-ராம் மாதவ்

இந்திய தேர்தல் முறைமை சிறப்பானதாகவும் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லாததாகவும் உள்ளது என்று உலக நாடுகள் பாராட்டுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய ‘அமெரிக்காவைக் காப்பாற்றுவோம்’ சட்டத்திற்கு ஆதரவாகப் பேசும் போது இந்திய தேர்தல் முறைமையைப் பாராட்டியுள்ளார். சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டத்தின் (International Election Visitors Program) கீழ் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநில தேர்தல்களை 22 நாடுகளைச் சேர்ந்த 38 பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.
“இந்திய தேர்தல்…. ஒட்டுமொத்த உலகமே கொண்டாட வேண்டிய உண்மையான ஜனநாயகத் திருவிழா…. என்னை மிகவும் கவர்ந்தது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தது. பிரம்மாண்டமானதொரு விஷயம் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது” என்று குரோஷிய நாட்டுப் பிரதிநிதி பாராட்டிக் கூறினார். “இந்திய தேர்தல் நடைமுறைகள் நிச்சயம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது” என்று மெக்சிகோ நாட்டுப் பிரதிநிதி பதிவிட்டுள்ளார். சியாரா லியோன் நாட்டுப் பிரதிநிதி, “இந்தியத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்தைப் பயன்படுத்துவது பாராட்ட வேண்டிய மகத்தான விஷயம்” என்று சொல்லியுள்ளார்.
இப்படி பலராலும் பாராட்டப்பட்ட நம்முடைய தேர்தல் நடைமுறையைத்தான் எதிர்க்கட்சிகள் இன்று களங்கப்படுத்த முனைகின்றன. ஏதோ உறுதியான சான்றுகள் உள்ளதால் அல்ல, விரக்தியினாலும் அராஜக மனப்பான்மையினாலும் இவ்வாறு செய்கின்றன. சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையை (எஸ் ஐ ஆர்) எதிர்ப்பது எதிர்க்கட்சிகளின் போலித்தனத்தையே காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியாணா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து கொண்டு பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக” செய்தியாளர் கூட்டத்தில் பரபரப்பாக குற்றம் சாட்டினார்.
அவரது குழுவினர் 20 கோடி வாக்காளர் பட்டியலை சரிபார்த்த போது அதில் 2.5 கோடி வாக்காளர்கள் முறையானவர்களாக இல்லை என்பதை கண்டுபிடித்ததாகக் கூறினார். அவர்களில் பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்குச் சீட்டு இருந்ததாகவும் , தவறான விலாசம் காட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தீவிரமாக கருத்தில் கொண்டு நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு சரிபார்ப்பை (எஸ் ஐ ஆர்) நடத்தி அதன்மூலம் அவர் சொன்ன குற்றங்களை களைய நடவடிக்கை எடுத்தபோது, அவரும் அவரது கட்சியினரும் அதை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்துகிறார்கள்.
நாட்டில் 95.40 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 13.39 கோடி வாக்காளர்களை மட்டும் சரி பார்த்தபோது அதில் 6.30 கோடி தங்கள் இருப்பிடத்தை நிரந்தரமாக மாற்றி விட்டு உள்ளார்கள். 3.01 கோடி பேர்களை காணவில்லை என்றும் 2.80 கோடி பேர்கள் இறந்து விட்டனர் என்றும் 1.02 கோடி பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை கண்டறிந்து உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியது.
இது ராகுல் காந்திக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக மேற்கு வங்கத்தில் இது போல போலி வாக்காளர்களை நீக்கியதை ‘வாக்குத்திருட்டு’ என்று வாதிடுகிறார். ஹரியாணாவில் வாக்காளர்கள் நீக்கப்படாததால் பாஜக வெற்றி; ஆனால் ஓராண்டுக்குள் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி என்று சொல்வது சரியா?
