறுகுழந்தையாக கணேசன் நிகழ்த்திய தீராத விளையாட்டு, காவிரி நதியின் மூலத்துக்கு காரணமானது.
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் முப்புரம் எரிக்கக் கிளம்பியபோது, அவரது தேரச்சு முறித்து விளையாட்டுக் காட்டியவர் கணபதி. சிவன் கோயில்களில் என்றும் விக்னேஸ்வரனுக்கே முதல் மரியாதை அன்று முதல் இன்று வரை வழங்கப் படுகிறது.
மீனவ குலத்தில் தோன்றிய வியாச மகரிஷி சொல்லச் சொல்ல, தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி கணநாதர் எழுதியது தான், பல லட்சம் கவிதைகளைக் கொண்ட மகாபாரதம். இது பாரதம் முழுவதும் நிலவிவரும் நம்பிக்கை. எந்த ஒரு அரிய செயலானாலும், கணபதியை வணங்கிய பிறகே தொடங்குவது என்ற மரபுக்கு இதுவும் காரணம்.
மனித வாழ்க்கை போராட்டம் நிரம்பியது; இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது. இன்பம் வரும்போது இறைவன் அருள் என்றும், துன்பத்தை இறைவன் அளிக்கும் சோதனை என்றும் ஏற்கும் பக்குவத்தை ஆன்மிகமே நமக்கு வழங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலில் மனிதஓடம் தறிகெடாமல் நிலைநிறுத்தும் நங்கூரமாகத் திகழ்வது இறைபக்தி. இதற்காகவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.
கடவுளர்களின் உருவகங்கள் அனைத்திலும் அடிப்படையான அம்சம் மானிட மேம்பாடாகவே திகழ்கிறது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் யானையின் முகத்துடன் அருளுவதால் அனைவருக்கும் அவரைப் பிடித்துப் போகிறது. கணேசர் யானை முகத்துடன் இருப்பதற்கான காரணம் குறித்து விநாயக புராணம் கூறுகிறது. அவரது வாகனமோ சிறிய மூஞ்சுறு!
துயரத்தில் உழலும்போது மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது. தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுது முறையிட ஒரு தாயுள்ளம் தேவைப்படுகிறது. நீரில் மூழ்கியவனுக்கு தற்காப்புக்கு உதவும் மரக்கட்டை கிடைத்தாலே முழுபலத்துடன் போராடி உயிர் தப்புகிறான். அவனுக்கு மகிழ்ச்சி தருபவரே ஆறுதலைத் தர முடியும். அந்த வகையில் தான், வினைகள் நீக்கும் விநாயக வழிபாடு, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறது.
தமிழின் மிகப் பழமையான இலக்கியமான சங்க இலக்கியங்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. அதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார். விநாயகருக்கு எருக்கம்பூ சாற்றுவது பற்றிய குறிப்பு கபிலரின் புறநானூற்றுப் பாடலில் வருகிறது. ’மதுரைக்காஞ்சி’ நூலில் விநாயகருக்குப் பிடித்தமான ‘மோதகம்’ படைத்தது பற்றிய பாடல் உண்டு.
ஆனால், தமிழகத்தில் சில அறிவிலிகள், தொல் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை என்று குதர்க்கம் பேசுவதுண்டு. அவர்களைப் பற்றிய கவலையின்றி, தமிழகத்தில் விநாயக சதுர்த்தியை ஒட்டி, லட்சக் கணக்கில் பிள்ளையார்களை பிரதிஷ்டை செய்து ஊர்வலம் வந்து மகிழ்கின்றனர் தமிழ் மக்கள்.
தமிழ் மூதாட்டி எழுதிய ‘விநாயகர் அகவல்’ காரியத் தடைகளைப் போக்க வல்ல மந்திரப் பாடலாகக் கருதப்படுகிறது. “சீதக் களபச் செந்தாமைரைப்பூம் பாதச் சிலம்பும் பல இசை பாட” என்று தொடங்கி, “வித்தக விநாயக விரைகழல் சரணே” என்று முடியும் 64 வரி ஆசிரியப்பாவில் அமைந்த இப்பாடல், நமது குடும்பங்களில் தினசரிப் பிராத்தனையாக ஒலிப்பது. இதில் மிகச் சிறந்த தத்துவமும் அடங்கியுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பாடல் இயற்றப்பட்டது குறித்த செவிவழிக் கதை ஒன்று உண்டு.
