கே.ஆர்.நாகராஜன், நிறுவனர், ராம்ராஜ் காட்டன், திருப்பூர்.
நேர்காணல்: வ.மு.முரளி
இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு வர்த்தக அடையாளத்தையும் உயர் மரியாதையையும் ஏற்படுத்தியதில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது. “தொழிலில் நேர்மை, தயாரிப்பில் தர மேலாண்மை, சக மனிதர்கள் மீது அன்பு - இவை இருந்தால், உள்ளத்தில் தெளிவிருந்தால், உங்கள் ஈடுபாடே சிகரத்துக்கு உயர்த்தும்” என்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன். கைராட்டை முதல் காற்றாலை வரை வெற்றிக்கொடி நாட்டிய அவரது அனுபவங்கள் இங்கே….

- உங்கள் குடும்பச் சூழல் குறித்து ஓர் அறிமுகம்…
எனது சொந்த ஊர் அவிநாசி அருகிலுள்ள கைகாட்டிப் புதூர். விவசாயக் குடும்பம். அப்பா எஸ்.ராமசாமி, அம்மா கருணாம்பாள், அண்ணன் சிதம்பரநாதன். 1960இல் நான் பிறந்தேன். வீட்டில் வறுமை என்று சொல்ல முடியாது. ஆனால், தோட்டத்தில் வேலை இல்லாதபோது தான் பள்ளிக்குப் போக முடியும். அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு 9, 10, 11 வகுப்புகளுக்கு அவிநாசி அரசுப் பள்ளியில் படித்தேன். 1977இல் எஸ்.எஸ்.எல்.சி. படித்தேன். அதில் தட்டச்சு தொழில்பிரிவு பாடம் இருந்தது. அதற்கு பயிற்சி பெற பள்ளியில் போதிய வசதி இல்லை. எனவே வெளியே டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சென்று பயிற்சி பெற வேண்டி இருந்தது. அதற்கு மாதம் ரூ. 15 செலவாகும். ஆண்டுக் கட்டணம் ரூ. 15 செலுத்தவே திண்டாடும் நிலையில் இருந்த என்னால் அந்தப் பயிற்சியைப் பெற முடியவில்லை. எனவே அந்தப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.
அப்போது அண்ணன் சிக்கண்னா அரசு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவிநாசியிலிருந்து திருப்பூருக்கு தினமும் சைக்கிளில் தான் செல்வார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தவே பெற்றோர் கஷ்டப்படுவதைப் பார்த்த நான், வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். (அண்ணன் ஆசிரியராகி பணி ஓய்வு பெற்றுவிட்டார்). எங்கள் உறவினரான சுப்பிரமணியம், திருப்பூரில் ‘மேகலா மெஷின்ஸ்’ என்ற தையல் இயந்திர விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் என்னை அப்பா சேர்த்து விட்டார். அங்கு 18 மாதங்கள் பணிபுரிந்தேன். பிறகு, நண்பர் துரைசாமி வேலைக்குச் சென்று கொண்டிருந்த ‘விஜயலட்சுமி காதி பந்தர்’ கடையில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்தேன். மாதச் சம்பளம் ரூ. 150-
அந்தக் கடையின் சரக்குகளை வாங்கிச் சென்ற வெளியூர்க் கடைகளுக்குச் சென்று வசூலிப்பதும், புதிய ஆர்டர்கள் பெறுவதும் மாதத்தில் 15 நாட்கள் நடக்கும். அடுத்த 15 நாட்கள் அந்த ஆர்டர்களை அனுப்புவோம். கதர் வேட்டி சட்டைகள் தான் விற்பனைப் பொருள். அவற்றை நெசவு செய்து கொண்டுவந்து நெசவாளர்கள் கடையில் கொடுப்பார்கள். பிறகு மாலை வரை காத்திருந்து அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள். மேலாடை கூட அணியாமல் காத்திருக்கும் அவர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்கள் கடைக்கு முன்பு காத்திருக்கும்போது கடைக்குள் அமர்ந்துகொண்டு டீ அருந்துவது சங்கடமாக இருக்கும். எனவே அவர்களுக்கு இடைவேளையில் சொந்தக் காசில் வடை, டீ வாங்கிக் கொடுப்பேன். அதற்கு மாதம் ரூ. 20 வரை செலவானது. இதனை வீட்டில் சொன்னபோது, அதில் அம்மா பெருமைப்பட்டாலும், வறுமை காரணமாக அதைக் கண்டித்தார். எனவே அவிநாசியில் இருந்து திருப்பூருக்கு வர பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசை மிச்சப்படுத்த நானும் சைக்கிளில் வேலைக்கு வரத் தொடங்கினேன். இதை நான் சொல்வது எனது அன்றைய குடும்ப பொருளாதாரச் சூழலை விளக்கவே.
