இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்

-ப.ஜீவானந்தம்

திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள்  ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

இந்தப் பாரினைக் குலுக்கிய பாரதத் துறவி; துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரத மணித்திருநாடே தான் என்று உருவகித்து வாழ்ந்த முழுமையான தேசபக்த துறவி; நவீன இந்தியாவின் ஞானாசிரியர்.

இந்திய ஆன்மிக ஞானமும், மேற்கு நாடுகளின் அறிவியலும் இணைந்து உறவாடி  ஒளிவிட்ட கூட்டுமேதை; ‘எம்மதமும் சம்மதம்’ என்ற பொதுநெறிப் பெரியார்; ஏழை எளிய மக்களுக்காகக் காலம் முழுவதும் இதய ரத்தம் பெருக்கிய கருணைக்கடல்; தீர்க்கதரிசிகளில் தீர்க்கதரிசி,  பெருநாவலர்களில் பெருநாவலர்.  துறவி உடையில் திகழ்ந்த புரட்சிவேள்.

இந்திய மண்ணில் சோஷலிசக் கருத்தை வரவேற்ற முதல்வர்.  பேச்சில், நடையில், பார்வையில் வீராதி வீரர்;  காட்டுத் தீ; கர்ஜிக்கும் சிங்கம்; ‘கர்மத்தில் அகர்மத்தைக் கண்டவர்; இருபதாம் நூற்றாண்டைக் காட்டி மறைந்த மானுடன்.

– இவர் தான் சுவாமி விவேகானந்தர்..

விவேகானந்த ஜோதி:

“விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்து, 1902-ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார்.  ஆயினும் அவர் ஆயிரம் ஆண்டுகளில் வாழ வேண்டிய வாழ்க்கையை, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளில் வாழ்ந்துவிட்டுச் சென்று விட்டார்” என்று ஓர் அறிஞர் கூறிய சொல், அட்சரம் லட்சம் பெறும்.

மணித்துளிகளில் நாட்களையும் நாட்களில் ஆண்டுகளையும் திணித்து வாழ்ந்த விவேகானந்த அடிகளின் வாழ்க்கை – பாரததிற்கும் உலகிற்கும் காட்டிய வெளிச்சம் கொஞ்சமா என்ன? அந்த ஒளிவிளக்கில் ஒரு அகப்பை கூட மொண்டு கொள்ளாத ஒளி விளக்கு புதிய இந்தியாவில் உண்டா?

ரவீந்தரநாத் தாகூர், அரவிந்தர், காந்தியடிகள், மகாகவி பாரதியார், டாக்டர் ராதாகிருஷ்ணன் – எல்லோரும் விவேகானந்த ஜோதியிடம் ஒளி பெற்றிருக்கிறார்கள்.

ஆனானப்பட்ட குருமூர்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே, விவேகானந்தரைக் கண்டால், ‘சிவ தரிசனம் அல்லது நாராயண தரிசனம் பெற்றேன்’ என்று சொல்வார்..

வந்தார் – கண்டார் – வென்றார்!

தெற்கே வள்ளலார், வடக்கே பரமஹம்சர் ஆகியோர் இருவரும் சென்ற நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த ஒப்பற்ற பொதுநெறிச் சான்றோர்கள்; சமரச சன்மார்க்கத்தில் திளைத்த ‘மனிதத் தெய்வங்கள்’. பரமஹம்சரின் முதல் மாணவர் விவேகானந்த அடிகள்.

இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் பெற்று நின்ற நரேந்திரர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஆட்பட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவரை உலக நன்மைக்காகவும் ஆன்ம விடுதலைக்காகவும் துறவு பூணச் செய்தார்;  விவேகானந்தர் ஆனார்.

பரமஹம்ச தேவர் அகண்ட சச்சிதானந்ததில் மூழ்கி, ‘மகா சமாதி’ அடைந்த பின்னர், இளஞ்சீடர்கள் யாவரும் ஒன்று கூடி விவேகானந்தரைத் தலைவராகக் கொண்டனர்.

அவர்களுக்காக விவேகானந்த அடிகள், பாராநகர் என்ற இடத்தில் ஒரு மடம் நிறுவினார்.  அந்த மடத்தில் இளந்துறவிகள், இந்து மதத்தின் சமயக் கோட்பாடுகள், விஞ்ஞான ஆராய்ச்சி, தேச வரலாறு, சமுதாய ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பயின்றார்கள்.

