திராவிட இயக்க வரலாறு: பகுதி -5

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 5…

5. திராவிடர் கழகத்தின் தோற்றம்

சுயமரியாதை இயக்கம், பெரும்பாலும் காங்கிரஸையும் சுயராஜ்யக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டது. 1926 மற்றும் 1930 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காக நாயக்கர் பிரசாரம் மேற்கொண்டார். 1930களின் ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார்.

ஜூலை 1934 இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது; இதன் பின்னால் மீண்டும் நீதிக்கட்சியின் ஆதரவாளரானார். சரிந்திருந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் மீண்டது. அக்டோபர் 29, 1939 அன்று சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் காங்கிரஸ் அரசு பதவி விலகியது. இந்திய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்து, அகில இந்திய காங்கிரஸ் எடுத்த முடிவின்படி இந்தப் பதவி விலகல் நடந்தது. சென்னை மாகாணம் ஆளுனரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பிப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய ஹிந்திக் கல்வி ஆணையைத் திரும்பப்பெற்றார்.

ஈ வே.ராமசாமி நாயக்கரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி, திராவிட நாடு கோரும் பிரிவினைக் கொள்கையினை முன் வைத்தது. கட்சியின் 14வது வருடாந்திர மாநாட்டில் இந்தியாவிலிருந்து தமிழர்களுக்கு  தனிநாட்டைப் பிரித்து, பிரிட்டீஷ் அரசின் இந்தியச் செயலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தனி நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1939 இல் பெரியார்  ‘தனி இறையாண்மையுடைய கூட்டாட்சிக் குடியரசாக’  திராவிட நாடு உருவாக வேண்டுமென்று திராவிட நாடு மாநாடொன்றைக் கூட்டினார். 1938 முதல்  ‘தமிழருக்கெனத் தனித் தமிழ்நாடு’ கோரி வந்த அவர், டிசம்பர் 17, 1939 இல்  ‘திராவிடருக்கெனத் தனி திராவிட நாடு’  என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

ஆகஸ்ட் 1940 இல் நடைபெற்ற கட்சியின் 15வது வருடாந்திர மாநாட்டிலும் தனி திராவிட நாடு கொள்கை முன்வைக்கப்பட்டது. பிரிட்டீஷ் அரசின் போர் முயற்சிகளுக்கு முழு ஆதரவு கொடுத்து, அந்த ஆதரவைத் தெரிவித்து ஆகஸ்ட் 10, 1941இல் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். 

கிரிப்சின் தூதுக்குழு இந்தியா வந்தபோது, ஈ.வே.ராமசாமி நாயக்கர், டபிள்யூ பி.ஏ.சௌந்திரபாண்டியன் நாடார், என்.ஆர்.சாமியப்ப முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு மார்ச் 30, 1942 இல் கிரிப்சைச் சந்தித்து,  இந்தியாவைப் பிரித்து திராவிடர்களுக்கென்று ஒரு தனி திராவிட நாடு அமைக்குமாறு கோரியது. ஆனால் கிரிப்சு  “ஒரு சட்டமன்றத் தீர்மானம் அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே அன்றி சுயேச்சையாக இப்படியொரு பிரிவினை சாத்தியம் இல்லை” என்று கூறி விட்டார்.

இக்காலகட்டத்தில் இரு முறை (1940 மற்றும் 1942 இல்) ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் நீதிக்கட்சி அரசு அமைய வாய்ப்பு உருவானது. ஆனால் இரு முறையும் அவர் அரசமைக்க மறுத்துவிட்டார்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் நீதிக்கட்சியினை  தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிக் கொண்டார். அவரது தலைமையில் அது சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டும் செயல்பட்டது.  “சமூக சுயமரியாதையை அடைந்து விட்டால், அரசியல் சுய மரியாதைத் தானாகக் கிட்டி விடும்” என்பது அவரது வாதமாக இருந்தது.

