-பேரா.அ.ச.ஞானசம்பந்தன்

பழந்தமிழகத்தில் அரசன் எனப்பட்டவன் எவ்வாறு உருவானான்? அவன் ஏன் போர்களை நாடினான்? அவனே உலகின் அனைத்து இன்பங்களையும் சுவைக்கும் சுவைஞனாக எவ்வாறு ஆனான்? அரசனது தகுதிகள் என்ன? முடியாட்சி வழிவழியாக கைமாறியது எப்படி? அவனது அரண்மனை எவ்வாறு சிறப்புறக் கட்டப்பட்டது? அவனது தந்தக் கால் கட்டிலின் சிறப்புகள் என்ன? மன்னரைப் புலவர் பாடியதும் பாடாமல் ஒழிந்ததும் ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புறநானூற்றுப் பாடல்களின் உதவியுடன் பதி அளிக்கிறார் பேரா. அ.ச.ஞா..
புறம்
6. தமிழர் கண்ட அரசன் – அ
.
தனி வாழ்க்கையும் கூட்டு வாழ்க்கையும்
இப் பரந்த உலகில் எங்கு மக்கள் முதன்முதலில் தோன்றினார்கள்? இவ்வினாவிற்கு முடிவான விடை இதுகாறுங் கிடைத்திலது. நிலநூல் வல்லார் தமிழ்நாட்டுப் பாறைகளும், கல்லும் மிகப் பழமை வாய்ந்தவை என்று கூறுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்நிலம் மிகப் பழங்காலத்தே மக்கள் தன்பால் தோன்ற இடமளித்தது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பழைய சமூகம் நாளாவட்டத்தில் அனுபவம் பெற்று நாகரிகத் துடன் வாழக் கற்றுக்கொண்டது. கூட்டங்கூடி வாழக் கற்றுக் கொண்டதே இத்தமிழ் நாகரிகத்தின் முதற்படி என்னலாம். தனித்தனி மனிதராக வாழ்கின்ற நாகரீகம் குறிஞ்சித் திணையில் என்றால், கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் மருதத்திணை தோன்றலாயிற்று. கூட்டங் கூடினவுடன் புதுமுறை வாழ்வு மிகுந்தது என்று கூறலாம். தனித் தனியாக வாழும்பொழுது தனக்கெனவே வாழ்ந்த மனிதன், கூட்டங் கூடினவுடன் இந்நிலை மாற வேண்டுவதன் இன்றியமையாமையை உணரத் தலைப் பட்டான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய நிலை நிற்பட்டவுடன் ஓரளவு இடர்ப்பாடுகளும் தோன்றலாயின. எவ்வளவு தூரம் தனி மனிதன் தன் உரிமையை இழக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடை காண்பதில் மனத்தாங்கல் நிகழ்வது இயற்கை தானே? இத்தகைய இக்கட்டான சந்தருப்பங்களில் மனத் தாங்கல் கொண்ட இருவரும் ஒரு பொது மனிதனிடம் தமது முறையீட்டைத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பலருஞ் சென்று முறையிடத் தகுந்த ஒருவனே தலைவன்.
யார் தலைவன்?
எத்தகைய காரணங்களால் இத் தலைமைப் பதவி ஒருவனுக்குக் கிட்டியது? செல்வம் மிக்குள்ளவனே இத் தலைமைப் பதவிக்கு உரியவன் ஆயினன். இந்நிலை தோன்றுவதன் முன்னர் உடல் வலிவுடையவன் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்திருப்பான். ஆனால், நாளடைவில் உடல் வன்மையுடைய பலரை வைத்து ஏவல் கொள்ளும் தகுதி வாய்ந்த ஒருவனே தலைவனாகத் தகுதி பெற்றிருப்பான். மக்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையில் இருப்பது ‘வயிறு’ ஒன்று அன்றோ? பசி தணிக்கும் செல்வம் உடையான் ஒருவன் பிறரை ஏவல் கொள்ளும் தன்மை பெற்றான் என்பதில் வியப்பென்ன? இன்றும் பணமுடையவர்களிடம் அறிவு நிரம்பியவர்கள் பலரும் ஏவல் செய்வது நாம் காணும் ஒன்றுதானே! ஆனால், அப்பழங்காலத்தில் எது செல்வமாகக் கருதப் பெற்றது?.
ஆதிமனிதன் காட்டில் வாழும் விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு உதவி புரிய வைத்துக் கொண்டான். அவ்வாறு அவன் கொண்ட பல விலங்குகளுள் மாடு ஒன்றுதான் அவன் செல்வ நிலையைக் காட்டும் அறிகுறியாய் இருந்து வந்தது. மனிதனுக்கு உணவு தந்து அவனுக்குப் பொதி சுமக்கவும் பயன்படும் இவ் விலங்கு, வீட்டு விலங்குகளுள் முதலிடம் பெற்றது இயற்கைதானே? இத்தகைய மாடுகளை அதிகம் பெற்ற வான் செல்வமுடையவனாகக் கருதப்பெற்றான். ‘மாடு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்றே ஒரு பொருள் இன்றளவும் இருந்து வருகிறது.
தமிழருக்கு மட்டும் மாடு செல்வமாய் இருந்தது என்பதல்லாமல், கிரேக்கருக்கும் அதுவே செல்வமாய் இருந்தது எனச் சரித நூல் வல்லார் கூறுவார். அம்மட்டோடு அல்லாமல் கிரேக்க மொழியில் முதல் எழுத்தாகிய ‘ஆல்ஃபா’ என்பதன் வரி வடிவம் மாட்டுக் கொம்பைப் பார்த்து எழுதப்பெற்றது என்றுங் கூறுவர். பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் போர் முறையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு மன்னன மாற்றானின்மேல் படை எடுப்பதாயின், முதன் முதலில் மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டான். இது வெட்சித் திணை என்று கூறப்பெறும். இது இலக்கிய வழக்காய் நின்றுவிடினும், ஆதிகாலத்தில் மன்னனெனக் கருதப் பெற்றவன் மாடாகிய செல்வத்தையே பெரிதும் நம்பியிருந்தான் என்பது வெள்ளிடை மலை.
வழிவழி அரசன்
பழந்தமிழ் இனத்தில் மாடுகளை நிரப்பப் பெற்றவனே மன்னனெனக் கருதப் பெற்றான் என்று கூறுவதில் இழுக்கு ஒன்றுமில்லை. பசுவுக்கு ‘கோ’ என்றதொரு பெயரும் உண்டு. எனவே, பசுக்களை மிகுதியாக உடைமையின் அரசனாகக் கருதப்பெற்ற ஒருவன் எவ்வாறு வழங்கப் பெறுவான்? கோக்களை உடைமையின் ‘கோன்’ என்று கூறப் பெற்றான் அரசன். ‘கொற்றவர் தம் கோன் ஆகுவை’ எனவரும் மதுரைக் காஞ்சிச் சொற்றொடர் இப்பொருளை வலியுறுத்தல் காண்க. இப் பசுக்கூட்டங்களை வைத்து வளர்க்கும் பொரறுப்புடையார் ‘கோவலர்’ என்றே பின்னர் வழங்கப் பெற்றனர்.
