பிச்சை புகினும் கற்கை நன்றே!

-டி.எஸ்.தியாகராசன்  

கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.
நாலந்த பல்கலைக்கழகம்

வறிய நிலையில் இருப்பினும் பிறரிடம் யாசிப்பதை உலகம் விரும்பாது. அதனால்தான்  ‘ஏற்பது இகழ்ச்சி’ என்றார் ஒளவை. ஆயின் விதிவிலக்காக பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் கற்பதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு “கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார். காரணம் கல்வி ஒன்றே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம்.  வள்ளுவரும்

கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றையவை 

-என்ற குறளை (திருக்குறள்- 400 ) நமக்கு வழங்கினார். 

கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.

தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையினும் கல்வி குறித்து மிகுதியாக பேசப்படுதலே நம் முன்னோர் எத்தகைய மதிப்பு கொண்டிருந்தனர் என்பதை புலப்படுத்தும் விதமாக, ஆசிரியர்க்கு உடனிருந்து உதவி, பொருள் கொடுத்து, பின்னாளில் எண்ணா மனத்தோடு கற்க வேண்டும். 

ஒரு தாய்க்குப் பிறந்த பல பிள்ளைகளுள் கல்வியில் உயர்ந்தவனைத் தான் தாயும் விரும்புவாள். தாய் மட்டுமல்ல புறவெளியில் கூட கல்லாதவர் மூத்த பிள்ளையாயினும் சரி மதிப்பு கிடைக்காது. 

அரசனும் கற்றறிந்தவனைத் தான் விரும்புவான். நான்கு விதமான குலத்தில் பிறந்தவர்களில் கூட கற்றறிந்தவனைத்தான் மேல் வகுப்பினன் கூட பணிந்து கற்றிட வேண்டும் என்பதை,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

    (புறநானூறு- 183)

-என்ற பொருள் பொதிந்த பாடலை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிப் போனான்.

“கல்வியழகே அழகு”, “மம்மர் அறுக்கும் மருந்து”, “கல்வி கரையில, கற்பவர் நாள்சில”, என்று நாலடியார் பரக்கப் பேசும்.

கம்பர் தான் புனைந்த இராம காதையில் கோசல நாட்டு மகளிரிடம் செல்வமும் கல்வியும் சமமாக இருந்ததை, “பொருந்து செல்வமும், கல்வியும் பூத்தலால்” என்றெழுதினார்.  நமது முன்னோர் ஒரு சிறப்பு இல்லாத ஊரை “கணக்காயர் இல்லாத ஊர்” என்று எழுதினர். கணக்காயர் என்பது ஆசிரியரைக் குறிக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் தெய்வத்திற்கு முன்னதாக குருவை வைத்து போற்றினார்கள்.

கல்விக்கு என்று பெண் தெய்வத்தையும் படைத்து வழிபாடாற்றினார்கள்.  அகிலத்தையே யாண்ட ஆங்கிலேய நாட்டில் 1811-இல் தான் முதன்முதலாக பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டில் பாரதத்தில் இருந்த பள்ளிக்கூடங்களின் மொத்த எண்ணிக்கை 7,32,000.  ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கிராமங்களில் 1850 ஆண்டு வரை இயங்கி கொண்டிருந்தன. ஏறக்குறைய எல்லாக் கிராமங்களிலும் 18 வகையான பாடப் பிரிவுகளோடு நடந்து வந்தன.  ஆனால் இவை அரசு சார்பில் நடத்தப்பட இல்லை என்பதுதான் விந்தை.  அந்தந்த ஊர் சபை மக்களே அவரவர்தம் மக்கள் செல்வங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கினார்கள் என்பதும் மற்றொரு சிறப்பு.

கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்பிரான்களின் வாழ்க்கை நலன்களை பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள். மற்றொரு வியப்பளிக்கும் செய்தி, ஐம்பது முதல் எழுபது வரையிலான பாட அட்டவணைகள் இருந்திருக்கின்றன.  அக்னியைக் கொண்டு தயாரிக்கப்படும் உலோகவியல், காற்றின் விசையால் இயக்கப்படும் தொழில்கள், நீரின் விசையால் உருவாகும் நீரியல் கல்வி, ஆன்டிரிக்ஸ் வித்யா எனப்படும் விண்வெளி விஞ்ஞானம், பிரித்வி வித்யா எனும் சுற்றுப்புற சூழ்வியல், சூர்யா வித்யா என்று சொல்லப்பட்ட சோலார் கல்வி, சந்திர வித்யா என்ற கோள்கள் ஆய்வு, பூகோள் வித்யா என்கிற நிலவியல் அமைப்பு, கால் வித்யா என்று அழைக்கப்பட்ட நேரக் கணிதம், சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் குறித்தான கல்வி, ஆகர்ஷன் வித்யா என்ற வான புவி ஈர்ப்பு விசை, பிரகாஷ் வித்யா என்று கற்பிக்கப்பட்ட ஆற்றலுக்கான துறை போன்ற ஐம்பதிலிருந்து எழுபது வரையிலான துறைகள் உயர் கல்விக்கான பாடத்திட்டங்களாக இருந்திருக்கின்றன. 

இத்தகைய கல்வி 1850-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்தன என்ற அரிய உண்மையை பிரபல காந்தியவாதியும், சிறந்த வரலாற்று ஆய்வாளருமான  ‘தரம்பால்’ பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்து ஆய்வு செய்து, பிரிட்டிஷ் இந்தியா நூலக ஆவணக் காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்  ‘தி பியூட்டிஃபுல் ட்ரீ’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார். 

அவர் தனது முன்னுரையில்,  “இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் பெருமளவுக்கு  ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’ யில் இருந்து எடுக்கப்பட்டவையே.  1831-32 லேயே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம் பெற்றிருக்கிறது” என்கிறார். “இன்னமும் நிறைய அளவில் வரலாற்று ஏடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் என்னால் கையெழுத்துப் பிரதியாகக் கொண்டுவர இயலவில்லை” என்பதையும் குறிப்பிட மறக்கவில்லை. 

மேற்கூறிய பலவாறான அறிவு, ஆற்றல்களை நமது தாத்தா, பாட்டிகள் கற்றிருந்ததால் தான் இன்றைய கால விஞ்ஞானத் தொழில் நுட்பம், அது சார்ந்த நுண்கருவிகள் இல்லாத நிலையில், விண்ணில் சுற்றும் பல்லாயிரம் கோள்களை துல்லியமாக ஆய்ந்து அமாவாசை முதல் பௌர்ணமி, சந்திர, சூரிய கிரகணங்கள் வரை அறுதியிட்டு சொற்பவிலையுள்ள பஞ்சாங்கத்தில் குறிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் பூமிப் பந்தில் பஞ்ச பூதங்களால் ஏற்படும் நன்மை, தீமை, மனித குலத்திற்கு ஐம்புலன்களால் ஏற்படும் பயன்கள் எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்பித்து இருக்கின்ற மெய்யான கல்வியை நாம் தொடர்ந்து படிக்க இயலாத நிலைக்கு ஆளாக்கப்பட்டோம். 

கள்வர்களால் களவாட முடியாதது. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாது.  தீப்பிழம்புகளால் உண்ண முடியாது. பிறர்க்கு கொடுக்க, கொடுக்க குறையாதது என்பது கல்வி ஒன்றே! இதனைக் கற்கக் கற்க அறிவு விரிவடையும். இதனால் தான் வள்ளுவர்

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு

-என்றார் (திருக்குறள்- 396).

