ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)

-கிருஷ்ண  கோபால்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி,  அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர்கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.

  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய துணை பொதுச் செயலாளரான திரு. கிருஷ்ண  கோபால் அவர்கள்  ‘இண்டியா ஃபவுண்டேஷன்’ என்ற யூ-டியூப் சேனலுக்கு 2022 செப்டம்பரில் அளித்த நேர்காணல் இது. கேள்வியாளர் தில்லி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருக்கும் திரு ஸ்வதேஷ் சிங். தமிழில் வழங்கி இருப்பவர்: திரு. திருநின்றவூர் ரவிகுமார்.

கேள்வி: ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்பு, தேசப் பிரிவினை, அதன் துயரத்தையும் இழப்பையும் மீறி இந்தியா தன்னுடைய சாரமான ஒற்றுமையையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதற்கான காரணிகள் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்?

கிருஷ்ண கோபால்: நம் பாரத வரலாற்றில், எண்ணற்ற அரசுகள் வெவ்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததைப் பார்க்கிறோம். இருந்தாலும் அத்தனை அரசர்களுக்கும் மக்களுக்கும் உள்ளுணர்வில் நாம் அனைவரும் பரந்த பாரத தேசத்தின் ஒரு பகுதி தான் என்ற விஷயம் பதிந்திருப்பதைப் பார்க்கிறோம். இதனால்தான் பாரதம் ஒன்றாக இருக்கிறது. வடக்கே இமயம் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலும், குஜராத் கடலோரத்திலிருந்து மேற்கே பாகிஸ்தான், பரசுராம குண்டத்திலிருந்து (கேரளா) கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரையிலும் இந்த பரந்த நிலப்பரப்பு முழுவதும் மேற்சொன்ன கருத்து, பண்பாடு, தத்துவம் ஆழமாகப் பதிந்துள்ளது. அரசியல் ஒற்றுமையையும் கடந்து, இந்த அடிப்படையான ஒற்றுமை உணர்வு மக்களிடையே உள்ளது. அதனால்தான் சர்தார் வல்லபாய் பட்டேல் 560 மன்னர் ஆட்சிகளையும் (சமஸ்தானங்கள்) பாரதத்துடன் ஒருங்கிணைக்க முடிந்தது.

கேள்வி: ஒற்றுமைக்காகவே ‘ஹிந்து- முஸ்லிம்- கிறிஸ்துவ- சீக்கியர்கள் எல்லோரும் சகோதரர்களே’ என்ற கோஷம் முன்வைக்கப்படுகிறது. வேற்றுமை இருக்கிறது என்பதால் தானே ஒற்றுமை ஏற்படுத்த இந்த கோஷம் எழுகிறது?

கிருஷ்ண கோபால்: இந்த நாட்டை சுற்றிப் பார்க்கும் எவருக்கும், நிலவியல், மொழி வேறுபாடு இருப்பது தெரியும். உணவு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என பாரதத்தின் நிறம் மாறிக்கொண்டே இருப்பதை பயணத்தில் பார்க்கலாம். ஆனால் இவையெல்லாம் புற வேற்றுமைகள். உள்ளுக்குள் ஒற்றுமைக்கான பொதுவான அடிப்படையான தத்துவம் உள்ளது. ஒரே மாதிரியான வாழ்வியல் பண்புகள் – அது பக்தியாக இருக்கலாம், பூமியை தாயாக மதிப்பதாக இருக்கலாம், வினைக் கொள்கையாக இருக்கலாம், பிறப்பு மறுபிறப்பாக இருக்கலாம், முக்தி- நிர்வாணத்தைத் தேடுவதாக இருக்கலாம்… இது போன்ற இன்ன பலவும், வங்காள மொழி ஒரிய மொழியென – பாரத மொழிகள் எல்லாவற்றிலும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது. ஏனென்றால் எல்லா மொழிகளிலும் இந்த ஒற்றுமை தத்துவம் முன்வைக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட கோஷங்கள் பின்னாளில் வந்தவை. அவை அரசியல் கோஷங்கள்.