‘தன் மனதில் கிளர்ந்து நின்ற உயர்ந்த நோக்கம் நிறைவேறும் பொருட்டு, மடத்திலிருந்தும் வெளியேற வேண்டும்’ என்று அடிகள் உணர்ந்தார்.

“ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலும், சஞ்சரிக்கும் துறவியிடமும் எந்த மாசும் படிவதில்லை” என்று சொல்வார்கள்.

சுவாமி விவேகானந்தர் பாராநகர் மடத்தைவிட்டு வெளியேறினார்.  சுமார் ஐந்து ஆண்டுகள் இமயம் முதல் குமரி வரை தேச சஞ்சாரம் செய்தார்.

இந்தத் தீர்த்த யாத்திரையில் அவர் பல புண்ணியத் திருத்தலங்களுக்குச் சென்றார்; நாடு நகரங்களைக் கண்டார்; ஆள்வார் மன்னர், மைசூர் அரசத் போன்றவர்களையும், பல்வேறு பண்டிதர்களையும் பாமர மக்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும் மகா பண்டிதராகவும், தேசபக்தப் பெருங்கடலாகவும் விளங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகருடன் பத்து நாட்கள் தங்கி, தேச முன்னேற்றத்திற்கு உரிய பல்வேறு கருத்துக்கள் குறித்து உரையாடினார்.  இவ்வாறு இந்தியாவைத் தெரிந்த, இந்திய மக்களை நன்கு தெரிந்த துறவியானார் விவேகானந்தர்.

அவர் பாரதத் தாயின் திருவடியான குமரிமுனைக்குச் சென்றார்; அங்கு தியானம் செய்தார். குமரிமுனையில் அவர், பத்ரிகாசிரமத்திலிருந்து குமரி வரை விரிந்து பரந்திருக்கும் இந்தியா முழுவதையும் ஒரே வீச்சில் நினைத்தார்; பல்வேறு மக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பழக்க வழக்கங்கள் – இத்தனை வேறுபாடுகளுக்கிடையில் காணப்படும் ஓர் உறுதியான தேச ஒற்றுமையைக் கண்டார்.  ‘இந்தியாவின் ஆன்மிகம் மேல்நாட்டிற்கும், மேல்நாட்டின் உலகியல் அறிவு இந்தியாவிற்கும் தேவை’ என்று உணர்ந்தார்.

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வசமயப் பேரவையில், இந்துமதத்தின் பிரதிநிதியாகச் செல்வதற்கு அடிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. விவேகானந்தரின் இந்த வெளிநாட்டுப் பயணத்திற்கு, சென்னையின் பங்கே பெரும் பங்காக இருந்தது.

அவர் அமெரிக்கா சென்று, சிகாகோ சர்வசமயப் பேரவையில் பங்குகொண்டார். அங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எல்லோரும், “சீமான்களே, சீமாட்டிகளே!” என்று தங்கள் சொற்பொழிவைத் தொடங்கிய போது – நமது இந்தியத் துறவி ஒருவர் மட்டும் ‘கணீர்’ என்ற குரலில், “அமெரிக்க  நாட்டுச் சகோதரிகளே! சகோதரர்களே!” என்று தன் சொற்பொழிவைத் தொடங்கியது, அமெரிக்காவையே ஒரு குலுக்குக் குலுக்கியது.

‘உலகம் அனைத்தும் ஒரே குடும்பம்’ என்ற மனப் பக்குவத்தைப் பாராட்டும் வகையில், “சகோதரிகளே! சகோதரர்களே!” என்ற அந்த இரண்டு சொற்களும் – சுவாமி விவேகானந்தருக்கு அமெரிக்காவையே வென்று தந்தன.

விவேகானந்தர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் திக்விஜயம் செய்து, பாரதத்தின் ஞானஒளியைப் பாய்ச்சினார்.  அந்த நாடுகளில் அவர் பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கங்களை விளக்கிக் கூறினார்.  இந்து மத சாராம்சங்களை, அவர் கோணத்தில் – அவர் பாணியில் – விளக்கியருளினார்.  பாரதத்தின் பெருமையை எட்டுத் திக்கும் பறையறைந்த நாவலர் நன்மக்களின் முதல்வராக விளங்கினார்.