ஆதியில் கோக்களை நிரம்பப் பெற்றிருந்தமையின் அரசனெனக் கருதிப் போற்றப்பட்ட ஒருவன், நாளாவட்டத்தில் இவ்வரசச் செல்வத்தைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றான் என்பதை அறிகிறோம். உலக முழுவதிலும் அரசச் செல்வம் பரம்பரை வழி வந்ததாகவே அறிகிறோம். கரிகாற் பெருவளத்தான் பிறப்பதற்கு முன்னரே அவன் தந்தை இறந்துபட்டதால் அவன் ‘தாய்’ வயிற்றிலிருந்து தாயம் எய்தினான் என்று பொருநராற்றுப் படை குறிக்கிறது. இதுகாறுங் கூறியவற்றை அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லையாயினும், இவ்வாறுதான் அரசு முறை தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் என்று உய்த்துக் கூறுவதால் இழுக்கொன்றுமில்லை.
மூவர் மன்னர்
தமிழர் கண்ட இளவரசனைப் பற்றி இனிச் சற்று விரிவாகக் காண்போம். பரம்பரையாக அரசச் செல்வம் இறங்கி வந்த காரணத்தால் தகுதியற்ற பலரும் அரசர் ஆயினரோ என்று நினைக்க வேண்டுவதில்லை. பெறும்பான்மையினர் அனைத்துத் தகுதிகளும் பெற்றவராகவே விளங்கினர். இங்ஙனம் அவர்கள் இருக்கத்தக்க ஒரு காரணமும் உண்டு. தமிழ்நாடு மிகச் சிறிய பரப்புடையது எனினும், இச்சிறிய நிலப்பரப்பிற் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி செலுத்தி வந்தனர்.
‘நளி இரு முந்நீர் ஏணியாக வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானை மூவருள்ளும்’ (புறம்-35)
என்ற புறப்பாடல் இவ்வுண்மையைக் கூறுதல் காண்க. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்’தை ஆண்டு வந்த மூவருந் தமிழரேயாயினும், இவர்களுள் ஒற்றுமை உணர்வு மருந்துக்கும் இல்லாத தொன்றாயிற்று. ஒற்றுமையற்ற காரணத்தால் இம் மூவருள்ளும் ஓயாது பூசலும் போரும் நிகழலாயின. பழந்தமிழ் இலக்கியங்களாகிய பத்துப் பாட்டையும், எட்டுத்தொகையையும் ஒருமுறை புரட்டின எவரும் இவ்வுண்மையை உணராமலிரார். பல சந்தருப்பங்களில் இவருள் ஒருவர் தம் கையோங்கி ஏனைய இருவரையும் அடிப்படுத்தியிருந்தனர். இதன் விளைவாக அடிமைப்பட்டவர் தக்க காலம் வந்தவுடன் பழிவாங்கத் தவறினதில்லை. இம் மூவரை அன்றியும் பல சிற்றரசர்களும் உடன் இருந்ததை இலக்கியம் மூலம் அறிகிறோம். இச் சிற்றரசரும் ஓயாது தமக்குள் போரிட்டனர்; சில சமயங்களில் பேரரசர்களுடன் சேர்ந்து கொண்டு ஏனையவருடன் போரிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களால் போர் புரிவதில் வல்ல ஓர் இனமாய் இருந்து வந்துள்ளது தமிழ் இனம். ஓயாது போரில் வாழ்ந்து வந்தமையின் இவர்கள் இயற்கையின் தள்ளவியலாத ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டனர். ‘வாழ்க்கைப் போராட்டத்தில் வலியுடையவர் எஞ்சுவர்’ என்ற ‘டார்வின்’ கொள்கைப்படி வலியுடையவர் எஞ்சினர். எஞ்சுவதற்கு வலிமை ஒன்றே துணையாய் நின்றமையின், தமிழ் மன்னர் பெரும்பாலும் வலிமை மிக்கவராகவே இருந்தனர். யானையேற்றம், வில் வித்தை முதலியன அவர் நன்கு கற்றிருந்தனர்.
களிறு கடைஇய தாள் கழல் உரீஇய திருந்து அடிக் கணை பொருது கவி வண் கையால் கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து மா மறுத்த மலர் மார்பின் தோல் பெயரிய எறுழ் முன்பின் (புறம்-7)
என வரும் புறப்பாட்டின் அடிகளை எல்லாத் தமிழ் மன்னர்கட்கும் பொதுவான இலக்கணமாகக் கொள்ளலாம். நாடு சிறிதாகலானும், போர் புரிந்து வெற்றிகண்டு எஞ்சுபவரே வாழத் தகுதியுடையராய் இருந்தமையானும், தமிழ் மன்னர் சிறந்த போர் வீரராகவே விளங்கினர். மிக்க பழங்காலத்தில் தத்தம் தகுதியாலும் பரம்பரை உரிமையாலும் அரசுக் கட்டில் பெற்றனர் தமிழ்மன்னர். எனினும், பிற்காலத்தில் இம்முறை தடுமாறித் தகுதி இல்லாதவருங் கூட உரிமை ஒன்றே பற்றி அரசர் ஆயினர் எனவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்துக் காணும் ‘அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு’ என்ற அடி ஒரு காலத்து இந்த உரிமைத் தன்மை பெரிதாகப் பாராட்டப் பெற்றது என்பதையே குறிக்கிறது.
அரசன் சுவைஞன்
அரசைச் செல்வம் பெறும் வகை எவ்வாறாயினும், பெற்ற செல்வத்தை இவ்வரசர் நன்கு அனுபவித்தனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. கோன்வாழும் இடம் கோயில் என்று கூறப்பெற்றது பொருத்தம் உடையதே.
