பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ் 

-கருவாபுரிச் சிறுவன்

சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் குறித்த விரிவான கட்டுரை இது. வழக்கம்போல இலக்கியச் செறிவுடன் இதனை அளித்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

கோமதியம்பிகை தியானம்:

கரத்ருத வனமால்யா ரக்த 
    ஸர்வாங்க பூஷா
நிகி ல நயன சேதோ ஹாரி 
    ரூபாக் ர்ய வேஷா
பவது பவத பீஷ்ட
   ப்ராப்தேய சை ல கன்யா
புருஷயுவதி வச் யா 
   க்ருஷ்டி நித்ய ப்ரகல்ப:

பொருள்: வனபுஷ்ப மாலையைக் கையிலேந்தியவளும், சிகப்பு நிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் திருப்பார்வையால் சகல ஜனங்களுடைய பார்வையும், அவர்களது மனதையும் ஈர்க்கும் படியான மிக அழகான தோற்றம் மற்றும் ரூபத்தோடு கூடியவளும், பக்தர்களின் கோரிக்கைகளைத் தானாகவே ஈடேற்றும் உத்தம குணத்தினை உடையவளும், ஹிமவானது புத்திரியாகிய புன்னைவன யுவதியாம் அன்னை கோமதியம்பிகை அனைவருக்கும் சகல நன்மைகளும் தந்து அருளுவாளாக. 

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள்:

தென்னகம் மட்டுமல்லாது எந்நகரத்தில் உள்ளவர்களும்  “அம்மா ஆவுடையாளே! அன்னை கோமதியே!”  என்று மனதார வாய் நிறைய கூப்பிடுபவர்களுக்கு ஓடோடிச் சென்று அருளுபவள் இந்த சங்கர கோமதியாள். 

அவர்களின் சங்கடத்தை தீர்த்து  வைப்பாள். மங்களத்தை உண்டு பண்ணுவாள். பெருங்கருணைக்கு சொந்தக்காரியவள். 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தினம் தினம் புதிய புதிய அற்புதங்களை நிகழ்த்துபவள். இவளுக்கு நிகர் இவளேயாவள்!

* படித்தும் நல்ல வேலை கிடைக்க நித்தம் வேண்டுபவர்களா…

* தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளதா… 

* வியாபாரத்தில் பணமுடக்கம் உண்டாகிறதா…  

* திருமணம் ஆகவில்லை என வருத்தப்படுபவர்களா… 

* திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லையா…  

ஒரு முறை இச்சங்கரனின் இடப்பாகத்தில் இருப்பவளின்  இல்லத்திற்கு வாருங்கள். 

மனதாலும் வாக்காலும் செயலாலும் உங்களோடு உறவாடுவாள்.

அதுவும் முடியவில்லையா…? 

அவள் இருக்கும் இடத்தைப் பார்த்து மன்றாடுங்கள். 

மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். 

 நீங்கள் விரும்பிய சகல செல்வங்களையும் அளிப்பாள். இது கண்கூடு.

இவளின் புகழ் பாடும்  நுாலினை  கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.  

பேசும் தமிழ் பிள்ளைத்தமிழ்: 

தமிழ் என்னும் பதத்தினை தன்னோடு இணைத்துக் கொண்ட நூல்  ‘பிள்ளைத்தமிழ்’. அன்னை சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்ற புலவர்கள் தாம் விரும்பும் இறைவனையோ , இறைவியையோ, தலைவனையோ குழந்தையாக பாவித்து பாடுகின்ற மரபு தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்ற இயல்புகளுள் ஒன்று.

அன்பு தருவதிலே உனைநேர்
ஆகும்ஓர் தெய்வம் உண்டோ?

என்று பாடிப்பரவுவார்  மகாகவி சுப்பிரமணிய பாரதி. அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே. 

பொதுவாகவே, குழந்தைப் பருவம் என்பது அனைவருடைய மனதினையும் கவரும். பாட்டுடைத் தலைவர்களை குழந்தையாக பாவித்து தம்முடைய அன்பு வெளிப்படுமாறு பாடும்  ‘பிள்ளைத்தமிழ்’ நூல் எல்லோருடைய மனதையும் கவர்வதாக அமையும். 

