-ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன்
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலால் தமிழக எழுத்துலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள் மேலும் சிலரது கண்டனங்கள் இங்கே ஆவணப் பதிவாக...

ஊழலின் வேடிக்கை வடிவம்
-ஜடாயு
பெரியார் அறிவுலகம் என்ற பெயரே முரண்பாட்டுத் தொடர். “பெரிய நூலகம்” என்பதாக அந்தப் பெயரில் கோவையில் கட்டப்பட்டுள்ள படாடோபமான கட்டடத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் திறந்துவைத்த உடனேயே, ஒரு மாபெரும் நூலக/ புத்தக/ பதிப்பக ஊழல் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த நூலகத்தில் தான் கண்ட அரிய நூல்களைக் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள கட்டுரை நவரசங்களும் கலந்த ஒரு காவியம். அதைக் கட்டாயம் வாசிக்கவும்.
காண்க: பெருமாள் முருகன் அவர்களின் கட்டுரை
இந்த ஊழலுக்காக போலி புத்தகங்களை “சமைக்கும்” பணியில் அமர்த்தப்பட்ட ஆசாமிகளில் ஏ.ஐ.யில் இஷ்டத்துக்கு கேள்விகேட்டு பதில்களை அப்படியே வெட்டி ஒட்டும் டம்போக்களுடன் கூட, இயல்பான குறும்புத்தனம், நகைச்சுவை & அங்கத உணர்வு கொண்ட நபர்(கள்) இருந்திருக்கிறார்(கள்).
1947ல் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் ஐயர், திரிஷா விஜய் என்கிற புத்தக ஆசிரியர், தினத்தந்தி செய்திக்குறிப்பு நடையில் எழுதப்பட்ட பாரதியாரின் “மதுரை ராமன்” கதை, கீழடி பற்றிய புத்தகத்தில் அங்கு கிடைத்ததாக நந்தி சிலை எல்லாம் இவர்(கள்) கைவண்ணம் தான், “ஏ.ஐ. தவறுகள்” அல்ல. இவர்களை மனம்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஆக, நூலக அலமாரிகளில் மிடுக்காக அமர்ந்திருக்கும் இந்த கெட்டி அட்டை சாக்கடைப் பொதிகளை உருவாக்கிய ஆசாமிகள், இதையெல்லாம் எவன் பார்க்கப் போகிறான் என்ற தெனாவட்டில் இஷ்டத்துக்கு திறந்தவெளியில் ஒன்றுக்கடிப்பது போல கழித்து மகிழ்ந்திருக்கிறார்கள். தமிழ்ச்சூழல் மீது அவர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கையை அது காட்டுகிறது.
பெருமாள் முருகன் பார்த்த சில புத்தகங்களிலேயே இத்தகைய பொக்கிஷங்கள் உள்ளன என்றால் அத்துணை நூல்களையும் அலசினால் தமிழனின் பெருமையை வானளாவ உயர்த்தும் எத்துணை விடயங்கள் கிடைக்கும் என்பதை எண்ணி இறும்பூது எய்தாமல் இருக்க முடியவில்லை. உடனடியாக தமிழக அரசு இதற்காக நிபுணர் குழு அமைத்திட வேண்டும்.
ஆக, இதுதான் தமிழ் “அறிவுலகத்தின்” உண்மையான முகம். வெளியே நேர்த்தியான ஜம்பமான மேல்பூச்சு, அறிவுஜீவி என்பது போன்ற மோஸ்தர், ஆனால் உள்ளுக்குள் அத்தனையும் பொய், போலித்தனம், வக்கிரம், வெறுப்பரசியல், முடைநாற்றம். இதைத்தான் கடந்த பல பத்தாண்டுகளாக திராவிட இயக்க அரசியல் சாதித்திருக்கிறது. போலி நூல்களாகப் பீறிட்டிருக்கும் இந்த அசிங்கம் புதியது அல்ல, மிக வேடிக்கையான வடிவத்தில் இப்போது அது வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான்.
லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில் பிகாரில் நடந்த மாட்டுத்தீவன ஊழல் வெளிவந்து விசாரிக்கப்பட்ட போது, மருத்துவம் பார்ப்பதற்காக எருமை மாட்டை ஸ்கூட்டரில் கூட்டிச் சென்ற செலவு – ரூ. 2000/- என்ற வகையிலான ரசீதுகள் கிடைத்து, அந்த மாநிலத்தின் அப்போதைய லட்சணத்தை உணர்த்தும் குறியீடுகளாக அவை ஆயின. தமிழ்நாட்டின் இந்த நூலக ஊழல் வெளிப்படுத்தும் முடைநாற்றமும் அதே போன்றது தான்.
- குறிப்பு: திரு. ஜடாயு அவர்களின் முகநூல் பதிவு இது.
$$$
செயல் மறந்து வாழ்த்துதுமே!
-அரவிந்தன் நீலகண்டன்
’அகல்விளக்கு’ என்ற ’பதிப்பகம்’ எப்படி கொள்முதல் பட்டியலுக்குள் வந்தது என்பதை திமுக விளக்க வேண்டும். அந்த ‘பதிப்பக’ உரிமையாளரே செய்தி நிறுவனமொன்றுக்கு இந்த கொள்முதல் அரசால் போன ஆண்டு செய்யப்பட்டதாக சொல்லியிருக்கிறார். இதற்கும் ஐடி விங்க் தனமாக முட்டு கொடுத்தால் அதை விட துளியும் நேர்மையற்ற அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதில் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவ சதிகளையெல்லாம் கண்டுபிடிக்கும் தீராவிட அல்பத்தனம் நம்ப இயலாத ஆபாசம்.
ராமர் கோவிலுக்காக எவரெவரோ உயிர்தியாகம் செய்து கோவில் உருவான பின்னர் அதில் நடந்த காணிக்கைத் திருட்டு எவ்வளவு அருவருக்கத்தக்கதோ, அதைவிட வக்கிரமான அறவுணர்வற்ற செயல் கோவையில் நிகழ்ந்திருப்பது.
இந்த அறவுணர்வற்ற ஊழலில் ஒட்டுமொத்த தமிழ் புத்தக வாசகர்கள் எழுத்தாளர்கள் மீது காறி உமிழப்பட்டுள்ள ஊழல் வக்கிரத்தை அதன் ஒவ்வொரு கண்ணியையும் மக்கள் மன்றத்தின் முன்னால் வெளிக்காட்டி நீதி மன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுப்பது அரசின் முதன்மை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்.
சினிமா மோகத்தால் மட்டுமே வந்ததாக சொல்லப்படும் அரசு அறிவியக்க பாதையில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சியாலும் இயக்கத்தாலும் செய்ய முடியாத பெரும் சேவையை தமிழ் அறிவுலகுக்கு அளிக்க இது மிக அரிய வாய்ப்பும் கூட. தவெகவுக்கு வாக்களித்த ஒவ்வொருவரது வாக்கையும் நியாயப்படுத்த கிடைத்துள்ள வாய்ப்பு.
செய்வார்களா?
தொடக்க அறச்சீற்றங்களுக்கும் அடவுகளுக்கும் அப்பால் இது நகைச்சுவையாக பகடியாக ஓரிரு கண்டனங்களுக்கு பின்னர் அடங்கிவிடவே வாய்ப்புகள் அதிகம். திரைமறைவு கை-குலுக்கல்கள் பரிமாற்றங்கள் நிகழலாம். பின்னர் விஷயங்கள் நீர்த்து போகலாம். டிரைவர்கள் முதல் அச்சகத்தின் கணினி பணியாளர் வரை எவரேனும் பலிகடாக்கள் ஆக்கப்பட்டு உண்மை பயனாளிகள் குற்றவாளிகள் தப்பலாம். அடுத்த தீபாவளிக்கு ‘அகல் விளக்கு’ வெறும் நகைச்சுவை நினைவாகவே மாறியிருக்கும். பீனிக்ஸ் பதிப்பகமாக மன்னிக்கவும் பீனிக்ஸ் பறவையாக ஊழல் இப்போதயை தவறுகளிலிருந்து பாடம் கற்று இப்படியெல்லாம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு தன்னைக் கொண்டு சென்றிருக்கும்.
