நீரின்றி அமையாது உலகு

-பேரா. ப.கனகசபாபதி

தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…

‘நீரின்றி அமையாது உலகு’ என்று திருக்குறள் கூறுகிறது. மனித நாகரிகம் தோன்றியது ஆற்றங்கரையில் தான். தமிழகத்தின் தொல் நாகரிகம் நொய்யல் நதிக்கரையில் இருந்ததற்கு கொடுமணலில் சான்றுகள் கிடைத்துள்ளன. தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 2,500 ஆண்டுகள் பழமையானது.

ஆறுகள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக விளங்குபவை. ஆனால் அதை மறந்து நாம் தொடர்ந்து செய்யும் தவறுகளால் ஆறுகள் பாதிக்கப்படுகின்றன. அதன் இறுதியில் நாம் தான் பாதிக்கப்படுவோம்.

மத்திய அரசு நமது நாட்டிலுள்ள ஆறுகளில் மாசுபட்டுள்ள ஆறுகளின் பட்டியலை புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது. அதில் 201 ஆறுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பத்து ஆறுகளில் தமிழகத்தில் ஓடும் பவானியும் அமராவதியும் வசிஷ்ட நதியும் பிடித்திருப்பது வருத்தமளிக்கும் உண்மை. ஆறுகளின் நீரின் தரத்தை புள்ளிகளில் நிர்ணயிக்கிறார்கள். அவ்வாறு குறிக்கப்படுவதில் 3 புள்ளிகள் இருந்தாலே அதில் குளிக்கக்கூட முடியாது. சென்னையில் ஓடும் கூவம் நதியின் புள்ளி 320 என்ற நிலையில் இருக்கிறது.

கொடுமணல் அருகே நொய்யல் நதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிறந்த வணிகம் நடைபெற்றது. ஆனால் இன்று அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் தரிசாகி விட்டது.

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இதனை இப்போதே சரி செய்யாவிட்டால், எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்தவர்கள் ஆவோம். இதனை உணர்ந்து, ஆரத்தி விழா மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சன்யாசிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஆற்றை அசுத்தப்படுத்துவதில் முதன்மையானவை நகராட்சிக் கழிவுகள். குறிப்பாக வீடுகளின் கழிவுநீரை ஆற்றில் விடுவதே நகராட்சி, மாநகராட்சிகளின் பணியாக இருக்கிறது. அதேபோல தொழிற்சாலைக் கழிவுகளையும் ஆற்றில் கலக்க விடுகிறோம். கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவது பெரும் குற்றம்.

ஊரின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும் குப்பைமேடாக ஆற்றங்கரைகள் மாறி இருக்கின்றன. இவற்றுக்கு திடக்கழிவு மேலாண்மை மூலமாக உள்ளாட்சி நிர்வாகங்கள் தீர்வு கண்டாக வேண்டும்.

இதுபோன்ற நதி ஆரத்தி நிகழ்வுகளுக்கு நகராட்சி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். தொழில் துறையினரையும் இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பொதுநல அமைப்புகள், மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், நதிநீரைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்.

அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆற்றின் இன்றியமையாமையை உணர வேண்டும். நீர்வளத் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை சார்ந்த அமைச்சர்களையும், அமராவதி ஆரத்தி போன்ற நிகழ்வுகளுக்கு துறவிகள் அழைக்க வேண்டும்.

மத்தியில் நரேந்திர மோடி பிரதமரானவுடன் கங்கை நதியைச் சீரமைக்க ‘நமாமி கங்கா’ திட்டத்தை உருவாக்கினார். கங்கை நதிப் பாதுகாப்பிற்காகவே தனி அமைச்சகத்தையும் அவர் உருவாக்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் கங்கை நதிப் புனரமைப்புகாக ரூ. 3,100 கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதனால்தான், இன்று கங்கை நதி மீண்டும் பழைய நிலையை அடைந்திருக்கிறது.

அதேபோல தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் பாதுகாக்க தனியொரு அமைச்சகத்தை உருவாக்கினால் தவறில்லை. தேவையற்ற செலவினங்களுக்குச் செலவிடப்படும் நிதியை ஆறுகளைக் காக்கப் பயன்படுத்தினால், வருங்காலம் நம்மை வாழ்த்தும்.

நதிகளைப் பாதுகாக்க ரோட்டரி அமைப்பு போன்ற பொதுநல அமைப்புகளின் உதவியுடன் செயல் திட்டத்தை அரசே உருவாக்கலாம். அந்தச் செயல்திட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் இருக்க வேண்டும்:

1. நகர்ப்புறக் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சுத்திகரித்து, தரமான தண்ணீரை மட்டுமே ஆறுகளில் விட வேண்டும்.

2. தண்ணீர் எவ்வகையிலும் மாசுபடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆறுகளில் மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும்.

3. தொழில் அமைப்புகளின் கழிவுகள் ஆபத்தானவை. தோலை ஆலைக் கழிவுகள், சாய ஆலைக் கழிவுகள், இயந்திரத் தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்  உள்ளிட்ட அனைத்து கழிவுநீரும் எந்தக் கட்டுப்பாடும் இன்று வெளியேறுவதை அரசு தடுக்க வேண்டும். முழுமையான சுத்திகரிப்புக்குப் பிறகே அவை வெளியேற்றுவதை அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

4. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை பெயரளவிற்கு மேற்கொள்ளாது, முழுமையான ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தினால், நதிக்கரைகள் மாசுபடாது.

5. ‘கங்கை கிராமம’ என்ற மாதிரி கிராம முயற்சிகளை மத்திய அரசு கங்கை மீட்பு இயக்கத்தில் செயல்படுத்தியது. அந்த மாதிரி கிராம மக்களே ஆறு மாசுபடாமல் காக்க முன்னணியில் நிற்கிறார்கள். அதே போன்ற மாதிரி கிராமங்களை தமிழகத்திலும் அமைக்கலாம்.

6. நதிக்கரைகளில் மரங்கள் வளர்ப்புக்கு கவனம் கொடுத்தால் வான்மழையை வரவழைக்கலாம்; பசுமையைப் பேணுவதுடன் பல்லுயிர்ச்சூழலையும் காப்பாற்றலாம்.

உலகில் இப்போது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பருவமழை குறைந்து வருகிறது. தவிர பனிமலைகள் உருகி பேரழிவை ஏற்படுத்துகின்றன. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் பல்லாயிரம் மக்கள் மடிந்ததை நாம் அறிவோம். ‘எல்நினோ’ பாதிப்பால் பருவமழைப் பொழிவு குறைந்து வரும் நிலையில், நாம் இப்போதே விழிப்புடன் இருந்தால் மட்டுமே, நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

கொங்குநாட்டு மக்கள் நாம் புனிதமாகக் கருதும் ஆறுகளைக் காக்க உறுதி ஏற்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சச்சரவுகளின்றி, இதனை ஓர் இயக்கமாக நாம் முன்னெடுக்க வேண்டும். இதனை அமராவதி தீப ஆரத்தி மிகச் சிறப்பாகத் தொடங்கி வைத்திருக்கிறது. நமது துறவிகள் பள்ளி. கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே நதிநீர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

$$$

Leave a comment