ஆனால் இந்த வாதமும் கூட தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்தபோது குப்புற விழுந்து விடுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மிக அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட ஐந்து தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது . குறைவாக நீக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. அதேபோல எஸ் ஐ ஆர் மூலம் மிக அதிகமாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஐந்து தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசும் இதே காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. மிகக் குறைவாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தொகுதிவாரியான அலசலில் கூட நீக்கப்பட்ட 27 லட்சம் வாக்காளர்கள் அந்தந்தத் தொகுதிகளில் நீக்கப்படாமல் இருந்தாலும் கூட , அவை திரிணாமுல் காங்கிரசுக்குப் போயிருந்தாலும் கூட பாஜக அவற்றையும் மீறி பெரும்பான்மை இடத்தைப் பெற்றிருக்கும் என்பதுதான் உண்மை.
நாட்டிலுள்ள பலரும் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் என்பது, பாஜகவை நேர்மையான ஜனநாயக வழியில் எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அராஜக வழியில் களங்கப்படுத்துவதே என்று கருதுகின்றனர். அரசியல் சாசனப்படி நிறுவப்பட்ட அமைப்பை எதிர்க்கட்சிகள் அவதூறு செய்வதாக 40க்கும் மேற்பட்ட முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கூர்ந்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளரான முன்னாள் செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் இந்த அராஜகவாதிகளின் போக்கைப் புரிந்து கொண்டுள்ளதால், ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வானுலகுக்கு உயர்த்துகிறார்’ என்று கடந்த வாரம் அளித்த நேர்காணலில் புகழ்ந்துள்ளார். ” மோடி போன்றதொரு சிறந்த தலைவரை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். இப்போது அவரை மட்டம் தட்ட முயற்சிகள் நடக்கின்றன. அவரால்தான் இந்தியா உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது; வலிமைமிக்க சக்தியாக கருதப்படுகிறது. அவர் மகத்தான விஷயங்களை சாதித்துள்ளார். இருந்தாலும் அவர் தோல்வி அடைந்தவர் என்றும் ஏதும் செய்யாதவர் என்றும் சொல்லி கீழே தள்ளப் பார்க்கிறார்கள். இதொரு பாணியாகவே (முன்மாதிரியாக) ஆகியுள்ளது” என்று அவர் அந்த நேர்காணலில் எச்சரித்துள்ளார்.
பிரபல ஜெர்மானிய தத்துவவியலாளரும் கலாச்சார விமர்சகருமான பிரெட்ரிக் நீட்சே அராஜகவாதிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் . ‘நீதி’, ‘சமத்துவம்’ போன்ற உயர்ந்த லட்சியங்கள் மீது அராஜகவாதிகள் மையல் கொண்டிருப்பது உயர்ந்த பண்பினால் அல்ல. மாறாக அவர்களது பலவீனம் மற்றும் தனிமனித இழப்புகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையால்தான் என்று கூறியுள்ளார்.
‘அராஜகவாதி சமுதாயத்தின் தரம் தாழ்ந்து விட்டது என்றும் ‘நீதி’ , ‘சம உரிமை’ , ‘சரியான நிலைப்பாடு’ போன்ற அழகிய விஷயங்களைப் பற்றி பேசும்போது அவன் தனது சொந்தப் பண்பாட்டின்மையின் அழுத்தத்தாலும், தான் ஏன் கஷ்டப்படுகிறோம் என்ற புரிதல் இல்லாததாலும், வாழ்க்கையில் தான் எந்த விஷயத்தில் வறுமை வயப்பட்டுள்ளோம் என்ற தெளிவின்மையாலும் தான் பேசுகிறான்’ என்று ‘சிலைகளின் அந்தி’ (Twilight of Idols) என்ற அவரது புகழ்பெற்ற நூலில் எழுதியுள்ளார். நம் புழக்கடையில் வளர்ந்துள்ள அராஜகவாதிகளுக்கு இது மிகவும் சரியாக பொருந்தி வருகிறது!
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (09.10.2026) The Opposition has no argument. It’s resorting to anarchy
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- குறிப்பு: கட்டுரையாளர், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்.
$$$