சிவகளிப் பேரலை – 64

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

64. மனமே சிவனுக்குச் செருப்பு

.

வக்ஷஸ்தான மந்தகஸ்ய கடினாபஸ்மார ஸம்மர்னம்

பூப்ருத்பர்யடனம் நமத்ஸுரசி’ர: கோடீர ஸங்கர்ஷணம்/

கர்மேம் ம்ருதுலஸ்ய தாவக பதத்வந்த்வஸ்ய கௌரீபதே

மச்சேதோ மணிபாதுகா விஹரண ச’ம்போ தாங்கிகுரு//

.

காலனை உதைத்தல் கடுமுயலகன் மிதித்தல்

காடுமலை திரிதல் பணியமரர் முடியுறைதல்

மென்னிரு நின்னுடை திருவடித் தொழிலானதே

என்மன மணிக்காலணி கௌரீபதி பூணுவீரே!

.

     செருப்பணிந்த காலால் மிதித்து அர்ச்சித்த கண்ணப்ப நாயனாரின் பெருமையை முந்தைய ஸ்லோகத்தில் எடுத்துரைத்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் சிவபெருமானின் காலுக்குச் செருப்பாக பக்தனின் மனது திகழ வேண்டும் என்பதை கனிந்த பக்தியுடன் எடுத்தியம்புகிறார்.

.இறைவனின் திருப்பாதங்களைச் சரண்புகும் பக்தன், தனது மனத்தைக்  காலணியாக்கி, காணிக்கை தந்தால், அவரது பாதங்களை விட்டு நீங்காமல் இருக்கலாம் அல்லவா? சிவபெருமானின் திருப்பாதங்களைத் தாங்கிப் பிடித்தபடி, நம்மை காக்கும் இறைவனின் திருப்பாதங்களுக்கு நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்று பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

     சிவபெருமான் மார்க்கேண்டேயனைக் காப்பாற்றுவதற்காக காலனைக் காலால் உதைத்தார். முயலகன் (அறியாமையின் மொத்த உருவம்) என்ற கொடிய அரக்கனை தமது காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் காடு, மலை என கரடு முரடான இடங்களிலே சுற்றித் திரிகிறார். தன்னைப் பணிந்து வணங்குகின்ற தேவர்களின் கடினமான கிரீடங்களிலே அவரது திருவடிகள் உறைகின்றன. இவ்வாறாக, மிகவும் மென்மையான தன்மை கொண்ட சிவபெருமானின் திருப்பாதங்கள், மிகவும் கடினமான செயல்களைச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஆகையால், கௌரியின் கணவரான சிவபெருமானே, உமது திருப்பாதங்கள் நோகாமல் இருக்க, எனது மனதாகிய  காலணியைத் தரித்துக் கொள்ளுங்கள்.       

$$$  

Leave a comment