கற்பதற்கு நேரம், காலம், நாள் இல்லை. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் விடியற்காலை காவிரியில் நீராட போகும் போதெல்லாம் நெடுங்கணக்கு, இலக்கணம் குறித்து தன்னோடு வரும் மாணவர்களுக்கு சொல்லிக்கொண்டு போவாராம். நம் நாட்டில் மிகக் குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி இளமையில் கங்கையை படகில் பயணித்து அக்கரையில் உள்ள பள்ளிக்குச் செல்ல காசு இல்லா நேரங்களில் கங்கையில் நீந்திச் செல்வார் என்பது உண்மையான வரலாறு.

செல்வந்தன் ஒருவன் தன் மகன் படிப்பதால் சிரமம் கொள்வான் என்று தவறாக எண்ணிக் கொண்டு கற்பித்தலைத் தவிர்த்து விட்டான். காலமும் கழிந்தது, தந்தையும் காலமானார். அவரிடம் இருந்த பொன்னும் பொருளும் இளைஞன் வசமானது. இவன் தற்குறியாய் இருந்ததால் எல்லோரும் இவனை ஏமாற்றத் தொடங்கினர். கல்லாத நிலையில் மனம் நொந்து சொன்னான். “துள்ளித் திரிகின்ற பருவத்தில் என்றன் துடுக்கடக்கி பள்ளியில் வைத்திலாத பாதகனே” என்று தந்தையை வசை பாடினான். இதனால் தான் கல்லாதவனை மரம் என்ற பொருளில்

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

     (மூதுரை-13)

– என்றார் ஒளவை பிராட்டி. தனக்குப் பின் வரும் சந்ததியினர்க்கு “எண்ணெழுத்திகழேல், வித்தை விரும்பு, இளமையில் கல், நூல் பலகல், என்று பலப்பட உரைத்துப் போனார் மூதாட்டி ஒளவை. உலகநாதர் என்றதொரு புலவர் “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்று கடிந்து சொன்னார்.

நமது புரட்சிக் கவிஞரும்  “காலையிற்படி, கடும் பகல் படி, மாலை, இரவு பொருள் படும் படி, நூலைப் படி” என்று சொல்லி விட்டு பெண்களைப் பார்த்து,  

கல்வியில் லாத பெண்கள்
     களர் நிலம்: அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்; நல்ல
     புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
     திருந்திய கழனி; அங்கே
நல்லறிவுடைய மக்கள்
     விளைவது நவிலவோ நான்?

     (குடும்ப விளக்கு)

 -என்று கூறி மகிழ்கிறார். 

கல்வி கற்றால் நல்ல பல நூல்களை படிக்கும் திறம் வாய்க்கும். நல்ல நூல்கள் நம் மனக்கோணலை சரி செய்யும். “ஓர் உயர்ந்த நூல் உத்தமர் ஒருவரின் குருதிக்குச் சமம்” என்றார் பாரடைஸ் திலாஸ்ட் என்ற நூல் எழுதி புகழாய்ந்த  ஜான் மில்டன். இன்னொரு மேல்நாட்டுக் கவியான ராபர்ட் சதே என்பார் “என்னை விட்டு நீங்காத நல்ல நண்பர்கள் நூல்கள்” என்றார். நம் நாட்டு மகாகவியோ,

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
  இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
  வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
  பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
  எனதுள்ளம் இயங்கொ ணாதோ?

       (பாஞ்சாலி சபதம்)

 என்று கலைமகளைப் பணிவார்.

பலமொழி வாணராம் பாரதி, மேலும் ஒருபடி மேலே போய், அறங்கள் செய்யும் அறவாணர்கள், செல்வர்கள், இவர்களை நோக்கி சோலைகளை அமைத்தலைவிட, குளங்கள் வெட்டுவித்தலை விட அன்னசாலைகளை ஏற்படுத்தலை விட பல்லாயிரம் கோயில்களை அமைப்பதைவிட, பெயர் விளங்க ஒளிர்ந்து நிற்க வல்ல எல்லா அறங்களைக் காட்டிலும் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் என்றார்.