‘செயல் மறந்து வாழ்த்துதுமே’
- குறிப்பு: இது திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்க்ஜளின் முகநூல் பதிவு.
$$$

இரட்டை வேடம் வேண்டாம்!
-ம.வெங்கடேசன்
பெரியார் அறிவுலகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தவெக அரசு தீர விசாரிக்க வேண்டும்!
முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, தற்போதைய தவெக ஆட்சியில் திறக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகத்தில், போலி பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள் பெயரில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
மேடை கிடைத்தாலோ, மைக் பிடித்தாலோ தனது இஷ்டத்திற்கு ‘Build up’ செய்து, வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், தனது முதன்மைத் துறையான பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களை எட்டிக் கூட பார்ப்பதில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? எந்த ஆட்சியில் ஊழல் நடந்திருந்தாலும், பொறுப்பேற்றவுடன் அத்தனையையும் கண்டு பிடித்து முற்றுப்புள்ளி வைப்பது தானே தற்போதைய ஆட்சியாளர்களின் கடமை?
அதை விட்டுவிட்டு குட்டு வெளிப்பட்டவுடன், திமுகவும் தவெகவும் ஒருவரையொருவர் மாறி மாறி பிராண்டிக் கொள்வது அவர்களின் இரட்டை வேடத்தையே தோலுரித்துக் காட்டுகிறது. எனவே, இனியாவது வம்பு வளர்க்கும் வெட்டி வேலைகளில் கவனம் செலுத்துவதை விட, இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யார் என்பதை தவெக அரசு உடனடியாக கண்டறிய வேண்டும், எவ்வித சமரசமுமின்றி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்!
- குறிப்பு: இது திரு. ம.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு.
$$$
கோவை நூலகம் மட்டுமல்ல!
-சுரேஷ் வெங்கடாத்ரி
கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் ஊழல் அந்த ஒரு நூலகம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல என்பது இப்போது மிகத் தெளிவாக தெரிய வந்துள்ளது. கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூலகம், ஏன் அண்ணா நூலகங்களுக்குமே இந்த மாதிரியான போலிப் புத்தங்கங்கள் (அகல்விளக்கு) 2023லிருந்தே வழங்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
இருந்தாலும், திமுக ஆதரவாளர்கள், திமுக அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் இப்போதைய அரசுதான் இதில் ஈடுபட்டுள்ளது என்று களமாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் த்ரிஷா விஜய், விஐய் பாலு ஆகிய எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்கள். த்ரிஷா விஜய் மற்றும் பல விஜய் பெயர்களில் இந்த போலி புத்தகங்கள் இருப்பதால் இது டிவிகே கட்சியின் வேலை தான் என்றார்கள். ஆனால் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயர்களிலும் நூற்றுக்கணக்கான போலி புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதும் அதைப்பற்றி பேசுவதில்லை.
ஜூன் மாதம் தான் சீல் போடப்பட்டுள்ளது என்பதால் அந்த Ai புத்தகங்கள் அனைத்தும் த.வெ.க. ஆட்சியில் தான் வாங்கப்பட்டது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வாங்கியது தேர்தலுக்கு முன்பு என்றும், அதை புதிய ஆட்சி அமைந்து நூலக திறப்பு விழாவுக்கு தயார் செய்ய ஆரம்பித்தவுடன் தான் பிரித்து சீல் வைத்து அடுக்கினார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் தான் விற்ற அனைத்து புத்தகங்களும் திமுக ஆட்சியில் தான் வாங்கப்பட்டது எனவும், டிவிகே ஆட்சியில் எந்த புத்தகமும் தான் விற்கவில்லை என்றும் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
கன்னிமாரா நூலகம் மதுரை கலைஞர் நூலகம், ஏன் அண்ணா நூலகங்களுக்குமே இந்த மாதிரியான போலிப் புத்தகங்கள் (அகல்விளக்கு) 2023லிருந்தே வாங்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.பொருளாதார அறிஞர் ஜான் ட்ரீஸ் பெயரிலேயே ஒரு போலி ஆங்கிலப்புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் அதை தான் எழுதவில்லை என்று சொல்லியிருக்கிறார்..
