பாஞ்சாலி சபதம் – 1.1.26

-மகாகவி பாரதி

அஸ்தினாபுர மன்னரின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் அரசுமுறைப்படி பரிசுப்பொருள்கள், படைகள் சூழ இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பிச் செல்கின்றனர்.  ‘நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்  நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்’ என்று, இதனை மன விரக்தியுடன் சொல்கிறார் நூலாசிரியரான மககவி பாரதி...

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.26. பாண்டவர் பயணமாதல்

ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
      அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
      படையினோடும் இசையினோடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
      திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ
      நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?       145

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
      நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
      வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்;
      கீழ்மேலாம்,மேல் கீழாம்;கிழக்கு மேற்காம்;
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
      போற்றிடுவார்,விதிவகுத்த போழ்தி னன்றே.       146

$$$

Leave a comment