‘சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயில்முன்’ (ஊர்சூழ்வரி-75)
என இளங்கோ குறிப்பிடுதல் காண்க. இக்கோயிலை அமைக்கப் பெரும்பொருளும், பெருமுயற்சியும் செலவழித்தனர் என்பதை ‘நெடுநல்வாடை’ என்ற சங்கப் பாட்டால் அறிகிறோம். போரில் பெரும்பொழுதைக் கழித்தாலும் இம் மன்னர்கள் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற பேருண்மையை மறந்தாரல்லர். எனவே, அனுபவப் பொருள், போகப் பொருள் என்பனவற்றை வேண்டும் அளவு அனுபவித்தனர் என்றும் அறிகிறோம். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் அவன் மனைவி துயில் கொள்ளும் கட்டில் பற்றிய வருணனை, நக்கீரரால் ‘நெடுநல்வாடை’ என்ற நூலிற் கூறப்படுகிறது. இத்துணை முன்னேற்றம் உடைய காலத்திற் கூட அக்கட்டில் பற்றிய வருணனை நம்மைத் திகைக்க வைக்கிறது. பொருளைப் பெற்றிருக்கும் திரு வேறு; அனுபவிக்கும் திரு வேறு. இற்றை நாளில் பொருள் பெற்றிருப்பார் பலரைக் காண்கிரோமாயினும், அனுபவிப்பார் சிலரைக் காண்டலும் அரிதாகிறது. ஆனால், பழந்தமிழ் மன்னர் பொருளைப் பெறவும், அதனை நன்கு அனுபவிக்கவும் கற்றிருன்தனர் என அறிகிறோம். சிறந்த பொருளைப் பெறும் அவர்கள் ‘முருகியற்சுவை’ (aesthetic taste) வாழ்க!
முடியாட்சியும் உரிமையும்
பழந்தமிழ்நாட்டில் முடியாட்சியே நிலைபெற்றிருந்தது. குடியரசின் நினைவே இருந்ததாக நினைப்பதற்கில்லை. ஆனால் இற்றை நாளில் வாழும் நமக்கு முடியரசென்று கூறினவுடனே மனத்தில் ஒருவகை அச்சம் ஏற்படுகிறது. எத்தகைய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருப்பதே நமது நாட்டு முடிமன்னர் இயல்பாய் இருந்து வருகிறது. பெரும்பாலரான மன்னர், தம் கீழ் வாழும் மக்களின் பாதுகாப்புத் தம் கையிலுள்ளது என்பதைக் கூட மறந்து திரிகின்றனர். ஆனால், பழந்தமிழ் மன்னர் அவ்வாறில்லை.
இம்மன்னர்கள் பரம்பரைப் பாத்தியமாக அரசுக் கட்டில் ஏறினர். அம்முடியின் பொருட்டுச் சகோதரருள் பூசலோ பிணக்கோ ஏற்பட்டதாகவும் சான்றுகள் அதிகம் இல்லை. பிள்ளைகளுள் மூத்தவனே பட்டத்திற்கு உரியவன் என்ற நியதி இருந்து வந்தது. இளங்கோவடிகள் வரலாறே இம்முறைக்குச் சான்று பகரும். பேரரசர்கள் உயிரோடிருக்குங் காலத்திலேயே மைந்தர்களை அரசாட்சியில் பழக்கும் முறையும் இருந்து வந்ததை அறிவோம். அரசர்கள் நல்ல கல்வி கற்றவர்களாய் இருந்தார்கள். நல்ல புலமை நிறைந்த அவர்கள் பெரும் புலவர்களை அரசவையில் வைத்துப் போற்றினார்கள். இத்தகைய ஒரு வழக்கத்தாலேயே அவர்களைப் பற்றி அறிய முடிகிறது.
அரசுரிமையைப் பாத்தியமாக அடையினும் ஒவ்வொருவரும் தமது தோள் வலியாள் அவ்வரசைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இடங் குறுகியுள்ள இந்தத் தமிழ்நாட்டில் சிற்சில பேரரசர்கள் காலம் தவிர, ஏனைய மன்னர்கள் காலத்தில் பல சிறு அரசுகள் நிலைபெற்றிருந்தன. இதுவே அடிக்கடி ஒருவரோடொருவர் சண்டை செய்யக் காரணமாயிருந்தது. குறுநில மன்னர்களும் பிறருக்கு அடங்கி வாழ்வதை இழிவானதெனக் கருதினர். இவர்களே இவ்வாறாயின் பெரும் மன்னர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றி கேட்க வேண்டுவதில்லை. ஒருசில காலந்தவிர இவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருந்ததே இல்லை. இவர்கள் மனப்பான்மையைச் சுருங்கக் கூறினால், அது கபிலர் என்ற புலவர் பெருமான் கூறிய ஐந்து அடிகளில் முடியும்.
வையங் காவலர் வழிமொழிந்து ஒழுக போகம் வேண்டி பொதுசொற் பொறாஅது இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன் (புறம்-8)
(இவ்வுலகம் தனக்கும் பிற மன்னர்க்கும் பொது என்ற சொற்களைப் பொறுக்காமல், இதனைத் தனக்கே உரிமை ஆக்கிகொள்வதற்காக, எல்லா இன்பங்களையும் வெறுத்து போரை மேற்கொள்ளும் சேரலாதன்)
இத்தகைய மனப்பான்மை கொண்டோர் அமைதியாய் இருத்தல் என்பது இயலாத காரியம். அரசர்களாகப் பிறந்ததன் பயனே போர் செய்தலாகும் என்று கருதினர் அம்மன்னர். இத்தகைய எண்ணம் உயர்ந்தது என்று கூறுவதற்கில்லையாயினும், தமிழர் இனவளர்ச்சியில் இது ஒரு படியைக் காட்டி நிற்கிறது. ஆதி மனிதனிலிருந்து தோன்றி வளரும் எந்த இனமும் இப் படியைத் தாண்டியே முன்னேற வேண்டும். ஏனைய வகைகளிலெல்லாம் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்த தமிழர், கிரேக்கர்களைப் போல இதனையும் நாகரிகச் சின்னமாகக் கருதினர்.
உடலும் உள்ளமும்
தமிழ் மன்னன் நல்ல உடற்கட்டு வாய்ந்தவனாய் இருந்தான். மிக்க இளமை தொட்டே படைக்கலப் பயிற்சி பெற்றமையானும், போர்க்களங்கட்குச் செல்லும் பழக்கம் உடைமையானும் அவனது உடல் வலிமை பெற்றிருந்தது. நல்ல உடலுறுதி பெற்றவன் உள்ளமும் பெரும்பாலும் செம்மையானதாய் இருக்கும்; அவன் அறிவும் விளக்கம் உடையதாய் இருக்கும்.
‘அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்’ (புறம்-20) ‘ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை’ (புறம்-8) ‘பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒருத்தி’ (புறம்-10) ‘வேண்டியது விளைக்கும் ஆற்றலை’ (புறம்-38)
என்னும் இவ்வடிகள் அரசனது அறிவு மேம்பாட்டை விளக்குவனவாய் உள்ளன.
