நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை

-மகாகவி பாரதி

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி

நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே பிரஸ்தாபிக்க விரும்புகின்றோம். நம் பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும், வீரர்களையும் பற்றிச் சரியான பயிற்சி அளிக்கப் படுவதில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் போதாது. எனினும் இங்கு அதை மிகவும் சுருக்கமாக விவரிப்பது பயனில்லாத விஷயமாக மாட்டாது. 

நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப் படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வி யுறுகின்றார்கள். 

அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. ரெயில்வே, தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிராததனால் கம்பன் தெய்விகமான கவியென்பது பொய்யாய் விடுமா? 

பூமி சூரியனைச் சுற்றி வட்டமிடுகிற தென்ற உண்மையை ஒப்புக் கொள்ளாததனால் ஆதிசங்கரர் மஹா வேதாந்த ஞானி யென்பது தவறாகப் போய்விடுமா? நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா? 

இதே விஷயத்தில் இங்கிலாந்தின் தலைமை எவ்வாறு இருக்கிற தென்பதைச் சிறிது ஆலோசிப்போம். கிறிஸ்துநாதர் மோட்டார் வண்டியையும், தந்தி விநோதங்களையும் அறியாதிருந்த போதிலும், அவர் நல்லொழுக்கம், தெய்விக ஞானம் என்பவற்றில் நிகரற்று விளங்கினா ரென்பது பாடசாலை மாணாக்கர்களுக்கு ஓயாமல் எடுத்து ஓதப்பட்டு வருகின்றது. 

எல்லாக் காலங்களிலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் உயர்ச்சி பெற்று விளங்கினவர்களின் சரித்திரங்களெல்லாம் எளிய, தெளிவான நடையிலே எழுதப்பட்டு மாணாக்கர்களுக்குக் காண்பித்து வரப்படுகின்றன. அவர்கள் சிற்சில விஷயங்களிலே அநாகரிகமும் அறிவுக் குறைவும் கொண்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் பிரஸ்தாபிப்பதே இல்லை. அவர்கள் இருந்த காலத்தின் மாதிரியென்பதாகக் கருதி அதை இலேசாக விட்டு விடுவதே மரபாகும்.

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள். 

நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, “உனக்குத் தெரிந்த விஷயங்கள்கூட வியாஸனுக்குத் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார். அவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும், மஹா ஞானிகளென்று கருதும் செயிண்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த உபாத்தியாயர் மறந்து விட்டார். 

இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாக மாட்டாது? நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்குத் தேசபக்தி, செளரியம் (இந்தச் சொல்லுக்கு வீரம் (Valour) என்று பொருள்), ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். சிவாஜியைப் பற்றி, ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குழறு படைகளும் உபநிஷத்துக்களைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டுவிடுவோமானால், நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்.

குறிப்பு:

மகாகவி பாரதியால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு 1941ஆம் ஆண்டில் ‘கலைமகள்’ ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்டது. 

நன்றி: திரு ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’.

ஆதாரம்: பாரதி இலக்கியப் பயிலகம்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s