- வேட்டி விற்பனையை எப்போது தொடங்கினீர்கள்?
1980களில் திருப்பூரில் பனியன் கம்பெனிகள் பெருகத் தொடங்கின. வேட்டி விற்பனையும் குறைந்து வந்தது. எனவே கதர்க் கடைகள் பலவும் மூடப்பட்டன. நான் வேலை செய்த நிறுவனமும் 1983இல் மூடப்பட்டது. எனவே வேறு வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறினர். வேறு வேலைக்குச் செல்வது சிரமமில்லை. ஆனால், கதர்க் கடையை நம்பி இருக்கும் நெசவாளர்களின் நிலை என்னாகும்? இப்படி நான் கவலைப்பட்டேன். எனவே வேட்டி வியாபாரம் செய்ய முடிவெடுத்தேன். இதை எனது முதலாளி ராமசாமி அவர்களிடம் சொன்னபோது “உனக்கென்ன பைத்தியமா? அதிக அளவில் முதலீடு செய்த என்னாலேயே கடையை நடத்த முடியவில்லை. பேசாமல் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போ” என்றார். எனது பெற்றோர், நண்பர்கள் அனைவரும் அதையே தான் சொன்னார்கள். ஆனால், கதர்க்கடை தொடங்குவதில் நான் உறுதியாக இருந்தேன்.
நான் பணிபுரிந்த கடை, தொழிலைக் கற்க ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது. அங்கு வியாபாரத்தின் நுணுக்கங்களை, கணக்கு வழக்குகளை அந்த சிறிய வயதிலேயே கற்றுக் கொண்டேன். வெளி மாநிலங்களில் கதர்த் துணிக்கு இன்னும் விற்பனை வாய்ப்பு இருப்பதையும், திருப்பூரில் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்த நான், எனக்கு அறிவுரை கூறியவர்களை சாந்தப்படுத்திவிட்டு கடையைத் தொடங்கத் தீர்மானித்தேன். என்னிடம் ரூ. 13,000 சேமிப்புப் பணம் இருந்தது. நண்பர்களிடம் கடன் பெற்றேன். மொத்தமாக ரூ. 83,000 முதலீடு செய்து 1983 செப்டம்பர் 9ஆம் தேதி எனது கடையைத் தொடங்கிவிட்டேன். அதற்கு எனது அப்பாவின் பெயரில் முதல் பாதியையும் எனது பெயரில் இரண்டாவது பாதியையும் சேர்த்து ‘ராம்ராஜ் காட்டன்’ என்று பெயரிட்டேன்.
முன்னதாக நெசவாளர்களிடம் சொந்தமாக கடையை ஆரம்பிக்கப் போவதாக நான் கூறியபோது அவர்களும் எனக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களுக்கு நான் தைரியம் கூறினேன். அவர்களுக்கு ஒரேயொரு நிபந்தனை விதித்தேன். அது, எனது கடைக்கு அவர்கள் வரும்போது மேல்சட்டை அணிந்துகொண்டு வர வேண்டும் என்பதுதான். உலகிற்கே ஆடை கொடுப்பவர்கள் மேலாடை இல்லாமல் இருக்கக் கூடாது என்றேன். அவர்கள் தங்கள் பொருளாதார நிலையைக் காரணம் கூறினார்கள். உடனே அவர்கள் தரும் வேட்டியின் விலையில் கூடுதலாக ரூ. 2 தருவதாகக் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவர்களின் முகங்கள் மலர்ந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போது பெரியவர் ஒருவர் “உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்காதே தம்பி. இது சாத்தியமில்லை” என்றார். அவரிடம் நான் “சம்பாதிப்பது மட்டுமே என் நோக்கமல்ல. நெசாவாளர்களின் நிலை உயர வேண்டும் என்பதற்காகவே கடையை ஆரம்பிக்கிறேன். முதலில் 50 கைத்தறிகளுக்கு வேலை கொடுக்கிறேன். பிறகு தொழில் வளர்வதைப் பார்த்து மேலும் விரிவு படுத்திக் கொள்கிறேன்” என்றேன்.
