-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
77. தலைவனுக்கு ஏங்கும் தலைவி போன்ற பக்தி
.
புத்தி:ஸ்திரா பவிது- மீச்’வர பாதபத்ம
ஸக்தா வதூர்விரஹிணீவ ஸதா ஸ்மரந்தீ/
ஸத்பாவனா ஸ்மரண தர்ச’ன கீர்த்தனாதி
ஸம்மோஹிதேவ சி’வமந்த்ர ஜபேன வின்தே//
.
பற்றுவைத்தேன் ஈசன்பதம் அப்பற்றால் என்மனது
நற்றலைவன் பிரிந்திட்ட நாயகிபோல் நினைந்திடுதே
சமைந்திடுதே புலம்பிடுதே நோக்கிடுதே போற்றிடுதே
சிவநாமம் உருவேற்றித் தனைமறந்து வாடிடுதே!
.
சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
.இறைவனுடனான பக்தியில், நாயக – நாயகி பாவமும் ஒன்று. அதாவது, இறைவன் சிவபெருமான் ஒருவரே பதி (நாயகன்). ஜீவாத்மாக்களாகிய உயிர்கள் அனைத்தும் அந்த நாயகனை நாடி நிற்கின்ற சதி (நாயகி) ஆவர். அக்காலத்திலே போர்க்களத்தில் பொருதுவதற்காகவோ, வியாபாரத்திற்காகவோ, உயர் கல்விக்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ நாயகன் வெளியூர் செல்லும்போது அவனது பிரிவைத் தாங்காமல் நாயகி வாடுவாள். அதனைப் போல பரமாத்மாவாகிய சிவபெருமானிடமிருந்து பிரிந்து வந்து ஜீவாத்மாக்களாக உழன்றுவரும் நாம், மீண்டும் அந்தப் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதற்காக ஏங்குகிறோம். அந்த ஏக்கம் இருந்தால்தான், முக்தி என்ற நோக்கம் நிறைவேறும்.
ஆகையினால், பரமாத்மாவுடனான ஐக்கியத்தை ஏற்படுத்துகின்ற அந்தப் பரமேஸ்வரனின் சரணங்கள் (திருப்பாதங்கள்) மீது பக்தானாகிய நான் அசையாத பற்று வைத்திருக்கிறேன். அந்தப் பற்றின் காரணமாக, எனது மனது, நல்ல தலைவனைப் பிரிந்து இருக்கும் நாயகி போல மீண்டும் அவனை எப்போது அடைவோம் என்று நினைத்து வருகிறது. ஒன்றும் செய்ய இயலாமல் சமைந்து (நிலைகுலைந்து) நிற்கிறது. எப்போது எம் நாயகனாம் இறைவன் சிவபெருமானை மீண்டும் அடைவோம் என்று புலம்பிடுகிறது. அவரோடு சேரும் வழியை நோக்கி அல்லாடுகிறது. அவரைக் கண்ணாரக் கண்டு, பேதமற ஒன்றாய்த் திகழ வேண்டும் என்பதை நினைந்துருகிப் பாடுகிறது, அவரது திவ்ய நாமங்கள் அடங்கிய கீர்த்தனைகளைப் பாடிப் போற்றுகின்றது. அந்த சிவநாமத்தை விடாமல் ஜபித்து தனது நிலையை மறந்து பக்தியினால் என் மனம் வாடுகிறது.
$$$