‘கற்பது ஒரு  தவம்’ என்றார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. கற்பதும், கற்பிப்பதும் நல்லாரும், வல்லாரும் விரும்பும் இனிய செயல்கள். மாவீரன் அலெக்சாண்டர் ஒரு தங்கப் பேழையில் ஹேமரின்  ‘இலியட்’ காவிய நூலை தன்னருகே வைத்துக் கொண்டிருந்தான்.

கல்வியின் மேன்மை கருதி நம் பாரத நாட்டில் இன்றைக்கு உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 3.85 கோடி பேர். 981 பல்கலைக்கழகங்களும், 42,343 ஆயிரம் கல்லூரிகளும் கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. தொழிற் நுட்பக் கல்வி நிறுவனங்கள் மட்டும் 8,997-செயல்படுகின்றன. உலகின் மிகப் பெரிய வேளாண்மை ஆய்வு நிறுவனமாக ஐசிஏஆர்   தலைமையின் கீழ் 67 பல்கலைக்கழகங்கள் 122, கல்லூரிகள் இயங்குகின்றன.

இப்படி கல்வியில் செழுமையும் வளமையும் பெருகி வளர்ந்து வரும் நம் நாட்டில் அண்மையில் நடந்த கொடூரமானதொரு நிகழ்ச்சி எல்லோரையும் வெகுவாக பாதித்தது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இருந்து பல நூறு அரிய ஓலைச் சுவடிகளை அவற்றின் அளப்பரிய மேன்மை கருதி கொள்ளையர்கள் போல தங்கள் நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள். ஆனால் எதனையும் தீயிட்டு அழிக்க இல்லை.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது கடல் வழியாக இங்குள்ள விளைபொருள்களை கொண்டுசெல்ல ரயில் பாதைகளை கடற்கரை நகர்களுக்கு அமைத்தார்கள். எக்காலத்திலும் கல்விச் சாலைகளை எரியூட்டியதாக வரலாறு இல்லை. ஆங்கில அரசை எதிர்த்து நமது நாட்டு விடுதலை இயக்கத்தினர் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்திய காலை ஒரே ஒரு காவல் நிலையத்தை தகர்த்து தீயிட்டார்களே தவிர எந்த ஒரு அந்நியர்கள் நடத்திய கல்விச் சாலைகள் மீது ஒரு சிறு கல்லெறி சம்பவம் நடந்ததாக செய்தி இல்லை.

பல நூறு ஆண்டுகள் பல்லாயிரவர் கல்வி பயின்று வந்த உலக புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தை துருக்கி நாட்டுக் கொடியவன் பக்தி கில்ஜியார் தீக்கிரையாக்கியதைப் போல, ஸ்ரீலங்கா நாட்டில் யாழ்ப்பாண நகரத்து பெருமை கொண்ட நெடுங்கால நூலகத்தை சிங்கள இனவாத வெறியர்கள் தீக்கிரையாக்கியதைப் போல, நாம் வாழும் இக் காலத்தில் ஒரு வரலாற்றுக் கறையாக  ‘எழுதுகோல் தெய்வம்’ என்று பாரதி பூசித்த கல்விக் கடவுள் சரசுவதி குடிகொண்டிருக்கும் பள்ளி* ஒன்று முற்றிலும் நாசமாக்கப்பட்டு தீக்கிரையானது உலக அவலத்தின் உச்சம்.

இனியாவது அல்லன விலக்கி நல்லன பெருக்கி நமது கல்விக் கண்களை குருடாக்க முயலோம் என்று உறுதிமொழி ஏற்று பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வழியில் புதிதாய் பிறந்தெழுவோம்.

குறிப்பு: * கடந்த 2022 ஜூன் 17 அன்று, கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறை வடிவெடுத்ததில், பல கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. 
  • நன்றி: தினமணி (31.10.2022)

$$$

Leave a comment