-ஆதிசைவன் இரா.இராம்குமார்
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை இறவாமல் காத்து நமக்களித்த பெருந்தகையாளர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது நினைவைப் போற்றுவது நம் கடன் என்கிறார் இளம் எழுத்தாளர் ஆதிசைவன் இரா.இராம்குமார். இது முதல் பகுதி…

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்
(தோற்றம்: 19.02.1855 – மறைவு: 28.04.1942)
காலம் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுக்கும். இதனை காலத்தின் ‘தெரிந்து வினையாடல்’ எனலாம்.
திருவள்ளுவர் கூறும் ‘தெரிந்து வினையாடல்’ என்பது, ஒரு செயலின் இயல்பையும், அச்செயலை மேற்கொள்ளும் மனிதனின் தகுதியையும் ஆராய்ந்து, தக்க காலத்தையும் சூழலையும் உணர்ந்து, அந்தச் செயலைச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவரிடம் அதனை ஒப்படைக்கும் நிர்வாகச் சூட்சுமமாகும்.
அதேபோல, வாழ்க்கையிலும் காலம் தன் செயலுக்குத் தகுந்த மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறது. யாருக்கு எந்தப் பொறுப்பு, எந்த வாய்ப்பு, எந்தத் தருணம் என்பதை காலம் அறிந்தே வழங்குகிறது. இது காலத்தின் சூட்சுமம்.
இதன் சாராம்சம் என்பது ‘காலத்தின் வாயிலாக இறைவன் நமக்கு கற்றுத் தரும் நிர்வாகப் பாடம்’ என்றே தோன்றுகிறது.
அவ்வகையில் சரித்திரத்தை ஆராயும் போது ஏராளமான சான்றுகள் நமக்கு காணக் கிடைக்கின்றன.
உதாரணமாக, “அருளுடையார் கையில் மட்டுமே இப்பாத்திரம் சென்று சேர வேண்டும்” என்று கலைமகளிடம் வேண்டி ‘ஆபுத்திரன்’ என்பவனால் கோமுகிப் பொய்கையில் தூக்கி எறியப்பட்ட அமுதசுரபி எனும் அட்சய பாத்திரமானது பல ஆண்டுகள் கழித்து மணிமேகலை கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ…
தில்லையில் பூட்டிய அறைக்குள் மண்ணில் புதையுண்டு கிடந்த தேவாரத் திருப்பதிகங்கள் விநாயகப் பெருமானின் திருவருளால், நம்பியாண்டார் நம்பி என்ற அடியவர் மூலம் எப்படி உலகிற்கு கிடைத்ததோ…
அதுபோலவே…
பல அந்நியப் படையெடுப்புகளாலும் நூலின் பெறுமதி தெரியாமலும் தனது கடந்த கால வரலாற்றைத் தெரிந்துகொள்ள நோக்கமில்லாமலும் தூக்கி எறியப்பட்ட ஓலைச் சுவடிகள், கேட்பாரற்று பரணில் தூங்கிக் கொண்டிருந்த ஓலைச் சுவடிகள், செல்லரித்த ஓலைச் சுவடிகள் என அனைத்தும், தமிழ் அன்னையாம் கலைமகளின் திருவருளால் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் தமிழுலகத்திற்கு வந்து சேர்ந்தது.
பிறப்பு:
“எங்கிருந்தோ வந்தார்; எண்ணாயிரத்தான் என்றார்!
உத்தமதானபுரத்தில் பிறந்தார்; உத்தமராய் வாழ்ந்தார்!
தமிழில் திளைத்தார்; தமிழாகவே வாழ்ந்தார்!
தமிழ்ச் செல்வம் திரட்டினார்; தமிழ் பொக்கிஷங்களை மீட்டார்!
அதை தமிழ் சந்ததிகளுக்கு ஈந்தார்; தமிழ்த் தாத்தா ஆனார்!”