நெசவாளர்கள் மீதான அபிமானமே என்னை கதர்க்கடை தொடங்கத் தூண்டியது. அன்று 50 பேருடன் தொடங்கிய பயணம் இன்று 50,000 குடும்பங்களின் நலனாக மாறி இருக்கிறது.
- உங்கள் புதிய தொழிலையே சவாலாகத் தான் தொடங்கினீர்கள். பிறகு எத்தகைய சவால்களைச் சந்தித்தீர்கள்?
தொழிலில் பெரிய சவால்கள் இல்லை. ஆனால், நமது உடை கலாச்சாரம் மாறி இருப்பது தான் உண்மையான சவால். அண்மையில் எனக்கு சி.ஐ.ஐ. அமைப்பினர் விருது வழங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் வேட்டி கட்டி இருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. வேட்டி விற்பனையில் சாதனை படைத்தற்காகத் தான் எனக்கு அங்கு விருது வழங்கினார்கள். ஆனால், அங்கு யாரும் வேட்டியே கட்டி இருக்கவில்லை. இந்த நகைமுரணை விழாவிலேயே சுட்டிக் காட்டினேன்.



- பிறகு எப்படி சாதனை புரிந்தீர்கள்?
வேட்டி வியாபாரம் என்பது எனது தொழில் மட்டுமல்ல, அதுவே எனது தீராத ஆர்வம் (Passion) அதைத் தவிர வேறெந்த சிந்தனையும் எனக்கு இல்லை. எனவே தடைகளைப் பற்றி கவலைப்படாமல் நான் ஓடிக் கொண்டே இருந்தேன். தென் மாநிலங்களில் வேட்டியே கலாச்சார உடை. பல வட மாநிலங்களிலும் வேட்டி அடிப்படை உடை. எனவே காதியை பெருமைக்குரிய அடையாளமாக மாற்ற முடியும் என்று நம்பினேன்.
அன்றைய காலத்தில் ஒரு வேட்டியின் அடக்க விலை ரூ. 45 ஆக இருந்தது. எனது கடையின் வேட்டி விலை ரூ. 50 ஆக இருந்தது. எனவே பலரும் என்னிடம் வாங்க யோசித்தனர். அவர்களிடம் நெசவாளர்களின் உயர்வுக்காக இதனைச் செய்வதாகக் கூறி வாங்க வைத்தேன். தரமாகவும் கொடுத்தேன். நமது நோக்கம் உண்மையாக இருந்தால், அது சொல்லில் வெளிப்படும். அப்போது பிறர் நம்மை நம்பி பொருட்களை வாங்குவார்கள் என்பதை கண்கூடாக நான் பார்த்தேன். எனது நேர்மையே எனது பொருளின் அடையாளமாக மாறியது. அதன் விளைவாக 1984 மார்ச் மாதத்திற்குள், ஆறே மாதங்களில் எனது வியாபாரம் ரூ. 9 லட்சமாக உயர்ந்தது.
நான் என்னை என்றுமே முதலாளியாக கருதிக் கொண்டதில்லை. எனவே சிறிய கடை முதலாளிகளிடமும் பவ்யமாகப் பேசி அவர்களை எனது முகவராக்குவேன். முதல் ஆறு மாதங்களுக்கு நானே முதலாளி, நானே தொழிலாளி. இப்போதும்கூட, “நான் முதலில் தொழிலாளி தான்” என்றே கூறுவேன்.
வியாபாரம் வளரத் தொடங்கிய பிறகு விற்பனைப் பிரதிநிதிகளை வேலைக்கு எடுத்து அவர்களை நானே அழைத்துச் சென்று பயிற்சி அளித்தேன். இவ்வாறு சுமார் 1,500 விற்பனைப் பிரதிநிதிகளை உருவாக்கி இருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதிகள் கோபம் கொள்ளக் கூடாது, அவமானங்களைப் பொருட்படுத்தக் கூடாது. பேச்சில் சாதுரியம் வேண்டும். இவை எனது அனுபவ பாடங்கள். எனது தொடர் முயற்சியால் தென் மாநிலங்களில் 20 ஆண்டுகளில் ராம்ராஜ் காட்டன் லாபகரமான ஒரு வர்த்தக அடையாளமாகப் பதிந்துவிட்டது. தேவைக்கேற்ப சொந்தமாக ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆலைகளை நிர்மானித்துவிட்டோம். 2000 ஆண்டில் வர்த்தகத்தின் சவால்களை வெற்றிகொண்டுவிட்டோம்…
- உங்கள் வர்த்தகத்தில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு?
