-கவியரசு கண்ணதாசன்
இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!

புண்ணியம் செழிப்ப தாக
.பொய்மைகள் தொலைவ தாக
கண்ணியம் தழைப்ப தாக
.கடமைகள் உயர்வ தாக
எண்ணிய நடப்ப தாக
.இனியபா ரதத்தில் மீண்டும்
கண்ணியன் கீதைச் செல்வன்
.கண்ணனே பிறப்பா னாக!
கற்பெனும் பெருமை ஓங்க
.கவினுறும் தாய்மை வாழ
அற்புதக் கவிதை தோன்ற
.ஆனந்த இல்லம் காண
நற்பெரும் தவத்த ராய
.நங்கைமார் உயர்ந்து வாழ
கற்புயர் நாட்டில் மீண்டும்
.கண்ணகி பிறப்பா ளாக!
தந்தையைப் பணிந்து போற்றி
.தாய்மையை வணங்கி யேற்றி
சிந்தையைச் செம்மை யாக்கி
.செயல்களை நேர்மை யாக்கி
செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்
.செல்வங்கள் குவிந்து காண
சிந்தையால் உயர்ந்து நின்ற
.ஸ்ரீராமன் பிறப்பா னாக!
கணவனே தெய்வ மென்றும்
.காடெலாம் சோலை யென்றும்
அணிமணி வேண்டே னென்றும்
.அவனையே தொடர்வே னென்றும்
பணிவொடு பண்பும் கொண்டு
.பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
.ஜானகி பிறப்பா ளாக!
ஒவ்வொரு பிறப்பும் இங்கே
.உயர்ந்ததாய்ப் பிறப்ப தற்கு
செவ்விதழ் நீலக் கண்ணாள்
.திருமகள் தமிழ்மீ னாட்சி
செவ்விதின் அருள்வா ளாக!
.தேசத்தை உயர்த்து கின்ற
நல்வழி யாவும் கண்டு
.நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!
$$$