இத்தகைய அரசன் ஆட்சி முறையில் தன்னேரில்லாதவனாகவே விளங்கினான். அரசன் ஆணைக்கு எதிராக ஒன்றும் நடப்பதில்லை. டியூடர் மன்னர்கள் இங்கிலாந்தில் ஆட்சி செய்கையில், தாங்கள் கடவுளால் ஆட்சி செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். இதனை மக்களும் நம்பி வந்தனர். ஒருவாறு பழந்தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கே நிலைபெற்றிருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இறைவன் என்ற சொல்லை கடவுள், அரசன் என்ற இருவர்க்கும் வழங்கியமையின் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. பிற் காலத்து ஆழ்வார்,
‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ (திருவாய்மொழி)
என்று கூறியது பழந்தமிழ் வழக்குப் பற்றியதேயாகும். இத்தகைய நிலையில் அவர்கள் இருந்தமையால் ஒரோவழி ஓர் அரசன் தீயவனாக மாறித் தீச்செயலைச் செய்ய முற்படுதலும் உண்டு. ஆனால், அச்சமயங்களில் பெரும்புலவர்கள் அஞ்சாது அரசன் முன் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி, அவனை நல்வழிப் படுத்தியிருக்கின்றார்கள்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசன், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனொடு பொருது வென்றான்; வெற்றி வெறியில் மலையமான் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வந்தான்; அப்பிள்ளைகளை யானைக் காலடியிலிட்டு மிதிக்கச் செய்ய முடிவு செய்துவிட்டான். அரசன் அங்ஙனம் நினைத்தால் அவனை எதிர்ப்பவர் யார்? யானையும் வந்தது. அந்நேரத்தில் கோவூர் கிழார் என்ற பெரும்புலவர் அங்கு வந்து சேர்ந்தார்; இக்கொடுமை நடைபெறப் போவதை அறிந்தார்; உடனே அரசன் முன் சென்றார்; கீழ்வரும் பாடலைக் கூறினார்.
நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே புலனுழு துண்மார் புன்க ணஞ்சித் தமதுபடுத்த துண்ணும் தண்ணிழல் வாழ்நர்; களிறுகண் டழூஉம் அழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ வுடையர்; கேட்டனை யாயின்நீ வேட்டது செயம்மே. (புறம்-46)
(நீயோ, புறாவின் பொருட்டுத் தராசில் ஏறிய சிபியின் பரம்பரையில் வந்தவன். இப்பிள்ளைகளோ, அறிவுடையனும் வள்ளற்றன்மை யுடையனுமான மலையமான் குடியிற் பிறந்தோர். மேலும், தங்கட்கு நேரப்போகும் கதியறியாது யானையைக் கண்டவுடன் அழுகை மறந்து வேடிக்கை பார்க்கின்றனர்; இங்குள்ளார் அனைவரும் புதிராயிருத்தலின் மனவாட்டம் அடைந்துள்ளனர். இனி நீ உன் விருப்பம் போலச் செய்க.)
உடனே அரசன் அக்குழந்தைகளை விட்டுவிட்டான். அக்கால மன்னன் எவ்வளவு தன்னிச்சைப்படி நடக்கும் வன்மை பெற்றிருந்தான் என்பதைக் காட்டுவதற்காகவே இப்பாடல் காட்டப் பெற்றது. இத்தகைய அரசர் எங்கோ ஒருவர் இருவர் இருந்தனரேயன்றிப் பெரும்பான்மையோர் கடமை அறிந்து நடப்பவராகவே இருந்தனர்.
‘பொலங் கழற் கால் புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியல் மார்ப!’ (புறம்-3) ‘களிறு கடைஇய தாள் கழல் உரீஇய திருந்தடி .................... மா மறுத்த மலர் மார்பு.’ (புறம்-7)
(யானையைச் செலுத்தும் முயற்சியையும் வீரக் கழலணிந்த காலையும் திருமகள் பிறர் மார்பில் சென்று தங்க மறுக்கும் மார்பினையும் உடையவன்).
என்பன போன்ற பல புறப்பாடல்களில் மன்ன மார்பு விரிந்தும் கல்போன்றும் இருக்கிறது என்று கூறுவது அவனுடைய வீரத்தைக் காட்டப் பயன்படுகிறது. ஆனால், ஓயாமல் சந்தனம் பூசிக் கொண்டிருக்கிறான் என்றும், திருமகள் தங்கிய மார்பென்றும், மகளிர் தோள் தோயும் மார்பு என்றும் கூறுவது ஏன்? மன்னன் வெறும் உடல் வீரம் மட்டும் உடையவனல்லன்; நல்ல பண்பட்ட வாழ்வுடையவன் என்றும் குறிப்பிடுகிறார் புலவர். மனித வாழ்வு சிறக்க வேண்டுமாயின், உடல் வீரத்தோடு முருகியல் சுவையும் வேண்டும். அழகிய பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து அனுபவிக்கும் பண்பே முருகியல் சுவை எனப்படும். அத்தமிழ் மன்னர்கள் இம் முருகியல் சுவையைப் பெற்றிருந்தனர் என்பதையும் இக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
தமிழ் மன்னர்கள் பொறுப்பு வாய்ந்த அலுவலைக் கவனிக்கின்ற காரணத்தால் அல்லும் பகலும் கவலைப்படுகின்ற மனத்தை உடையவர்களோ என்று யாரும் ஐயப்பட வேண்டா. மனித வாழ்வில் கடமையும், கலையுணர்வும் கலந்து திகழ வேண்டும். அவ்வாறு இல்லையாயின் வாழ்வு முழுத்தன்மை அடையாது. முழுவதும் கடமையாகவே அமைந்துவிட்டால், அது இயந்திர வாழ்வாகி விடும்; முழுவதும் கலையாகிவிட்டால், பயனற்ற வாழ்க்கை ஆகிவிடும். எனவே, தமிழ் மன்னர்களுடைய வாழ்வில் கடமை, கலை என்ற இரண்டும் அளவுடன் கலந்தே காணப்பட்டன என்கிறார் புலவர். இதனை இவ்வாறு விரிவாக உரைநடையிற் கூறவில்லை; கவிதையில் குறிப்பாகப் பெற வைக்கிறார். ஒரே அரசனுடைய காலில் வீரக் கழலும் மார்பில் சந்தனமும் விளங்குகின்றனவென்று கூறும் பொழுது கடமையும் கலை உணர்வும் வெளிப்படக் காண்கிறோம்.