எந்தை சிவபெருமானின் மாணக்கரில் ஒருவர் அகத்தியர். அவரது  முதன்மைச் சீடர்களில்  ஒருவரான தொல்காப்பியர் அருளிய தொல்காப்பியம் தொடங்கி செம்மொழியாகிய சங்கப் பாடல்கள், நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிள்ளைத்தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுள்ளது என்பதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நன்கு அறியலாம். 

ஆசிரிய விருத்தத்தால் நூறு பாடல்களைக் கொண்டு அமைவது பிள்ளைத்தமிழ். 

பொ.யு.பி. 12 நுாற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் பெருமகனார் இரண்டாம் குலோத்துங்கனை பாட்டுடைத் தலைவனாக பாவித்து இயற்றிய  ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ நூலே முதல் பிள்ளைத்தமிழ் நுால். 

இந்நூலே ஏனைய பிள்ளைத்தமிழ் நுாற்களுக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ளது. 

ஸ்ரீமத் சிவஞான யோகிகள்  ‘திருவள்ளூர் தொட்டிக்கலை செங்கழுநீர் விநாயகர் மீது பிள்ளைத்தமிழ்’ நூல் ஒன்றை  இயற்றியுள்ளார்கள்.  அது பருவத்திற்கு ஐந்து பாடல்களைக் கொண்ட புதுமையினை உடையது. 

விநாயகரும் சிவபிரானும் ஒருவரே என்ற உண்மையை ஆன்மாக்களுக்கு உணர்த்தவும்,   சிவபெருமானின் அட்சரம் ஐந்து என்ற காரணத்தினாலும் பருவத்திற்கு ஐந்து பாடல்கள் பாடினார்கள் போலும். 

பொதுவாகவே, காப்புப் பருவத்தில் திருமால், பிரமன், இந்திரன் மற்றும் தேவாதி தேவர்களுக்கு வணக்கம் சொல்லி நூல் அமைப்பார்கள் புலவர்கள். 

ஆனால் திருவாவடுதுறை ஆதின மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய ‘ குன்றத்தூர் சேக்கிழார் பிள்ளைத்தமிழ்’ நூலில்  “திருத்தொண்டர்களாகிய அறுபத்து மூவர் காக்க…” என்று பாடி ஞானத்தமிழையும் சேர்த்து ஊட்டியிருப்பார். 

மேலும், அன்றைய ஆதினகர்த்தர் அம்பலவாண  தேசிகர் மீது இயற்றிய பிள்ளைத்தமிழ் நூலில் திருநந்தி தேவரில் தொடங்கி குருமுதல்வர் நமச்சிவாயர் வரை காப்பு செய்யுளில் வைத்து பாடியிருப்பது, சைவ சமயத்தின் மேன்மையை உணர்த்தி நிற்கிறது.

தமிழ் ஆய்வு ஒன்று 72க்கு மேற்பட்ட பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களும்  84 க்கு மேற்பட்ட ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களும் உள்ளன என  முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  பட்டியல் இட்டது,  பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியை குறிக்கிறது. 

  • பிள்ளைத்தமிழ்   ஒவ்வொன்றும் பத்துப் பத்துப் பருவங்களுடையன. முதல் ஏழு பருவங்கள் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொது. 
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின், இறுதி மூன்று பருவங்கள் சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவமாக அமையும். 
  • பெண்பாற் பிள்ளைத்தமிழாயின், இறுதி மூன்று பருவங்கள்அம்மானை, நீராடல், ஊசற் பருவங்களாய் அமையும்.

பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவ விளக்கம்:

  • (1) காப்புப் பருவம்: பிள்ளைத்தமிழ் பாடும் இடத்து இரண்டாம் மாதம்  பிள்ளையைக் காக்க என்று காத்தல் கடவுள் முதலிய தேவர்களை வணங்கி வேண்டுவது.
  • (2) செங்கீரைப் பருவம்: ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலைநிமிர்ந்து முகம் அசைய ஆடுதல். இது ஐந்தாம் மாதம்  நிகழும்.
  • (3) தாலப் பருவம்: தாலாட்டைக் கவனிக்கும் பருவம். தாலாட்டு – ஒருவகை நாவசைப்பு. தாலாட்டையேல் தாலாட்டையேல் என்னும் அடுக்கு, தாலோ, தாலேலோ, என இணைந்தும் தால் எனத் தனித்தும் மரீஇயிற்று. ஏழாம் மாதம்  நிகழ்வது. மாதம் திங்களில் நிகழும் என்றும் கூறுவர்.
  • (4) சப்பாணிப் பருவம்: இருகையொருங்கு சேர்த்துக் கொட்டும் பருவம். இது ஒன்பதாம் மாதம் நிகழ்வது.
  • (5) முத்தப் பருவம்: குழந்தை முத்தம் தருமாறு தாய் தந்தை முதலியோர் வேண்டுதல். இது பதினொன்றாம் மாதம்  நிகழ்வது.
  • (6) வருகைப் பருவம்: சிறுநடை எய்தும் பருவம். இது பதின்மூன்றாம் மாதம் நிகழ்வது. பன்னிரண்டாம் மாதம்  எனவும் கூறுவர்.
  • (7) அம்புலிப் பருவம்: வானத்திலுள்ள நிலவைக் குழந்தையுடன் விளையாடுதற்குச் செவிலித் தாயார் முதலியோர் அழைக்கின்ற பருவம். பதினைந்தாம் மாதம்  நிகழ்வது. பதினெட்டாம் மாதம் நிகழ்வது எனவும் கூறுவர்.
  • (8) அம்மானைப் பருவம்: பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடியருள வேண்டுமெனக் கூறும் பருவம்.
  • (9) நீராடற் பருவம்: பிள்ளையை நோக்கி மகளிர்கள் ஆற்று வெள்ள நீராட வேண்டிக் கூறும் பருவம்.
  • (10) ஊசற் பருவம்: குழந்தையை ஊஞ்சலிலேற்றி மகளிர் அவ் வூஞ்சலை செய்கின்ற பருவம்.

இறுதியில் உள்ள மூன்று விளையாடல்களும் ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் வரை நிகழும் செயல்களாகக் கூறப்படும்.

ஆசிரியர் குறிப்பும் சிரத்தையான சிந்தனையும்: 

கோமதியம்பிகையின் பிள்ளைத்தமிழின்  நுாலாசிரியர் முத்துவீரப்பக் கவிராயர். 

இவர் நாயன்மார்கள்,  ஆழ்வார்களைப் போலவே,  மறந்தும் புறந்தொழா மாந்தர் என்ற வாக்கிற்கு இலக்கணமானவர். அவர்களைப் போலவே, ஆவுடைய நாயகியின் திருவருளை நேரிடையாகப் பெற்றவர். அவளின் திவ்ய திருவுருவைத் தரிசித்து மகிழ்ந்தவர். 

அதனால் என்னவோ! தாயே! உன்னை கண்ட கண்களால் இனி மற்றொருவரையும் பார்க்கக் கடவேன் என விரதம் பூண்டார் கவிராயர். 

அதனால் அவரின் இமைகள் நீண்டு வளர்ந்து இருந்தது எனவும், பெரும்பாலும் ஜமீன்தார்களைப் பார்க்க வேண்டுமென்றால் இமைகளை எடுத்து பார்த்துவிட்டு மூடிக் கொள்வார் என  சமகாலத்தில் வாழ்ந்த புலவர்களின் வரலாற்றுக்  குறிப்பு  சொல்கிறது.

ஊற்றுமலை ஜமீனின் அரசவைப் புலவராக திகழ்ந்தவர். தனிப்பாடல் திரட்டுகளிலும் இவருடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 

இக்கவிராயரே, சங்கரன் கோயில் தல புராணத்தின் முன்னாறு சருக்கங்களை இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிள்ளைத்தமிழ் முழுக்க முழுக்க… தேவியின் லீலா விநோதங்களை அனுபவித்து மகிழலாம். 

 வேதாகம, புராண, திருமுறை, இதிகாசங்களை இவர் நன்கறிந்தவர் என்பதை செய்யுள் முழுக்க நன்கு படிப்பவர்கள் உணரலாம். 

திருமுறைச்  சாயல்களும் சித்தாந்த சான்றுகளும் ஊடுருவி நிற்பதைக் கண்டு ரசிக்கலாம். தமிழின் பதினாறு சுவைகளையும்  பருகலாம். 

புற்றுமண்ணின் சிறப்பினை பருவம் தோறும் உள்ள பாக்களில்  சொல்வதில் அவர் ஒருபோதும் தவறியதில்லை. 

