-டி.எஸ்.தியாகராஜன்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகம் அடைந்து வரும் சிரமங்களையும், உக்ரைன் மக்கள் அடைந்துள்ள வேதனைகளையும் சுட்டி, அதன் பின்புலத்தில் உள்ள சுயநல உலக அரசியலையும், எளிய தீர்வையும் முன்வைக்கிறார், எழுத்தாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன்....

ஒரு காலத்தில் ரஷ்ய நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்து வந்ததால் ‘இரும்புத் திரை நாடு’ என்றார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமே ரஷ்யாவை, அச்சத்தோடும், கவலையோடும் நோக்குகிறது. விளாதிமிர் இலியச் என்ற லெனின் போல்ஷ்விக்குகளின் தலைவராக இருந்து புரட்சி செய்து ரஷ்ய யூனியனை 1917-இல் அமைத்தார். இதைத்தான் மகாகவி “இமய மலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன்” என்றார்.
லெனினுக்குப் பின்னர் முரட்டு ஜோசப் ஸ்டாலின் அதிபரானார். இவர் தான் 29 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருந்தவர். பின்னர் வந்தவர்களில் நிகிதா குருஷேவ், லியோன்டு பிரஸ்னேவ், மிகையில் கோர்பஷேவ் ஆகியோர் முக்கியமானவர்கள். மிகையில் கோர்பஷேவ் காலத்தில் 1991- சோவியத் யூனியன் கட்டமைப்பு உடைந்து பல நாடுகள் தனியாகப் பிரிந்தன. அப்படிப் பிரிந்த நாடுகளில் ஒன்றுதான் இன்றைய உக்ரைன்.
இயற்கை வளம் நிரம்பிய பெரிய நிலப்பரப்பை உடைய உக்ரைனின் இளவயது அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 30 நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் சேர்க்க விரும்பி அதற்கான அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தினர். தற்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்ததோடு அண்மையில் தான் பல ஆண்டுகட்கு பதவியில் இருக்கும் வண்ணம் சட்டத் திருத்தத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எண்ணி, உக்ரைன் நாட்டைக் கைப்பற்ற கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாள் போர் தொடுத்தார் புதின். இப்போர் இன்றளவும் நடந்து வருகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரிய போர் இதுதான். போரினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு உக்ரைன் நாட்டு மங்கை “என் கணவன், மகன், மகள், பேரன், பேத்திகள் உள்பட எல்லோரையும் ஓரிரவில் இழந்தேன். மாளிகை போன்ற வீடு மற்றும் எல்லா உடைமைகளையும் அழிந்து போயின. நான் மட்டும் இந்த பெரிய காயங்களோடும், சொல்ல இயலாத உடல் ரணத்தோடும் இருக்க, நான் என்ன குற்றமிழைத்தேன்?” என்று கண்ணீரை ஆறாய்ப் பெருக்கியபடி, பெருங்குரலெடுத்து அரற்றி தனது பேத்தியின் விளையாட்டு பொம்மையை கையில் ஏந்தியபடி நின்ற காட்சியை உலக ஊடகங்கள் வெளியிட்டன.
முன்பொரு சமயம், அமெரிக்கா வியட்நாம் நாட்டை சிதைத்தபோது அமெரிக்க விமானப் படையின் எரிகுண்டு வீச்சால் தீக் காயங்களோடு, ஆடையின்றி தெருவில் அழுதபடி ஓடிய சிறுமியின் காட்சியை நினைவு படுத்துவதாக பத்திரிகையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். உக்ரைன் நாடு தனது பட்ஜெட்டில் இராணுவத்திற்காக 30 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ரஷ்யா 82.6 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4.5 லட்சம். ரஷ்யா நாட்டு இராணுவ வீரர்கள் 10.8 லட்சம்.
உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா போரைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல், சீறிவரும் காளைக்கு மூக்கணாங்கயிறு போடாமல், கொம்பு சீவி விடுவது போல உக்ரைனுக்கு 73.2 பில்லியன் டாலரைத் தந்தது மட்டுமல்லாது, 44.3 பில்லியன் டாலர் அளவுக்கு இராணுவ போர்த் தளவாடங்களைத் தந்துள்ளது. ஜோபைடன் அண்மையில் உக்ரைன் சென்றபோது மேலும் எப்.16 ரகபோர் விமானங்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். முன்னரே ஐரோப்பிய சமூகம் பல லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
தற்போது பிரான்ஸ் ஏஎம்எக்ஸ் 10 கவச ஆயுத டாங்குகளையும், ஜெர்மனி லியோபார்டு டாங்குகளையும் அனுப்புகிறது. புதின் 1812, 1942-க்குப் பிறகு நடக்கும் ‘மூன்றாவது பெரிய தேசபக்திப் போர்’ என்கிறார். அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2.8 லட்சம் வீரர்கள் மரணமடைந்தோ அல்லது காயமடைந்தோ இருக்கக் கூடும் என்கின்றன மேற்கிந்திய நாடுகள்.
6.3 மில்லியன் உக்ரைன் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். போலந்தும் ஜெர்மனியும் ஏறக்குறைய 3 மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. பிப்ரவரி 2022 முதல் ஜனவரி 2023 வரை 7 ஆயிரம் பொதுமக்கள் இறந்து விட்டார்கள் என்கிறது ஐ.நா.சபை. ஆனால் நார்வே அரசின் உயரதிகாரிகள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் மாண்டு விட்டனர் என்கின்றனர்.
139 பில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகள் அழிந்து விட்டன. உக்ரைன் மக்களில் 40 சதவீத மக்கள் இன்றியமையாத வாழ்விடம், உணவு, குடிநீர், மின்வசதி இன்ன பிற சுகாதார வசதியின்றி அவல நிலையில் உள்ளனர். உக்ரைனிலேயே 6.6 மில்லியன் (1 பில்லியன்: பத்து லட்சம்) மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மொத்தத்தில் 60 சதவீத உக்ரைன் நாட்டு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக 14 கோடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இப்போரினால் உக்ரைனின் அனைத்து தேசங்களுக்கு ரஷ்யா தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் இந்தியா மட்டும் 2022 மார்ச்சில் 0.2 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமடி செய்து, ரஷ்யாவின் இறக்குமதி அளவை 2022 நவம்பரில் 19 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இந்தியாவில் மற்ற நாடுகளைப்போல எரிபொருள் விலை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
இந்தப் போரினால் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 1.44 சதவீதம் குறைந்துள்ளது. கொரானா பாதிப்பில் இருந்து மீண்டு கிளர்ந்து எழுந்த இந்தியாவின் எழுச்சி இதனால் குறைந்துள்ளது. எனினும் நம் நாட்டுப் பிரதமரின் செல்வாக்கால் உக்ரைனில் படிக்கச் சென்றிருந்த 22,500 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற சிறப்புத் திட்டத்தால் ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் போரை ஒரிரு வாரங்களுக்கு ஒத்திவைத்து மீட்டுக் கொண்டு வந்தது மிகவும் போற்றுதற்குரியது. மேலும் ரஷ்ய அதிபரோடு பேசும்போது நம் பிரதமர் “இந்த நூற்றாண்டு போருக்கானது அல்ல” என்று கூறியிருப்பதை உலகமே வரவேற்றது.