வேட்டி விற்பவன் என்பதால், நான் எங்கு சென்றாலும் வேட்டி அணிந்தபடியே தான் செல்வேன். அதனால் பல இடங்களில் அவமரியாதையைச் சந்தித்துள்ளேன். உதாரணமாக வங்கியில் மேலாளரைக் காணச் சென்றால் காவலாளி காத்திருக்க வைப்பான். அதேசமயம் பேன்ட் அணிந்துள்ள சாதாரண ஊழியரை உள்ளே அனுப்புவான். ஒருமுறை எனது சார்பு நிறுவன உரிமையாளரின் இல்லத் திருமணம் சென்னையில் 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதற்கு நானும் எனது அலுவலகப் பணியாளர்களும் சென்றோம். நான் வேட்டி அணிந்திருந்ததால் அங்கு நான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. என்னுடன் வந்தவர்கள் எவ்வளவு சொல்லியும், ஹோட்டலின் உடைக் கட்டுப்பாடு என்று காவலாளி கறாராகக் கூறிவிட்டார். எனவே எனது பணியாளர்களை உள்ளே அனுப்பிவிட்டு ஹோட்டலுக்கு வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். அங்கு மனசாட்சியுடன் நீண்டநேரம் விவாதம் செய்தேன். அங்கு தான் எனக்கு புதிய ஞானோதயம் ஏற்பட்டது.
அன்றே விளம்பர நிறுவனம் ஒன்றைச் சந்தித்தேன். எனது நிறுவனத்தின் தயாரிப்பான வேட்டிக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தும் விதமாக விளம்பரம் தயாரிக்குமாறு விளம்பர நிர்வாகியிடம் (ஜேடி ஜெர்ரி) கூறினேன். அந்த விளம்பரம் முழுவதும் எனது கருத்தாக்கம் தான். வேட்டி அணிந்த ஒருவர் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார். அவரை ஆரவாரமாக வரவேற்கிறார்கள்… அரங்கில் அவருக்கு சிறப்பு மரியாதை கிடைக்கிறது…. அவருக்கு ஒரு இளம்பெண் பூங்கொத்து கொடுக்கிறாள்… கடைசியில் அவருக்கு யானை மாலையிடுகிறது என்று அந்த விளம்பரம் போகும். அதில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்தார். அவர்தான் எங்கள் முதல் விளம்பரத் தூதர். 2004இல் வெளியான அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒளிபரப்பாகி, வேட்டிக்கு மரியாதையையும் விற்பனையையும் கூட்டியது.
- அதாவது நீங்கள் வேட்டி வியாபாரத்தில் ஒரு புதிய திசையை (Trend Setting) உருவாக்கினீர்கள் என்று சொல்லலாமா?
அப்படியும் சொல்லலாம். இந்தத் தொழிலில் இறங்கியதற்கு எப்படி நெசவாளர்கள் மீதான அபிமானம் காரணமானதோ, அதுபோலவே, வேட்டிக்குக் கிடைத்த அவமானமே என்னை புதிய உத்வேகத்துடன் செயல்படத் தூண்டியது. அபிமானமும் அவமானமும் தான் ராம்ராஜை நிலைநிறுத்தி இருக்கின்றன என்றே சொல்லலாம்.

- புதிய புதிய தயாரிப்புகளுடன் உங்கள் நிறுவனம் வளர்ந்து வருகிறது. இதனை எப்படி திட்டமிடுகிறீர்கள்? புதிய பிராண்ட்களை (வர்த்தகக் குறி) எப்படி உருவாக்குகிறீர்கள்?
போட்டி மிகுந்த வர்த்தக உலகில் நிலைக்க வேண்டுமானால், நாம் புதிது புதிதாக சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்காக எங்களிடம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு செயல்படுகிறது. அதே சமயம் புதிய பிராண்ட் உருவாக்கங்களுக்காக திட்டமிட்டுச் செயல்படுவதில்லை. நிறுவனம் வளர வளர, குறைகளைக் கண்டறிந்து நீக்கிக் கொண்டு வளர்வதே பிராண்ட் ஆகிறது. வளரும் தொழிலே நம்மை கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்கிறது.
