புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்

-சேக்கிழான்

யார் வேண்டுமானாலும் எதை எழுதினாலும் புதுக்கவிதை என்று சொல்லும் காலமாகிவிட்டது. ஆனால், கவிதை என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அது என்ன? அதன் வரலாற்றை அறிந்தால், யாரும் கண்டபடி கிறுக்கி, தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.... இதோ பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை.....

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே 

-என்பது நன்னூல் சூத்திரம் (462). 

தாய்த்தமிழ் மொழி இன்றும் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வீற்றிருக்கக் காரணம், இந்தத் தகவமைப்புத் திறன் தான்.

அந்த வகையில் நவீனகால சமூக, மொழி மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழில் உருவானதே புதுக்கவிதை. யாப்பிலக்கண அடிப்படையில் எழுதப்பட்டு வந்த கவிதைத் தமிழுக்கு மாற்றாக, புதிய திசையில், புதிய நடையில் எழுதப்பட்ட கவிதைகள் ‘புதுக்கவிதை’ என்று பெயர் பெற்றன. அதையடுத்து, மரபார்ந்த யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பட்டவை ‘மரபுக் கவிதைகள்’ என்று பெயர் பெற்றன.

இந்த மாற்றம் மகாகவி பாரதியிடமிருந்து துவங்குகிறது. 1910 முதல் 1920 களில் தமிழின் தவப்புதல்வரான மகாகவி பாரதி, ‘வசன கவிதை’ என்ற புதிய இலக்கிய வகையை தமிழுக்கு அறிமுகம் செய்தார். ஷெல்லி, வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருந்த அவர், புதிய நடையில் தமிழுக்கு அணி செய்தார்.

உடல் நன்று. புலன்கள் இனியன.
உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம்.
உணர்வே அமுதம்.
உணர்வு தெய்வம்.

-மகாகவி பாரதி

-என்ற பாரதியின் வசன கவிதை (இன்பம்), நேரடியாகவும் பொட்டில் அடித்தாற்போலவும் மிக எளிதாக சொல்ல வந்ததை சொல்லிச் செல்வதைக் காணலாம்.

பாரதியின் அடியொற்றி பெரும் புலவர் படை பின்னாளில் உருவானது. அவர்களில் ஒருவர் ந.பிச்சமூர்த்தி (1900- 1976). அவர் பாரதியின் வசன கவிதை நடையிலேயே சென்று, புதிய ஒரு வகை கவிதையை 1934இல் அறிமுகம் செய்தார். அதுவே புதுக்கவிதை என்று பெயர் பெற்றது. எனவே அவரை ‘புதுக்கவிதையின் தந்தை’ என்று கூறுகின்றனர். அவரது கவிதை ஒன்று:

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது
மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது
என்ன மதுரம் ! என்ன துயரம்…

-ந.பிச்சமூர்த்தி

அதாவது, புதுக்கவிதைக்கு வடிவ ஒழுங்கோ, இலக்கணக் கட்டுப்பாடோ இல்லை. சொல்ல வந்த பொருளே முக்கியம். இதன் காரணமாக, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற யாப்பிலக்கணப் புலமை இல்லாதவரும் கவிதை எழுதலாம் என்ற நிலை உருவானது.

இதையே பின்னாளில் மு.மேத்தா ஒரு கவிதையாகவே எழுதினார்:

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி-
இவை எதுவும் இல்லாத
கருத்துகள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை.

-மு.மேத்தா

இந்த கட்டுப்பாடற்ற தன்மை, தமிழை முறைப்படி கற்காதவர்களும் கவிதை எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. அதன் காரணமாக கணக்கற்ற கவிஞர்கள் உருவாகினர்.

கவிதை எழுத காரிகை (யாப்பெருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்) கற்கத் தேவையில்லை என்ற முழக்கத்துடனே பலரும் புதுக்கவிதை எழுதினர். எனினும் புதுக்கவிதைக்கு சில அம்சங்கள் உண்டு. படிமங்கள், தொன்மக் குறியீடுகள், உருவகங்கள், சொற்சுருக்கம், அங்கதம், சமகாலப் பாடுபொருள் ஆகியவை புதுக்கவிதையின் வடிவையும் எழிலையும் தீர்மானிப்பவையாக உள்ளன. உதாரணமாக,

வீட்டுத்தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்.

