கார்த்திகை தீபம்: தீர்ப்பால் சலசலப்பு ஏற்பட்டுவிடக் கூடாதாம்!

உச்ச நீதிமன்றத்துக்கு அறிவுரை கூறுகிறதா தமிழக அரசு?

புதுதில்லி, நவ. 17: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நவ. 17இல் தொடங்கியுள்ளது. கார்த்திகை தீபம் நெருங்கி வரும் சூழலில், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும் என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளால் அப்பகுதியில் அமைதி சீர்குலைந்து விடவோ, எவ்வித சலசலப்பும் ஏற்பட்டு விடவோ கூடாது எனவும் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக மனுதாரர் ராம ரவிகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தைத் தவிர்த்து, கூடுதலாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு மற்றும் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் இவ்வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு வருகின்றன.

விசாரணையின் தொடக்கத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கோரிக்கை முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த மனுதாரர் ராம ரவிகுமார் மற்றும் இந்து அமைப்புத் தரப்பில்,  ‘சம்பந்தப்பட்ட கோயில் தீபத் தூணில் விளக்கு ஏற்றுவது சாதாரண நடைமுறைதான். இதற்காகத் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை’ என்று வாதிடப்பட்டது. மேலும், பொதுமக்கள் அனைவரையும் அனுமதித்து, அங்கு நேரடியாக தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை மறுத்து வாதங்களை முன்வைத்த தமிழ்நாடு அரசுத் தரப்பு, திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தது. 1923-ஆம் ஆண்டு முதல் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இவ்வழக்கில், தீபத் தூண் மற்றும் அங்கு செல்லும் வழிகள், படிக்கட்டுகள் யாருக்குப் பாத்தியப்பட்டது என்பது தொடர்பான அரசின் முழு ஆவணங்களையும் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, 1923-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் தர்காவின் கட்டுப்பாட்டில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு சுதந்திரம் அடைந்த பின்பும் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசுத் தரப்பு பிடிவாதம்

மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் கருவறைக்கு நேர் மேலே உள்ள நாயக்கர் காலத் தூணில்தான் 150 ஆண்டு காலமாகத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றும், தர்காவிற்கு மிக அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும் அரசு வாதிட்டது.

கடந்த 150 ஆண்டு காலமாகக் கோயிலில் எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறதோ அதே இடத்தில்தான் தொடர்ச்சியாக ஏற்ற வேண்டும் என்பதையும், அந்த நடைமுறையை மாற்றக் கூடாது என்பதையும் அரசு தரப்பு உறுதியாகப் பதிவு செய்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் இரு தரப்பும் சில விவகாரங்களை எழுப்பியதால் பிரச்சினைகள் ஏற்பட்டதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. குறிப்பாக, கடந்த ஆண்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குப் பின்னரே அந்த உத்தரவை எதிர்த்துத் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டுப் பிரச்சனைகள் ஏற்பட்டன என்பது வாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டம் ஒழுங்கை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும் என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளால் அப்பகுதியில் அமைதி சீர்குலைந்து விடவோ, எவ்வித சலசலப்பும் ஏற்பட்டு விடவோ கூடாது எனவும் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. கார்த்திகை தீபம் நெருங்கி வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கையும் தமிழ்நாடு அரசின் வரலாற்று ஆவணங்கள் மற்றும் அமைதி குறித்த வாதங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதால், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  • ஆதாரம்: தமிழ் சமயம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம்)- 17.311.2026

$$$

Leave a Reply