சோழ அரசர்களால் எண்ணாயிரம் (அஷ்டஸகஸ்ரர்) பிராமணர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து இங்கே குடியமைக்கப்பட்டனர். அந்த அஷ்டஸகஸ்ர பிராமண வகுப்பில், சோழ நாட்டில், பாபநாசம் என்னும் ஊருக்கருகில், உத்தமதானபுரம் என்ற கிராமத்தில், சிவ பக்தியிலும் இசைத் துறையிலும் சிறந்து விளங்கிய குடும்பத்தில், 19.02.1855 இல் திரு. வேங்கட சுப்பையருக்கும் திருமதி சரஸ்வதி அம்மாளுக்கும் உத்தம புத்திரனாய்ப் பிறந்தார் சாமிநாதன்.
உதாரண மனிதர்:
‘இவன் தந்தை என்நோற்றான்’ என்று வியக்குமளவு நற்புத்திரராகவும்,
‘குரு சாட்சாத் பரப்பிரம்மம்’ என்று எண்ணி ஆசிரியருக்கு பணிவுடைய நன் மாணாக்கராகவும்,
‘உரைப்பது உணரும் உரவோர்’ என்பதற்கேற்ப ஆசிரியர் கூறுவதை விரைந்து கற்றுக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவராகவும்,
கற்றதன் படி வாழ்ந்து காட்டிய தகைமையாளராகவும்,
‘கற்றதனால் ஆன பயன் இறைவனடி சேர்தலே’ என்பதற்கேற்ப சிறந்த சிவபக்தி நேசராகவும்,
‘அறிவறிந்த ஆன்றமைந்த சான்றோர்’ என்ற இலக்கணத்திற்கேற்ப நல்லாசிரியர் ஆகவும்,
‘அறிவுடையார் ஆவது அறிவார்’ என்பதற்கிணங்க சமயோசித புத்தியுடையவராகவும்,
‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’ என வாழ்ந்த திருவினையாளராகவும்,
சூழ்நிலையைக் கையாள்வதில் சமர்த்தராகவும்,
‘சொல் வன்மையில்’ சிறந்தவராகவும்,
தேசத்தின் மீது மாறாத பற்றுடையவராகவும்,
‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றபடி தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் சந்ததிகளுக்காக பணி செய்த பெருந்தகையாளராகவும்,
யாவரும் எளிதில் அணுகக்கூடிய ‘ஸௌலப்யம்’ உடையவராகவும்,
நூல்களை ஆராய்ந்து அறியும் அறிவில் ‘நுண்மாண் நுழைபலம்’ மிக்கவராகவும்,
ஞானத்திற்கு விரோதமாகிய ‘ஐயம், திரிபு, மறதி’ அற்றவராகவும்,
‘கருமமே கண் ஆயினார்’ என்பதன் இலக்கணத்திற்கு ஒப்ப வாழ்ந்தவராகவும்,
பொக்கிஷங்களை மீட்டெடுத்ததில் ‘கலாச்சாரக் காப்பாளராகவும்’,
தமிழ் நூல்களை அழிவிலிருந்து காத்த ‘ரட்சகராகவும்’,
மேலும் இதன் காரணமாக சரித்திரத்தில் என்றும் அழியாத ‘ஸத்கீர்த்தி’ பெற்றவராகவும் வாழ்ந்து மறைந்தவர் உ.வே.சா. அவர்கள்.
மேற்கூறியதில் சிறிதளவும் மிகைப்படுத்தலோ அல்லது உபச்சார வார்த்தைகளோ இல்லை என்பது தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.
அருஞ்செயல்கள்:
‘என் கடன் பணி செய்து கிடப்பதுவே’ என்ற வாசகத்திற்கு உதாரணமாக அவர் வாழ்நாள் முழுவதும் ஓலைச் சுவடிகளை தேடிக் கண்டறிவதும், ஆராய்வதும், பதிப்பிப்பதும், புதுப்பிப்பதும், தான் கற்றறிந்தவற்றை மேடைகளில் பேசவும் மாணாக்கர்களுக்கு பயிற்றுவிப்பதும், தனது அனுபவம் மற்றும் தானறிந்த வரலாறுகளை நூலாக எழுதுவதும் என தமிழ்ப் பணி ஒன்றை மட்டுமே செய்து வந்தார்.