  • புற்று மண் பிணி தீர்க்கும் நன் மருந்து
  • புற்று மண் பிறவி பிணியறுக்கும் வாள்
  • புற்று மண் பித்தம் தெளிவிக்கும்
  • புற்று மண் புத்தி தரும் 
  • புற்று மண் புண்ணித்திற்கு அச்சாரம்
  • புற்றுமண் பூர்விக சொத்து 
  • புற்றுமண்ணை பூர்வஜென்ம பலன் இருந்தால் பார்க்கலாம்

-என்பதெல்லாம் கோமதியம்பிகையைப் போற்றும்  புலவர்கள் கொண்டாடும் சித்தமான திருவார்த்தைகளாகும்.

இந்நூலின் ஆசிரியர் புளியங்குடி முத்து வீரக்கவிராயரை, முத்து வீரப்பக்கவிராயர், முத்து வீரிருப்புக்கவிராயர் என்று தமிழ் இலக்கிய உலகம் அழைக்கிறது. 

சங்கரன்கோவில் அருகே இருக்கும் நெற்குன்ற நகர் என்னும் நெல்கட்டான் செவலில் இதே திருநாமத்தினையுடைய பெரும் புலவர் ஒருவர் இருந்தார். அவரும் இவரும் ஒருவரே என்று நினைத்து குறிப்பெழுதும் பொழுது கோமதியம்பிகை இருவரும்  வேறு வேறானவர்கள் என்பதை  உணர்த்தினாள்.

முதலிலே சொன்னேன் அல்லவா! அவள் பெருங்கருணையுடையவள்.  ஏனென்றால் அவள் பேராற்றலுடையவனை தலைவனாக, பதியாக, கணவனாகப் பெற்றவள். 

பாம்பரசர்கள் அர்ச்சித்து வழிபாடு செய்து செய்து அவளின் திருவடி வண்ணமயமாக மின்னுகிறதாம்.  கவிராயர் அன்னையின்  திருவடியை தலைமேற் கொள்ள வேண்டும் என நமக்கெல்லாம் ஒரு உபாயம் சொல்கிறார். அதன் படி நாமும் அவளின் திருவடியை தலையில் சூட்டிக் கொள்வோமே.   

நாவினாற்  பரவிப்  பல்கால் 
      நனை கமழ் நறுந்தண் போது 
துாவிவீழ்ந் திறைஞ்சும் நாகச் 
     சூட்டொளிர் மணியின் சோதி 
மேவலால் பஞ்சி யூட்டி 
     விளங்கிய வண்ணம் காட்டும் 
ஆவுடை மாது செம்பொன் 
     அடித்துணை  சென்னி வைப்பாம்!

குட்டிக் கந்தபுராணம் என்னும் கந்தர் கலிவெண்பாவின் பிறப்பிடமான திருச்சீர்அலைவாய்  முருகப் பெருமானின் அருள் பெற்ற குமரகுருபர சுவாமிகள்  அருளிச்செய்த  ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ நூலை அடியொற்றி   ‘கோமதியம்பிகையின் பிள்ளைத்தமிழ்’ நூலைப் படிப்பது, பாராயணம் செய்வது  நன்று. நலம் பயக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 

பெருங்கருணையுடையவளைப் பற்றி பேசுவோமா…

இவ்வுலகினை ஈன்றெடுத்தவள் தம்பிரானாகிய சிவபெருமானை தன்னுடை பெருந் தவத்தினால் பிரியாது இருந்து கம்பை ஆற்றின் கரையில்  வழிபடும் காஞ்சிமாதேவியை  தேவர்களும் ஞானிகளும் போற்றுகிறார்கள்  அத்தகைய பெருமை மிகுந்த பதி இக்காஞ்சி மாநகர் என்கிறார் ஸ்ரீமத் சிவஞான யோகிகள். 

எம்பிராட்டி இவ்ஏழுலகு ஈன்றவள்  
தம்பிரானைத் தனித்தவத்தால் எய்திக்
கம்பையாற்றில் வழிபடு(ம்) காஞ்சி என்று(ம்)
உம்பர் போற்றும் பதியும் உடையது.

காஞ்சி மாநகருக்கு நிகரான சிறப்பினை உடையது இச்சங்கரன்கோயில். 

இவ்வம்மையைப்  போற்றிப் புகழும் புலவர் பெருமக்கள் தன் கவிதா சாமர்த்தியத்தால் பல இடங்களில் அம்மையை பிராட்டி என்ற பெருமையோடு புகழாரம் சூட்டுகிறார்கள். 

பிராட்டி என்ற சொல்லுக்கு பிரியாதவள் என்று பொருள். சிவத்தை விட்டு நீக்கமற என்றும் பிரியாமல் இருப்பவள் அவளே. 

