இந்த தைரியம் யாருக்கு வரும்?

-ஆதிசைவன் இரா.இராம்குமார்



திட நம்பிக்கை! அசைக்க முடியாத நம்பிக்கை! தன் அரசின் மீதும், தமிழ் மக்களின் மீதும் கொண்ட ஆணித்தரமான நம்பிக்கை! அதீத நம்பிக்கையும் கூட – கடந்த திராவிட மாடல் அரசுக்கு….. இல்லையென்றால் இப்படியொரு காரியம் செய்யத் துணிய  யாருக்கு தைரியம் வரும்?

“அவன் பொருளை எடுத்து அவனையே போட்டேன்” என்ற ரவுடிகளின் சொல்லாடல் போல, ‘தமிழ்’ அரசியல் செய்து தமிழர்களையே முடித்துவிட்ட ராஜதந்திரம் வேறு யாருக்கு வரும்?

தமிழ் வாசிக்கும் தலைமுறைகளை இல்லாமல் செய்து விட்டோம். தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை மடைமாற்றி விட்டோம். ஆஹா அற்புதம்!  நாம் கண்ட தலைமுறையை உருவாக்கிவிட்டோம். அடுத்து என்ன? என்று யோசனை செய்து (அவர்களின்) பெரியாரை க்ஷண நேரம் தியானிக்கும் போது, மற்றொரு திட்டம் அவர்கள் மனத்தில் உதயமானது. பெரியாரின் ஆன்மா, ‘கககபோ’ (கருத்துக்களைக் கச்சிதமாய் கவ்விக்கொண்டாய் போ!) என்றது.  அப்படி உதித்தது தான் பெரியார், அண்ணா, கலைஞர் நூலகங்கள்.

‘சங்கத்தமிழ் வளர்த்த தமிழ் சமுதாயத்தை பங்கம் செய்துவிட’ இதைவிட அருமையான திட்டமும் சந்தர்ப்பமும் நமக்கு வாய்க்குமா? என்று கருதி உருவானது தான்…..
போலி புத்தகங்கள் மற்றும் போலி பதிப்பகங்கள்.

சங்கப் பலகையால் கரையேறாமல் புறந்தள்ளப்பட்ட நூல்களை எழுதியவர்கள், அப்பலகையை பல்வேறு வகையில் அழிக்க முயன்று தோற்றுப்பானார்களே…. அவர்களது ஆன்மா சாந்தியடைய அவர்களின் சந்ததிகள் செய்த முயற்சிதானோ இது என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழர்கள் தங்களுக்கான பெருமைகளென்று எதையெல்லாம் ஆவணப்படுத்தி நூல்களாக்கி வைத்திருந்தனரோ, இன்று அந்த வரலாறுகள், பெருமைகள் அனைத்தையும் சிதைத்து நிர்மூலமாக்கும் வகையில் நூலக முறைகேடுகள் நடந்தேறியுள்ளன.

தமிழைக் காக்கிறோம் என்ற பெயரில் தமிழைச் சிறை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் ‘போலித் தமிழ்க் காவலர்களிடம்’ இருந்து தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழன் நாவிலும், தமிழன் எழுத்திலும்; தமிழானது தன் உயிருக்குப் போராடித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழன் மனத்திலும், தமிழன் வாழ்விலும்; தமிழானது என்றோ கைவிடப்பட்ட அநாதையாக மாறி நிற்கிறது.

இந்த நிலையில் போலித் தமிழ் நூல்களை நூலகங்களில் வைத்தால் அதை கேட்பார் யாரும் உளரோ? என்று எண்ணிய அயோக்கியர்களின் திருட்டுத்தனமானது எழுத்தாளர் ‘பெருமாள் முருகன்’ மூலம் வெளிவந்துள்ளது‌. தமிழ்ப் பாசுரங்களுக்குப் பின்னால் செல்லும் பெருமாளும், தமிழ்க் கடவுள் முருகனும் ஒரு சேர்ந்து தமிழை மீட்டெடுக்க முயற்சித்ததாகவே இதை எண்ணத் தோன்றுகிறது.

நமது கடமை:

தமிழர்களே! தமிழர்களின் முற்கால ஸ்திதியையும் தற்கால நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நமது பரம்பரைச் சொத்தை குப்பையென்று எண்ணித் தூக்கி வீசுவது அறிவுடையோர் செயலா?

ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற நிலை இன்று மாறி விட்டது. ஆனால் நூலகத்திற்கு ஒரு நல்ல புத்தகமாவது வேண்டும் என்று கேட்க வேண்டியது நம் உரிமை அல்லவா?

தகுதியான நூல்களை ஏற்பதும் தகுதியற்ற நூல்களை புறந்தள்ளுவதுமான சங்கப்பலகை இருந்த தமிழகத்தில், இன்று தரமான நூல்களை நூலகங்களின் அலமாரியில்….. இல்லை….இல்லை…. நூலகங்களின் அரியணையில் ஏற்றிட இதற்கென்று  ‘ஒரு தனி வாரியம்’ (Tamil Literary Evaluation Board) அமைக்க வேண்டியது அரசின் கடமை.

இறுதியாக…

இன அழிப்பாளர்களின் கையிலிருந்து தமிழை மீட்பதும்,  தமிழைக் காப்பதும், தமிழைப் போற்றிப் பேணி வளர்ப்பதும் காலத்தின் கட்டாயமும் நமது கடமையும் ஆகும்.

$$$

Leave a Reply