‘செயற்கரிய செய்வர் பெரியோர்’ என்ற இலக்கணப்படி வாழ்ந்து காட்டியவர் உ.வே.சா. அவர் வாழ்ந்த காலம் இந்தியாவின் பொற்காலம் அல்ல. சுதந்திர இந்தியாவும் கிடையாது. ஆங்கிலேயர் பிடியில் சிக்குண்ட காலகட்டம் அது. மாட்டு வண்டிகளே போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. தொலைத்தொடர்பு வசதி என்னவென்றே தெரியாத காலம் அது. தட்டச்சு அறிமுகமான காலம். புத்தக வடிவில் ஒரு தமிழ் நூல் கூட வெளிவந்ததில்லை; கற்பதும் கற்பிப்பதும் என எல்லாம் ஓலைச் சுவடிகளில் தான். மின் சாதன வசதிகள் எதுவும் கிடையாது; அரிக்கேன் விளக்கும் மெழுகுவர்த்தியும் தான்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் பல ஊர்களுக்குச் சென்று, பல ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அதை ஆராய்ந்து, அதன் பொருள் உணர்ந்து, அதை அச்சிலேற்றி பதிப்பிக்கவும் புதுப்பிக்கவும் செய்து, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாறாத பெருமை சேர்த்தவர் உ.வே.சா.
ஆராய்ச்சி, எழுத்து, பதிப்புப் பணிகள்:
தனது ஆராய்ச்சிப் பணியில் நேர்ந்த எந்தவிதமான தொல்லையையும் பொருட்படுத்தாமல், புகழ்மாலைக்குப் பின்னே செல்லாமல் ஏறக்குறைய ஆயிரம் சுவடிகளுக்கு மேலே சேகரித்தார். குறிப்பாக 1880 இல் தொடங்கிய சீவக சிந்தாமணி ஆராய்ச்சி வேலை 1887 இல் முடிவடைந்து, அவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அதன் அச்சுப்பதிப்பு கும்பகோணத்திலிருந்து வெளியானது. அதன் உரை ஆசிரியரான நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட உப நூல்களையும் தேடி அறிந்து, அவற்றையும் வெளியிட்டார்.
இப்படி பண்டைய நூல்களைத் தேடி ஆராய்வதும், படிப்பவர்களுக்குப் பயன்தருமாறு அதன் உரை, ஆராய்ச்சிக் குறிப்பு முதலியவற்றைச் சேர்த்து அச்சில் பதிப்பித்து வெளியிடுவதும் எளிய காரியமாக இருக்கவில்லை. அவற்றைப் பற்றி அவரே கூறுவதைக் காணலாம்:
"ஏடுகளில் இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியே இராது. ரகாரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகாத் தோன்றும். சாபம் சரபமாகத் தோன்றும். ஓரிடத்தில் சாடு என்று வந்திருந்ததை நான் சரடு என்றே பலகாலம் எண்ணியிருந்தேன்…."
"இப்படி தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை. மேலும் மேலும் உத்ஸாகமே உண்டாயிற்று. ஏதேனும் ஒரு மேற்கோளோ, ஒரு விஷயமோ, ஒரு பாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து நின்று பிறகு விளங்கினால், அதற்காக முன்பு பட்ட சிரமங்களெல்லாம் மறந்து போகும்; பின்னும் பதின்மடங்கு ஊக்கம் பிறக்கும்…."
"ஏடுகளில் இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதந்தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. ஓர் ஏட்டிற்கும் மற்றோர் ஏட்டுக்கும் இடையே உள்ள பாடபேதங்களால் அடைந்த கலக்கத்திலிருந்து மீள வழியின்றி மயங்கிய நிகழ்ச்சிகள் பல. உரைக்கு மூலமும் மூலத்திற்கு உரையும் கிடைக்காமல் பலமுறை இடர்ப் பட்டேன். மேற்கோள் எதற்காக உரையாசிரியர் காட்டுகிறார் என்று விளங்காமல் பல தடவை தயங்கினேன். ஜைன விஷயங்களில் நுணுக்கமான சில செய்திகள் விளங்காமையால் மேலே வாசிக்க முடியாமல் பல காலம் தடுமாறி நின்றேன். இலக்கணச் செய்திகளை அமைத்துக் கொள்ள வகை தெரியாமல் பலவாறு யோசித்து யோசித்துப் பல சமயங்களில் குழம்பினேன்…."