கேள்வி: நீங்கள் சொன்ன அடிப்படை ஒற்றுமையை இக்கால சமுதாயத்தினர் எப்படி புரிந்து முடியும்? அதை வெகு ஜனங்களிடையே கொண்டு செல்வது எப்படி?

கிருஷ்ண கோபால்: ஏற்கனவே அடித்தளத்தில் ஒற்றுமை உள்ளது. நம்மைச் சுற்றி வெளிப்படையாகத் தெரியும் வேற்றுமைகளை மீறி உள்ளே பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும். அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்கள் வடபாரதத்திற்குச் சென்றால் அங்கு அவர்களைப் போல அதே பக்தி உணர்வுடன் கிருஷ்ணர் வழிபடப்படுவதைக் காண்பார்கள். கேரளத்தின் மொழி மலையாளம், ஆனால் அந்த மொழியில் பக்திப் பாடல்களில் வெளிப்படுவதும் அதே பக்தி தான். அஸ்ஸாம், வங்க மொழிக் கவிஞர்களின் பாடல்களிலும் எழுத்தாளர்களின் எழுத்திலும் அதே உணர்வுதான் வெளிப்படுகிறது. இதுதான் அடிப்படையான ஒற்றுமை. மக்கள் புறவேறுபாடுகளுக்கு அப்பால் உள்ள இந்த ஒற்றுமையைத் தெரிந்துகொள்ள பயணங்களை அதிகமாக மேற்கொள்ள வேண்டும்; கற்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவரின் கருத்துக்களும் பஞ்சாப் குருநானக் தேவ் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கலாம். இதுதான் அடிப்படையான ஒற்றுமை.

கேள்வி: பதினைந்தாம்  நூற்றாண்டில் வாழ்ந்த அஸ்ஸாமைச் சேர்ந்த சங்கர தேவர், எட்டாம் நூற்றாண்டில் கேரளத்தில் பிறந்து சாரதா பீடத்தை நிறுவிய ஆதிசங்கரர் என பல நூற்றாண்டுகளாக பல மகான்கள் இந்த உணர்வை- இந்தியாவின் ஒற்றுமையை பிரசாரம் செய்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் பிறப்பால் முஸ்லிமான தாஜ் பிபீ கிருஷ்ண பக்தியால் ரக்ஸானாக மாறி கலந்துறவாடி ஒன்றுபடும் பண்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். கலாச்சாரங்களின் கலவையாக இந்தியா இருந்தபோதிலும் அதிர்ச்சிகரமான பிரிவினை ஏற்பட்டது ஏன்? நீங்கள் சொன்ன அடிப்படை ஒற்றுமை என்னவானது?

கிருஷ்ண கோபால்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  இஸ்லாமிய படையெடுப்பு ஒரு குறிப்பிட்ட கருத்தியலைப் பரப்ப ஏற்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் வெற்றி பெற்றதும் அவர்களது கருத்தியலைப் பரப்ப நம்முடைய மதத்தைத் தாக்கினார்கள்; கோயில்களைத் தகர்த்தார்கள்; நம்முடைய வழிபாட்டுத் தலங்களை, கருத்தியலைத் தாக்கினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை இம்மண்ணில் இருந்த மக்கள் அதற்கு முன்பு எதிர்கொண்டதில்லை.

