சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்

-சுவாமி விமூர்த்தானந்தர்

நல்லவன் ஒருவன்  திடீரென்று தவறு செய்கிறான்.  பிறகு வாழ்நாள் முழுவதும் அப்படிச் செய்ததற்காக வருந்துகிறான்.  நல்லது செய்ய நினைக்கும் பலருக்குச் சஞ்சலங்களும் ஆசைகளும் அடிக்கடி வந்து விளையாட்டுக் காட்டுகின்றன.

தீய சிந்தனைகள் ஒருவரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கின்றன.  யார் தீய சிந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறாரோ, அவருள் அற்பமான சிந்தனைகள் வந்து புகுந்து அவரை நாசமடையச் செய்கின்றன.

அதுபோல நற்சிந்தனைகளும், நல்லவர்களின் எண்ணங்களும், விருப்பங்களும் முன்னேறத் துடிக்கும் ஒருவருக்கு உதவக் காத்திருக்கின்றன.  நம் மீது கருணை கொண்ட மகாபுருஷர்களிடம் நாம் அடைக்கலம் புகுந்தால், அவர்களது அன்பான உபதேசம் நமக்கு ஆறுதலையும் ஆற்றலையும் அள்ளி வழங்கும்.

தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதைத் தான்  தேடுகிறோம்;  பிரார்த்திக்கிறோம்; சிந்திக்கிறோம்.  இன்று நமக்குள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க நம் மீது கருணை கொண்டு நமக்கு நல்ல ஆற்றல்களை வழங்குபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

இருக்கிறார்!

நம்பிக்கைப் பேரொளி

சுவாமி விவேகானந்தர்,  மாக்களை மக்களாக்கவும், மனிதர்களைப் புனிதர்களாக்கவும் வந்த இனியவர்.  அவரது வார்த்தைகளுக்கு இருந்த சக்தி – அது அவர் சாதாரணமாகக் குறிப்பிட்டிருந்தாலும், அல்லது ஆன்மிக உயர்தளங்களில் திளைத்து அந்நிலையிலிருந்து பேசியிருந்தாலும் – மகத்தானது.

சுவாமிஜியின் கருத்துகளின் மகிமையை உணர்ந்த மகாத்மா காந்தி,  அதனால் தமது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்ததாகக் கூறினார்.

சுவாமிஜியைப் படித்த நேதாஜி அவரது காலடியில் அமர்ந்து ஆன்மிகப் பாடம் பயில விரும்புவதாகக் கூறினார்.

மகாகவி பாரதியார், “சுவாமி விவேகானந்ததின் வேதாந்தப் பிரசாரமானது இந்திய விடுதலை முயற்சிக்குத் தாய் முயற்சி” என்றார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த், ‘சுவாமிஜியின் சக்தி மிக்க வார்த்தைகளை முப்பது வருடத்திற்குப் பிறகு படித்தபோதும் தம்முள் ஒரு மின்சார சக்தி பாய்வதை உணர்ந்ததாக’க் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சக்தியைத் தலைவர்களும் அறிஞர்களும் மட்டுமா உணர்ந்தார்கள்? இல்லை.  சிரத்தையுடன் கேட்ட ஒவ்வொருவருக்கும் அது கிடைத்தது.  சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

ஐம்பதாண்டுகளில் வணங்க வேண்டிய தெய்வம்

இந்திய அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நம் தலைவர்கள் தீவிரவாதம், மிதவாதம் என்று பிரிந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினர்.  வெள்ளையனை வெளியேற்றுவதிலேயே பலரும் முனைப்புடன் இருந்தனர்.

ஆனால் காந்திஜி போன்ற ஒரு சிலர் மட்டும் மக்களின் தரத்தையும் உயர்த்துவதில் முயன்று கொண்டிருந்தனர்.  சுதந்திரம் கிடைத்த பிறகு அதை நல்ல முறையில் அனுபவிக்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணவும் மக்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.

அப்படி முயன்றவர்களுக்கு முதல் உத்வேகம் தந்தவர் சுவாமிஜி என்றால்,  ‘உண்மையை உரைத்தீர்கள்’ என இந்திய வரலாறு நெஞ்சார்ந்த நன்றியை நமக்குத் தெரிவிக்கும்.

ஆங்கிலேயரை விரட்டும் முன்பு நாம் பாரதத் தாயிடம் பக்தியும் சிரத்தையும் கொண்டு அவளுக்குச் சேவை  செய்ய வேண்டும் என்பது விவேகானந்தரின் எண்ணம்.

அதற்காக அவர்,  ‘இனி வரும் 50 ஆண்டுகளுக்கு நம் ஆதார சுருதி, ஈடு இணையற்ற நம் இந்தியத் தாயாக இருக்கட்டும்; அதுவரை மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து மறைந்து விடட்டும்’ என்றார்.

(சென்னையில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு – ‘இந்தியாவின் எதிர்காலம்’.)

சுவாமிஜி அவ்வாறு கூறியது 14.2.1897-இல்!