ஆனாலும் தற்போது ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத தடை அமைப்பில் இருந்து விலகுவதாகச் சொல்லி இருக்கிறார். ஜெர்மனி முன்னாள் சான்ஸலர் பேராசிரியர் ஜெப்பர் ரோஸ்சாஸ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘1992 முதல் அமெரிக்காவின் கொள்கைகளில் அமெரிக்காதான் உலகின் சூப்பர்பவர் நாடு என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. ரஷ்ய- உக்ரைன் போரில் ரஷ்யாவின் பலத்தைக் குறைத்துவிட முடியும் என்று நம்புகிறது அமெரிக்கா. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனை ஆமோதிக்கும் விதத்தில் உக்ரைனை ஒரு களமாகப் பயன்படுத்துகிறார்கள். பைடன் நாங்கள் வெல்லுவோம் என்கிறார். 1,600 அணு ஆயுதங்கள் கொண்டுள்ள ரஷ்யாவை எப்படி வெல்லுவது சாத்தியம்? நான் உக்ரைன் நாட்டுத் தலைவரிடமும், மக்களிடத்திலும் சொன்னேன் இந்த ஆப்கானிஸ்தானத்தைப் பாருங்கள். கடந்த 15 ஆண்டுகளாக உதவி என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தை அழிவுக் களமாக்கியது. வியட்நாம், கம்போடியா, லவோஸ் ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் உதவுகிறேன் என்று சொல்லி அமெரிக்கா பேரழிவுகளைக் கொடுத்தது. இப்போது புதினை வீழ்த்த உக்ரைனைப் பயன்படுத்த விரும்புகிறது. உக்ரைன்நாட்டு மக்களுக்கு தங்களது எதிர்கால அரசியல், பொருளாதார வளர்ச்சியில் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்ப உரிமை உண்டு. ஆனால் ராணுவ ரீதியாக எதிர்காலக் கொள்கைகளை வகுக்கக் கூடாது. அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ கால்பதிக்க இடம் தரலாகாது. இந்த நேட்டோ அமைப்பை விரிவுபடுத்த வேண்டியது இல்லை. இந்த ஜனவரியில் கூட ஒரு நாடு ரஷ்யாவோடு இணைந்து விட்டது’ என்றார்.
தொலைவில் இருக்கும் ஒரு வல்லரசை நம்பி பக்கத்தில் இருக்கும் வல்லரசைப் பகைத்துக் கொள்வது நாட்டிற்கு நல்லதல்ல என்பதை விளக்கியுள்ளார். நம் நாட்டில் இதிகாச காலத்தில் மகாபாரதப் போர் 18 தினங்களில் முடிவுற்றது. கலிங்க நாட்டோடு போர் புரிந்த அசோக சக்ரவர்த்தி போர்க்களத்தில் நிகழ்ந்த உயிர்ப்பலிகளையும், பொருட்சேதங்களையும் கண்டு கண்ணீர் சிந்தி இனி போர் வேண்டாம் என முடிவெடுத்தார்; புத்தர் அருளிய அன்பு மொழிகளை உள்வாங்கி அமைதி தழைக்கவும் பௌத்தம் பரவவும் துணை நின்றார்.
கடந்த நூற்றாண்டின் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தது. இதைக் கண்ட முதறிஞர் ராஜாஜி அமெரிக்கா சென்று கென்னடியை சந்தித்து அணு ஆயுதப் போரினால் ஏற்படும் பாதகங்களை எடுத்துரைக்க விரும்பினார். வெள்ளை மாளிகை நிர்வாகம் ராஜாஜிக்கு 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேச அனுமதி அளித்தது. ஆனால், ஆழ்ந்த பொருளமைந்த ராஜாஜியின் உரை சந்திப்பின் நேரத்தை 50 நிமிடங்களுக்கு மேலாக நீட்டிக்க வைத்தது.
தற்போது ரஷ்யா, லூஹான்க்ஸ் டோனெட்ஸ்க், ஜபோரிஸ்சியா, கெர்சான் ஆகிய நான்கு பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் என்னதான் ஆயுதங்கள், ராடார்கள், ஏவுகணைகள், டிரோன்கள் வழங்கினாலும் போர் நீடிக்கவே வழிவகுக்கும். இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
உக்ரைன் அதிபர் “நாங்கள் நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம்” என்று காலம் கடந்து சொல்லியுள்ளார். உக்ரைன் நாட்டு மக்கள் தங்களை அழிக்க வல்ல இப்போர் நீடிக்க விரும்புவார்களா? உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனித குலம் தழைக்கவும் வறுமை விலகவும், அறியாமை தொலையவும், நோய்கள் அகலவும் சிந்திக்குமாயின் விளைவுகள் நன்மைகளை மட்டுமே வாரி வழங்கும்.