திருக்கோயிலில் உள்ள  உற்ஸவ மூர்த்தியின் சுவாமி சிலை அருகே  அமர்ந்த அம்பிகையின் திருவுருவம் ஒன்று இருக்கும். அந்த அம்மையை  ‘பிரியாவிடையாள்’ எனச் சொல்லுவர். அதன் அருகே இருக்கும் சிறு குழந்தையை  ஸ்கந்தர் என்று கூறுவர். இவ்வுருவத்தை   ‘சோமஸ்கந்தர்’ என்பர். 

பெரும்பாலும் சிவபெருமான் கோயில்களில் இம்மூர்த்தத்தை கண்டு தரிசிக்கலாம்.   இப்பிராட்டி எள்ளளவும் சுவாமியை  விட்டும் தன் குழந்தையை விட்டும்  பிரிய மாட்டாள். அவளே  இச்சங்கரன் கோயிலில் கோமதியம்பிகை என்ற திருநாமத்தில்  தனித்துவமாக அருள் பாலிக்கிறாள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. 

பழம் பாடல் ஒன்று நான்கு திருத்தல அன்னையின் திருநாமத்தை  ஒரே  வரியில் சொல்கிறது. அது எந்தெந்த  திருத்தலம் என்பதை தெரிந்து கொள்ளலாமா… 

இலகேழ் அகிலத்தார் சொக்கர் 
    முக்தீசர் இபந்தொழுவோர்
கலை தேர் தென்காசி மதுரை 
   நெல்வேலி கருவை வந்த 
பல கேள்வர்  உள்ளீர் எம்பங்கு 
   நிற்பீர் வந்து பாதம் தொழ 
உலகே கயற்கண்ணியே வடிவே 
    எங்கள் ஒப்பனையே! 

நான்கில் நான்காகவும் , நான்கில் ஒன்றாகவும், நான்கில் எல்லாமாகவும் திகழ்பவள் தான் அன்னை மீனாட்சியம்பிகை. 

அவளின் அருள் பிரபாவத்தை  எழுத்துக்களில் எழுதிக்காட்ட  முடியுமா என்ன!

அப்பாடலை ஓரளவு பாராயணம் செய்து உய்வடைவோம்.  (சந்தி பிரிக்கப்பட்டுள்ளது) 

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் 
      தொடையின் பயனே நறைபழுத்த
   துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் 
      சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு 
     ஏற்றும் விளக்கே வளர்சிமய
   இமயப் பொருப்பில் விளையாடும் 
      இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்து நின்ற 
     ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
   ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் 
      உயிரோவியமே! மதுகரம் வாய்

மடுக்கும் குழற்காடு ஏந்தும்இள 
     வஞ்சிக் கொடியே வருகவே
    மலயத் துவசன் பெற்ற 
       பெருவாழ்வே வருக வருகவே! 

    வருகைப் பருவம்-61

அங்கயற்கண்ணியே அழகிய குழந்தையாக வடிவெடுத்து  வந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து, குமரகுருபர சுவாமிகளின்  கொஞ்சும் தமிழையும்  ரசித்து தன் கழுத்திலிருந்த முத்துமாலையை சுவாமிக்கு வழங்கினாள்  என்பது வரலாறு.  

நீங்களும் மனதாரப் படியுங்கள், முத்து மாலை கிடைக்கும். முத்துப்போன்ற குழந்தையும் அவளருளால் பெறுவீர்கள்.

அதற்கு முன்பு முத்து வீரப்பக்கவிராயர் அன்னை  கோமதியம்பிகையின் மீது பாடிய தமிழ்  சுவையை  சுவைத்து மகிழ்வோமா… 

சங்கன், பத்மன் என்னும் இரு பாம்பரசர்கள் இருவரும் சிவவிஷ்ணுக்களில் யார் பெரியவர் என்ற சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு தேவலோகம், காசி முதலான சேத்திரங்கள் வரை சென்றார்கள். 

முடிவில் தேவர்களின் குரு வியாழ பகவானின் ஆலோசனைப்படி புன்னை வனமான இங்கு  வந்து தங்கி தவம் இயற்றி அரனரி வடிவத்தை தரிசனம் செய்தார்கள். 