அந்த ஆண்டுடன்  ஓர்  ஐம்பதைக் கூட்டிப் பாருங்கள். அங்கு வருவது 1947 மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரமும் தான்.

இந்தியாவை நேசி!

சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி கிறிஸ்டீன்.  அவர் தமது நினைவலைகளில் மூழ்கி ஒரு முத்தை எடுத்து நம் முன் வைக்கிறார்.  “எங்களுக்கு (சுவாமிஜியின் மேலைநாட்டுச் சீடர்கள்) இந்தியா மீது எப்போது பக்தி வந்தது தெரியுமா?” என்று கேட்டு அவரே பதிலைக் கூறுகிறார்.

“சுவாமிஜி தமது மதுரமான குரலில் ‘இந்தியா’ என்ற வார்த்தையை உச்சரித்த அன்றே எங்களுக்கு இந்தியாவின் மீது பக்தி உண்டாயிற்று என்று நினைக்கிறேன்.”

மிஸ்.மெக்லவுட் சுவாமிஜியின் மற்றொரு சிஷ்யை; அமெரிக்கப் பெண்மணி.  அவரது நண்பர்களுள் புகழ்பெற்ற எழுத்தாளர் பெர்னாட்ஷாவும் ஒருவர்.  மெக்லவுட் மேலைநாடுகளுக்கும் இந்தியாவிற்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தின் திரட்சி சுவாமிஜி என்று உணர்ந்திருந்த மெக்லவுட், மேலைநாடுகளில் அவரது சிந்தனைகளை முழுமூச்சுடன் பரப்பி வந்தார்.  ஆங்கிலேயர் ராமகிருஷ்ண மடத்தை, விடுதலைப் போராட்ட வீரர்களின் இயக்கம் என்று சந்தேகத்துடன் நோக்கியபோது அவர்களின் அந்தத் தவறைக் களைந்தார்.

ராமகிருஷ்ண மடம் ‘உத்போதன்’ என்ற வங்காளப் பத்திரிகையை ஆரம்பித்தபோது பொருளாதார ரீதியில் பூர்வாங்கப் பணி செய்தவர் இவர். இப்படி பல நல்ல காரியங்களை அவர் செய்வதற்கு அவருக்குச் சக்தி எங்கிருந்து கிடைத்தது?

தமது குருவான சுவாமிஜியிடம் மெக்லவுட் ஒருமுறை “சுவாமிஜி, உங்களுக்கு எந்த வகையில் நான் சேவையாற்ற வேண்டும்?” என்று பக்தியுடன் கேட்டார்.

சுவாமிஜி தீர்க்கமாக, “LOVE INDIA” (இந்தியாவை நேசி) என்றார்.  மந்திரம் போன்ற அந்த அறிவுரை அந்த அம்மையாரை அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட வைத்தது; இந்திய வாழ்க்கை முறையை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கவும் வைத்தது.

இந்தியாவை மற!

சுவாமிஜி மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிகப் பிரசாரம் செய்தார்.  மேலைச் சிந்தனைகளிடையே இன்று நாம் காணும் ‘இந்தியச் செல்வாக்கு’ சுவாமிஜியால் துவங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பல ஆன்மிகச் சாதகர்களுக்கு உண்மையான ஆன்மிகத்தை வழங்க நினைத்தார் அவர்.  ஆனால் சுவாமிஜியின் 39 வயது குறுகிய வாழ்க்கைப் பயணம் அதற்கு இடம் தரவில்லை.

உலகிற்கும், சிறப்பாக இந்தியாவிற்கும் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருந்த அவருக்கு, ஆன்மதாகம் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே உடனிருந்து ஆன்ம சாதனைகளைக்  கற்றுத் தர நேரமிருந்தது.

அதனால் சுவாமிஜி தமது சகோரர் சீடரான சுவாமி துரியானந்தரை அமெரிக்காவிற்கு வரவழைத்தார்.  அப்போது அவர் கூறிய வார்த்தை இது:

“மேலைநாட்டினருக்கு உண்மையான ஆன்மிக வாழ்வை வாழ்ந்து காட்டு; இந்தியாவை மற – FORGET INDIA”.

அதன்படி சுவாமி துரியானந்தர் அமெரிக்கா சென்று, சாந்தி ஆசிரமம் என்ற அமைப்பை ஆரம்பித்துப் பல சாதகர்களை உருவாக்கினார்.  இன்றும் அந்த இடம் சாதகர்களுக்கு ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டுவதாக விளங்குகிறது.

அதற்கு துரியானந்தரின் தவ வாழ்க்கை ஒரு காரணம் என்றால், விவேகானந்தான் மந்திரச் சொற்களே மூல காரணம்.

மக்களுக்குச் சேவை செய்மறந்துவிடு வங்காளத்தை!

