பகவத் கீதை- ஏழாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

“நீரினில் சுவை நான்; தீயினில் சுடர் நான்; வேதங்களில் பிரணவம் நான்; நானே உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறான் கண்ணன். தனது விற்போர் திறமை மீது கொண்ட அகந்தையால் போர்க்களம் வந்த விஜயன், போர்முனையில் குழப்ப மாயையில் தவிக்கும்போது, பார்த்தசாரதி, தனது மெய்யான சொரூபத்தைக் காட்டத் தயாராகிறார். “பலன் கருதாமல் கடமையைச் செய்” என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியவர், இந்த அத்தியாயத்தில், ”நானே உலகின் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று கூறி அவனது அகந்தையை உடைக்கிறார்.

ஏழாம் அத்தியாயம்: ஞான விஞ்ஞான யோகம்

பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன் இவைகளை அறியவொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம். ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தை யுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு. அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர். அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குகிறவர்கள், இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

1. பார்த்தா!  என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தானாய், என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.

2. ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.

3. பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்தி பெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.

4. மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, *அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.

5. இது என் கீழியற்கை. இதினின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய்! அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

6. எல்லா உயிர்களுக்கும் அது காரணமென்றுணர். அதனால் நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.

7. தனஞ்ஜயா! என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என்மீது கோர்க்கப்பட்டது.

8. நான் நீரில் சுவை; இந்து மகனே! நான் ஞாயிற்றிலும், திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண் மக்களிடத்து நான் ஆண்மை.

9. மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும் யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ்செய்வோரின் தவம் யான்.

10. எல்லா உயிர்களுக்கும் நான் சாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா! புத்தியுடையோரின் புத்தி நான். ஒளியுடையோரின் ஒளி நான்.

11. வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே! உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.

12. சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.

13. இந்த மூன்று குணங்களாகிய எண்ணங்களால் இவ்வுலக மெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.

14. இந்த குணமயமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

15. தீமை செய்யும் மூடர், மானிடரில் கடைப்பட்டார், மாயையால் ஞானமழிந்தோர் அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், – (இணையோர்) என்னைச் சரண் புகார்.

16. நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே! துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.

17. அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியவன்.

18. மேற்சொல்லிய யாவரும் நல்லாரே; எனினும் ஞானியை நான் யானாகவே கொண்டுள்ளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.

19. பல பிறவிகளில் இறுதியில் ஞானவான்,  ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

20. வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.

21. எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

22. அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதினின்றும் தான் விரும்பினவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.

23. எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதி யுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர், என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.

24. மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தமமாகிய பர நிலையை அன்னார் அறிகிலர்.

25. எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோகமாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.

26. சென்றன, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன், என்னை அறிந்தோர் எவருமிலர்.

27. விருப்பத்தாலும், பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா! எல்லா உயிர்களும் மயங்கிவிடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.

28. எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணியச் செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.

29. மூப்பினின்றும், மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர்  ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.

30. பூதஞானம், தேவஞானம், யாகஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னோரே அறிஞர்.

அடிக்குறிப்பு:

*அகங்காரம் - எல்லாச் சேதன உயிர்களுக்குமுள்ள  ‘நான்’ என்ற கொள்கை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s