அறிவார்ந்த பாரத  சமுதாயத்தினர் இஸ்லாமிய ஆதிக்கத்தின் கீழ் ஏழெட்டு நூற்றாண்டுகள் இருந்த போதிலும் தங்கள் கருத்துக்களையும் சமுதாயத்தையும் பாதுகாக்க தொடர்ந்து போராடினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நடந்த உலகின் மற்ற பகுதிகளில் உள்ளூர் மக்கள் அடக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களின் கருத்தியலை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பாரதம் மட்டுமே விதிவிலக்காக இருந்தது. எனவே பாரத மக்கள் தங்கள் மதத்தை, பண்பாட்டை, சிந்தனையை, சமுதாயத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போராடினார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் பிரிட்டிஷார் வந்தபோது, அவர்களது இரு நூற்றாண்டு கால ஆதிக்கத்தின்போது, அவர்கள் பாரதத்தின் அடிப்படையான ஒற்றுமையை புத்திசாலித்தனமாகத் தாக்கினார்கள். பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமையை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் தகர்க்க முடியவில்லை. ஏனெனில் அது அரசியல் ரீதியாக வந்த ஒற்றுமை அல்ல. ஹிந்துக்கள் அரசர்களாக இல்லாதபோதும், புனித யாத்திரைகள் தொடர்ந்து நடந்து வந்தன. ஹிந்துக்களுக்கு ராணுவம் இல்லை;  அவர்களது கோயில்கள் தகர்க்கப் பட்டன. ஆனால் மக்களிடம் பகவத் கீதையும் ராமாயணமும் இருந்தன. அவர்களது நம்பிக்கையை தகர்க்க முடியவில்லை. எனவே தான், பிரிட்டிஷார் சமுதாயங்களிடையே பிளவை ஏற்படுத்தினர். அது ஆழமாகச் சென்று பிரிவினையாக முடிந்தது. 

கேள்வி: இன்று சமுதாயங்களுடைய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. உண்மையை சொல்லப்போனால் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இரண்டு சமுதாயங்களும் தனித்தனியானவை என்றால், ஒற்றுமை ஏற்பட்டாலும் அவை மேம்போக்கானதாகவே இருக்கும் இல்லையா? அல்லது நாம் அரசியல் களத்தில் மட்டுமே ஒற்றுமையை எதிர்பார்க்கிறோமா?

கிருஷ்ண கோபால்: பாரதத்தில் வாழும் சனாதன சமுதாயம் இந்த ஒற்றுமைக்கு பெரிய காரணம். பாரதத்தில் நூற்றுக்கணக்கான சமூகப் பிரிவினரும் பல்வேறு வகையான சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் பலவிதமான பாரம்பரியத்தைக் கொண்டவர்களும் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். இந்த ஒற்றுமைக்கான அடிப்படையான காரணத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பாரதத்தில் காலங்களைக் கடந்து நிற்கும் அந்தச் சிந்தனை, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சிந்தனை,  ‘சர்வே பவந்து சுகினஹ’ என்ற வாக்கியத்தின் மூலம் வெளிப்படுகிறது. நம்முடைய சிந்தனையை ஏற்றுக் கொண்ட மக்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லோரின் – அவர் எந்த நம்பிக்கை முறையைக் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் –  மகிழ்ச்சியை வேண்டுவதே மேற்சொன்ன பிரார்த்தனை. இந்தத் தத்துவம் பாகிஸ்தான், சீனாவிலுள்ள மக்கள் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியையும் பிரார்த்திக்கிறது.

இரண்டாவதாக, பாரதத்தின் சனாதன சமுதாயம் வேதகாலம் தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேறொரு கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அது, நம்முடைய நம்பிக்கைகளை, கருத்துக்களை, சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத வேறு கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் கொண்டவர்கள் இருக்கலாம் என்பதே.   எனவே இன்னொரு கருத்து கொண்டவர்களும் நல்லவர்களே என்ற கொள்கை ரிக் வேத பாரம்பரியத்தில் உள்ளது.  ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்று சொன்ன வேதரிஷி, இதன்மூலம் மாறுபட்ட கோணங்களும் இருக்கலாம் என்கிறார்.   எந்த கருத்திலும் ஏதோ நல்லது இருக்கலாம் என்கிறார். கண்மூடித்தனமாக விலக்க வேண்டாம் என்கிறார். இதுவே எண்ணற்ற வேறுபாடுகள் இடையே ஒற்றுமை காண்பதற்கான மந்திரம். வேறு வார்த்தைகளில் சொன்னால், இதுவே வேற்றுமையில் ஒற்றுமை.