-பொன்மணி வைரமுத்து 

-என்ற கவிதை, பெண்ணியத்தைப் பேசுபொருளாகக் கொண்டு, அங்கத நடையில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

சமூக மாற்ற விழைவுகள், முற்போக்குக் கருத்துகள் போன்றவற்றை முன்வைப்பதற்கான எளிய கருவியாக புதுக்கவிதைகள் அமைந்ததால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக இடதுசாரிகள் புதுக்கவிதையை தங்கள் தலமாக ஆக்கிரமித்துக்கொண்டனர். திராவிட சிந்தனையாளர்களும் அவர்களைப் பின்பற்றினர்.

தற்போது, புதுக்கவிஞர்களில் பலரைக் கவிஞர் என்று சொல்ல முடியாத போதும், கவிதை எழுதும் உந்துதல் அனைவரிடமும் தோன்ற புதுக்கவிதை ஒரு கருவி ஆயிற்று. காலப்போக்கில் மரபுக்கவிதை எழுத ஆளின்றி, இன்று தமிழ்க் கவிதை உலகை புதுக்கவிதையே ஆக்கிரமித்திருக்கிறது.



புதுக்கவிதையின் வளர்ச்சி: 

ஒரு புதிய இலக்கிய வகை உருவாகும்போது, அதை வளர்ப்பதற்கான சூழலும் உருவாக வேண்டும். அந்த வகையில் தமிழில் தோன்றிய சிற்றிதழ்களும் இலக்கிய இதழ்களும் புதிய இலக்கிய வகைக்கு நடைபாதை விரித்தன.

சூறாவளி, சரஸ்வதி, கலாமோகினி, எழுத்து, கிராம ஊழியன், இலக்கிய வட்டம், மணிக்கொடி, கசடதபற, சிவாஜி, கணையாழி, ஞானரதம், தீபம், வானம்பாடி போன்ற இதழ்கள் புதுக்கவிஞர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தன. புதுக்கவிதை குறித்த வாதப் பிரதிவாதங்களும் விமர்சனங்களும் இந்த இதழ்களில் வெளியாகி, இதனை மேலும் வளர்த்தன. எனினும் ஆரம்பத்தில் ஒருவித அசூயையுடன் தான் புலவர்கள் புதுக்கவிதையை அணுகினர்.

ஆய்வாளர்கள் புதுக்கவிதையின் வளர்ச்சியை மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று மூன்றாகப் பிரிப்பது வழக்கம். ‘மணிக்கொடி’ பத்திரிகையில் எழுதிய பலரும் புதுக்கவிதை உலகில் பிரவேசித்தனர். கவிஞர் வ.விஜயபாஸ்கரனால் துவக்கப்பட்ட சரஸ்வதி பத்திரிகை (1955- 1962) புதுக்கவிதையை வளர்ப்பதில் முன்னிலை வகித்தது. அதே காலத்தில் வெளியான சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, நவசக்தி, ஜெயபாரதி ஆகியவையும் புதுக்கவிதைகளை வெளியிட்டன. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் இந்தக் காலகட்டத்தில் எழுதிய கவிஞர்கள்.

பத்திரிகையாளரான சி.சு.செல்லப்பா 1959 முதல் 1970 வரை நடத்திய ‘எழுத்து’ பத்திரிகை, அடுத்து புதுக்கவிதையின் விமர்சனப்பூர்வமான வளர்ச்சியில் பங்களித்த சிற்றிதழ் ஆகும். இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற ஆகிய இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. சிட்டி, வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், மயன் (க.நா.சுப்பிரமணியன்), பிரமிள், சி.மணி போன்றோர் இக்காலத்துக்கு சிறப்புச் சேர்த்தனர். ஓர் உதாரணம்:

துவைக்க
வெளுத்தது
துணி.
வாழ்வு நெறிக்க
வெளுத்தது
முடி

-சி.மணி 

அடுத்து 1970 முதல் 1981வரை கோவையிலிருந்து வெளிவந்த ‘வானம்பாடி’ இதழ் புதுக்கவிதையின் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. தீபம், கணையாழி,
சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கைகொண்டான், மு.மேத்தா, ரவீந்திரன், சக்திக்கனல், அப்துல் ரகுமான் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களில் சிலர்.

இவ்வாறாக சமுதாயத்தில் புதுக்கவிதை தனது இடத்தை நிறுவ பலர் காரணமாயினர். எழுத எளிமை காரணமாக பாமரரும் புதுக்கவிதை எழுதத் தலைப்பட்டனர். உண்மையிலேயே பாமரரரும் பண்டிதரும் எந்தக் கல்விப்புல வேறுபாடும் இன்றி கவிதை எழுதலாம் என்பது புதுக்கவிதையின் சிறப்பே.