அரசனுக்கு ஏற்ற வீடு
கலையுணர்வுடனும் கடமையுணர்வுடனும் வாழ்ந்த பழந்தமிழ் அரசர்கள் பொது வாழ்வின் கடமை நெருக்கடிக்கு எப்போதும் இரையானார்கள். இதனை ஈடுசெய்யப் போலும் தமிழ்ச் சமுதாயம் தமிழ் மன்னருக்கு வளப்பமான தனி வாழ்க்கை தந்து வந்தது. பத்துப்பாட்டுள் ஒன்றான ‘நெடுநல் வாடை’ என்ற பாடலில் இதுபற்றிப் பேசப்படுகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த பழந்தமிழ் மன்னருள் ஒருவன். அவ்வளவு சீரும் சிறப்பும் உடைய ஒருவனுக்கு அரண்மனை கட்ட முடிவு செய்தனர். ‘இடம்பட வீடு எடேல்’, என்ற முதுமொழி அவனுக்கு அன்று; ஆதலால் பெரிய முறையில் அரண்மனை அமைக்கப் பெறுகிறது. ‘பெரும்பெயர் மன்னருக்கு ஒப்ப மனைவகுத்து’ என்று நெடுநல்வாடை அதனைக் குறிக்கிறது. அவனுடைய அரண்மனை அமைப்பே பழந்தமிழ் மன்னர்களின் கோயில்கள் இருந்த நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பாண்டியனின் அரண்மனைக்குக் கால்கோள் விழாச் செய்தனர். சித்திரை மாதத்தின் நடுவில் ஒரு நாளில் பகல் பதினைந்து நாழிகை அளவில் சிற்ப நூலை நன்கறிந்த தச்சர்கள் கூடினார்கள்; நூல் பிடித்து அளவிட்டுப் பல பகுதிகளையும் வரையறுத்துக் கூறுபடுத்தினார்கள்; பிறகு மிகப் பெரிய கற்களினால் மதில் முதலியவற்றை அமைத்தார்கள்; அடுத்து உள்ளிடம் கட்டி முடித்தார்கள்.
ஓங்கு நிலை வாயில்
அரண்மனைக்கு நுழையும் பொழுது தெரியும் இது வாயிலாகும். இது ஏன் இவ்வளவு பெரிதாகவும் உயரமாகவும் அமைந்திருக்கிறது? யானை போர்க்களத்திலிருந்து வெற்றிக் கொடியுடன் வருகிறது அன்றோ? அவ்யானை அப்படியே உள்ளே நுழைவதற்காக இவ்வாயிலின் உயரம் அமைக்கப்பெற்றுள்ளது.
‘வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுக’ (நெடுநல்வாடை- 87)
என்ற அடியால் வாயிலின் உயரத்தைக் கூறுகிறார் ஆசிரியர் நக்கீரர். பார்வைக்கு மதிலும் வாயிலும் எவ்வாறு உள்ளன? மலையைக் குடைந்து வழிசெய்தது போல உள்ளது அவ்வாயில்.
‘குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்’ (நெடுநல்வாடை-88)
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றும் நாம் கற்பனைக் கண்முன் அதனைக் கொண்டுவர முடிகிறது. வாயிலே இவ்வளவு உயரமாய் உள்ளது; அதன்மேல் கோபுரமும் அமைந்துள்ளதாம். ‘நெடுநிலை’ என்பதற்குக் கோபுரம் என்பது பொருள். இவ்வாயிலை அடைத்து நிற்பன இரட்டைக் கதவுகள். வாயிலின்மேலே இலக்குமியின் சித்திரம் அமைந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பெண் யானைகளும் செதுக்கப் பெற்றுள்ளன. இரட்டைக் கதவுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நன்கு செதுக்கப்பெற்று, இழைக்கப்பட்டு, ஒன்றற்கொன்று இடைவெளி இன்றிச் சேர்க்கப் பெற்று உள்ளன.
‘கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து’ (நெடுநல்வாடை- 85)
உள்ளன என்பதால் இதனை அறிகிறோம், ஒரோ வழிக் காய்ந்த மரமாய் இருப்பினும், வெயில் மழை முதலிய வற்றால் நாளாவட்டத்தில் இடைவெளி வருதல் கண்கூடு. இதனையும் நீக்க வாயிலிலும் கதவிலும் வெண் சிறுகடுகை அரைத்து அப்பியுள்ளனர் அக்காலத்தச்சர்.
இதனைத் தாண்டி உட்சென்றால் மணல் பரப்பிய பெருமுற்றம் காணப்படுகிறது. ஒருபுறத்தே குதிரைப்பந்தி அமைந்திருக்கிறது. இதனை அடுத்துள்ளது அரண்மனையின் முற்பகுதி. பெரிய கட்டடங்களின் மேற்றளத்தில் விழும் மழைநீர் கீழே வந்து விழச் சரியான வசதி இல்லையானால் கட்டடம் பழுதுபடுமன்றோ? அரண்மனையின் முகப்பில் நிலா முற்றம் அமைந்துள்ளது. அதனையே இன்று நாம் (Portico) போர்ட்டிகோ என்று கூறுகிறோம். இத்திறந்த இடத்தில் விழும் மழைநீர் வந்து விழுவதற்கு ஒரு வாய் அமைத்துள்ளனர். அது மகர மீனின் வடிவம் பெற்று விளங்குகிறது. இன்னும் உள்ளே சென்றால், ‘பல்வேறு பள்ளி’ என்று கூறப்பெறும் பல பெரிய அறைகள் உள்ளன.
பூச்சு வேலையும் பூ வேலையும்
இந்த அறைகள் சூரிய ஒளி உள் வரும்படி அமைக்கப் பெற்றுள்ளன. இரவிலும் ஒளி நிறைய வரும்படி ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு பாவை இருக்கிறது. இந்தப் பாவை எவ்வளவு வேலைப்பாடும் அழகும் நிறைந்துள்ளது! நல்ல வார்ப்படத் தொழிலில் கைதேர்ந்த யவன நாட்டுக் (Greek) கொல்லன் அமைத்த அழகிய சிற்பமாகும் இது. இந்தப் பாவையின் கையில் இருக்கும் கிண்ணம் போன்ற பொருள்தான் அகல் விளக்காகும். இக்கையேந்து அகல்நிறைய நெய்யை விட்டுப் பருத்த திரிகளை நெய்யில் இட்டு எரிய விடுகின்றனர். விளக்கின் சுடர் குறையும்தோறும் ஆட்கள் இருந்து கொண்டு தூண்டிவிடுகின்றனர். இந்த விளக்குகள் ஏற்றினவுடன் சுற்றியுள்ள சுவர்தோறும் இவ்வொளியின் எதிர் ஒளி விளங்குகிறது. காரணம் என்ன? அரண்மனை ஆதாலால், மிகச் சிறந்த, ‘வெள்ளி அன்ன விளக்கு சுதை’ (சுண்ணாம்பு) பூசியிருக்கிறார்கள்; ஆதலால், எதிர் ஒளி மிகுதியாய் இருக்கிறது. இந்த அழகிய சுவர்களும் வெறுஞ் சுவர்களாய் இல்லை. இவற்றில் எல்லாம் மிக அழகிய பூ கொடி முதலிய சித்திர வேலை செய்திருக்கிறார்கள்.