எனவே அடித்தளமாக நம்மிடம் இரண்டு கொள்கைகள் உள்ளன. ஒன்று, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வது. இரண்டு, எந்தக் கருத்தையும் மதிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனது. மொழி, சூழல், உணவு, உடை, கருத்துக்கள் என்றுள்ள வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையையும் நல்லிணக்கணத்தையும் ஏற்படுத்துவதற்கான தாரக மந்திரம் இதுதான்.

கேள்வி: தாரா சிக்கோ (மொகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த புதல்வர்- சமரச நோக்கம் கொண்டவர்; ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டவர்) பற்றியும் அதேபோல இந்திய தத்துவங்களையும் சிந்தனைகளையும் புரிந்துகொள்ள முயற்சித்த பல இஸ்லாமிய சாதுக்களை பற்றியும் நீங்கள் நிறைய பேசியும் எழுதியும் உள்ளீர்கள். சுதந்திரத்துக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டீஷாரால் முன்னெடுக்கப்பட்ட புதுவிதமான அரசியலைப் பற்றிப் பேசுவோம். 1905 இல் பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை மதரீதியாக பிரித்தது. 1906இல் முஸ்லிம் லீக் உருவானது. 1909 இல் முஸ்லிம்களுக்கென தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அது அவர்களது தனி அடையாளத்தையும் தேசியத்தையும் கோர வழி செய்தது. அவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்; கிராமங்களில் மற்ற சமூகத்தினரின் மரபுகளையும் பழக்கங்களையும் பின்பற்றியவர்கள். ஆனால், சில பத்தாண்டுகளிலேயே இதெல்லாம் மாறி தேசப் பிரிவினை ஏற்பட்டது. இன்று அதே விஷயங்கள் – பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், தனித்தனி அடையாளங்கள் – மீண்டும் முளைத்து வருகின்றன. இதை எப்படி கையாள்வது?

கிருஷ்ண கோபால்: பிரிட்டிஷார் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொண்டனர். பாரதம் ஒன்றுபட்டு இருந்தால் அவர்களது ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டனர். அதனால் அவர்கள் ஹிந்து- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். முஸ்லிம் ஆக்கிரமிப்பின் போது பல்வேறு தளங்களில் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் பாரத இசையில் ஈர்க்கப்பட்டனர். முஸ்லிம் கவாலி பாடல்கள் பிரபலமடைந்தன. முஸ்லிம்கள் தர்காக்களை வணங்கினர். தாஜியா போன்றவர்கள்  உருவாகினார்கள். பல முஸ்லிம்கள் பாரசீக, அரேபிய மொழிக்கு ஹிந்து சமய நூல்களை மொழிபெயர்த்தனர். இது ஐந்தாறு நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

பிரிட்டீஷார் தங்கள் ஆதிக்கம் தொடர வேண்டுமானால் இந்த இணைப்பை உடைக்க வேண்டியது அவசியம் என்று புரிந்து கொண்டனர். எனவே முஸ்லிம் சமூகத்தினருக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுத்து அவர்களை தனிமைப்படுத்த முயற்சித்தனர். வங்காளத்தை முஸ்லிம் வங்காளம் – ஹிந்து வங்காளம் என்று பிரிக்கும் சதித் திட்டத்துடன் பிரிட்டீஷார் தான் முஸ்லிம் லீக்கை உருவாக்கினார்கள்.

அதன் பிறகே மெதுவாக, பாரதத்தில் இருந்த முஸ்லிம் சமூகத்தினர் தங்கள் வேர்களில் இருந்து விலகத் தொடங்கினர். தேசப் பிரிவினைக்கான திட்டமும் உருவானது. ஆனால் பிரிவினையால் பிரச்னை தீரவில்லை; ஏராளமான முஸ்லிம்கள் பாரதத்திலேயே தங்கிவிட்டனர். ஆரம்பத்தில் ஜின்னா ஹிந்து பெரும்பான்மையினருக்கு இடையே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று கேட்டார். அந்த அச்சம் இப்போதும் இருக்கிறது. எனவே ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் மனதில், புத்தியில், உணர்வில் மாற்றம் வர வேண்டும். அதுதான் வழி.