ஆனால், புற்றீசல் போலக் கிளம்பிய புதுக்கவிதைகளாலும், காதலை மட்டுமே பெரும் பேசுபொருளாகக் கொண்ட கவிஞர்களாலும், மடக்கி மடக்கி எழுதினால் புதுக்கவிதையாகிவிடும் என்ற சிந்தனையற்ற கண்ணோட்டத்தாலும் புதுக்கவிதையின் லாவண்யம் அழகினை இழந்திருக்கிறது.

மடக்கி
மடக்கி
எழுதுவது
கவிதை என்றால்
நானும் எழுதுவேன்
அதை.

-குழலேந்தி 

-என்ற புதுக்கவிதை, ஒரு சுய எள்ளலாகும். மரபுக்கவிதையை யார் வேண்டுமாயினும் எழுத இயலாது என்பது அதன் புலமைச் சிறப்பு. புதுக்கவிதையை யாரும் எழுதலாம் என்பது இதன் சுதந்திரச் சிறப்பு. எனினும், கட்டுப்பாடற்ற சுதந்திரம் நல்லதல்ல என்பதற்கான பல உதாரணங்களை புதுக்கவிதைகளிலும் சமீபகாலமாகக் கண்டு வருகிறோம்.

எழுதுவோர் சிலரின் வக்கிரச் சிந்தனைகள் எழுத்து வடிவம் பெற புதுக்கவிதை ஒரு வாகனமாகி வருவது வருத்தம் அளிப்பதே. (அண்மையில் கடவுள் ராமரையும் சீதையையும் அவமதிக்கும் வகையில் சினிமா உதவி இயக்குநர் ஒருவர் எழுதிய கவிதை (?) கடும் கண்டனங்களுக்கு உள்ளானதை அனைவரும் அறிவோம்). ஆனால், குப்பைகளும் முத்துக்களும் கலந்து வந்தாலும், உண்மையானவையே நிலைக்கும் என்பது உலக இயல்பாதலின், இதுகுறித்து அஞ்ச வேண்டியதில்லை என்பது கவிஞர்களின் கருத்தாக உள்ளது.

அதேபோல, புரியாமல் எழுதுவதே கவிதை என்ற எண்ணமும் இப்போது பரவலாகி வருகிறது. கவித்துவம் என்ற பெயரில் எழுதப்படும் எளியோருக்குப் புரியாத புதுக்கவிதையை விட மரபுக்கவிதையே பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டு வருவதையும் கூறாமல் இருக்க முடியவில்லை.

அண்மைக்காலமாக வெகுஜன பதிரிகைகளும் புதுக்கவிதைகளுக்கு இடம் அளிக்கின்றன. இன்று வெளியாகும் சிற்றிதழ்கள் காலச்சுவடு, உயிர்மை போன்றவை புதிய புதுக்கவிஞர்களை வாசிப்புக்கு வாய்ப்பளிக்கின்றன. ஆயினும் இவை தாம் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளால் கவிதையின் உண்மைத்தன்மை பின்னுக்குத் தள்ளப்படுவது பெரும் குறையாகும். அரசியல் அரங்கில் காட்சிகள் மாறுகையில் இதுவும் மாறும் என்று நம்புவோம்.

மொத்தத்தில், ந.பிச்சமூர்த்தி (வழித்துணை)யில் துவக்கி, குப.ரா., க.நா.சு., புதுமைப்பித்தன், ந.காமராசன் (கறுப்பு மலர்கள்), பிரமிள், வல்லிக்கண்ணன் (அமர வேதனை), மீரா (ஊசிகள்), நகுலன் (மூன்று), பசுவய்யா (நடுநிசி நாய்கள்), சி.மணி (ஒளிச்சேர்க்கை), மேத்தா (கண்ணீர்ப்பூக்கள்), சிட்டி சுந்தர்ராஜன், சி.சு.செல்லப்பா, அப்துல் ரகுமான் (பால்வீதி), வைரமுத்து (திருத்தி எழுதிய தீர்ப்புகள்), விக்கிரமாதித்தன், சிற்பி, புவியரசு, ஞானி, ஞானக்கூத்தன் (அன்று வேறு கிழமை), தேவதேவன், இசை என பெரும் கவிஞர் படை, புதுக்கவிதைகள் வாயிலாக தமிழ் வளர்த்திருக்கிறது (அடைப்புக் குறிக்குள் உள்ளவை அவர்களின் சிறந்த நூல்கள்).

இந்தக் கவிஞர் படை தொடரும். தமிழின் இளமை என்றும் புதிதாய்ப் பொலியும் என்பதற்கான சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. காலத்துக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் தமிழ், இன்னும் பல புதிய இலக்கிய வகைகளுக்காகக் காத்திருக்கிறது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s