திருப்பூர் மாநகரம் பனியன் நகரமாக அறியப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பலரும் வெளிநாட்டு வர்த்தகர்களின் (பையர்கள்) தேவைக்கு ஏற்ப, அவர்களின் பிராண்ட்களில் தான் உற்பத்தி செய்து அளிக்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு ரூ. 45,000 கோடிக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் உள்நாட்டு பிராண்ட்கள் குறைவு. இந்தக் குறையைப் போக்க நான் முடிவு செய்தேன். ‘மேட் இன் இந்தியா’ என்பது கௌரவச் சின்னமாக மாற வேண்டும். இதனை நான் 1983லேயே ஆரம்பித்துவிட்டேன். வ.உ.சி. அவர்களின் சுதேசிக் கோட்பாட்டை, அவரது கனவை நனவாக்கி வருகிறது ராம்ராஜ் காட்டன். விற்பனையில் விளம்பரம் ஒரு பகுதி மட்டுமே. பொருளின் தரம், பொருள் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு ஆகியவையும் பிராண்ட் ஆக மாறுகின்றன. எனவே அதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
1921 ஜூன் 22ஆம் தேதி மகாத்மா காந்தி தமிழகத்தின் மதுரைக்கு வந்தபோது, அங்கிருந்த ஏழைக் குடியானவன் ஒருவரைப் பார்த்த பிறகே எளிய ஆடைக்கு மாறினார். அவரது அரசியல் போராட்டத்தில் அஹிம்ஸையையும் கதரையும் ஒருங்கிணைத்தார். எனவே 2021ஆம் ஆண்டு அதனை நூற்றாண்டாக ராம்ராஜ் காட்டன் கொண்டாடியது. இதற்காக அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தோம். நாங்கள் எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்தாமல், எங்கள் நோக்கத்தை முன்னிலைப்படுத்தினோம். இதுபோன்ற செயல்பாடுகளால் தான் எங்கள் வர்த்தகம் வளர்கிறது.
விளம்பரத் தூதர்களும் ராம்ராஜ் காட்டனும்
எந்த ஒரு பொருளை சந்தைப்படுத்துவதிலும் விளம்பர உத்தி பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ராம்ராஜ் காட்டனின் விளம்பரத் தூதர்களாக பிரபல நடிகர்கள் பங்கேற்பது அதன் நம்பகத் தன்மையை மாநிலங்கள் கடந்து நிலைநாட்டுகிறது.
ஜெயராம் (மலையாளம்), சிவகுமார் (தமிழ்), வெங்கடேஷ், ராணா டகுபட்டி (தெலுங்கு), ரிஷப் ஷெட்டி (கன்னடம்), அபிஷேக் பச்சன் (ஹிந்தி), சமயச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் (ஆச்சார்யா பஞ்சகச்சம் வேட்டிகள்), நடிகை மீனாட்சி சௌதரி (சேலைகள்) ஆகியோர் ராம்ராஜ் காட்டன் விளம்பரங்களில் வருவதால் அதன் செல்வாக்கு பெருகுகிறது.
தயாரிப்பின் தரமும், எளிதில் கிடைக்கும் வாய்ப்பும், புதிய பிராண்ட்களும், விளம்பர உத்திகளும் இணையும்போது வர்த்தகத்தில் வெற்றி எளிதாகிறது. ராம்ராஜ் காட்டனின் வர்த்தக எல்லைகள் விரிந்துகொண்டே செல்கின்றன.
- சீன அதிபர் 2019இல் இந்தியா வந்தபோது அதை நினைவுக்குரிய நிகழ்வாக எப்படி மாற்றினீர்கள்?
சீன – இந்திய தலைவர்கள் 2019இல் மாமல்லபுரம் வருவதாக அறிந்தவுடன் பாஜக தலைவர்கள் மூலமாக பிரதமர் மோடிக்கு ராம்ராஜ் காட்டன் வேட்டி, சட்டைகளை அனுப்பி வைத்தேன். அவரும் தமிழக பாரம்பரியத்தின் அடையாளமாக அதனை அணிந்துகொண்டு மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங்குடன் காட்சி அளித்தார். இதுபோன்ற தருணங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.


