-திருநின்றவூர் ரவிகுமார்

(14.04.1821 – 09.10.1867)
‘உலக நாகரிகத்தின் தொட்டில் இந்தியா’ என்று சுவாமி விவேகானந்தர் (12.1.1863 – 4.7.1902) அமெரிக்காவில் 1893 இல் முழங்கினார். அவர் இதைச் சொல்வதற்கு முன்னதாகவே ஒரு ஐரோப்பியப் புரட்சியாளர் இதை எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஜார்ஜி ரகோவ்ஸ்கி என்ற பல்கேரிய நாட்டுப் புரட்சியாளர் இதை தான் நடத்திய பத்திரிகையில் எழுதியுள்ளார்.
‘இந்தியா இந்தியர்களால் ஆளப்பட வேண்டும்; ஆங்கிலேயர்களால் அல்ல’ என்றார் மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் (15.8.1872 – 5.12.1950). ‘சுதந்திரம் இந்தியர்களின் பிறப்புரிமை. அதை அடைந்தே தீர வேண்டும்’ என்று முழங்கினார் திலகர் பெருமான் (23.7.1856 – 1.8.1920). இந்தக் கருதுகளை 1857-லேயே ஜார்ஜி எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். எனவேதான் அவர் இந்தியாவின் சிறந்த நண்பராகக் கருதப்படுகிறார்.
பிறப்பு
பல்கேரியா நாட்டில் கோட்டல் என்ற நகரில் பிறந்தவர் ஜார்ஜி ஸ்டோய்கோவ் ரகோவ்ஸ்கி. அந்த நகரில் இருந்த தேசபக்தியுள்ள, பணக்காரக் குடும்பத்தில் 1821 ஏப்ரல் 14-இல் பிறந்தார். பல்கேரியா தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடு. ஜார்ஜி பிறந்தபோது அது ஓட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது.
பல்கேரிய விடுதலைப் போராட்டத்தில்…
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கிய இஸ்லாமிய ஆட்சி. அந்த ஆட்சியை எதிர்த்து பல்கேரிய மக்கள் போராடி வந்தார்கள். அந்த எதிர்ப்பின் முன்னணியில் இருந்த தலைவர் ஜார்ஜி ரகோவ்ஸ்கி. ஸ்டோய்கோவ் என்பது அவரது குடும்பப் பெயர். ஆயுதமேந்திய நடவடிக்கைகளால் மட்டுமே ஓட்டோமான் அரசை வீழ்த்த முடியும் என்று அவர் நம்பினார். அதற்காக செட்டி எனப்படும் புரட்சிகரக் கிளர்ச்சியாளர்கள் அமைப்பை ஏற்படுத்தினார்.
துருக்கியர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இவருக்கு 1841-இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தப்பியோடி தலைமறைவானார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளில் பிடிபட்டார். இம்முறை அரசு அவரை இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தியது. அங்கும் அவர் துருக்கியர்களுக்கு எதிரான ரஷ்யர்களுக்கு உதவி செய்ய கிளர்ச்சியாளர் குழுவை ஏற்படுத்தினார். எனவே, மீண்டும் கைது செய்யப்பட்டு பல்கேரியாவுக்கே கொண்டு வரப்பட்டார்.
பல்கேரிய விடுதலைப் போரில் முன்னணி வகித்த அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் செயல்பாடுகளும் அந்நாட்டு மக்களுக்கு பெரும் எழுச்சி அளித்தன என்பது சந்தேகம் இல்லை. 1867 அக்டோபர் 9-ஆம் தேதி ருமேனியாவில் அவர் காசநோயால் இறந்து போனார். அவர் இறந்து நாற்பது ஆண்டுகள் கழித்து 1908 பல்கேரியா விடுதலை பெற்றது. ஆனால் அவர் எழுதிய, ஆசைப்பட்ட, ஆதரவளித்த இந்தியா விடுதலை பெற, அதன்பிறகும் நாற்பது ஆண்டுகள் ஆயின.