ஈ.வே.ரா.வின் ஆதிக்கத்தால் நீதிக்கட்சி, பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு  மற்றும்  இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 1942–44 காலகட்டத்தில் இந்து சமய நூல்களான பெரிய புராணம் மற்றும் கம் பராமாயணம் இரண்டையும் நீதிக்கட்சியினர் கடுமையாகத் தாக்கி பிரசாரம் செய்தனர். இதனால் ஹிந்தி எதிர்ப்புக்காக நீதிக்கட்சியுடன் கைகோர்த்திருந்த சைவத் தமிழறிஞர்களும், ஆன்மிக வாதிகளும்  இவர் கட்சிக்குத் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

அதுவரை மாணவர்களிடையே பெரிதாகச் செல்வாக்கு பெற்றிராத  நீதிக்கட்சி  சி.என்.அண்ணாதுரையின்  முயற்சிகளால் மாணவர் ஆதரவைப் பெறலாயிற்று.  ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத சில தலைவர்கள் கட்சியில் ஒரு போட்டிக் குழுவை உருவாக்கி அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்க முயன்றனர்.  

இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலர்:  பி. பாலசுப்பிரமணியன் (சண்டே அப்சர்வர் இதழின் ஆசிரியர்), ஆர்.கே.சண்முகம் செட்டியார்,   பி. டி. ராஜன், ஏ. பி. பாட்ரோ, சி.எல். நரசிம்ம முதலியார், தாமோதரன் நாயுடு, கே. சி. சுப்ரமணிய செட்டியார்.

ஈ.வே.ரா.ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே பலப்பரீட்சை மூண்டது. டிசம்பர் 27, 1943 இல் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய ஈ.வே.ரா. எதிர்ப்புக் குழு 1940 க்குப் பின் அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லையென்று குற்றம் சாட்டியது. அவர்களது விமர்சனத்தை எதிர்கொள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் கட்சியின் வருடாந்திர மாநாட்டைக் கூட்டினார்.

ஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் ஈ.வே.ரா.ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) ஈ.வே.ரா. எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி, “சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாதவை; அவை தங்களைக் கட்டுப்படுத்தாது” என்று அறிவித்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஈ.வே ராமசாமி நாயக்கர் கட்சியின் விதிமுறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல; அதனால் அவருக்குத் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பதே.

ஆனால் சேலம் மாநாட்டில் ஈ.வே.ரா.  ஆதரவு கோஷ்டியினருக்கு அதிக ஆதரவு கிடைத்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர். அம்மாநாட்டில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • கட்சி உறுப்பினர்கள் பிரிட்டீஷ் அரசு அளித்த விருதுகளையும், பதவிகளையும் ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும்.
  • அவர்கள் தங்களது அரசுப் பதவிகளிலிருந்து விலக வேண்டும்.
  • அவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை எடுத்துவிட வேண்டும்.
  • நீதிக்கட்சி இனி ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரால் அழைக்கப்படும்.

-இத்தீர்மானங்கள் நிறைவேற முக்கியக் காரணமாக இருந்த அண்ணாதுரை, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரானார். நீதிக்கட்சியின் உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் திராவிடர் கழகத்தில் இணைந்து விட்டனர்.

பி.டி ராஜன், மணப்பாறை திருமலைசாமி, பி.பாலசுப்பிரமணியன் போன்றோர் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் முதலில் பி.ராமச்சந்திர ரெட்டி தலைமையிலும், பின் பி.டி.ராஜன் தலைமையிலும் செயல்பட்டனர். உண்மையான  நீதிக்கட்சி தாங்கள் தான் என்றும் அறிவித்தனர்.

1952 சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் அமைச்சரவை உருவானது. அதில் சில எதிர்க்கட்சிகளையும் ராஜாஜி இணைத்துக் கொண்டு ஆட்சியை வலுவானதாக ஆக்கினார். அப்படி வந்த தலைவர்கள் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோருக்கு பதவிகள் தரப்பட்டன.

நீதிக்கட்சி வேட்பாளர்களில் பி.டி.ராஜன் மட்டும் வெற்றி பெற்றார். இந்தக் கட்சி அதன் பின்னால் எந்தத் தேர்தல்களிலும் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடவில்லை. 1968 இல் தனது பொன்விழா ஆண்டைச் சென்னையில் கொண்டாடிய இக்கட்சி பி.டி.ராஜனின் மரணத்துக்குப் பின்னர் முற்றிலும் செயலற்றுப் போய்விட்டது.