அதனால்தான், 2022இல் சென்னையில் உலக சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு, சதுரங்கக் கட்டங்கள் போன்ற பார்டர் வைத்த வேட்டியை பிரத்யேகமாகத் தயாரித்து வழங்கினோம். அவரும் ஆர்வமாக அதனை அணிந்தார். அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டபடி, அவருக்கு ராம்ராஜின் பட்டு வேட்டி சட்டைகள் அளிக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்கள் மிகவும் பரவலான கவனம் பெற்றன. அவை வேட்டி மீதான் மரியாதையை அதிகப்படுத்தின.
அது மட்டுமல்ல, இந்திய பிரதமர்- சீன அதிபரின் படங்களை ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்புடன் விளம்பரம் செய்தோம். பிரதமர் மோடி- அன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் படங்களுடனும் ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்புடன் விளம்பரம் செய்தோம். இவை அந்தச் சமயத்தில் மிகவும் ரசிக்கப்பட்டன. ஒரே சிந்தனையுடன் நீங்கள் இயங்கினால், இதுபோன்ற புதிய கருத்தாக்கங்கள் உங்களுக்கும் தோன்றும்.
- கடந்த 44 ஆண்டுகளாக ஆடை வர்த்தகத்திலும் உற்பத்தியிலும் இருக்கிறீர்கள். உங்கள் இன்றைய நிலை என்ன?

1983 முதல் 20 ஆண்டுகள் ராம்ராஜ் காட்டன் என்ற பெயரை நிலைநாட்டுவதில் எங்கள் கவனம் சென்றது. “அப்போது எங்கள் முழக்கம், ‘பாரம்பரியமும் புதுமைப் பொலிவும்’ என்பதாக இருந்தது. 2000 முதல் 2010 வரை ‘மதிப்பிற்குரியவர்களுக்கான’ வெண்மை ஆடைகள் எங்கள் நோக்கமாக இருந்தன. 2020க்குப் பிறகு ‘இந்தியாவின் கலாச்சாரம்’ என்பதை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இன்று பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்கிறோம்.
இப்போது நாடு முழுவதும் 400 இடங்களில் எங்கள் பிரத்யேக விற்பனையகங்கள் உள்ளன. அது தவிர அனைத்து ஜவுளிக் கடைகளிலும் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன. பெண்களுக்கான சேலைகள் (ரம்யம்), சிறப்பு ஆடைகள் (லினன் பார்க்), இளைஞர்களுக்கான டி-ஷர்ட்கள் (யுனிப்ரோ), ரெடிமேட் பாக்கெட் வேட்டிகள் (ஜென்நெக்ஸ்ட்), பஞ்சகச்ச வேட்டிகள் (ஆச்சார்யா), குழந்தைகளுக்கான ஆடைகள் (லிட்டில் ஸ்டார்ஸ்), பட்டாடைகள் (லக்னா), துண்டுகள் (மிருது), பைஜாமா- குர்தா (கல்சர் இந்தியா) போன்ற ஆடைகளை துணை பிராண்ட்களுடன், ஆயிரக் கணக்கான ரகங்களில் உற்பத்தி செய்கிறோம்.
உலகம் முழுவதும் தமிழர்கள், இந்தியர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாகவும் பெருமளவில் விற்பனையாகிறது. எங்கள் நிறுவனங்களில் 18,000 பேர் பணியாற்றுகின்றனர். சுமார் 50,000 குடும்பங்கள் ராம்ராஜ் காட்டனால் வாழ்கின்றன. இது எங்களுக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.
இப்போது எங்கள் தயாரிப்பு மட்டுமல்லாது, பவானி ஜமுக்காளம், பத்தமடை பாய் போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனைக்காக ‘கல்சர் கனெக்ட்’ என்ற பிரிவைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஒரு பாலமாக இருக்க விரும்புகிறோம்.
- மனவளக்கலையில் உங்கள் ஆர்வம் அனைவரும் அறிந்தது. இந்த அமைப்பில் எப்படி இணைந்தீர்கள்?
‘மனவளக்கலை’ எனக்கு 2000ஆம் ஆண்டில் தான் அறிமுகமானது. அதுவரை 24 மணி நேரமும் வியாபாரமே கதியென்று இருந்தேன். அன்பர்கள் சிலரது அழைப்பால் ஆழியாறு சென்று வேதாத்திரி மகரிஷி அவர்களைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பு எனது வாழ்க்கையே புரட்டிப் போட்டுவிட்டது. நான் யார் என்ற ஆன்மிக விழிப்புணர்வு ஏற்பட்டது. கற்பூரமாகப் பற்றிக் கொண்டேன்.