அதே போன்று அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தாய்நாடு திரும்பியதும், மேலைநாடுகளில் கிடைத்த புதிய அறிவோடும், அனுபவத்தோடும், நமது பாரத நாட்டின் சகோதர சகோதரிகள் இந்த உலகில் சிறந்து விளங்குவதற்கு எந்த எந்தக் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ – அவற்றுக்கு அழுத்தம் கொடுத்து, அறிவுறுத்தி வழி காட்டினார்..

ராமகிருஷ்ண மடத்தின் நோக்கங்கள்:

சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளிலும் சீடர்கள் பலரைப் பெற்றார்; நமது நாட்டிலும் பல இடங்களில் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தினார்.

அவர் தமிழ்நாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவில், ‘உருவ வழிபாட்டை விட உயிர் வழிபாடே சிறந்தது’ என்று வலியுறுத்தினார்.

‘அருட்பெருஞ்சோதி’ வள்ளலாரும் விவேகானந்த அடிகளும் காலம் முழுவதும், “மக்கள் வழிபாடே கடவுள் வழிபாடு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள்; செய்தார்க்ள.

எனவே சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடத்தில் பின்வரும் நோக்கங்களை முக்கியமாக நடைமுறையில் கொண்டுவந்தார்:

ப.ஜீவானந்தம்

1. வெள்ளம், பஞ்சம்,  பூகம்பம், கொள்ளை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்தல்.

2.  மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தொழிற்சாலைகள், குருகுலங்கள், கல்வி நிறுவனங்கள் அமைத்தல்.

3.  உலகம் முழுவதும் ‘ஒன்றே குலம்’ என்பதை உணர்த்துதல்.

நமது குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், “ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் செல்வாக்குக்கு முக்கிய காரணம் அதன் சமூகநலப் பணிகள்” என்று கூறியது, இங்கு குறிப்பிடத்தக்கது.

விவேகானந்த அடிகள் 1902 ஜூலை 4-ஆம் நாள் மகாசமாதி அடைந்தார்.  அதுவரையில் அந்த ஞானப் பெரும்பிழம்பு – மிருக நிலையிலுள்ள மனிதனை மனிதனாக்கவும், மனிதனைத் தெய்வநிலைக்கு  உயர்த்தவும், பரமாச்சாரியாராக்கவும், மக்களை எழுச்சி பெற்றவர்களாக்கவும், அற்புதமான அமைப்பாளராக்கவும் – அரும்பெரும் பணி புரிந்தார்.

“உலக வரலாற்றில் கௌதம புத்தருக்கு நிகராம கர்மயோகி இல்லை” என்று, உறுதியாகக் கூறியவர் விவேகானந்தர்.

“நீ எந்த மதத்தைச் சேர்ந்தவனாக வேண்டுமானாலும் இரு, அல்லது எந்த மதத்தையும் சேராதவனாகயும் இரு.  ஆத்திகனாக இரு, அல்லது நாத்திகனாக இரு – கவலையில்லை.  கௌதம புத்தரைப் போல் எல்லாவற்றையும் துறந்து, இதய ரத்தம் சிந்தி, ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்குப் புறப்படு.  அதுதான் இன்று தேவை” என்று, நெஞ்சுருக முழங்கிய மகா வள்ளல் விவேகானந்தர்..

விவேகானந்தர் சொன்னதில் சில துளிகள்:

 ‘பாரத நாட்டில் நாம் உயர்ந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்’ என்பதை, முழுமூச்சான குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தருளியவர் விவேகானந்தப் பெருமான்.

அவர் மனிதன், மதம், கடவுள், வழிபாடு ஆகியவைப் பற்றி அருளிய சில மணிவாசகங்கள் பின்வருவன:

1.  இந்தியாவுக்கு இஸ்லாமிய உடம்பும் வேதாந்த மூளையும் தேவை.

2.  மிருகநிலையில் இருக்கும் மனிதனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.

3.  மனிதன் இயற்கையை வெல்வதற்காகப் பிறந்திருக்கிறானே தவிர, இயற்கையின் வழியில் செல்வதற்குப் பிறக்கவில்லை.