தூண்கள்
தூண்கள் எவ்வாறுள்ளன என்று காண்டல் வேண்டும். இன்றும் மதுரை சென்று திருமலை நாயக்கர் அமைத்த கட்டடங்களைக் கண்டவர்கள் பெருவியப்பை அடைகின்றனர். இதுவே இவ்வாறாயின், நெடுஞ்செழியனின் அரண்மனைத் தூண்கள் எவ்வாறு இருந்திருக்கும்? ‘மாதிரள் திண்கால்’ என்று கூறப் பெற்றமையின் பெரிய தூண்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் நாயக்கர் காலத் தூண்கள் கல்லாலும் சுதையாலும் கட்டப் பெற்றவை. பாண்டியனின் தூண்களோ, ‘மணிகண்டன்ன’ என்று கூறப் பெறுதலின், கரிய நிறத்தையுடைய ‘சலவைக் கற்கள்’ என்று நினைய வேண்டி உளது.
மகளிர் உறைவிடம்
இவை அனைத்தையும் தாண்டி அப்பாற்சென்றால் இருக்கும் இடம் ‘ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு’ எனப்படும் மகளிர் வாழும் இடமாகும். ஆடவர் குறுகாத இடம் என்று கூறினவுடன் அரசனுடைய உரிமை எவ்வளவோ என ஐயமெழுகிறதன்றோ? அதற்காகவே ஆசிரியர்.
‘பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா’ (நெடுநல்வாடை – 106,107)
இடம் என்று கூறி உள்ளார். பெரும்பாலும் பல மனைவியரை வைத்து வாழ்ந்த பண்பாடுடையவர்தாம் தமிழ் மன்னர். எனினும், அவருள்ளும் சிலர் ஒரு மனைவி பண்பாட்டைக் கைக்கொண்டு வாழ்ந்தனர் என அறிகிறோம்.
கட்டில் செய்தான்
மகளிர் வாழும் இப்பெரும்பகுதியில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இதுவே அரசன் உறங்கும் இடம். பெரியதொரு கட்டில், அறைக்கு அழகைச் செய்து கொண்டு இருக்கிறது. கட்டில் என்றால் இன்று நாம் காணும் வகையைச் சேர்ந்தது அன்று, நெடுஞ்செழியனுடைய கட்டில், ‘பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்தது’ போலவே கட்டிலும் செய்துள்ளனர். கட்டில் செய்யுங்காலத்து அதனை உடன் இருந்து கண்டவராகிய நக்கீரர், அதன் இயல்பையும் அழகையும் எடுத்துப் பாடுகிறார். கட்டிலும் அதில் படுத்துப் புரண்ட மன்னனும், அக்கட்டில் இருந்த அரண்மனையும், ஏன் அந்தப் பண்பாடும் நாகரிகமுமே, இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டன! என்றாலும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த ஒரு தமிழ் மகன் எங்ஙனம் வீட்டை அமைத்தான் என்று அறிவதும், எங்ஙனம் வாழ்ந்தான் என்று ஆராய்வதும் பயனுடைய செயல் தாமே? நெடுஞ்செழியன் அமைத்த கட்டிலைப் பற்றிப் பார்ப்போம்.
தந்தக்கால் கட்டில்
கட்டிலின் கால்கள் யானைத் தந்தத்தால் செய்யப் பெற்றுள்ளனவாம். யானைத் தந்தத்திலும் பல வகை உண்டு. இக்கட்டில் செய்யப் பயன்பட்ட தந்தம் நாற்பது ஆண்டுகட்குமேல் வாழ்ந்த யானையினுடையதாம். அதுவும் அந்த யானை சண்டையில் இறத்திருத்தல் வேண்டும். அவ்வாறு போரில் யானை இறக்கும் பொழுது தந்தமும் தானே கழன்று விழுந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தந்தம் நான்கை எடுத்துக் கால்கள் அமைத்துள்ளனர். வெறுந்தந்தங்களை அப்படியே நிறுத்தி விடவில்லையாம். தந்தங்களைத் தொழில் வல்ல தச்சனுடைய கூர் உளி புகுந்து அழகு பெறச் செய்தது. கடைசல் வேலை, வடிவம் உண்டாக்குமே தவிர, உருவம் உண்டாக்காது; ஆதலின் தச்சன் சிற்றுளி கொண்டு இலை பூ முதலிய வேலைப்பாடுகளைக் கட்டிலின் கால்களில் அமைத்தான் போலும்! மேலும், குடம் போன்றும், உள்ளிப் பூண்டு போன்றும் வடிவம் பெறும்படியாகவும் அமைத்தான்.
வேட்டை ஓவியம்
இவ்வகையான கால்களை நிறுவிக்கொண்டு தலை மாட்டிலும், கால்மாட்டிலும் ஓரடி உயரத்திற்குப் பலகைகள் அமைத்தான். இந்தப் பலகைகளில் வேட்டைக்குரியன வாய புலி முதலியவற்றின் உருவங்கள் பொறிக்கப் பெற்றனவாம். புலியின் உருவம் பொறிப்பதில் புலி மயிர் முதலியவற்றை வைத்து, அவற்றை அடுத்துச் சிங்கத்தின் தோல் முதலியவற்றைக் கொண்டு சிங்கத்தின் உருவத்தைப் பொறித்தான்; இவற்றை வேட்டை ஆடுவது போன்ற வேலைப்பாடுகளையும் அமைத்தான்.
இவ்விரு பலகைகளின் இவ்விரு முனையிலும் கால்கள் நட்டு முத்துக்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இந்த நான்கு கால்களையும் சேர்த்து இவற்றின் நடுவே விதானம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்த விதானத்தில் சந்திரனுடைய உருவமும், உரோகிணியினுடைய உருவமும் தீட்டப் பெற்றுள்ளனவாம்.
மெத்தை
படுக்கையாக அமைந்த மெத்தை எத்தகையது? மெல்லிய பஞ்சால் இயன்ற மெத்தையின்மேல் துணை புணர் அன்னத்தின் தூவி விரிக்கப்பெற்றுள்ளது. இம் மட்டோடு இல்லையாம் படுக்கையின் சிறப்பு. மெத்தையினுள் வைக்கவேண்டிய சரக்கு எவை எவை என்பதைச் ‘சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை’ என்ற ஐந்தாகும் என்று ஒரு பழைய பாடல் அறிவிக்கிறது. இவ்வளவு சிறப்பமைந்த மெத்தையின்மேல் ஒரு வெண்மையான துணி விரிக்கப் பெற்றுள்ள தாம். அத்துணி கஞ்சியிட்டுச் சலவை செய்யப் பெற்றதாம்.
‘காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமைத் தூமடி விரித்த சேக்கை’ (நெடுநல்வாடை-134,135)
என்று மேல் விரிக்கும் துணியின் இயல்பும் சிறப்பும் கூறப் பெற்றுள்ளன.
படுக்கையையும் கட்டிலையும் பற்றி இவ்வளவு பெரிய வருணனை வேண்டுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். பழந்தமிழ் மன்னர் எப்பொழுதும் போரிட்டுக்கொண்டு திரியும் முரடர்கள் அல்லர்; வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் கற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்கவே இதுகாறும் இது பற்றி விரிவாகப் பேசப்பெற்றது.