தனிமனித அமைதி, குடும்பநலம், தொழில் நேர்மை, உறவுகளை மேம்படுத்துதல், சமுதாயப் பணி ஆகிய ஐந்தும் ஒவ்வொருவரின் கடமை என்று மகரிஷி சொன்னார். அதிலும் சமுதாயக்கடமை என்பது நாம் தீர்க்க வேண்டிய கடன் என்று சொன்னது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.
அதுபோலவே, தவறான ஆறு குணங்களை நேர்மறையாக்க அவர் வழிகாட்டினார். கடுங்கோபத்தை பொறுமையாலும், பேராசையை சீரான ஆசையாலும், உயர்வு – தாழ்வு எண்ணத்தை சமநோக்கான சிந்தனையாலும் வெல்ல வேண்டும்; முறையற்ற பால்க் கவர்ச்சியை கற்பாலும், கடும் பற்றை ஈகையாலும், வஞ்சத்தை மன்னிக்கும் குணத்தாலும் வெல்ல வேண்டும் என்பார் மகரிஷி. அவரது ஆன்மிகம், ஜாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகளைக் கடந்தது. வள்ளலார் போல, அறிவே தெய்வம் என்று தியானம் மூலமாக வழிகாட்டியவர். அவருடனான தொடர்பால் மனநிறைவு கிடைத்தது. அதையடுத்து 2004இல் கருவம்பாளையத்தில் அறிவுத் திருக்கோயிலை அமைத்தேன்.
இன்று திருப்பூரில் செயல்படும் பல மனவளக்கலை மையங்களுக்கு உதவி வருகிறேன். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறேன். எனது வருவாயில் 25 சதவீதத்தை மனவளக்கலைக்காகவே செலவு செய்கிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.
- உங்கள் சமுதாயப் பணிகள் குறித்து…
நாங்கள் சமுதாயப் பணிக்காக தனியே அறக்கட்டளை எதையும் நடத்தவில்லை. வியாபாரத்துக்கே நேரம் சரியாக இருக்கிறது. அதே சமயம், சமுதாயப் பணியில் செயல்படும் பலருக்கும் உதவி வருகிறோம். மனவளக் கலை மன்றங்கள், எங்கள் சமுதாயப் பணியில் முக்கியமானவை. அதேபோல, வெற்றி அறக்கட்டளை, வளம் இந்தியா, அகரம் ஃபவுண்டேஷன், கம்பன் கழகம், திருப்பூர் நகைச்சுவை முற்றம் போன்ற அமைப்புகளின் பணிகளுக்கு துணை புரிகிறோம். கல்வி, சுற்றுச்சூழல், இலக்கியப் பணிகளில் பல வகைகளில் உதவுகிறோம்.
காங்கயம் அருகிலுள்ள பாப்பினியில், எங்கள் குலதெய்வமான பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பான கோயில் அமைத்திருக்கிறோம். மடவிளாகம் கோயிலில் எனது தந்தையின் ஆசைப்படி 63 நாயன்மார் சிலைகளை அமைத்தோம். அங்கு 2 ஏக்கர் நிலத்தில் மண்டபம் கட்ட உள்ளோம். அவிநாசி, தாமரைக்குளத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கோயிலை புதிதாக அமைக்க பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.
மக்களுடன் இடையறாத தொடர்பு கொள்வதற்காக ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழை நடத்துகிறேன். அது லட்சக் கணக்கானோருக்கு அனுப்பப்படுகிறது.
- வரும் தலைமுறைக்கு உங்கள் அறிவுரை…
என்னைப் போன்ற எஸ்.எஸ்.எல்.சியில் தேர்ச்சி பெறாத, வசதி இல்லாத ஒருவனால் இந்த அளவுக்கு உயர முடிகிறபோது, அனைத்து வசதி வாய்ப்பும் கொண்டிருக்கும் இன்றைய இளம் தலைமுறையினர் வெல்ல முடியதா? கதர் வேட்டி போலவே நாடு முழுவதும் பல பாரம்பரியப் பொருட்கள் உள்ளன. அவற்றை தரமுடன் விற்க முயன்றால் சமுதாயம் ஆதரவு கொடுக்கும். தேவை ஈடுபாடும் விடாமுயற்சியும் தான்.
- படங்கள்: கொங்கு இரா.ராமகிருஷ்ணன்
- நன்றி: விஜயபாரதம்- தீபாவளி மலர் 2026
$$$