அந்தக் காலத்தில்  ஹரித்துவார் பகுதியில் பல சாதுக்களும் யாத்திரீகர்களும் போதிய மருத்துவ வசதியின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  அந்தப் பிரச்னை ஆண்டவனிடமிருந்து அவர்களது மனங்களை அடிக்கடி திசை திருப்பிக் கொண்டிருந்தது.  சுவாமிஜி தமது பரிவ்ராஜக காலத்தில் அங்கு சென்றிருந்தபோது அதைக் கவனித்திருந்தார்.

அதனால் அவர் தமது சீடர் சுவாமி கல்யாணானந்தரிடம் அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றப் பல வரையிலும் தூண்டினார்.  முடிவில், ‘மக்களுக்குச் சேவை செய், வங்காளத்தை மறந்துவிடு (SERVE PEOPLE; FORGET BENGAL)’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தம் முழு ஆற்றலையும் திரட்டி சுவாமி கல்யாணானந்தர் கங்கலில் சேவாசிரமத்தை ஆரம்பித்து, அங்குள்ள ஏழை எளியவருக்கும் யாத்திரீகர்களுக்கும் மருத்துவ சேவை செய்து வந்தார்.  அவரது உழைப்பாலும் தியாகத்தாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக இன்றும் அந்தச் சேவாசிரமம் செம்மையாக இயங்கி வருகிறது.

‘வங்காளத்தை மற’ என சுவாமிஜி கூறியதை அப்படியே கல்யாணானந்தர் ஏற்றார்.  அதனால் 30 வருடங்களுக்கு மேல் கங்கலில் பணியாற்றிய அவர், தம் சொந்த இடமான வங்காளத்திற்கு ஒருமுறைகூட செல்லவில்லை!

இந்தியாவை நேசி!’ – இந்தியாவை மறந்துவிடு!

‘இந்தியாவை நேசி’ என்று கூறி சுவாமிஜி ஒரு சீடருக்கு உத்வேகம் ஊட்டினார்.  மறுபுறம் மேலைநாட்டு மக்களும் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மற்றொருவரைச் சேவை செய்யவும் தூண்டினார்.  அதற்காக ‘இந்தியாவை மற’ என்றார்.

இப்படி யார் யாருக்கு எந்தெந்த உபதேசங்களைத் தந்தருள வேண்டும் என்று ஒரு ஜகத்குருவால் மட்டுமே போதிக்க முடியும்.  சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் தங்களது துறைகளில் சாதனை புரிந்தார்கள் என்பதை நாம் மேலே கண்டோம்.  அவரது வார்த்தைகளை இன்று படிப்பவர்களுக்கும் அந்த சக்தி வருமா?

ஆம்.  அவரது வார்த்தைகளுக்கும் அன்றும் சக்தி இருந்தது.  இன்றும் சக்தி உண்டு;  இனி என்றும் இருக்கும்.

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் சாதிக்க நினைப்பவர்களுக்கும் – சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும் – இறைவனுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்களுக்கும் – அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன.

தனிமனித,  சமுதாய முன்னேற்றத்திற்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார். அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே- அவை நம்முள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தியைக் கொண்டே – நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.  இதோ சில சக்தி வாய்த மந்திரங்கள்.

‘எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே உள்ளன.  உன்னால் எதையும் சாதிக்க முடியும்’.

‘நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக வேண்டும்; ஆகியே தீர வேண்டும் என்பதுதான் நான் கூறுவது’.

சுவாமிஜியின் இதுபோன்ற பொன்மொழிகள் உணர்ச்சி வேகத்தில் கூறப்பட்டவையல்ல.  இன்றும் அவரது திருப்பெயரால் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்புகள் யாவும் செம்மையாகச் செயல்பட்டு அவரது சக்தியைக் கூறுகின்றன.

சுவாமிஜி தமது ஒரு கடிதத்தில், “யாரெல்லாம் இந்தக் கடிதத்தைப் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் என் சக்தி வரும், நம்பிக்கை வையுங்கள்…..” என எழுதியுள்ளார்.

சுவாமிஜியின் சீடர் மன்மதநாத் கங்குலி. அவர் ஒருமுறை சுவாமிஜியிடம், “சுவாமிஜி, நான் உங்களது சொற்படி நடக்காமல் வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிடுகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் எனக்கென்ன நடக்கும்?” என்று கேட்டார்.

உடனே சுவாமிஜி, சீடரைத் தீர்க்கமாகப் பார்த்து, “நீ எங்கு சென்றாலும், எந்த ஆழத்திற்குச் சென்றாலும் உன் குடுமியைப் பிடித்து இழுத்தாவது உன்னைக் கரையேற்ற வேண்டியது என் கடமை” என்றார்.

இப்படி குருசக்தியுடன் கூடிய சுவாமி விவேகானந்தரின் திருவுருவமும் கருத்துகளும் அவரது சாந்நித்தியமும் நம்முள் பேராற்றலைத் தூண்டக் கூடியவை.  அந்த அருளார்ந்த சக்தியை வாரி வாரிப் பருகுவோம்!

.

குறிப்பு:

பூஜ்யஸ்ரீ  சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், தஞ்சையிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்.

$$$

Leave a comment