-வ.மு.முரளி
அனைவருக்கும் இனிய 'சோபகிருது' புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் அளிக்கட்டும்! இறையருளால் தேசம் மேலும் உயரட்டும்!! உலகம் அமைதியை நோக்கி மீளட்டும்!!!

.
நொடிகள் கூடிட நிமிடங்கள் ஆகும்;
நிமிடங்கள் சேர்ந்து மணியெனக் கூடும்;
மணிகள் இணைந்து நாள் உருவாகும்;
நாட்கள் ஏழே வாரம் என்றாகும்;
வாரம் நான்கும் மாதமாய் ஆகும்;
பன்னிரு மாதம் ஓராண்டாகும்;
ஆண்டுகள் மிகுந்தால் யுகமென மாறும்.
யுகமெனப்படுவது மாபெரும் காலம்.
மானுடர் அறியார் புவியிதன் கோலம்!
.
விண்ணில் அடங்கா மீன்களைப் போல,
விடையை அறியாக் கேள்விகள் போல,
கண்ணில் அடங்காக் கானகம் போல,
காண இயலா காற்றினைப் போல,
மண்ணில் அடங்கா நீரினைப் போல
மாசு அறியாத் தீயினைப் போல,
எண்ண இயலா இறைவனைப் போல,
ஏதும் அறியா ஏதிலிகள் நாம்!
.
மானுட வாழ்க்கை நாள் குறித்ததுவே!
ஊணுடற் பிறப்பும் ஒழிவது திண்ணம்!
ஆயினும் மானுட சிந்தனை மட்டும்
அழிந்திட மறுத்து அற்புதம் காணும்!
காவியம் எழுதும்; ஆலைகள் நிறுவும்!
காலனை உதைக்கும் கவியினைப் பாடும்!
நோய்களை வென்றிட மருத்துவம் காணும்!
நுண்கலைப் பெருக்கால் யுகங்களை வெல்லும்!
.
இருகரை தொட்டுப் பாயும் கங்கை
பாவம் கரைக்கும்; பாசனம் பெருக்கும்.
ஊரார் தாகம் தீர்க்கும் – இறுதியில்
கடலில் கலந்து தன்மயமாகும்.
கங்கைக் கரையில் நிற்பவர் எவரும்
ஆழமும் அகலமும் ஆற்றலும் அறியார்.
ஆயினும் புனிதத் தீர்த்தமென்றாக்கி
சிறு செப்பினிலே அடக்கிட முயல்வோம்!
.
ஞானம் என்பது அறிவின் தேடல்!
நமக்கு வாய்ப்பது சிறு செப்பொன்றே!
காலம் என்னும் பெருவெளிதன்னில்
காலைப்பனி போல மறைவது வாழ்க்கை!
இருப்பினும் உயிரின் துடிப்பே வாழ்வு!
இருக்கும் வரையில் அறத்துடன் நிற்போம்!
ஞாலம் அளந்திட இயலாதெனினும்
நம்மை அறிந்திட ஆண்டுகள் தேவை!
.
ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் தருணம்
ஒவ்வொரு மலரும் பூப்பது போல!
சருகென வீழ்வது உறுதியென்றாலும்
மலர்வது தானே மலர்களின் கடமை?
அனுபவம் தன்னை உரமென ஆக்கி,
ஆண்டவன் அருளை மனதினில் இருத்தி,
நம்மை நாமே உணர்ந்திட உதவும்
புத்தாண்டினை நாம் வரவேற்றிடுவோம்!
.
போன நாட்கள் திரும்ப வராது;
வினைப்பயன் என்றும் தீர்ந்துபோகாது!
தானாய் உலகம் சுற்றிடும் – எனினும்
தாமாய் வாழ்க்கை தகவமையாது!
தேனாய், அமுதாய் வாழ்வினை மாற்றும்
தெளிவினைத் தரட்டும் புதிய நல்லாண்டு!
என்றும் உலகின் சிறுதுளி நாமே
என்பதை அறிவோம்! சமுத்திரம் ஆவோம்!
$$$
புத்தாண்டு கவிதை படித்தேன். அருமையான பதிவு. வாழ்த்துகள்.!!!!!
LikeLike
🙏🙏🙏
LikeLike