உலகின் முன்னரே இருக்கும் மதத் தீவிரவாதம், இனப்பூசல், இயற்கைப் பேரிடர் பேரழிவுகள் போதாதா? எதற்கு, இன்னுமோர் மனிதர்களால், ஏற்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்கள்? எதனையும் அழிக்க வல்ல ஆயுதங்களைத் துறந்து, எவற்றையும் சாதிக்க வல்ல அறிவாற்றலை வளர்த்தெடுப்பது இற்றை நாள் மானுடத்தின் அவசரத் தேவை.
மானுடம் வாழ மகான்கள் காட்டியுள்ள மார்க்கங்களை நல்லன பெருக்கும் சாதனங்களாக்கி, அல்லவற்றை அறவே நீக்கிடும் திறன் பெற்றாலான்றி, அமைதி தோன்றுவது எங்ஙனம்? ஒரு காலத்தில் ரஷ்யாவை, சீனாவை வென்று அமெரிக்காவை பயமுறுத்திய சின்னஞ்சிறு நாடான ஜப்பானை இரண்டாவது உலகப் போரில் ‘லிட்டில்பாய்’ என்று பெயரிட்டு ஒரிரு அணுகுண்டுகளை அமெரிக்கா வீசி தாக்கியது. இதன் விளைவுகளைக் கண்ணால் கண்ட ஜப்பான் இனி போர் வேண்டாம் முடிவெடுத்து, உழைப்பால் உலகில் முன்னேறுகிறார்கள்.
இரண்டாவது உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி நாட்டை இரு கூறுகளாக்கி மேற்கு ஜெர்மனி – கிழக்கு ஜெர்மனி என பிரித்து தடுப்புச் சுவரும் எழுப்பினார்கள். ஆனால் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே கிழக்கும், மேற்கும் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி இணைந்தனவே. அது போன்று உக்ரைன் நாட்டு மக்கள் ரஷ்ய நாட்டோடு இணைய விரும்பினால் விளாதிமிர் ஜெலன்ஸ்கி தடுத்துப் போரிட மக்களை தயார் படுத்துவானேன்!
ரஷ்யாவும் தனது நாட்டு விரிவாக்கத்தினை அப்பாவி பொதுமக்கள் நலம் கருதி போரினைக் கைவிடுதல் சிறப்பு தானே! இந்நிலையில் தான் இரண்டொரு தினங்களுக்கு முன்பாக நெதர்லாந்தில் ஹேக்நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாதிமிர் புதினை போர்க் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பித்து இருக்கிறது. எப்போது தைவானில் நுழையலாம் என்று காத்து இருக்கிற சீனா இன்று ரஷ்யாவோடு உரையாடலை நிகழ்த்தியுள்ளது.
உலக ஆசான் மனிதர்கட்கு எளிய வழியொன்றைச் சுட்டுவார். உலகின் கண் வாழும் பிற உயிர்கள் உன்னைத் துதிக்க நீ வாழ வேண்டுமாயின் ‘தான்’ என்ற கர்வத்தினை, இறுமாப்பினை செருக்கினை, பற்றினை விட்டு விடுதல் தான் சிறந்த வழி என்ற பொருளில்,
தன் உயிர் தான் அறப்பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் -திருக்குறள்-268
-என்றார். இவ் வகையில் வல்லரசுகளின் தலைவர்கள் ‘தான்’ என்பதை விடுத்தால் ஏனைய நாட்டு எளிய மக்கள் இவர்களை போற்றித் தொழுவார்கள் என்பது நிச்சயம்.
- தினமணி (31.03.2023)
$$$