4.  கடவுள் மனிதனாகிவிட்டார்;  மனிதன் மறுபடியும் கடவுளாகக் கூடும்.

5.  உலகம் என்பது ஓர் உடற்பயிற்சிக்கூடம்.  அதில் நம்மை நாம் வலிமை படைத்தவர்களாக்கிக் கொள்வதற்காக வந்ததிருக்கிறோம்.

6.  கடவுள் நம்பிக்கையில்லாதவனை ‘நாத்திகன்’ என்று பழைய மதங்கள் கூறின.  தன்னம்பிக்கை இல்லாதவனை ‘நாத்திகன்’ என்று  இன்றைய புதிய மதம் கூறுகிறது.

7.  உங்கள் முப்பத்து முக்கோடி புராண தெய்வங்களிடமும், மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் மற்ற தெய்வங்களிடமும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தும், உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு விமோசனம் இல்லை. (ஒரு தனி மனிதனோ, அல்லது தனிநாடோ தன்னம்பிக்கை இழந்து விடுமானால், அது செத்து சுண்ணாம்பாவது உறுதி)

8.  எனது நாட்டில் ஒரே ஒரு நாய் உணவில்லாமல் பட்டினி  இருந்தாலும், அதற்கு உணவு கிடைக்க வழி காண்பது தான்  என் மதமாகும்.

9.  உண்மைக்காக நாம் எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் நாம் உண்மையைத் துறக்கக் கூடாது.

10.  உன்னுடைய முக்தியை மட்டும் நீ தேடிக்கொள்ள முயன்றால் உனக்கு நரகம் தான் கிடைக்கும்.

11.  ஓ பாரத நாடே! உனது அமைப்பு எல்லையற்ற உலகத் தாயின் பிரதிபலிப்பு என்பதை மறவாதே… தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அறிவிலிகள், ஏழைகள்,  கல்வியறிவற்றவர்கள்,  சக்கிலியர், தோட்டிகள் ஆகியவர்கள் எல்லோரும் உனது சதையும் ரத்தமுமான உன்னுடைய உடன்பிறப்புக்கள் என்பதை மறவாதே!

“ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன், என் உயிர்” என்று முழங்கு! “இந்தியாவின் தெய்வங்களெல்லாம் என் தெய்வங்கள், இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் இளமைப் பருவத்தின் தோட்டம், என் முதுமைப் பருவத்தின் காசி க்ஷேத்திரம்” என்று சொல்!

12.  இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பாரத நாட்டையே கடவுளாக வணங்கினால் போதும், வேறு கடவுள் வேண்டாம்.

13.  இந்தியாவின் கதிமோட்சம் – ஒவ்வொரு இந்தியனும் தனது ஆற்றலை உணர்வதிலும், தன்னிடம் தெய்வசக்தி இருக்கிறது என்பதை உணர்வதிலும் இருக்கிறது.

14.  பாரதத் தாயை இனி யாரும் தடுக்க முடியாது.  இனி அவள் தூங்கப் போவதில்லை.  அந்நிய சக்திகள் எதுவும் அவளை அடிமைப்படுத்த முடியாது.  அளவற்ற வலிமையுடைய அந்த மகாதேவி விழித்தெழுந்துவிட்டாள்!

15.  சோறு!  சோறு! இங்கு எனக்குச் சோறு தர முடியாத கடவுள், சொர்கத்தில் எனக்கு நித்திய இன்பம் தருவார் என்பதை நான் நம்பவே மாட்டேன்.

ரவீந்திரநாத் தாகூர் கூறினார்:  “இந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்.  அவரிடம் எல்லாமே ஆக்கப் பூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை.”

இறுதியாக, “தன்னை அமுக்குகிற சூழ்நிலைகளின் கீழ் ஓர் உயிர் காட்டுகிற மலர்ச்சியும், வளர்ச்சியும்தான் வாழ்க்கை.   நான் முதிர்ச்சி அடையுந்தோறும்  எப்பொருளும் எனது மனிதத் தன்மையில்  அடங்கிக் கிடக்கிறதென்று எனக்கு மேன்மேலும் தோன்றுகிறது. இது தான் எனது புதிய தத்துவச் செய்தி.”

நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர்
தொ.ஆ: பெ.சு மணி, வானதி பதிப்பகம், 1974.

$$$

Leave a comment