வாழ்க்கையின் குறிக்கோள் எவ்வளவு உயர்ந்ததாய் இருப்பினும் நாளை வரும் என்று எதிர்பார்க்கும் துறக்க இன்பத்திற்கு அண்ணாந்து கொண்டு இன்றைய உலகில் உள்ள இன்பத்தை வெறுத்துப் போலித் துறவு கொண்டவர் அல்லர் பழந்தமிழ் மன்னர். இத்துணை இன்பங்களின் இடையே வாழ்ந்தாலும் அவர்கள் உள்ளத் துறவுடையவர்; கடமை ஒன்று இருந்தால், அதை முடிக்க வேண்டி இத்தகைய இன்பத்தையும் துறந்து செல்லும் உறுதிப்பாடு உடையவர். இதுவன்றோ மனத்துறவு! எல்லையற்ற இன்பத்தின் இடையே வாழ்ந்தாலும் இத் தமிழ் மன்னர் உள்ளத்துறவு உடையவர்களாய்த் தாமரை இலைத் தண்ணீர் போலவே வாழ்க்கை நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. கட்டிலை இவ்வளவு சிறப்புடன் செய்து அதில் காதலியுடன் படுத்து மகிழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்தையும் துறந்து போர்க்களத்தில் வாடைக் காற்றில் வாடி மெலிவதையும் காண்கிறோம்.
ஓவியக் கருத்து
கட்டிலின் விதானத்தில் சந்திரனும் உரோகிணியும் எழுதப்பெற்றதன் காரணம், அவர்கள் காதலைத் தமக்கு நினைவூட்டுவதேயாகும். தலைமாட்டுக் கால்மாட்டுச் சட்டங்களில் புலி வேட்டை பொறித்திருப்பதிலும் ஓர் ஆழமான கருத்துண்டு. உறங்கச் செல்லு முன்னும், உறங்கி விழித்த உடனேயும் கண்ணிற்படுவன வேட்டையும் அதன் அடிப்படையான மறத்தன்மையும் ஆகும். அரசனுக்குரிய குழந்தை கருத்தரிக்கும்பொழுது அத்தாய் தந்தையரின் மனநிலை முறையே காதலிலும் மறத்திலும் ஈடுபட்டிருக்கு மாகலின் பிறக்கும் குழந்தையும் இவ்விரண்டு பண்புகளையும் பெற்று விளங்குமன்றோ?
கட்டில் செய்வதிலும் பழந்தமிழ் மக்களுடைய ஒப்பற்ற மனத்தத்துவ அறிவு நன்கு காணக்கிடக்கிறது.
மன்னன் வலிமை
இத்தகைய இன்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த தமிழ் மன்னன், தான் மன்னன் என்பதையும், பகை நீக்கி ஆள வேண்டுவது தன் கடமை என்பதையும் மறந்தானல்லன். பகை நீக்கம் என்றால் படை சேர்த்தல் என்பதுதானே கருத்து? இதோ அதனைச் செய்கிறான் தமிழ் மன்னன்.
தக்கதோர் மனை வகுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மன்னன், பரம்பரை உரிமையால் அத் தாயபாகத்தை எய்தினான் என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. கரிகாற்பெருவளத்தானுடைய தந்தை இளஞ் சேட்சென்னி, மைந்தன் பிறக்கச் சிறிது காலம் முன்னர் இறந்துவிட்டான் என்பதைக் குறிப்பிடவந்த முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர், கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கையில் தாயபாகத்தைப் பெற்றுவிட்டான் என்று குறிப்பிடுகிறார்.
‘தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி’ (பொருநாராற்றுப்படை 132)
என்ற அடியும்,
‘உருகெழு தாயம் ஊழின் எய்தி’ (பட்டினப்பாலை 227)
என வரும் பட்டினப்பாலை அடியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
படையைப் போற்றல்
பரம்பரை உரிமையாற்பெற்ற இவ்வரசைத் தமிழ் மன்னர் தமது வீரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் மன்னனுடைய வலிமையைப் பாட வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், நல்ல உவமை ஒன்றைத் தந்து அவனுடைய வலிமையை விளக்குகிறார்.
‘ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அளியும் உடையோய்!’ (புறம்-2)
எனக் குறிப்பிடுகிறார். இப்பூதங்கள் உலகம் நன்கு வாழ உதவுகின்றன. என்றாவது இவ்வுலகம் தனது நிலைமை மீறிச் செல்லுமாயின், இதனை அழிக்கின்றன. அதேபோலத் தமிழ் மன்னர்கள் பிற அரசருக்கும் வாழ உரிமை தந்து தாமும் வாழ்ந்தனர்; என்றாவது அப்பிறர் உரிமை மீறி வாழத் தொடங்கினால், அவரை அழித்தனர். அழிப்பதற்கு உரிய மனவன்மை, உடல் வன்மை, படைவன்மை என்ற மூன்றையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம். காலன் கூடக் காலம் பார்த்தே கொல்லுவான். ஆனால், இவ்வரசர் காலங்கருதாதுகூட வெல்லும் ஆற்றல் உடையவர் என்றுங் கூறப் பெறுகின்றனர்.
இத்தமிழ் வேந்தர் ‘நால்வகைப் படையுடன் மாட்சிமைப்பட்ட’ அரசை நடாத்தினர் என பாடல்கள் மிகுதியும் தெரிவிக்கின்றன. போர் என்றவுடன் தோள்கள் வீங்கும் மறக்குடி மக்களை வீரர்களாகப் பெற்றிருந்தனர். அரசன் படையைத் தன் கண்போல் மதித்து நடத்தினான் என்ற உண்மையை ‘படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்’ என்று கூறும் வள்ளுவர் வாய்மொழி தெரிவிக்கிறது. படைகளால் தாம் பெறும் வெற்றியை நன்கு உணர்ந்தவர்களாதலின், அப்படைகட்குச் சிறு சோற்று விழா (Tea Party) பெருஞ்சோற்றுவிழா (Dinner) முதலியன நடத்தி அவர்கட்கு எழுச்சி ஊட்டி வந்தனர் என்றும் அறிய முடிகிறது. சாவைப் பெறற்கு அரிய பேறாகக் கருதிய தமிழ் வீரர்களைப் பெற்றிருந்த இம்மன்னர்கள் ஓயாது போர் இட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
மனவலி
இத்தகைய படைவலி உடைய இம்மன்னர்களின் மன வலியும் கண்டு மகிழற்குரியது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனை எழுவர் சேர்ந்து எதிர்த்தனர். அவனோ, சிறுவன். ஆனால், மனவலியால் அவ்வெழுவரினும் மேம்பட்டவன். போர் மூண்டுவிட்டது என்று அறிந்த அப்பெருந்தகை வஞ்சினம் கூறுகிறான். எவ்வாறு?