இந்திய ஈர்ப்பு
1850-களில் ரகோவ்ஸ்கிக்கு இந்தியாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் அவர் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டார். அந்த ஆர்வம் அவரது வாழ்நாளின் இறுதிவரை நீடித்தது மட்டுமன்றி, அவர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் பல்கேரியாவில் தேசிய விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் தொன்மையான கலாச்சாரமும் அதன் ஆன்மிகப் பாரம்பரியமும் பல்கேரிய அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘மனித இனத்தின் தாயகம் ஆசியா, ஐரோப்பிய நாகரிகத்தின் தாயகம் இந்தியாதான் என்ற கருத்து பல பல்கேரிய அறிஞர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் விஷயமாக இருந்தது’ என்று பேராசிரியர் மிலினா பிராட்டோஈவா கூறியுள்ளார். இவர் சோபியா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி இலக்கியப் பேராசிரியராக இருக்கிறார். இவர் ‘ஐரோப்பாவில் ஹிந்துயிசம் – ஒரு கையேடு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ‘பல்கேரியாவில் ஹிந்துயிசம் என்றொரு அத்தியாயம்’ உள்ளது. அதில்தான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது பத்திரிகையில்…
பிரிட்டனின் கூட்டாளியான ஓட்டோமானின் காலனி நாடாக பல்கேரியா இருப்பதைப் போல பிரிட்டனின் காலனி நாடாக இந்தியா இருந்ததைக் கண்ட ரகோவ்ஸ்கி இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை (பிரிட்டனின் ஆட்சியை) வெளிப்படையாக எதிர்த்தார். பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகளும் அதற்கு அவர் அளித்த ஆதரவு பற்றியும் அவரது பத்திரிகையில் நூற்றுக்கணக்கான பதிவுகள் உள்ளன. அதில்தான், இந்திய மக்கள் பிரிட்டிஷார் ஆட்சியை எதிர்த்தது பற்றியும், அவர்களது போராட்டங்கள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதினார். ‘இந்தியா இந்திய மக்களுக்குத் தான் சொந்தமாக இருக்க வேண்டும்; இங்கிலாந்துக்கு அல்ல. உடனடியாக, அல்லது மிக குறுகிய காலத்திலேயே, இங்கிலாந்தின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ என்று அந்தப் பத்திரிகையில் ரகோவ்ஸ்கி எழுதி உள்ளார் என்று கூறுகிறார் டிராய்காவ். இவர், புரட்சியாளர் ரகோவ்ஸ்கியின் சரிதத்தை எழுதியவர்.
‘பல்கேரியர்களுக்கும் மற்ற ஐரோப்பியர்களுக்கும் தாயகம் இந்தியா தான்’ என்று ரகோவ்ஸ்கி எழுதி உள்ளார். ‘இந்தியா ஆரிய இனத்தின் தொட்டில். மனித இனத்தின் தத்துவம் தொன்மையான ஹிந்து வேதங்களிலும் ஹிந்து புராணங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று ‘பல்கேரியாவின் பழமையான வரலாற்றின் அடிப்படையான ஆதாரங்கள்’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூல் வடிவில்…
ரகோவ்ஸ்கி இந்தியா பற்றி எழுதி உள்ளவற்றை பேராசிரியர் குணோ முகர்ஜி என்பவருடன் இணைந்து ‘இந்தியாவின் மகத்தான நண்பன்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் டிராய்காவ். பல்கேரிய அறிஞர்களும் புரட்சிகர விடுதலைப் போராளிகளும் தங்கள் நாட்டு மக்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்று நம்பினார்கள். அவ்வாறு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தங்கள் சொந்த நாட்டில் இருந்த ஊர்களின் பெயர்களையும் சமயங்களையும் பழக்க வழக்கங்களையும் நெறிமுறைகளையும் நம்பிக்கைகளையும் தங்களுடன் கொண்டு சென்றனர். புதிய இடத்தில் அந்த ஊர்களின் பெயரை இட்டனர். எனவே இந்தக் கண்ணோட்டத்துடன், பல்கேரியா கிறிஸ்தவ மயமாவதற்கு முன்னிருந்த பழைய வரலாற்றை எழுத வேண்டும் என்றனர். அந்தப் பணியை தன்னிச்சையாக மேற்கொண்டார் ரகோவ்ஸ்கி.