இவ்வளவு சுமைகள், வேதனைகள் இருந்தும் கூட தான் கொண்ட முயற்சியைத் தளரவிடாமல், மெய் வருத்தம் பாராமல், நோயினால் அவதிப்பட்ட காலத்திலும் எழுத்துப் பணி நின்றுவிடாமல், கண் துஞ்சாமல், தான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிப் பணி தொய்வடையாமல், பசி நோக்காமல், உணவு கிடைக்காத சில நேரங்களில் புளியம் இலையைத் தின்றும், தான் எடுத்துக் கொண்ட பணியின் காரணமாக தனக்கு நேர்ந்த அவமதிப்புகளையும் கண்டு கொள்ளாமலும், தனது ‘கருமமே கட்டளைக் கல்’ என்றும் வாழ்ந்து வந்தவர் உ.வே.சா. அவர்கள்.
அவரது அயராத உழைப்பால், மறைந்து போன அரிய நூல்கள் பல ஒவ்வொன்றாக வெளிவரலாயின. அவை:
1887 இல் சீவக சிந்தாமணி
1889 இல் பத்துப்பாட்டு
1892 இல் சிலப்பதிகாரம்
1894 இல் புறநானூறு
1898 இல் மணிமேகலை
1903 இல் ஐங்குறுநூறு
1904 இல் பதிற்றுப்பத்து
1918 இல் பரிபாடல்
1924 இல் பெருங்கதை
1937 இல் குறுந்தொகை
இது தவிர, அவர்கள் வெளியிட்ட அரிய நூல்கள்:
- தல புராணங்கள் 14,
- இலக்கண நூல்கள் 4,
- கோவைகள் 5,
- உலாக்கள் 9,
- தூதுகள் 6,
- குறவஞ்சி 1,
- கலம்பகம் 1,
- பரணிகள் 2,
- தனிப் பிரபந்த நூல்கள் 24,
- பெரிய பிரபந்த திரட்டுகள் 3,
- விருத்தம், வெண்பா, மாலை, அந்தாதி, இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, பஞ்ச ரத்தினம் என்ற பெயர்கள் கொண்ட நூல்கள் 16
-என பல அரிய நூல்களைத் தம் திருக்கரத்தால் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரது தனிச் சிறப்பு வாய்ந்த உயிரோட்டம் நிரம்பிய உரைநடையில் 21 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அவற்றில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம், தியாகராஜ செட்டியார் சரித்திரம், தனது சுயசரிதையான ‘என் சரித்திரம் ‘, நல்லுரைக் கோவை, நினைவு மஞ்சரி, சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் போன்ற படைப்புகள் காலத்தின் பொக்கிஷங்கள்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகியவற்றின் பண்பாட்டு விழுமியங்களை இந்நூல்களில் காணலாம். படிக்கும் தோறும் சுவையுடைய, எளிய தமிழ் நடையில் அமைந்த நூல்கள் இவை.
அடைந்த சிறப்புகள்:
1906 இல் அரசாங்கத்தார் உ.வே.சா. அவர்களுக்கு ‘மகாமகோபாத்யாய’ என்ற பட்டத்தை வழங்கினர்.
1912 இல் ராமநாதபுரம் அரசர் ராஜராஜேஸ்வர சேதுபதி இவருக்கு ‘தோடா’ மரியாதை செய்தார்.
1917 இல் காசி, பாரத தர்ம மண்டலத்தார் ‘திராவிட வித்யா பூஷணம்’ என்ற விருதை வழங்கினர்.
1925 இல் காமகோடி பீடாதிபதிகளான ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ‘தக்ஷிணாத்ய கலாநிதி’ என்ற புகழ் மாலை சூட்டினார்.
1932 இல் சென்னை பல்கலைக்கழகத்தார் ‘Doctor of Literature’ என்ற சிறப்பு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தார்கள்.
1935 இல் இவரது சதாபிஷேக விழாவை சர். பி.டி.இராஜன் தலைமையிலான குழு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 32 இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தது.