பல கற்ப காலத்திற்கு முன்பே இவ்வன்னை இப்புன்னை வனத்தில் பெருந் தவம் இயற்றி  அவ்வடிவத்தை தரிசித்தாள் என்கிற செய்தியை எவ்வளவு அழகுபட பொதித்து தருகிறார் பாருங்களேன். (இன்றும் இந்த ஐதீக நிகழ்வு ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கோலாகலமாக நடக்கிறது) 

சருவலோ கத்தையும் தாங்கிய அராவுலகு
    தன்னில் வளர் சங்கபத்மர்
  சைவமும் வைணமும் ஓர்ந்திருவர் தங்களில் 
      சமைய வாதம் புகன்று

மருமலர்க் கற்பகத் இறையுலகினில் சென்று
    மன்னுகுரு விடையுரைக்க 
  மற்றவர்க் கரியரனும் ஒன்றெனத் தெளிவிலா
      வன்மையை உணர்ந்து நீவிர்

உரிமையுடன் வரராசை யுற்று நற்றவமுஞற்
    றிடிலவிரு வுருவுமொன்றா
  உங்களுக்கு அறியலாம் என்றபடி அவர்தவசு
      உகந்துசெய ஒருவடிவமாய்த் 

திருவுருவு காட்டியவர் மருவிய பராசக்தி
    செங்கீரை  ஆடியருளே!
  தேன் மொய்த்த புன்னை யங் கானில் பசுங்கிள்ளை 
      செங்கீரை ஆடியருளே!     

    -செங்கீரைப் பருவம்-14 

குழந்தையை எப்படியெல்லாம் கொஞ்சி மகிழ்வோம்? இவ்வண்டத்திற்கே அன்னையான அவளை, குழந்தையாக பாவித்த கவிராயர் வருகைப் பருவத்தில்  ‘தேனே  வருக! திருவே வருக! செல்வக்கனியே வருக! அமுதே வருக! ஞானக்கதிரே வருக! புன்னை வன மானே வருக! இவ்வுலகத்தின் அன்னையே வருக’ என கொஞ்சி மகிழ்கிறார் கவிராயர். 

அவரோடு  சேர்ந்து நாமும் கொஞ்சினால் குழந்தைச் செல்வம் கிடைக்குமே . 

அடியேனுக்கு தெரிந்த அன்பர் ஒருவருவருக்கு திருமணமாகி குழந்தையில்லை எனச் சொல்லி வருத்தம் அடைந்தார்.  

இப்பாடலை தொடர்ந்து படியுங்கள் என கூறிய போது திருவருள் ஞானத்தினால் அவர் வழிபடும் நேரத்தில் இப்பாடலை படிக்க, இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். இதை உடனிருந்து கேட்ட மற்றொருவரோ இரண்டு ஆண் குழந்தைககளுக்கு தந்தையாக உள்ளார்கள். அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே! இல்லை. 

அடியேனிடம் வந்து சொன்னார்கள். அப்போது ராஜ கோபுரத்தை காண்பித்து காலத்திற்கும் நன்றியை  அங்கு செலுத்துங்கள் என கூறி அவரிடம் இருந்து விடைபெற்றேன். 

என்ன பாடலை படிக்க ஆயத்தமாகி விட்டீர்கள் போல..?. 

தேனே! வருக சீராசைத் 
     திருவே! வருக! திருநேத்திர 
  சிவசங்கரருக்கு உவகை நல்கும்
      செல்வக் கனியே! வருக விண்ணின்

ஆனே! பரவத் தவம் புரியும் 
    அமுதே! வருக குமுதவாய் 
  அன்னமே! வருக வினையிருளை 
      அவிக்கும் கிரணக் கதிர் வருக!

பானேர் மொழிப் பார்வதி வருக
    பனிமா மலையின் சேய் வருக
  பன்நாகங்கள் இரண்டும் வழி 
      பாடு புரியும் புன்னைவன

மானே! வருக வுயிரனைத்தும்
    வளர்க்கும் அன்னையே! வருக
  மன்றல் கமழும் அலர்க்குழல்கோ
       மதியே! வருக வருகவே!

        -வருகைப்பருவம்-60 

பதிப்பும் தொகுப்பும் 

கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் நுாலினை முதன்முதலில் ஊற்றுமலை சமஸ்தானம்,  இருதயாலய மருதப்ப தேவரவர்கள் துணைவியார் மீனாட்சிசுந்தர நாச்சியார் அவர்களுடைய பொருளுதவியால் 1892 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிவந்துள்ளது என தென்னிந்திய சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தார் பதிவு செய்துள்ளார்கள். 

