-மாலன்
சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் 2013, பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

115 ஆண்டுகளுக்கு முன்னால் மேலைநாடுகளிலிருந்து திரும்பிய பின் சுவாமி விவேகானந்தர், இங்கு (சென்னை விவேகானந்தர் இல்லத்தில்) ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இந்தக் காற்றிலே அவருடைய ஆன்மா கலந்திருக்கிறது. இந்தக் கட்டடத்தில் அவரது சிந்தனை நிரம்பியுள்ளது. அவர் செய்த தவமும் தியானமும் இந்த இடத்திற்குப் பொலிவு சேர்த்துள்ளன.
துறவி என்றால் ஞானத்தை வழங்குபவர்கள் என்றும், ஒழுக்கத்தைக் கற்பிப்பவர்கள் என்றும், முக்திக்கு வழிகாட்டுபவர்கள் என்றும் சொல்வார்கள். ஆனால் ஒரே ஒருவரைத் தான் – சுவாமி விவேகானந்தரைத்தான் – நாம் வீரத்துறவி என்று சொல்கிறோம்.
வீரம் என்றால் என்ன?
இந்தியாவில் செல்வம் மிகுந்திருந்தது. யவனர்களும் ரோமானியர்களும் பின்னர் போர்ச்சுகீசியரும் டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் நமது பொருள்களை வாங்குவதற்காக இந்தியாவிற்கு வந்தனர்.
செல்வவளம் மிகுந்த நாடாக மட்டுமல்லாமல் ஞானம் மிகுந்த நாடாகவும் அது விளங்கியது. இந்திய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களும் மாணவர்களும் இந்தியாவிற்கு வந்தனர். நாலந்தாவிலும் இங்கே காஞ்சிபுரத்திலும் பல்கலைக்கழகங்கள் இருந்தன.
அப்படிப்பட்ட ஒரு நாடு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் என்னவாயிற்று? தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றது. இந்தியாவைப் பற்றி ஏளனமாகவும், ‘நிர்வாணப் பக்கிரிகளும் காட்டுமிராண்டிகளும் நிறைந்த நாடு’ என்றும் உலகம் எண்ணிக் கொண்டிருந்த நிலையிலேதான், உலக மதத் தலைவர்கள் நிறைந்த சிகாகோ சர்வ சமய சபையிலே விவேகானந்தர் சென்று பேசினார்.
‘அவமானங்களோடு நான் சம்பந்தப்பட்டவன்’ என்று சொல்ல யாருக்காவது துணிச்சல் வருமா? விவேகானந்தருக்கு வந்தது.
உலகமே இந்தியாவை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் இந்த நாட்டிலிருந்து, இந்த மதத்திலிருந்து வருகிறேன் என்பதைச் சொல்வதில் பெருமைப்படுகின்ற துணிச்சல் அவருக்கு இருந்தது.
‘நீங்களெல்லாம் அடித்துத் துரத்திய மதத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு நாட்டிலிருந்து, உலகத்திற்குச் சகிப்புத்தன்மையையும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பையும் கற்றுக் கொடுத்த ஒரு மதத்திலிருந்து வருகிறேன்’ என்று கூறக் கூடிய வீரம் அவருக்கு இருந்தது.
பிரிவினைவாதமும் மதப்பற்றின் காரணமாக எழுகின்ற மதவெறியும் உலகை மீண்டும் மீண்டும் ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி, கலாசாரங்களைச் சீர்குலைத்து, நாடுகளை நிலைகுலையச் செய்ததை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார்.
அச்சபையில் பேசிய பிறரைப் போல தமது சமயத்தின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ளாமல், எல்லா மதங்களின் பெருமைகளையும் உண்மைகளையும் ஒப்புக்கொண்டார் அவர். இந்த அச்சமற்ற தன்மை அவருக்கு எங்கிருந்து வந்தது?
எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த அறிவின் வெளிச்சத்திலிருந்து தான் அந்த வீரம் பிறந்தது. அறிவே வீரத்தின் ஊற்றுக் கண்.
விவேகானந்தர் அரசியல் பேசியவர் அல்லர். ஆனால் அவரைப் பார்க்க வந்தவர்கள், அவரால் எழுச்சியுற்றவர்கள் யாவரும் அரசியலோடு தொடர்புடைய தேசபக்தர்கள். அவர்களுள், சூரியன் அஸ்தமிக்காத ஒரு சாம்ராஜ்யத்தைப் படை திரட்டிக்கொண்டு எதிர்க்கத் துணிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸும், தனது அறிவின் பலத்தால் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடிய அரவிந்த கோஷும் முக்கியமானவர்கள்.