இவரது சதாபிஷேக நிகழ்வில் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி, உ.வே.சா. அவர்களை ‘தமிழ்த் தாத்தா’ என்று அழைத்து அவரை சிறப்பித்தார். அதுவே காலத்தின் அழியாப் பெயராக அவருக்கு விளங்கி வருகிறது.
இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 இல் இவரது நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டது.
உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் ‘உ. வே.சா. நினைவு இல்லம்’-ஆகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ருக்மணி அருண்டேல் உதவியுடன் 1943-ஆம் ஆண்டு ‘ டாக்டர் உ.வே.சாமிநாதர் நூல் நிலையம்’ சென்னை, பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
1948 இல் அன்றைய தமிழக அரசால் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்பாக அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது.
தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக உ.வே.சா. விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.
புலவர்நத்தம் என்னும் ஊர், உ.வே.சா. நினைவாக ‘சாமிநாதபுரம்’ என அவ்வூர் மக்களால் பெயர் சூட்டப்பட்டது.
அடைந்த புகழ் மொழிகள்:
"கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்
உண்ணப் பசியெழுவ தோராமல் - எண்ணியெண்ணிச்
செந்தமிழ்த் தாய்க்குச் செய்த திருத்தொண்டுக்கு
இந்நிலத் துண்டோ இணை"
-என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடியுள்ளார்.
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
-என்று மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கு மகாகவி பாரதியார் 1906-ஆம் ஆண்டு மார்ச் 17-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வாழ்த்துக் கவிதை பாடிப் போற்றினார்.
- காண்க: மகாமகோபாத்தியாயர்
தாங்கள் தமிழுக்கு ஒரு கண் என்று உ.வே.சா. அவர்களை, பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார்.
“பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் டாக்டர் ஜான்சன் இலக்கிய உலகில் என்ன உயர்நிலையில் இருந்தாரோ, அதுபோல தமிழிலக்கிய வட்டத்தில் உ.வே.சா. உயர்ந்து விளங்கினார்” என எஃப்.மொறேஸ் என்பவர் பாராட்டி எழுதியுள்ளார்.
1937-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் இவரது உரையைக் கேட்ட மகாத்மா காந்தி “இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி தான் என்னிடம் எழுகிறது” என்றார்.
1955 இல் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒரு நிகழ்வில் இவ்வாறு பேசினார்: “ஐயரவர்களின் நூல்கள் தான் தொழிலாளியாகிய என்னை தமிழ் அறிவுடையவனாகச் செய்தன. ஆனால், ஐயரின் உழைப்பை, அழியவிருந்த நூல்களுக்கு அமரத்துவம் கொடுத்த அருட் செயலை இன்று உணர்ந்தது போல முன் எப்போதும் நான் உணர்ந்ததில்லை.”
இறுதிக் காலம்:
தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான இடத்தில் வசித்திருந்து தனது புகழ்பெற்ற சுயசரிதையான ‘என் சரித்திரம்’ என்ற நூலை எழுதினார். இறுதியாக ஏப்ரல் 28, 1942 இல் அவரது புனித ஆத்மா பூதவுடலில் இருந்து பிரிந்து, வேதகிரீஸ்வரர் திருவடியில் இரண்டறக் கலந்தது.
நாம் செய்ய வேண்டிய பணி:
நம் நாட்டு வழக்கப்படி தாத்தா சொத்து பேரனுக்கு. தாத்தாவின் பெயருடையவனுக்கு பெயரன் (பேரன்) என்று பெயர். அதன்படி பார்த்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பெயர்களை நாம் ஒவ்வொருவரும் தாங்கி இந்த தமிழ்ப் பணியை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது நம் தலையாய கடமை.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் மூச்சு! என்று மார்தட்டிக் கொண்டு மட்டுமே இல்லாமல்…..
நாம் இன்று பெருமையாக பேசும் தமிழ்… நாம் இன்று படிக்கும் சங்க இலக்கியங்கள்…. இவை எல்லாம் எப்படி நமக்குக் கிடைத்தன? எப்படி இவை பாதுகாக்கப்பட்டன? என்று நாம் சிறிதாவது சிந்திக்க வேண்டும்.