நிலைமை இப்படியிருக்கையில், இந்த அரசு ஏன் அந்த அகல் விளக்கு பதிப்பாளரை கைது செய்யவில்லை, யாரையுமே பதவி நீக்கம் செயயவில்லை என்று பல குரல்கள் எழுந்துள்ளன.
உண்மையில் அந்த அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை எந்த அடிப்படையில் கைது செய்வது என்று தெரியவிலை. மற்ற அசலான பதிப்பகங்கள் எப்படி விண்ணப்பித்து, ஆர்டர் பெற்று, சப்ளை செய்திருக்கிறார்களா அப்படித்தான் அவர்களும் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களுக்கு எல்லாமே பரிந்துரைக் குழுக்களின் ஒப்புதல் இருந்திருக்கிறது. அவற்றின் விலை உட்பட.அதனால்தான் அவர் அவ்வளவு தெம்பாகப் பேசுகிறார். நூல்களின் தரத்தை சரி பார்ப்பது அதிகாரிகளின் பொறுப்புதானே? ஆனால் அவர் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், நூலக ஊழியர் சங்கத் தலைவர் துரை. தியாகராஜன் என்பவர் இந்தப் போலி நூல்கள் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருப்பதுதான் என்றும் எல்லா மாவட்டத் தலைமை நூலகங்களில் இருக்கும் புத்தகங்களுமே ஆராய்வு செய்யப்பட வேண்டியவை என்றும், இது குறித்து அமைச்சருக்கு இப்போது தகல்வல்களை அனுப்பியிருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவர் சென்ற ஜனவரியில் ஓய்வு பெற்ற முன்னாள் இணை இயக்குனர் ஒருவரின் பெயரையும் சொல்லி அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அவரும் இப்போது இந்த பெரியார் நூலகம் தவிர, புதிதாகக்கட்டப்பட்டு வரும் சேலம், திருச்சி, கடலூர் ஆகிய பெரிய நூலகங்களுக்கான இந்தப் புத்தகக் கொள்முதல் குறித்தான ஆணைகள் எல்லாமே தேர்தலுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டு விட்டன என்றும் மிகத் தெளிவாகச் சொல்கிறார். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (அவர் சாணக்யா டிவிக்கு அளித்த பேட்டியில் பார்க்கவும் )
எனவே இந்த ஊழல் எப்போதிருந்து தொடங்கியது, எந்தெந்த நூலகங்களுக்கு எல்லாம் இப்படி நூல்கள் வாங்கப்பட்டன,யார் யார் இவற்றின் பின்னால் இருந்தார்கள்,இருக்கிறார்கள், என்பவற்றைக் குறித்து நிச்சயமாக லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் மிக விரிவான ஒரு விசாரணை தேவைப்படுகிறது.
அண்மையில் இந்தத் துறையின் கூடுதல் பொறுப்பில் ஓராண்டாக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு,வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதை ஒரு தொடக்கமாகத்தான் கருத முடியும். (இவ்வளவு முக்கியமான ஒரு பதவி ஓராண்டாக காலியாக இருக்கிறதென்பதும், கூடுதல் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என்பதும் மோசமான நிலை.)
எனவே இந்த விஷயத்தில் நாம் உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. The Law will take its course and in its own leisurely Pace என்று தான் தோன்றுகிறது.
- குறிப்பு: திரு. சுரேஷ் வெங்கடாத்ரி அவர்களின் முகநூல் பதிவு இது.
$$$