பரமசிவன் அளித்த வெள்ளை யானையின் மீதேறி சுந்தரமூர்த்தி நாயனாரும், வெள்ளைக் குதிரை மீதேறி சேரமான்பெருமான் நாயனாரும் தங்கள் பிறவியை முடித்துக் கொண்டு வான்வழியே திருக்கயிலைக்குச் சென்றார்களாம். அப்போது திருக்கோவிலூரில் உள்ள விநாயகர் கோயிலில் கணபதியை பூஜித்துக் கொண்டிருந்தாராம் ஒளவையார். அவருக்கும் திருக்கயிலைக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. கயிலைக்குச் செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரார்த்தனையாக்கி, விநாயகருக்குத் துதிப்பாடல் ஒன்றை சமர்ப்பித்தார். அதுவே விநாயகர் அகவல்.
இந்தப் பாடலை அவர் பாடி முடித்ததும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஒளவையின் பூஜையாலும் பாடலாலும் மகிழ்ந்த விநாயகர், தன் துதிக்கையால் அவரைத் தூக்கி, ஒரே க்ஷணத்தில் கயிலையில் சேர்த்தார். அதன் பிறகே சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலைக்கு வந்து சேர்ந்தார்களாம்.
வரலாற்றில் கணேசர்:
வரலாற்றுக்கு ஆதாரங்களாக இருப்பவை கல்வெட்டுகளும் சிற்பங்களும். அந்த வகையில் பாரதம் முழுவதும் ஆங்காங்கே அகழ்ந்து கிடைக்கும் சிற்பங்களில் விநாயகப் பெருமானின் கற்சிலைகள் மிகுதி. கரடு முரடான முழுமையற்ற சிலைகள் முதல் பண்பட்ட சிற்பங்கள் வரை விநாயகரின் சிலாரூபங்கள் பல கிடைத்த வண்ணமே உள்ளன. பொ.யு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குப்தப் பேரரசுக்காலச் சிலைகளில் சிற்ப நேர்த்தி மெருகேறுகிறது. அதன் பிறகு கிடைக்கும் பெரும்பாலான விநாயகர் சிலைகள் பூரணமாக அமைந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், இரும்பேடு கிராமத்தில் கிடைத்துள்ள விநாயகரின் சிற்பம் பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டு எனப்படுகிறது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள மூர்த்தி, குடைவரைச் சிற்பமாகும். குடைவரைச் சிற்பங்களின் ஆரம்பகாலமாகக் கருதப்படும் பொ.யு. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய முதல் சிற்பம் இதுவே. இங்குள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “பொ.யு. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்” என்று குறிப்பிடுகிறார்.
அதன் பிறகு பல்லவர் கால சிற்பங்களிலும் குடைவரைக் கோயில்களிலும் விநாயகர் சிற்பங்கள் அதிக அளவில் கானப்படுகின்றன. பொ.யு. 8 ஆம் நூறாண்டுக்குப் பிந்தைய சோழர்கள் காலத்தில் அழகிய செப்புத் திருமேனிகள் பல வடிவங்களில் வடிக்கப்பட்டன. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் விநாயகரின் அழகிய வடிவங்களைச் செதுக்குவதே சிற்பிகளின் பெரும் கடமையாக இருந்திருக்கிறது.
சமண, பௌத்த சமயங்களிலும் விநாயகருக்கு இடம் உண்டு. சுமார் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இச்சமயங்களிலும் கணேசர் வழிபாடு இடம்பெற்றுருப்பது, குறிப்பிடத் தக்க ஒரு தகவல். அது மட்டுமல்ல, கிழக்காசிய நாடுகளிலும் விநாயகர் வழிபாடு பரவி இருந்துள்ளமைக்கு அங்குள்ள ஆலயங்கள் சான்று பகர்கின்றன.
மிக ருசிகரமான தகவல் ஒன்று உண்டு. இந்தோனேசிய நாட்டில் (இது உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு), அரசாங்கத்தின் ‘ருபியா’ நாணயத் தாளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.
விடுதலைப் போராட்டக் காலத்தில், மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், மகாராஷ்டிரத் தலைவர் பால கங்காதர திலகர். அவர்தான், வீட்டு வழிபாடாக இருந்த கணபதி உற்சவத்தை நாட்டு உற்சவமாக்கியவர்.
1893ஆம் ஆண்டு முதல், ‘சர்வஜனிக் கணேஷோத்சவம்’ என்ற பெயரில் களிமண் பிள்ளையார்களை தெருக்களில் பிரதிஷ்டை செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார் திலகர். இன்று விநாயக சதுர்த்தி மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட திலகர் தான் ஆதர்ஷமாகத் திகழ்கிறார்.