கேள்வி: இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25 முதல் 30 வரை உள்ளவற்றில் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்திய அரசியல் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாப்பதில் இருந்து சிறுபான்மையினரை தாஜா செய்வதாக வளர்ந்துள்ளது. இது இந்திய ஒற்றுமையை எவ்விதம் பாதிக்கும்?

கிருஷ்ண கோபால்: சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை கிடைத்துள்ளது. ஓட்டுக்கு அதிக மதிப்பு உள்ளது. சில அரசியல் கட்சியினர் மொத்தமாக ஓட்டுக்களைப் பெறுவதற்கான வழியை யோசித்தார்கள். அதற்காக சில வார்த்தைகளை உருவாக்கினார்கள்.  ‘சிறுபான்மையினர்’ என்பது அதில் ஒரு சொல். இந்தச் சொல் அந்நிய கண்டுபிடிப்பு. ஐரோப்பாவில் உருவானது. அங்கு இந்த சொல்லுக்கு, அந்த நாட்டைச் சாராத வேறு எங்கிருந்தோ ஏதோ காரணத்திற்காக அந்த நாட்டில் வந்து இருக்கும் சிறு குழு என்று அர்த்தம். அந்த நாட்டையோ அந்த இனத்தையோ சாராத மக்கள் என்று பொருள்.

ஆனால் பாரதத்தில் முஸ்லிம்கள் பெரிய சமுதாயத்தினர். சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள்தொகையில் அவர்கள் சுமார் 12-13 சதவீதத்தினர். அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது. இங்கு பெரும்பாலான ஹிந்துவாக இருந்து முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள் தான். தங்கள் மத நம்பிக்கையை மாற்றிக் கொண்டதால் மட்டுமே அவர்கள் சிறுபான்மையினராக ஆகி விடுவார்களா? ஆனால் ஒட்டுமொத்தமாக ஓட்டுக்களைப் பெறுவதற்காக அவர்களுக்கு சலுகைகளைக் கொடுத்து அவர்களை தனியாகவே வைத்திருக்கிறார்கள். பிரிட்டீஷார் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க ஏற்படுத்திய  ‘பெரும்பான்மையினர்- சிறுபான்மையினர்’ என்ற கொள்கை அவர்கள் போன பிறகு  முடிவு பெற்றிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. அதன் விளைவுகளை நாம் இப்பொழுது எதிர்கொண்டு வருகிறோம்.

கேள்வி: இந்த ஒற்றுமை ஏற்பட இப்பொழுது எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகிறது?

கிருஷ்ண கோபால்: பாரத அரசு குடியுரிமையை வழங்குகிறது. குடியுரிமை பெற்ற ஒவ்வொரு தனிநபரும் அரசியல் சாசனத்தின்படி எல்லாம் உரிமையும் பெற்றவர்கள் ஆகிறார்கள். ஆனால், நீங்கள் தேசமாக வேண்டுமானால் உங்கள் மனோபாவம் மாற வேண்டும். குடியுரிமை என்பது அரசியல் சாசனத்தின் படி உங்களுக்கு சில உரிமைகளைத் தருவது. தேசியம் என்பது உங்கள் கடமைகளைத் தீர்மானிக்கிறது.

நீங்கள் தேசியவாதியாக ஆனவுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தேசிய பாரம்பரியத்துடன் நீங்கள் இணைந்து விடுவீர்கள். இந்த தேசத்தின் மகிழ்ச்சியும் துயரமும் உங்களுடையதாக உணர்வீர்கள். இந்த தேசத்தின் வரலாறும் புவியியலும் உங்களுடையதாக உணர்வீர்கள். எனவே தேசியம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக சமமானதாக ஆக வேண்டும்.