வங்காளத்தில் பிறந்திருந்தாலும் 14 ஆண்டுகள் இங்கிலாந்தில் கல்வி கற்று ஆங்கிலத்திலும் லத்தீனிலும் பெரும்புலமை பெற்றிருந்த அரவிந்தருக்கு வங்க மொழியோ, பிற இந்திய மொழிகளோ தெரியாது.
வெறும் நிர்வாணப் பக்கிரிகள் நிறைந்த தேசம் என்ற எண்ணத்தோடு இந்தியாவுக்கு வந்த அவரை விவேகானந்தரின் கருத்துகள் அடியோடு மாற்றியமைத்து மிகச் சிறந்த தேசபக்தராக்கின. பரோடாவில் தான் வகித்து வந்த பேராசிரியர் பதவியை உதறிவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து தமது மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதத்தில் அரவிந்தர் குறிப்பிடுகிறார்:
“15 நாட்கள் எனக்கு விவேகானந்தர் காட்சியளித்தார். ‘அது தான் இது’ என்று சைகை மொழியால் எனக்கு எடுத்துச் சொன்னார். நான் புரிந்து கொள்ளும் அளவுக்குச் சொன்னார். நான் புரிந்து கொள்ளும்வரை அவர் விடவில்லை. மனம் கடந்த சைதன்யத்தை, ‘அதி மானஸத்தை’ உணர்ந்து கொண்டேன்…”
அக்கடிதத்தின் முடிவில் அரவிந்தர் எழுதுவார்:
“இந்நாட்டைக் காக்கும் வல்லமை எனக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனக்கு உடல்பலம் இல்லாதிருக்கலாம். வாளாலோ, துப்பாக்கியாலோ நான் போரிடப் போவதில்லை. அறிவு பலத்தால் போரிடப் போகிறேன்.”
இது விவேகானந்தர் நமக்குச் செய்து காட்டியது; செய்ய விரும்பியது. எனவே அவரை வீரத் துறவி என்று கூறுகிறோம்.
பொதுவாக, துறவிகளைக் காணும்போது நாம் என்ன கேட்போம்? துறவிகள் இறைவனிடம் என்ன கேட்பார்கள்?
பிறவா வரம் வேண்டும் என்றுதானே கேட்போம்? ஆனால் விவேகானந்தர் சொல்கிறார்:
“மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். பிறரது துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவர்களைக் கடைத்தேற்றுவதற்காக மீண்டும் பிறக்க வேண்டும். எல்லா ஜாதிகளின், எல்லா மதங்களின், எல்லா நாடுகளின் துன்பங்களையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.”
ஆண்டாண்டு காலமாக ஆசைப்பட்டு வந்ததை, வேண்டப்பட்டு வந்ததை மறுத்து, பிறக்கும் வரம் வேண்டினார் விவேகானந்தர். எனவே தான் அவரை வீரத் துறவி என்கிறோம்.

விவேகானந்தர் அரவிந்தருக்குக் காட்சியளித்ததைப் போலவே நமக்கும் காட்சியளிப்பாரா?
எப்போது நாம் அறிவின் துணை கொண்டு அச்சத்திலிருந்து விடுபடுகிறோமோ, என்றைக்கு அடுத்தவர் துன்பத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, அன்றைக்கு விவேகானந்தர் நமக்கும் காட்சியளிப்பார்.
சிகாகோ போகும்போது விவேகானந்தர் என்ன நோக்கத்தில் பயணம் செய்தாரோ, அதில் பாதி இன்று நிறைவேறிவிட்டது. அதாவது – இந்தியாவின் ஆன்மிகச் செல்வத்தை மேலைநாட்டினருக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் தொழில்நுட்பங்களை நாம் கற்றுக் கொண்டோம்.
தொழில்நுட்பம் கற்று நமது இளைஞர்கள் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். ஆனால் விவேகானந்தர் குறிப்பிட்ட மதவெறி மட்டும் இன்னும் அகன்ற பாடில்லை.
அதை அழிப்பதற்கு மீண்டும் விவேகானந்தர் தோன்ற வேண்டும்.
விவேகானந்தரின் கருத்துகளை மனதில் வாங்கிக்கொண்டு, எல்லா வலிமையும் நமக்குள் உள்ளது என்பதை உணர்ந்துகொண்டு செயலாற்றுவோமேயானால் நிச்சயம் விவேகானந்தர்கள் தோன்றுவார்கள்.
மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்.
.
குறிப்பு: திரு. மாலன் தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர்; இயற்பெயர் நாராயணன்; தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குமுதம், குங்குமம், புதிய தலைமுறை பத்திரிகைகளிலும், சன் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். கணையாழி, திசைகள் ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர்; ஜனகணமன (நாவல்), என் ஜன்னலுக்கு வெளியே, உயிரே உயிரே, சொல்லாத சொல் (கட்டுரைத் தொகுப்புகள்), மாலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜூலை 2013)
$$$