கட்சி அமைப்பு:

நீதிக்கட்சி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு, முறையான சட்ட அமைப்பின்றி செயல்பட்டது. அக்டோபர் 18, 1917 இல் தி இந்து   நாளிதழில் வெளியான அதன் கொள்கை அறிக்கையே கட்சியின் சட்டதிட்டங்களைப் பட்டியிலிட்ட ஒரே ஆவணம். அக்டோபர் 1917 இல் கட்சியின் நிர்வாகிகள் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆற்காடு ஏ.ராமசாமி முதலியார் கட்சியின் முதல் பொதுச்செயலராகப் பணியாற்றினார். 1920 இல் கட்சியின் சட்ட அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 19, 1925 இல் கட்சியின் 9வது வருடாந்திர மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாக அதன் சட்ட அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சென்னை நகரம் நீதிக்கட்சியின் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. மவுன்ட் சாலையில் அமைந்திருந்த கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அலுவலகத்தைத் தவிர சென்னையில் வேறுபல கிளை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. 1917 இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

சென்னையைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் அவற்றுக்கு அவ்வப்போது போய் வந்தனர். நீதிக்கட்சிக்கு ஒரு தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய அரசியல் கட்சிகளைப் போன்று செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தலைமைக் குறடா நியமிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சி சட்ட அமைப்பின் 6வது பிரிவின் படி கட்சித் தலைவரே அனைத்து பிராமணரல்லாதோர் அமைப்புகள் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தன்னிகரற்ற தலைவராக இருந்தார்.

பிரிவு 14, உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பொறுப்புகளை வரையறுத்ததோடு, செயற்குழு முடிவுகளைச் செயலாக்கும் பொறுப்பைப் பொதுச் செயலாளருக்கு அளித்தது. 21வது பிரிவு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநில மாநாடு கூட்டப்பட வேண்டுமென்றது. ஆனால் கட்சி செயல்பட்ட 27 ஆண்டுகளில் 16 வருடாந்திர மாநாடுகளே கூட்டப்பட்டன.

மார்ச் 19, 1923 இல் வெளியான ஒரு கேலிப்படம், முதல் நீதிக்கட்சி அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுகிறது. மதுவிலக்கு, ஆந்திரப் பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் துறை வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை மக்களின் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் என்று குறிப்பிடுகிறது.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது நிறைவேற்றிய பல சட்டங்கள்,  நீடித்த தாக்கம் கொண்டிருந்தன. அவற்றுள் சில தற்காலம் வரை நடைமுறையில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் நீதிக்கட்சி அரசு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டதன் மூலம் இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர்  ஜாதிவாரியான இட ஒதுக்கீடு பொதுவான ஒன்றாகிவிட்டது.

டிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பல இந்துக் கோயில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் ஒரு தனி அமைப்பின் கீழ் கொண்டு வந்தது. இச்சட்டமே சென்னை மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் இயற்றப்பட்டுள்ள பல இந்து அறநிலைய  மற்றும் அறக்கட்டளை சட்டங்களுக்கு முன்னோடியாகும்.

1919 இந்திய அரசுச் சட்டம், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. முதல் நீதிக்கட்சி அரசு ஏப்ரல் 1, 1921 இல் இத்தடையை விலக்கியது. தேர்தலில் வாக்களிக்கவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பாலின அடிப்படையில் அமைந்த தகுதிகள் நீக்கப்பட்டன. இதன்மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1926 இல் சென்னை சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்படுவதற்கு வழி வகுத்தது.

இந்திய சட்டமன்றங்களில் ஒரு பெண் உறுப்பினராவது இதுவே முதல் முறை. இவை தவிர 1922 இல் சட்டமன்றத்தில் பட்டியல் பிரிவினரைக் குறிக்க ‘பஞ்சமர்’,  ‘பறையர்’ போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாதென்றும்  ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் நீதிக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

நீதிக்கட்சி கொண்டு வந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம், 1920 ஆண், பெண் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது; தொடக்கக் கல்விக்கு நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்தது. குழந்தைகளைப் பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பெற்றோரைத் தண்டிக்கவும் வழிவகுத்தது. 1934 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகச் சட்டம், 1923 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவை விரிவு படுத்தியதுடன் அதில் பல்வேறு தரப்பினர் இடம்பெறவும் வழிவகுத்தது.

 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்திற்கும்,  எம்.ஜி.ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.

1922 இல் இயற்றப்பட்டு 1935 இல் திருத்தப்பட்ட, தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிச் சட்டம், தொழிற்சாலைகளைத் தொடங்க கடனுதவி வழங்கியது. மலபார் குத்தகைச் சட்டம், 1931 குத்தகைக்காரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியது.

(தொடர்கிறது)

$$$

Leave a comment