இந்த தேசத்தின் சுக துக்கங்கள், எதிரி யார், நண்பன் யார் என்பதெல்லாம் பொதுவாகிவிடும். குடிமக்கள் எல்லோரும் இந்த தேசிய உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி. பாரதத்திற்காக பல்வேறு ஏவுகணைகளை, ஆயுதங்களை உருவாக்கியவர். அவர் அதற்கு ஆகாஷ், நாக், திரிசூல் என்றெல்லாம் பெயரிட்டார். அந்தப் பெயர்கள் எல்லாம் தேசிய உணர்வை வெளிப்படுத்துபவை.

நம் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இந்த தேசத்தின் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நம் கோயில்களை இடித்த, மக்களை துயரத்தில் ஆழ்த்திய,  ஜிஸியா வரி (இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதாலேயே மற்றவர்கள்  மீது விதிக்கப்பட்ட வரி) விதித்த, எண்ணற்ற துன்பத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்திய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றோடு தங்களை பிணைத்துக் கொள்ளக் கூடாது. ஆக்கிரமிப்பாளர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் எப்படி அவர்கள் தங்களை தேசியவாதி என்று கூற முடியும்?

கேள்வி: கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக ஒற்றுமை என்பது மதச்சார்பின்மையை மையப்படுத்தியே பேசப்படுகிறது. ஹிந்து சமுதாயம் இயல்பாகவே மதச்சார்பற்ற சமுதாயம். ஆனால் அரசியலிலும் சில சமூகங்களிலும் மதச்சார்பின்மை என்பது பொதுவானதாக, சமமானதாகப் பின்பற்றப்படுவதில்லை. பிரதமரும் தனது சுதந்திர தின உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா பொற்காலத்தை அடையும் என்று பேசியுள்ளார். நீங்கள் வளமான இந்தியாவை- சமர்த்த பாரதம்- என்ற கனவை முன் வைக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் மத நல்லிணக்கத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அதன் வடிவம் என்ன? அதை எப்படி முன்னெடுக்க போகிறீர்கள்?

கிருஷ்ண கோபால்: இரண்டு விஷயங்களை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதல் விஷயம், சிறுபான்மையினருக்கு நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்வது பற்றி. இது அவர்கள் நலன் கருதி செய்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் விளைவுகள் எப்பொழுதும் நன்மையைத் தராது. எடுத்துக்காட்டாக,  சிறுபான்மையினரின் பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவித்தொகை வழங்குகிறோம். ஏழைப் பிள்ளைகளுக்கு அதைத் தருவது சரியானதும் கூட. 

ஆனால் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். அவர்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறார்கள். அதே வகுப்பில் வேறு பத்து ஏழை மாணவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்பதால் கல்வி உதவித்தொகை மறுக்கப்படுகிறது. இது அவர்களிடையே முரணை ஏற்படுத்துகிறது. அந்த பத்து மாணவர்கள் மனதில் – நம் வீட்டின் நிலை அவர்களது நிலையை விட மோசமாக இருக்கிறது என்றாலும் நமக்கு ஏன் உதவி கிடைக்கவில்லை  என்று – கேள்வியை எழுப்புகிறது.

இதுபோன்ற ஒரு பக்கச் சாய்வான உதவிகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சமுதாயத்தில் வேற்றுமையை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே நிதி மற்றும் இதர உதவிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் என்றில்லாமல், அனைவருக்கும் பொதுவானதாக வழங்கப்பட வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் இப்போதைய பாரத அரசு மத வேறுபாடு பார்க்காமல் எல்லா ஏழை மக்களுக்கும் சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள் பெற்றிட உதவி வருவதைக் கூறலாம்.