‘எழுவரையும் அருஞ்சமம் சிதையத்தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின்’ (புறம்.72)
‘யான் இவ்விவ்வாறு போவேனாக!’ என்று அவன் கூறுவதால் அவனுடைய உறுதி வெளிப்படுகிறது. இத்தகைய மனவலி படைத்தவர்கள் அரசராயிருந்த காரணத்தாலேதான் வீரர்களும் அத்தகையவர்களாய் இருந்தார்கள். இவர்களின் நெஞ்சு உரத்தை நன்கு அறிந்த வள்ளுவர்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (குறள்-774)
என்பது போன்ற குறள்களால் இவ்வீரர்க்குச் சாவா வரந் தந்துவிட்டார்.
உடலழகு
ஓயாது போரிடுதலில் மிக்க விருப்பம் உடையவர்களாய் இருந்தார்கள் தமிழ் மன்னர்கள் என்று நினைக்க ஆதாரங்கள் பல உள.
‘இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப் போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது’ (புறம்.8)
என்பன போன்ற அடிகள் இவ்வரசர்களின் மனவெழுச்சியை அறிவிக்கின்றன. நெடுஞ்செழியன் ஓயாது போர் புரிந்து வாணாளைக் கழிப்பதைத் தடுத்து அவனை வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யவே ‘மதுரைக் காஞ்சி’ என்னும் மாபெருங்கவிதை தோன்றிற்று. மார்பிலும் முகத்திலும் புண்படுவதை விழுப்புண் என்று கூறுவர். அரசரும் வீரரும் இவ்விழுப்புண்களைப் பெற ஒருங்கே விரும்பினர். விழுப்புண் படாத நாட்களை வீணாளாகக் கருதுபவர் வீரர் எனக் குறள் கூறுகிறது. ஏனாதித் திருக்கள்ளி என்பவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் பாடிய பாடல் அந்நாள் அரசனின் உடல் அழகை எடுத்துக் காட்டுவதாய் உளது.
‘நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர் படைவிலக்கி எதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே.’ (புறம்.167)
ஓயாமற் செய்த போர்களிற் பெற்ற விழுப்புண் காரணமாக இவனுடைய உடல் முழுதும் தழும்பு ஏறி யிருத்தலின், கண்ணுக்கு அழகு அற்றவனாய் உள்ளான். ஆனால், மிக்க புகழ் படைத்திருத்தலின், கேள்விக்கு இனியவனாகவும் உள்ளான் என்பதே இப்பாட்டின் கருத்தாகும்.
புலவர் பாடும் புகழ்
இத்துணைச் சிறந்த வீரர்களாக அரசர் இருப்பினும் பயனில்லை, அவர்களுடைய மனம் சிறந்து இல்லையாயின், இவ்வரசர்கள் என்றும் குடிகளுக்காகத் தாம் வாழ்வதை மறந்தார் அல்லர். உயர்ந்த குறிக்கோளைப் பெற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர்.
‘உள்ளுவ தெல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்ந்து’ (குறள்-596)
என்ற பொய்யாமொழியை வாழ்க்கை விளக்கமாகக் கொண்டிருந்தனர் இன்றேல், இத்துணைப் பெரும்புலவர் பாடும் சிறப்பு இவர்கட்கு இருந்திராதன்றோ? கேவலம் உடல் வீரம் மட்டுமே உடையராய் இருந்திருப்பின், புலவர்கள் இவர்களை மதித்துப் பாடி இரார். அவ்வாறுள்ள அரசர்களைப் புலவர்கள் பாடுவதில்லை என்ற கருத்தையும் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் கூறுகிறார்.
‘வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணுங் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வல்லவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப’ (புறம். 27)
(ஏற்றத் தாழ்வு இல்லாத சிறந்த குடியின்கண் பிறந்த அரசரை எண்ணுங்காலத்து, புகழும் பாட்டும் உடையோர் சிலரே. தாமரையின் இலையைப் போலப் பயன்படாமல் இறந்தவர் பலர். புலவரால் பாடப்படும் தகுதியுடையோர் ஆகாயத்திற் செல்லும் மனிதனால் செலுத்தப்படாத விமானத்தில் செல்வர்)
இவ்வாறு கூறுவதால், ஆயிரக்கணக்கான தமிழ் மன்னருள் ஒரு சிலரே அவர்தம் சிறப்புக் காரணமாகப் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கினர் என அறிய வேண்டும். என்ன சிறப்பைப் புலவர் பாராட்டினர் என்று அறிதல் வேண்டும். அடுத்து, உடல் வீரத்தை அவர்கள் மதிக்கவில்லை எனில், மனவலி அல்லது ஊக்கம் ஒன்றையே போற்றி இருத்தல் வேண்டும். அரசருடைய மனநிலை எவ்வாறு இருந்தது என்று காண தமிழ் மன்னன் ஒருவன் பாடிய பாடலே நமக்குத் துணை செய்கிறது. சோழன் நல்லுருத்திரன் என்பவன் அரசனாய் இருந்தமையோடு பெரும் புலவனாயும் இருந்துள்ளான்.
மன்னன் மனநிலை
இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் கூடிய மன்னர் வாழும் நாடும் எத்தகைய சிறப்புடன் விளங்கியிருக்கும் என கூறவும் வேண்டுமோ? நெடுஞ்செழியனைப் பற்றி மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறிய சொற்கள் இன்றும் இக்கருத்தை விரிவுபடுத்தல் காணலாம், ‘உலகத்தையே பெறுவதாயினும், பொய்கூறாத வாய்மை உடையன். மனிதரே அன்றித் தேவரேவரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியமாட்டான். வாணனுடைய புகழ்பெற்ற செல்வத்தையே பெறுவதாயினும், பழியொடு வருவதாயின், விரும்ப மாட்டான்!’
‘உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய் நட்பினையே முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்துஒழு கலையே தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே’ (மதுரைக்காஞ்சி, 197-205)
தமிழ் மன்னருடைய மனநிலைக்கு இதைவிடச் சிறந்த இலக்கணம் கூறல் இயலாது. தன்னலம் என்பதைக் கனவிலும் கருதாத அப் பெருமக்கள் பிறர் பொருட்டே வாழ்ந்தார்கள் என்பது இதிலிருந்து விளங்குகின்றதன்றோ? இன்னும்,
‘அரிய எல்லாம் எளிதினின் கொண்டு உரிய எல்லாம் ஓம்பாது வீசி’ (மதுரைக்காஞ்சி 145-64)
என வரும் அடிகள் முற்கூறிய கருத்தை வலியுறுத்தல் காணலாம்.
$$$