-ஆதிசைவன் இரா.இராம்குமார்
"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"

எந்த ஒரு வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே வெள்ளைக்காரனின் ஈரக்குடல் நடுநடுங்கியதோ…..
எந்த ஒன்றைச் சொன்னதாலே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறைச்சாலையில் சித்திரவதையும் தூக்குமேடையும் கிடைத்ததோ….
எந்த ஒற்றை வார்த்தையாலே மக்கள் அனைவரின் சுதந்திர தாகத்தை தட்டியெழுப்ப முடிந்ததோ…..
எந்த ஒரு மந்திரத்தினாலே தேசபக்த வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் பலிபீடத்தில் பலிகொடுத்திட சித்தமாய் இருந்தனரோ…..
எந்த ஒரு தாரக மந்திரம் பாரதத் திருநாட்டின் வீர சுதந்திரத்திற்கு மூல காரணமாய் அமைந்ததோ…..
அந்த ஒரு மந்திரம் ராஷ்ட்ர மந்திரம் ‘வந்தே மாதரம்’.
அந்த ராஷ்ட்ர மந்திரம் மீண்டும் தனது சிங்காதனத்தில் எழுந்திருந்து சிங்கநாதம் முழங்கிட, சுதந்திரம் பெற்றும் 80 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இது ஒரு நீண்ட நாள் காத்திருப்புப் போராட்டம். 80 ஆண்டு கால தவப்பயனால் இன்று தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட…. அதன்கீழ் ஒட்டுமொத்த பாரத மக்களின் குரலில் இருந்து ‘வந்தே மாதரம்’ ஒலித்திட…. மீண்டும் புத்தொளி வீசிப் பிரகாசிக்கின்றாள் நம் பாரத அன்னை.
தேசபக்தியை அனைவருக்கும் பொதுவுடைமை ஆக்கிட இதுவே சரியான தருணம். இதுவே சரியான மந்திரம். ஆகையால் காலம் தாழ்த்தாது இதன் வீர வரலாறு மற்றும் அதனால் அடைந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து தெரிந்திடும் வண்ணம் வழிவகை செய்தல் வேண்டும்.
“என் நாடு எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதல்ல என் தேசபக்தி; என் நாடு தவறான பாதையில் செல்லும்போது அதைச் சரிசெய்யப் பாடுபடுவதே உண்மையான தேசபக்தி” என்று ஆப்ரகாம் லிங்கன் கூறுகிறார். எனவே இந்த தேசபக்தி விதையை மக்கள் மனதில் விதைக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
‘வந்தே மாதரம்’ என்ற சொல்லிற்கு ஏன் இத்தனை பெரும் சக்தி?
பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கு ‘வந்தே மாதரம்’ என்ற சொல் எங்கிருந்து கிடைத்தது என்று ஆராய்ந்து பார்க்கையில் ஒரு மாபெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், சந்தியாவந்தனத்தின் போது சொல்லக்கூடிய காயத்ரி தியான ஸ்லோகமான
அக்ஷஸ்ரக்-குண்டிகா ஹஸ்தாம் சுத்தஸ்படிக நிர்மலாம்/ ஸர்வ-வித்யாமயீம் வந்தே காயத்ரீம் வேதமாதரம்//
என்பதில் இருந்து கையாளப்பட்டதே இந்த ‘வந்தே மாதரம்’ சொல்லாகும். நமது மூதாதையர்களால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உச்சரித்துக் கொண்டிருந்ததன் விளைவே இந்த மந்திர சக்தி உருப்பெற்றதற்கு காரணம்.
ஆகவே ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லின் வீரியத்தையும் அதன் பொருளையும் உணர்ந்து தினசரி வாழ்வில் உச்சரித்து வந்தோமானால் நாமும் உயர்வோம். நம் நாடும் உயரும் என்பதில் சந்தேகமேயில்லை.
“ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை ” என்று நம்மாழ்வார் கூறுகிறார். எனவே பாரதீயர்கள் அனைவரும் தேசியப் பாடலின் பொருளுணர்ந்து கூடித் தொழுவார்களானால் நம் தேசத்தின் மீது படர்ந்திருக்கும் படரவிருக்கும் தீமைகள் யாவும் ஓடோடிச் சென்றுவிடும்.
ரேழி விளக்கு (இடைக்கழி விளக்கு) எவ்வாறு ஒரே இடத்திலிருந்து வீட்டு வாசலுக்கும் வீட்டின் உட்புறத்திற்கும் வெளிச்சத்தைக் கொடுக்கிறதோ அப்படி ‘வந்தே மாதரம்’ என்ற ஒரு மந்திரம் நிகழ்கால செயல்பாட்டிற்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது; ஒளி பாய்ச்சக் கூடியது; துன்பத்தை அகற்றவல்லது.
கிரேக்க புராணத்தில் ‘ஈயாஸ்’ என்னும் தேவதை ஒரு மனிதனைக் காதலித்து தன் காதலனுக்கு இறவாமை வரம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள். “அவ்வாறே ஆகக் கடவது” என்று வரம் தந்தார் இறைவன். காதலனும் இறவாமையைப் பெற்றான். ஆனால் முதுமையும் மூப்பும் சீரழிவும் உறுதியின்மையும் பெற்றான். ஈயாசின் கண்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது, இப்போது வருத்தப்படுவதற்கும் வெறுத்து ஒதுக்குவதற்கும் காரணமாய் அமைந்தது. இறவாமை பெற்ற காதலனும் இறக்க விருப்பம் கொண்டான். அதன் பின்பு ஈயாஸ் வருந்திக் கூறியது, “மாறா இளமை வேண்டுவதை மறந்து என் காதலனுக்கு இறவாமையை வேண்டினேனே” என்பதாகும்.
ஆனால் நம் நாட்டு ஞானிகளும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் ஆன்றோர்களும் சான்றோர்களும் வீரர்களும் தான் அமரத்துவம் எய்த விரும்பியோ அல்லது தன் அன்பிற்கினியவர்களின் அமரத்துவத்திற்காகவோ இறைவனிடம் பிரார்த்தனை செய்ததில்லை. மாறாக தன்னை ஊட்டி வளர்த்த, தன்னைப் போன்ற பல தனயர்களை ஈன்றெடுத்த, தர்மத்தின் ஆதார பீடமாக விளங்கும் நம் பாரத அன்னை என்றென்றும் அமர பாரதமாக, இளமை மாறாதவளாக இருந்திட வேண்டியே விரும்பினர், பிரார்த்தித்தனர், அருளினர், ஆசி கூறினர்.
"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"
-என்று கவிஞரும் கூட வந்தே மாதரப் பாடலில் பாரத அன்னையை இளமைத் தோற்றம் கொண்டவளாகவே வருணித்திருக்கிறார். ஆராதனை செய்திருக்கிறார்.
“ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸி” (பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே) என்று உதாரண புருஷனான ராமபிரானால் தேசத்தினது தாய் தன்மையும் முக்கியத்துவமும் நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
நம் தேசத்தைப் பொருத்த வரை உயிரைப் பேணிக் காக்கும் அனைத்தும் தாய் அம்சமே. ஆகையால் தான் பூமியை பூமாதேவி என்கிறோம்; பாரத நாட்டை பாரதமாதா என்கிறோம்.
குழம்பிய நீரை எப்படி தேற்றான் கொட்டை தெளிவித்து தானும் அதில் கலந்து கரைந்து போகுமோ அதேபோல, அந்நிய மனப்பான்மையில் ஊறிக் குழம்பிய மக்களைத் தெளிவித்து தேசபக்தி ஊட்டிட ‘வந்தே மாதரம்’ என்ற பீஜ மந்திரம் பயன்பட்டு அது மக்களின் மனதில் கலந்து கரைந்து தன்வயமாகிட வேண்டும்.