தேவைப்படுவோருக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் சமூகத்தில் ஏழ்மை அதிகம் இருந்தால் இயல்பாகவே அவர்கள் அதிகம் பெறுவார்கள். தேவைப்படும் இடங்களில் வங்கிகள் தொடங்கப்பட வேண்டும். தொழில் கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். 

இந்த தேசம் நம்முடையது. இதுவரை நடந்தது போல, பெரும்பான்மை – சிறுபான்மையெனப் பிளவுபடுத்தக் கூடாது. எல்லா குடிமக்களையும் சமமாக பார்க்க வேண்டும்; மத அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது. இது அரசியல் சாசன சபையில் சொல்லப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அரசியல் சாசன அவையில் இருந்தவர்களும் அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களுக்கும் இந்த தீர்க்கமான பார்வை இருந்தது. அதை நாம் நனவாக்க வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒன்றாகப் பார்ப்பதன் மூலமே அது சாத்தியமாகும். வறுமையை ஒழிக்க சமுதாயத்தில் உள்ள ஏழைகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் கருத்தில் கொள்வது கூடாது.

கேள்வி: கடந்த  ஐம்பதாண்டுகளாக ஒட்டுமொத்த சமுதாயத்தை மையப்படுத்தியே நீங்கள் பணி செய்து வருகிறீர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சமத்துவத்தை நோக்கி ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. சகோதரத்துவம் என்ற விஷயம் பற்றி, ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் அந்த இலக்கை நோக்கி பயணிப்பது எப்படி?

கிருஷ்ண கோபால்: அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமான உரிமையை, சுதந்திரத்தைத் தந்துள்ளது. நீங்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்; அங்கு வசிக்கலாம்; கல்வி கற்கலாம்; நீதியைப் பெறலாம்; வேலை செய்யலாம்; வியாபாரம் செய்யலாம்; நிலம் வாங்கலாம்; தேர்தலில் வேட்பாளராக நிற்கலாம்; ஓட்டுப் போடலாம். எல்லோருக்கும் இந்த உரிமைகள் உள்ளன. அரசியல் சாசனத்தின்படி நீதிமன்றங்கள் அனைவருக்கும் சமம். ஆனால் இதனாலெல்லாம் சகோதரத்துவம் வந்து விடாது. அரசியல் சாசனம் உங்களுக்கு உரிமைகளைக் கொடுக்கலாம்.  ஆனால் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு வேறு விஷயங்கள் செய்யப்பட வேண்டும்.

கடந்த 700-900 ஆண்டு கால வரலாறு மக்கள் மனதில் சில நினைவுகளை ஆழமாகச் செதுக்கியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களை நம்முடைய நாயகர்களாக, முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது. இதற்கேற்ப நம்முடைய உளநிலை மாற வேண்டும். சிலர்,  நம் கோயில்களை இடித்தவர்களை, ஜிசியா வரி விதித்தவர்களை, கொடுங்கோலர்களை தங்கள் தலைவர்களாகக் கருதுகின்றனர். படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களுடன் சில சமூகத்தினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு செய்தால் சகோதரத்துவம் வளராது. எனவே இந்த தேசத்தில் வாழ்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டைச் சீரழித்தவர்களின் வரலாற்றோடு தங்களைப் பொருத்திக் கொள்ளாமல் அதிலிருந்து விலகி வருவதுதான்.