பின்னர் அவர்களே 1959, 1968 ஆம் ஆண்டு  ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூலினை குறிப்புரையோடு வெளியீடு செய்துள்ளார்கள். 

சைவ மக்கள் யாவரும் பயனடையும் பொருட்டு,  திருவாவடுதுறை ஆதினம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக சுவாமிகளின் அருளாணையின் வண்ணம், ஆதின வித்துவான் த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நூலாராய்ச்சி , மேற்கோள் நுால்கள், குறிப்பகராதி போன்ற பகுதிகளுடன் 1971ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் அன்று நமசிவாய அச்சுக் கூடத்தில் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார்கள். 

கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் மூல நுால் மட்டும் சங்கரன் கோயில் அறுபத்து மூவர் குருபூஜை வழிபாட்டுக்குழு 1990 ஆம் ஆண்டு இலவசமாக வெளியீடு செய்துள்ளனர். 

மூல நுாலினை சங்கர நாராயண சுவாமி தேவஸ்தான வெளியீடாக 2001ஆ ம் ஆண்டு வெளிவந்துள்ளது.

விநாயகப்பெருமானின் தீவிர பக்தரான திருநெல்வேலி டவுன். இ.சங்கரன் என்னும் அன்பர் 2015 ஆம் ஆண்டு புரட்டாசி திங்கள் நவராத்திரி விழாவில் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் நூல் மூலத்தை  மட்டும்  சந்தி பிரித்து படிக்குமாறு அச்சிட்டு வெளியீடு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கரிவலம் வந்த நல்லுார் நம்பியாரூரர் அடியார்கள் திருக்கூட்டம், குகபதி பதிப்பகம் சார்பாக,  கீழவயலி ஆசிரியர் மொட்டயசாமி ஆசிரியர் அவர்களைக் கொண்டு எளியஉரையுடன், சங்கரன்கோயில் வேலப்ப தேசிகர் திருச்சன்னிதி வளாகத்தில் 2016 ஆம் ஆண்டு புரட்டாசி மூலத்தன்று தற்போதைய மதுரை ஆதின கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் திருக்கரத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 

பின்னர், சங்கரன் கோயில் சிவாச்சாரியார்களின் ஒருவரான நிவாஸ் பட்டர் அவர்களின்வேண்டுகோளினை ஏற்று  மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது.

இது தவிர அன்பர்கள் பலரும் திருமண வெளியீடு, சபை  வெளியீடு ஆகியவற்றில் திருமுறை பாராயணப் பாடல்களுடன்  தேர்ந்தெடுத்து ஒருசில பாடல்களையும் அச்சிட்டு வெளியீடு செய்வதை அடியேன் பார்த்திருக்கிறேன். 

புற்று மருந்துணரின் பொய்யா நலமருளி 
உற்றபிணி எல்லாம் ஒழித்திடுமால் - நற்றவர்கள் 
பேணுமருட் கோமதி யம்மை அருள் மருந்தாம் 
ஊணும தாம் இன்பவாழ் வுக்கு.

    -கழகப்புலவர் ப. ராமநாதன் 

விண்ணப்பமும் வேண்டுகோளும்

சங்கரன்கோயில் தலத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து நடுக்கோயில் என்னும் சங்கர நாராயண சுவாமி  சன்னிதிக்கு செல்லும் வழியில் மண்டபத் தூண்கள் இடையே,  இருபுறமும் பிரம்மாண்ட அளவில் கோமதியம்பிகையின் பிள்ளைத்தமிழின் பருவங்களை விளக்கும்  விதமாக  அப்படியே சித்திரமாக வரைந்து காட்சிப்படுத்தி இருந்தார்கள் அன்றைய பெரியோர்கள். 

அப்பணியினைச் செய்த சிவச் சீலர்களின் திருவடிக்கு என்றென்றும் வணக்கங்கள் உரித்தாகுக. 

சீர்திருத்தம், திருப்பணி  என்ற பெயரில் அந்த பிரமாண்ட ஓவியக் காட்சிகளை  அப்புறப்படுத்தி  அகற்றிய  திருக்கோயில் நிர்வாகத்திற்கு உள்ளூர் பக்தர்களே, பிரமுகர்களே ஆதரவு.  