தியோடர் ரூஸ்வெல்ட் (அமெரிக்கா) கூறுகிறார்….. “நாட்டிற்கு ஆதரவாக இருப்பது என்பது அந்நாட்டின் அதிபருக்கு ஆதரவாக இருப்பது அல்ல. நாட்டின் இறையாண்மை உணர்வோடு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உண்மையாக உழைப்பதே உண்மையான தேசபக்தி”.
உலகின் பல நாடுகளிலும் கூட இத்தகைய அடிப்படையில் உணர்ச்சி மிகுந்த தேசிய பாடல்கள் பாடப்படுகின்றன. காரணம், ஒரு நாட்டின் கடந்த கால வரலாறு மற்றும் அந்நாட்டின் இறையாண்மை, நிகழ்கால செயல்பாட்டிற்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் விளங்கும் என்பதற்காகவே.
உதாரணமாக பிரான்ஸ் நாட்டு தேசிய கீதம் “லா மார்சலைஸ்” – 1792 இல் ஏற்பட்ட பிரான்ஸ் புரட்சியின் போது கொடுங்கோன்மைக்கு எதிராக சுதந்திர தாகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்த கிளர்ச்சிப் பாடல் ஆகும்.
தென்னாப்பிரிக்காவில் “கோசி சிகலெல் இ ஆப்ரிக்கா” என்பது உலகின் ஒரே நியோ மாடல் தேசிய கீதம் ஆகும். அந்நாட்டின் 5 அதிகாரப்பூர்வ மொழிகளை உள்ளடக்கி, வெவ்வேறு இசைக் குறிப்புகளில் தொடங்கி முடியும் இந்தப் பாடல் – நிறவெறிக்கு எதிரான ஒற்றுமையின் அடையாளமாகப் பாடப்படுகிறது.
ஜெர்மனியில் “தாய் டாய்ட்ச்லாண்ட்லிட்” என்று தேசிய கீதம் ஒற்றுமை, நீதி, சுதந்திரம் என்ற கொள்கை அடிப்படையில் இரண்டாம் உலகப் போரின் கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சீனாவில் – 1930 இல் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்கள் போராடிய போது உருவான உணர்ச்சியைத் தூண்டும் தீவிர தேசபக்தி பாடல், ஒரு ராணுவ அணிவகுப்பு பாடல் அமைப்பினைப் பெற்றது. “எழுந்திருங்கள், அடிமையாக இருக்க மறுப்பவர்களே, நம்முடைய சதையையும் ரத்தத்தையும் கொண்டு புதிய பெரும் சுவர் எழுப்புவோம்” என்ற முறையில் அமைந்த உணர்ச்சி மிகு பாடல் அது.
உலகின் மிகக் குறுகிய தேசிய கீதமான ஜப்பான் நாட்டுப் பாடலானது ஜப்பானிய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் மெல்லிய உணர்வைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தேசத்தின் மீது மரியாதை, அன்பு, பக்தி, கடமையுணர்வு, நன்றியுணர்வு, தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டே தேசபக்தி பாடல்கள் பாடப்படுகின்றன.
தேள்கள் தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறக்கலாம். எலிகள் தான் வாழ்ந்த இருப்பிடத்தை மறக்கலாம். ஆனால் தேவ நிலையை அடைய தகுதியுள்ள மனிதர்களாகிய நாம் அவ்வாறு இருப்பது முறையோ? தாயும் தாய்நாடும் மோட்ச லோகத்தை விடப் பெரிதாகக் கருதப்பட வேண்டியவை அல்லவா? எனவே இன்றைய காலகட்டத்தில் நாடு மேன்மையுற, தேசபக்தியை ஊட்டி வளர்க்கும் பக்தர்கள் படை வேண்டும்.
சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போலல்லாமல், ஈன ஸ்வரத்தோடு சொல்லாமல், உணர்வுப் பூர்வமாக, நாடி நரம்புகள் முறுக்கேற, குருதியில் தேசப்பற்று கலந்தோட, சிந்தையில் நிறுத்தி, தெளிவுறச் சொல்லுவோம் “வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!!”.
$$$