இரண்டாவதாக, நான் ஏற்கனவே சொன்னது போல, இந்த உலகில் எண்ணற்ற நம்பிக்கைகளும் அதைச் சார்ந்த பிரிவுகளும் இருக்கலாம். பாரதத்தின்  ‘சனாதன’ கருத்தியல் சொல்வதைப் போல, எல்லோருக்கும் சமமான மரியாதை இருக்க வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து நம்பிக்கைகளையும் மதிப்பது அனைவரது மகிழ்ச்சிக்காக பிரார்த்திப்பது என்ற பாரதிய சிந்தனை இதுதான்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு பாரதீயனும் இந்த இரண்டு கருத்துகளைத் தான் கொண்டு செல்கிறான். அது அமெரிக்காவோ, கனடாவோ, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ அல்லது உலகின் எந்த பகுதியாக இருந்தாலும், அந்த மண்ணின் மைந்தர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கிறான். அந்த மக்களின் மகிழ்ச்சிக்குப் பிரார்த்திக்கிறான். அவன் தனது பிரார்த்தனையில்  ‘சர்வே பூதானு சுகினஹ’என்று கூறுகிறான். இந்த இரண்டு விஷயங்கள் எல்லா மக்களிடமும் வந்துவிட்டால் பிறகு சகோதரத்துவ உணர்வைக் கொண்டு வருவது சுலபம்.

நாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் போராடி உள்ளோம். அப்போது சமுதாயம் கொதிநிலையில் இருந்தது; ஏற்ற இறக்கங்களும் துன்பங்களும் துயரங்களும் இருந்தன. ஆனால் இன்று நாம் சுதந்திரமாக உள்ளோம். சுதந்திர பாரதம் என்றால் முன்பிருந்த உயர்ந்த நிலையை மனதில் நிறுத்தி,  வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவ ஒளியில் முன்னோக்கிப் பயணிப்பதாகும்.

பல்வேறு மரக்கட்டைகளை ஒரு கயிற்றால் இறுக்கிக் கட்டி இருப்பதை போன்றதே வேற்றுமையில் ஒற்றுமை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது பாதி மட்டுமே உண்மை. இதை மரத்தின் உதாரணத்தைக் கொண்டு பார்க்கலாம். அந்த மரத்தின் கிளைகள் பல திசைகளில் உயர்ந்தும் விரிந்தும் பரவி இருக்கின்றன. ஆனால், அதன் வேர் ஒன்றுதான். கிளைகள் வேறுபட்டாலும் ஒற்றுமை வேரில் இருக்கிறது என்பதே பாரதீயக் கண்ணோட்டம். முரண்பாடுகள் எழலாம் ஆனால் இந்த அடிப்படை ஒற்றுமையை பார்க்கத் தெரிந்தால், வேறுபாடுகளும் போராட்டங்களும் முடிந்துவிடும். 

இதுதான், பலவற்றிலும்  ஒன்றைக் காண்பது. பாரதத்தின் அடிப்படையான தத்துவம். வேறுபாடுகளிடையே  ‘ஒருமை’ காணத் தொடங்கினால் அதுவே எல்லா விதமான பொறாமைகளையும் வேறுபாடுகளையும் மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து விடும். ஒற்றுமையில் வல்லமை உள்ளது. ஒற்றுமைக் கண்ணோட்டம் தான் மோதல்களை, பிரச்னைகளைத் தீர்க்கும்.

$$$

One thought on “ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)

  1. சிறு பாண்மையினர் பெரும் பான்மையினர், ஒழிக்கப் பட்டு, அனைவரும் ஒன்றே! பொருளாதார நிலையில் மட்டுமே உண்மை நிலையை கண்டு அறிந்து,பொருளாதார உச்சத்தில் இப்ப உள்ள கிரீம் லேயர் மக்கள் அரசின் சலுகை களை தள்ளி வைப்பதில்லை ! இதனால், பொருளாதாரத்தில் நலிவுற்ற உண்மையான மக்களுக்கு ,அவர்கள் ,பெரும் பான்மை சமூகத்தில் உள்ள ஒரே காரணத்தால் நிராகரிக்க படுவதில் நியாயம் இல்லை. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியார் கூற்றுக்கு இணங்க பொருளாதாரத்தில் பின் தங்கிய எவராகினும் , எம் மத ஜாதி உட்பிரிவு இன மக்களின் நிலைப் பாட்டை உணர்ந்து அவர்களுக்கு மட்டுமே அரசு உதவிப் போ ய்ச் சேர வேண்டும்.

    Like

Leave a reply to Pandian M Cancel reply