அவரது ஆய்வும் நமது அலட்சியமும்
9-ஆம் நூற்றாண்டில் பல்கேரியா கிறிஸ்தவ மயமானதற்கு முன்னர் அங்கிருந்த நாட்டுப்புறக் கதைகள், விழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், அவர்கள் வணங்கிய தெய்வங்கள் ஆகியவற்றைப் பற்றி ரகோவ்ஸ்கி ஆர்வமுடன் தொகுக்கத் தொடங்கினார். அவற்றை இந்தியாவில் உள்ள ஹிந்துக்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகளுடன் ஒப்பிடுவது அவரது நோக்கமாக இருந்தது. ‘அவர் ராமாயணம் போன்ற இந்தியக் காப்பியங்களை பல்கேரிய மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்‘ என்று எழுதுகிறார் ஜி.முகர்ஜி.
மேற்கத்திய அறிஞர்கள் இந்தியாவைப் பற்றி உயர்வாகச் சொல்லியவற்றை நாம் பரவசத்துடன் கேட்கிறோம். ஆனால் பல்கேரியாவுடன் நமக்கு இருந்த தொடர்பைப் பற்றி முற்றிலும் மறந்து விட்டோம். ‘ரகோவ்ஸ்கி இந்தியா பற்றி மிக உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தது மட்டுமின்றி, உலக (மனித) கலாச்சாரத்திற்கு இந்தியா அளித்துள்ள மகத்தான பங்களிப்பைப் பற்றி சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி உள்ளார். நாம் அதற்கு பெரிய அளவில் மதிப்பளிக்கத் தவறிவிட்டோம். மேற்கத்திய அறிஞர்கள் இந்தியா பற்றிச் சொன்னவை உயர்வானவைதான். ஆனால் அதற்கு எள்ளளவும் குறைந்ததல்ல ரகோவ்ஸ்கியின் பங்களிப்பு’ என்று எழுதி உள்ளார் ஜி.முகர்ஜி.
தனது சமஸ்கிருத அறிவைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கும் பல்கேரிய மொழிக்கும் இடையே உள்ள பல்வேறு ஒற்றுமைகளை, தொடர்பை நிலைநாட்டி உள்ளார் ரகோவ்ஸ்கி. பல்கேரியாவில் கிறிஸ்தவ சமய பழக்க வழக்கங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன் பல்கேரியாவில் சைவ சமய மரபுகள் இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார்.
நினைவும் போற்றலும்
மகாத்மா காந்தியின் 150 ஆண்டை முன்னிட்டு உலகின் பல நாடுகளில் காந்திஜியின் சிலையை மோடி அரசு நிறுவியது. பல்கேரியாவிலும் சிலை நிறுவப்பட்டது. அதற்காக 2018 -இல் பல்கேரியாவுக்கு விஜயம் செய்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்பொழுது, “ஒரு பல்கேரியரை சந்தித்துப் பேசினால் அவர் தங்களுடைய பாரம்பரிய இசை இந்திய இசையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை சிலாகித்துப் பேசுவதைக் காண்கிறோம். அதேபோல இந்திய விடுதலைக்கு உங்கள் நாட்டைச் சேர்ந்த புரட்சியாளர் ஜார்ஜி ரகோவ்ஸ்கி அளித்த ஆதரவை இந்தியா நன்றியுடன் நினைவு கூர்கிறது. 1926 -இல் ரவீந்திரநாத் தாகூர் பல்கேரியாவுக்கு வந்துள்ளார். அது நம்மிரு நாட்டினரிடையே பண்பாட்டு பிணைப்பின் மற்றொரு அத்தியாயமாக விளங்குகிறது” என்று தனது பேச்சில் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டிருந்தார்.
ரகோவ்ஸ்கி இந்தியாவின் நண்பர் என்று புகழப்படுவதுடன், அவர் நினைவாக தில்லி, டிபென்ஸ் காலனியில் உள்ள அரசுப் பள்ளிக்கு ‘ஜார்ஜி ரகோவ்ஸ்கி கன்யா வித்யாலயா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பல்கேரியாவில் இருந்து அரசு முறையாக விஜயம் செய்பவர்கள் இந்தப் பள்ளியைப் பார்வையிடுவது வழக்கமாக உள்ளது.
$$$