அந்நாளில் இறைபக்தியும் கூட, நாட்டுவிடுதலைக்கு உரமூட்டும் கருவியாகவே திகழ்ந்தது. ”விடுதலை கூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம்” என்று தமிழகத்தின் மகாகவி பாரதி பாடியது அதனால்தான்.
நம் காலத்தின் நாயகன்:
இன்று நாடு நெடுகிலும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாட்டையே ஒருங்கிணைப்பவையாக மாறி இருக்கின்றன. பசுஞ்சாணப் பிள்ளையார் முதல் 60 அடி உயரத்திலான பிரம்மாண்ட விநாயகர் வரை, சதுர்த்தியை ஒட்டிய நாட்கள் முழுவதும் எங்கெங்கு காணினும் பிள்ளையார் திருக்கோலங்கள் தான். தசரா போல சதுர்த்தி கொண்டாட்டங்களும் பல நாட்கள் நடைபெறுகின்றன.
ஜாதி, மதம், மொழி, இனம், வர்க்கம் போன்ற வேற்றுமைகளைத் தகர்த்து, அனைவரின் ஆதர்ஷ நாயகனாக வலம் வரும் விநாயகரை வழிபாடுகள் முடிந்து கரைக்க எடுத்துச் செல்லும் போது விம்மி விம்மி அழுவோர் அநேகம். அந்த அளவுக்கு அவர் நமது நெஞ்சங்களில் நிறைந்துள்ளார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் விநாயகரை முன்னிறுத்திய திலகரின் அடியொற்றி, தமிழகத்தில் இந்து முன்னணி நிறுவனர் அமரர் ராம.கோபாலன் அவர்கள் உருவாக்கிய பக்தி இயக்கம், விநாயகரை முன்னிறுத்தியே அமைந்தது. தெருக்கள் தோறும் வண்ண வண்ணமான, பலவித அவதார வடிவங்களில் விநாயகர்களை பிரதிஷ்டை செய்து, அவற்றை ஒவ்வொரு நாளும் வழிபட்டு, அதையொட்டி கோலப் போட்டிகள், ஆன்மிகப் போட்டிகள், திருவிளக்கு வழிபாடு போன்றவற்றை நடத்தி சமுதாயத்தை ஒருங்கிணைத்தது இந்து முன்னணி. 1980ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கணேச யக்ஞம், சத்தமின்றி சமுதாய விழாவாக மாறி இருக்கிறது.
இன்று, இந்து முன்னணி அமைப்பு மட்டுமல்லாது, சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் ஆங்காங்கே விநாயகர்களை வைத்து விழாக்களை நடத்துவதைக் காண்கிறோம். இளைஞர்களும் குழந்தைகளும் அவரவர் விரும்பிய அளவில் விநாயகர் சிலைகளைத் தூக்கிக் கொண்டு பவனி வருவதைக் கண்டு மகிழ்கிறோம்.
இதே தமிழகத்தில் தான் 60 ஆண்டுகளுக்கு முன்னர், கடவுள் நம்பிக்கையும் பண்பாடும் அற்ற பதர்கள் விநாயகர் சிலைகளை நடுத்தெருவில் உடைத்து எக்காளமிட்டனர். அதைக் கண்டு வருந்திய பக்தர்களின் வேதனையைத் தீர்க்கவே, இன்று பல லட்சம் விநாயகர்கள் தமிழகத்தில் பவனி வருகிறார்களோ?
ஏழையோ பணக்காரனோ, சேரியில் வசிப்பவரோ செல்வந்தரோ எவராயினும், அனைவரும் நம்பி வழிபடும் கடவுள் கணேச மூர்த்தி. வினைகளைக் களையும் விக்னேஸ்வரனான அவரது அருள் இருந்தால், நினைத்தவை எல்லாம் நிறைவேறும் என்பதற்கு ராம.கோபாலன் அவர்களின் வாழ்வே சான்று.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை, திருவல்லிக்கேணியில் சிறு துளிராகத் தொடங்கிய விநாயக சதுர்த்தி மக்கள் விழா, இன்று இந்து சமுதாய மக்களை ஒருங்கிணைப்பதுடன், நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. விநாயகர் சிலைகளை உடைத்த கயவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிக் கிடப்பது கணபதி பெருமானின் அருள் அல்லவா?
நாமும் அந்தத் தும்பிக்கையானைத் தொழுதேத்தி, நமது துயர் களைவோம். நாடு நலம் பெற, அந்த ஐந்துகரத்தனை வணங்குவோம்; கவலைகள் நீங்க, கரியமுகத்தவனின் கழல் பணிவோம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை! கணபதி என்றிடக் காலனும் கைதொழும்!! கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலகள் தீருமே!
- நன்றி: விஜயபாரதம்
$$$