அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளையும் வர்ணித்து கவியரசர் எழுதிய இப்பாடல், ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் வெண்கலக் குரலோனின் இனிய பாடலாக முகிழ்த்தது...

மாலைப் பொழுதின் மயக்கத்திலே…

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்...  இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?

பொன்னை விரும்பும் பூமியிலே…

ஜாவர் சீதாராமனின் திரைக்கதை வசனத்தில், கே.சங்கரின் இயக்கத்தில், 1962-இல் வெளியான திரைப்படம் ஆலயமணி. முக்கோணக் காதல்கதைதான்; ஆனால், பண்பாடு மீறாத கதைக்களம். படத்தில் உள்ள ஏழு பாடல்களையும் கவியரசு கண்ணதாசனே எழுதி இருக்கிறார். அத்தனையும் தமிழ்த் திரையுலகின் சொத்து. விதிவசமாக காதலை தியாகம் செய்து நாயகனை கணவனாக ஏற்கும் மனைவியாக சரோஜாதேவி நடித்திருக்கும் இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசன். ஊனமுற்ற தன்னை கண்போலக் காக்கும் மனைவியைப் பற்றி கணவன் பாடுவதாக அமைந்த அற்புதமான பாடல் இது...

பரமசிவன் கழுத்தில் இருந்து…

இல்லறம் என்பது இரட்டைத் தண்டவாளம் போன்றது. இதில் ஆண்- பெண் இருவரிடையே தனிப்பட்ட அகந்தை வருவது குடும்ப நலனுக்கு நல்லதல்ல. இதனை அழகாக வெளிப்படுத்திய படம் சூரியகாந்தி. குடும்பநலனுக்காக பெண்கள் தங்களை அர்ப்பணித்து பணிபுரிவதை ஏற்கத் தயங்கும் ஆண்கள் இப்போதும் உண்டு, அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படத்தில், கவிஞர் கண்ணதாசனே ஒரு கதாபாத்திரமாக வந்து இப்பாடலைப் பாடுகிறார். அற்புதமான சிந்தனையுடன் கூடிய இப்பாடல் காலத்தை வென்று வாழும் திரைக் கவிதை....

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

திரையுலகில் அகப்பாடல்களில் (காதல் பாடல்கள்) இனிய சொல்லாட்சியையும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய சந்தங்களையும் தென்றலென உலவவிட்டவர் கவியரசர். இதோ மற்றொரு காதல் பாடல்... பாலும் பழமும் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே காலத்தை வென்ற, கருத்தாழம் மிக்க பாடல்கள்.

மனைவி அமைவதெல்லாம்…

பெண்பித்தனான கதாநாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், திரு. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976-இல் வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. திரைக்கதையோட்டத்துக்கு ஏற்ப, கவிஞர் எழுதிய கவிதை வரிகள், மனைவியின் பெருமையை தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல இருக்கின்றன. இதுபோன்ற காட்சி அமைப்பு கொடுக்கப்பட்டால் இன்றைய திரையிசைக் கவிஞர் சிகாமணிகள் என்ன எழுதி இருப்பார்கள் என்று நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம்…

‘அன்னை’ திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வேடிக்கையாகப் பாடுவதாக அமைந்த காட்சிப் பாடல் இது... ஆனால், பாடலில் உள்ள வரிகள் எதுவுமே வேடிக்கை அல்ல. உயர்ந்த தத்துவமும், வாழ்வனுபவமும், சோகமும் இழையோடும், கவியரசரின் இனிய பாடல் இது...

கம்பன் ஏமாந்தான்…

ஆண்களை வெறுக்கும் நாயகியின் மனதை மாற்ற முயலும் நாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் இடம்பெற்றது. இன்றைய பெண்ணியவாதிகளுக்கு இப்பாடல் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பெண்களுக்குப் பிடிக்கும். கவியரசரின் வைர வரிகள் வசீகரிக்காமலா போகும்?

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!

மறைந்த (அதாவது மறைந்து போனதாகக் கருதிய) மனைவிக்கு நினைவில்லம் கட்டுகிறான் கணவன். அவனது நினைவில் வந்து பாடுகிறாள் அவனது மனைவி. இதுதான் இதயகமலம் படத்தின் காட்சி அமைப்பு. அதற்கு ஏற்ற உருக்கமான மெல்லிசை திரு. கே.வி.மகாதேவன். கிடைத்த வாய்ப்பில் ஓர் அற்புத வாழ்வியல் கவிதையைப் படைத்திருக்கிறார் கவியரசர். எவ்வளவு அழகிய சொற்கள்? எத்துணை தூய காதல் இந்த வரிகளில்?...

வசந்தகால நதிகளிலே…

செய்யுளின் கடைசி வரியின் கடைசிச் சொல்லும், அடுத்த செய்யுளின் முதல் வரியின் முதல் சொல்லும் ஒன்றாக அமைந்திருப்பது ‘அந்தாதி’ எனப்படும். அதாவது அந்தமே ஆதியாகத் தொடர்வது. இந்த யாப்பிலக்கண முறையில் திரைப்படப் பாடலையும் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரைப்படத்தின் அதிரடித் திருப்பக் காட்சியை உள்ளடக்கியது. அதற்கேற்றவாறு சொற்பிரயோகத்தையும் கையாண்டிருக்கிறார் கவியரசர்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்? 

கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் முரணான பாலுறவுகள் குறித்த சர்ச்சை இருக்கும். 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ஆண்- பெண் இடையிலான உறவுகளின் முரண் தொடர்பானதே. இந்தப் படத்தின் அனைத்து (நான்கு) பாடல்களையும் கவியரசரே எழுதினார்; அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் கற்பகத் தருக்கள். குறிப்பாக, கதையோட்டத்துக்கு ஏற்றவாறு, இனிய சொற்களால் சமுதாயத்தை முரண்களிலிருருந்து காக்க நினைக்கும் கவியரசரின் பரந்த உள்ளம் இப்பாடல்களில் ஒளிர்கிறது. இங்கு வெளியாகும் பாடலும், படத்தின் கதாநாயகியின் பெண்ணின் தாபமாக, முரண்களை மறுக்கும் ஞானக்குரலாக ஒலிப்பதைக் காணலாம்.

காலங்களில் அவள் வசந்தம்

காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில்,  “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது.  “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!

கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…

கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...

ஆறு மனமே ஆறு…

ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! (2) சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு… தெய்வத்தின் கட்டளை ஆறு! ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!

சம்சாரம் என்பது வீணை

ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.