அதை ஏன் அகற்றினீர்கள், எதனால் அவ்வாறு செய்தீர்கள்  என இன்று வரை கேட்பார் இல்லை  என்றால், அவர்களின்  தீவிர பக்தியினை இவ்விடத்தில் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

நல்லவர் ஒருவர்  உள்ளத்தில் கோமதியம்பிகை  குடிபுகுந்து மீண்டும் அதே இடத்தில் அதுபோன்ற வண்ணச்சித்திரப் படங்களை நிறுவ  என்று நாள் குறித்துள்ளாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். 

தென்காசி – விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தென்தமிழக பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் தலமான சங்கரன்கோயில்  கோமதியம்பிகைக்கும், ஆகாயத்தலமான தேவதானம்  தவம் பெற்ற நாயகிக்கும்  மட்டுமே  பிள்ளைத்தமிழ் நுால் இருப்பது தெரிய வந்துள்ளது. 

இருப்பினும் இன்றுவரை சேற்றுார் மு.ரா.அருணாச்சலக் கவிராயர் இயற்றியருளிய  ‘தவம் பெற்ற நாயகியின் பிள்ளைத்தமிழ்’ நுால் முழுமையாக  கிடைக்கவில்லை. 

திருவருள் சம்மதத்தினால் கிடைக்கும் நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

கோமதி அம்பிகை பிள்ளைத் தமிழுக்கோர்
சேம வுரைசெய்த செம்மலே! - பூமலரும்
பொன் வயலி அம்பிகை தாசாவுன் பொன்னுரையே 
என்பிறவி வேரறுக்கும் வாள். 

    -சங்கரன்கோயில் த.வேல்மணி  

நிறைவாக, 

சேற்றுார் மு.ரா.அருணாச்சலக் கவிராயர் பாடியருளிய  ‘தவம் பெற்ற நாயகியின் பிள்ளைத்தமிழில்’ இருந்து செங்கீரைப்பருவப் பாடல் ஒன்றையும், சிவஞான யோகிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவராகிய காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் பாடியருளிய  ‘சேத்திர கோவைப் பிள்ளைத்தமிழில்’ இருந்து ஒரு பாடலையும்  பாடி, இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.

உடங்கண்ணி யோவாது தாமுறை தடாகத்தி
     னுண்மலரு நீலமெல்லா(ம்)
  மொறுத்தத் தமைப்பய முறுத்துலாங் கரியமை 
        யுண்கண்களொடு பொரற்கோ 

ரிடங்கண்ணி முன்னுரு விகந்து பொன் னுருவுகந் 
    திருமகரம் வந்திருத்தா 
  லேய்ந்த விகு குழையுளும் வாய்ந்த விரு மகரமு(ம்)
      மெதிர்ந்திந்த விழிகளெதிரின்

மடங்கண் ணிலைக்களம் பெயராது பின்வாங்கி 
     வந்து நனி மாட்டிப் பொரூஉம்
  வகையினென் றுக்காயி னுந்தோல்வி வாராதுன் 
       மலர்முக மசைத்துவண்மைத்

திடங்கண்ணி மன்னர் பயில்  சேறை தலத்தம்மை 
     செங்கீரை யாடியருளே!
  சிமையமலை தருபுதல்வி யுமைய மலை யொரு முதல்வி 
       செங்கீரை யாடியருளே! 

*

ஒரு வடிவில் ஒரு பாதி செம்பவள வன்னமும்
    ஒருபாதி நீல நிறமும்
  ஒரு கையில் நீள் மழுவும் ஒரு கையில் சக்கரமும்
      ஒளிர் நாக குண்டலமுமேல்

வரு மகர குண்டலமும் அருளெனும் செந்தேன்
    மலர்ந்த செங் கமல விழியும் 
  வளர் கமல நாயகனான திரு நயனமும்
      மகிழ்ந்தகங் காநதிநிறை

தருணசந் திரசடா மெளலியும் இரத்தின நிறை 
    சம்பு நதி யம் பொன்முடியும் 
  தண்டுளப முங்கொன்றை மாலையும் காண வே
     சங்கர நாராயணன் 

கருணை யுடன் நின்றருளும் மாராசை முருகனே 
    கனிவாயின் முத்தமருளே!
  கார் வண்ணன் மருகனே கங்கை நாயகன் மதலை 
      கனிவாயின் முத்தமருளே! 

ஹர ஹர நம பார்வதி பதியே! ஹர ஹர மகா தேவா! 

சித்ச பேசா சிவ சிதம்பரம்! 

வாழ்க பாரதம்!  வளர்க மணித்திருநாடு!

$$$

Leave a comment