வலிமைக்கு மார்க்கம்- 3

”நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம்.” (வ.உ.சி.யின் வலிமைக்கு மார்க்கம் நூலின் 8, 9 அத்தியாயங்களில் இருந்து)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-14

-கி.வா.ஜகந்நாதன் 14. போர் மூளுதல் தகடூர்க் கோட்டைக்குள்ளே இதுகாறும் இருந்த அமைதி இப்போது குலைந்தது. உண்மையான ஆபத்து இப்போதுதான் வந்து நிற்கிற தென்று அதிகமான் உணர்ந்தான். சுருங்கை வழியைப் பகைவர்கள் அடைத்தது தெரிந்து, அவர்களுக்கு அவ்வழி எப்படித் தெரிந்தது என்று ஆய்ந்தான். அதைப்பற்றி இப்போது ஆராய்ந்து பயன் இல்லையென்று விட்டுவிட்டான். இனிமேல் தான் மெய்யான போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இனியும் கோட்டைக்குள் நெடுநாள் தங்க முடியாது. பட்டினி கிடந்து வாடிக் கதவைத் திறப்பதற்கு முன்னாலே, உடம்பில் … Continue reading அதிகமான் நெடுமான் அஞ்சி-14

வலிமைக்கு மார்க்கம்- 2

...குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கி விடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது.... (வ.உ.சி.யின் ’வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 6, 7 அத்தியாயங்கள்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-13

காரியும் சேரனும் கூடிப் பேசினார்கள். அன்று இரவில் அந்தக் காட்டுக்குச் சென்று சுருங்கையின் வாசலைப் பார்த்தறிவது என்று திட்டமிட்டார்கள். சில வீரர்களை அழைத்துக்கொண்டு, காரியும் மன்னனும் புறப்பட்டார்கள். வஞ்சப்பெண்ணும் உடன் சென்றாள்...காட்டுக்குள் சென்று மறைந்து நின்றார்கள். நள்ளிரவில் சிலர் தீப்பந்தங்களுடனும் தலையில் மூட்டைகளுடனும் அங்கே வந்து கீழே இறங்குவதைக் கண்டார்கள். உடனே வீரர்கள் அவர்களைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினார்கள். காவலர் சிலரை அங்கே நிறுத்திவிட்டுப் பாசறைக்கு வந்தார்கள். அதிகமானை வென்றுவிட்டது போன்ற மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தான் பெருஞ்சேரல் இரும்பொறை. அந்தப் பெண்ணுக்குச் சில பரிசிலை அளித்து அவளை வீட்டுக்குக் காவலுடன் அனுப்பினான். தான் அறிந்த இரகசியத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் அவன் இப்போது இறங்கினான்; காரியையும் உசாவினான்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 13வது அத்தியாயம்)...

வலிமைக்கு மார்க்கம் -1

இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் அரிய நூல்களில்  ‘எளிமையிலிருந்து வலிமைக்கு’ எனப் பொருள்படும் ஓர் அழகிய நூலினது முதற் பாகத்தின் மொழிபெயர்ப்பு. ...ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு, முக்கியமாக நம் தேசத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம். அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூலில் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக்கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மனிதர் அடையக்கூடிய மேலான நிலைகளையெல்லாம் அடைவரென்பது திண்ணம். -வ.உ.சி.

அதிகமான் நெடுமான் அஞ்சி-12

அந்தப் பெண்ணுக்கு அதிகமானிடத்திலும் அவனைச் சேர்ந்தோரிடத்திலும் கட்டுக்கடங்காத வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பும் உண்டாயிற்று. யாரேனும் அதிகமானைப் புகழ்ந்தால் அவள் அங்கே நிற்பதில்லை. 'கற்பின் பெருமையை உணராத, பெண்மையின் உயர்வைக் காப்பாற்றாத, அரசன் அரசனா? அரக்கன் அல்லவா?' என்று எண்ணி எண்ணிப் பொருமினாள். பாவம்! யாருக்கும் நினைந்து தீங்கு புரியாத அதிகமான் ....அந்தப் பெண்ணளவில் பொல்லாதவன் ஆகி விட்டான். அதை ஊழ்வினைப் பயன் என்று சொல்வதையன்றி வேறு என்ன வென்பது? (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 12வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-11

ஒளவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப் புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: "அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகி யிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரி முறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல் அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனை யல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?" பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 11வது அத்தியாயத்திலிருந்து)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-10

அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரப் போகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ’கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்' என்றும் எழுதியனுப்பினான். ஒளவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 10வது பகுதி)...

கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ என்ற ஒப்பற்ற நூலைத் தந்திருக்கிறார். இன்றும் திருக்குறளின் மூலம் வாழ்ந்து, திருவள்ளுவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்....சுவாமி விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு தன் சொந்தக் கல்வியை இழந்து, அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தவித்த எண்ணற்ற மக்களின் உள்ளத்தில் தன் சாகாவரம் பெற்ற சொற்களின் மூலம் எழுச்சி தீபம் ஏற்றியவர்....மகான்கள் வாழ்ந்த காலம் வேறாக இருக்கலாம். அவர்களது மொழி வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை என்றும் உய்த்து உணரத்தக்கதாகும்.... (பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் கட்டுரை)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-9

தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ் சேரலிரும்பொறை உணர வேண்டுமென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். "எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்" என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 9வது அத்தியாயம்)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-8

முடியுடை மன்னர்கள் தம் படைக்கு வலிமை போதாதென்று கருதினால் துணையாக வரவேண்டுமென்று காரியை அழைப்பார்கள். காரியின் துணை யிருந்தால் வெற்றி தமக்கே கிடைக்குமென்று நினைப்பார்கள். அத்தகையவனுடைய வீரத்தையும் படை வலிமையையும் எப்படி அளந்து சொல்ல முடியும்? அந்தப் பெரு வீரனை ஊரை விட்டு ஓடச் செய்தான் அதிகமான் என்ற செய்தியை முடி மன்னர்கள் கேட்டார்கள். சோழன் அதிகமானைப் பாராட்டி மகிழ்ந்தான். பாண்டியன் தன் நண்பன் இத்துணை வலிமையுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டான். பெருஞ்சேரல் இரும்பொறையோ ஒன்றும் தோன்றாமல் மயங்கினான்; வருந்தினான். வீரருலகம் அதிகமானைக் கொண்டாடிப் போற்றியது. புலவர்கள் அவன் வெற்றியைப் பாடினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 8வது பகுதி)....

அதிகமான் நெடுமான் அஞ்சி- 7

அதிகனின் கையில் வேல்; காலில் கழல்; உடம்பிலே வேர்வை; அவன் கழுத்திலே பச்சைப்புண். அவன் தலையிலே பனைமாலை;  போர் செய்ய அணிந்த வெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போல இன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்க வில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை. வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஒளவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.... கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 7வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-6

“இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை. பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ முனை முறிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.கைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்...” (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 6ஆம் அத்தியாயம்)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-5

ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்டை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழிகாட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை  ‘ஆற்றுப்படை’ என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழிகாட்டுவதானால் அதற்குப்  ‘புலவராற்றுப்படை’ என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது  ‘கூத்தராற்றுப்படை’ என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதை ‘பாணாற்றுப்படை’யென்றும், விறலிக்கு வழி காட்டுவதை  ‘விறலியாற்றுப்படை’யென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும். (கி.வா.ஜ.வின் அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 5ஆம் அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-4

அதுமுதல் ஒளவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ஒளவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, ”அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்" என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவுகூர்ந்து வருகிறதற்குக் காரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று; பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே. (கி.வா.ஜ. எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 4வது அத்தியாயம்)...