பழமையான தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி காடு, கிராமம், மடங்கள் என்று அலைந்து திரிந்து, தள்ளாத வயதிலும் தளராத நெஞ்சோடு, ஒரு கள உமியில் ஒரு நெல் கிடைக்காதா என்று இரை தேடும் பறவை போல ஒவ்வொரு ஓலைச்சுவடியையும் உயிராகக் காப்பாற்றி போற்றி ஆராய்ந்து பதிப்பித்து உலகிற்கு தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரைப் பற்றியும் அவரது பணிகளைப் பற்றியும் தெரிந்து ஆராதிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
அவர் இல்லையெனில், இன்று நாம் படிக்கும் பல சங்க இலக்கியங்கள் இருளில் புதைந்திருக்கும்; நமது தமிழினத்தின் மகிமையையும் உலகம் அறியாதிருந்திருக்கும் என்பதனை நாம் உணர வேண்டாமா?
தமிழின் பொக்கிஷங்களை மீட்டெடுத்து, ஒரு மொழியின் வரலாற்றையே காப்பாற்றிய மகான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அல்லவா?
தமிழ் மிகப் பழமையானது, மிகச் சிறந்த பண்பாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்பதை நாம் துணிவுடன் சொல்வதற்கு ஆதாரத்தை அள்ளித் தந்தவர் உ.வே.சா. அவர்கள் தானே!
ஆனால் இன்று….. யார் நம் பெருமைக்கு அணி சேர்த்திருந்தாரோ அவரின் பெருமையைப் போற்றவோ, ஏற்ற மரியாதை செலுத்தவோ, ஏன் சிந்திக்கவாவது செய்கிறதா நம் தமிழ்ச் சமுதாயம்?
தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என பேசியவர்கள் எல்லாம் இன்று தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் பெரியார்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவருக்கோ நம் தாய்த் தமிழ்நாட்டில் ஒரு நினைவு மணிமண்டபம் கூட இதுவரை அமைக்கப்படவில்லையே. இதைப் பற்றி நாம் என்றாவது யோசித்தது உண்டா?
இம்மகானை நினைவுகூர நாம் தவறினால் பெரும் பழிக்கு ஆளாவது மட்டுமல்ல…. தமிழ் அன்னை கூட நம்மை ஆசீர்வதிக்க மட்டாளே?
ஆகவே தமிழ்த் தாத்தாவுக்கென ஒரு நினைவு மணிமண்டபம் அமைப்பது நம் கடமை. இது வெறும் ஒரு கட்டிடம் சார்ந்த விஷயம் அல்ல… இது நாம் செலுத்தும் நன்றிக்கடன் எனக் கருத வேண்டும்.
தமிழ் வாழும் வரை தமிழ்த் தாத்தாவின் பெயரும் வாழ வகை செய்ய வேண்டும்.
ஆகவே தமிழர்களாகிய நாம், ஒன்றிணைய வேண்டும். இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இதற்காக செயல்பட வேண்டும்.
175 வது ஜெயந்தி தினம்:
தமிழ்த் தாத்தா உவேசா அவர்களின் 175 ஆவது ஜெயந்தி தினம் 2030 ஆம் ஆண்டு வருகிறது. அதற்குள்ளாக அவருக்கென்று ஒரு நினைவு மணிமண்டபமானது அவரது ஆத்மா சாந்தி அடைந்த திருக்கழுக்குன்றத்தில் அமைக்க வேண்டும்.
அவர் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும். சென்னை மாநிலக் கல்லூரிக்கு அவரது திருநாமத்தைச் சூட்ட வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அவர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரை வைக்க வேண்டும். அவரது பெயரில் தமிழ் ஆராய்ச்சிப் பணி நடக்க வேண்டும். தமிழ்ப் பொக்கிஷங்களைக் காப்பாற்றியவரை நாம் நினைவில் இருத்தி போற்றிட வேண்டும்.
தத்தளிக்கும் தமிழ்ச் சமுதாயம் கரையேறுவதற்கு, நமது முன்னோர்கள் காட்டிய பாதையில் செல்வதற்கு, திசை காட்டும் கருவியாக, கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்.
(தொடர்கிறது)
$$$