-ஜெயமோகன்
கோவை பெரியார் அறிவுலக நூலக ஊழல் தொடர்பாக மூத்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, இந்த விவகாரத்தை பல கோணங்களில் அணுகும் முழுமையான கட்டுரையாக உள்ளது. காலத்தின் தேவையாக இக்கட்டுரை நன்றியுடன் இங்கே மீள்பதிவாகிறது...

பெரியார் நூலக விவாதங்கள் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்து, சில தெளிவுகள் உருவாகியிருக்கும் சூழலில், என்னுடைய தரப்பை முழுமையாக எழுதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில், இவை எப்படியோ ஓர் ஆவணமாக இருக்கப்போகின்றன.
இந்த விவாதத்தில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருப்பதாலும், அரசியல் கட்சிகளின் தொண்டர் அமைப்புகள் வெறிகொண்டு களமிறங்கியிருப்பதாலும், எழுதப்படும், பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் திரித்துக் கூறப்படும். ஒரு மாதத்திற்குள்ளாகவே நாம் சொல்லாத சொற்களெல்லாம் நம்முடையவை என திணிக்கப்படும். ஆகவே, இக்குறிப்பு இன்றியமையாதது.
இந்த ஊழல் புதியதா? திடீரென்று சென்ற சிலமாதங்களில் நிகழ்ந்ததா?
இல்லை. இந்த நூலக ஊழல் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. தொடர்ச்சியாக எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இதற்கு எதிராகக் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்கள். 2005 வாக்கிலேயே இந்த ஊழல் ஏதோ அளவில் தொடங்கியிருக்கிறது என்று பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தன் பேட்டியில் சொல்கிறார்.
நூலகங்களுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை நூல்தேர்வுக்குழுவில் நியமிப்பதே ஊழல்தான். அவர்களின் தரப்பு நூல்கள் மட்டுமே வாங்கிக் குவிக்கப்பட்டு பிற நூல்கள் தவிர்க்கப்படுகின்றன. எனக்குத்தெரிந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நூல்கள் பெரும்பாலும் நூலகங்களுக்கு வாங்கப்படுவதில்லை. ஓரிரு உதிரிப்பிரதிகள் வாங்கப்படுவதுடன் சரி. ஆனால் வாசகர்கள் இருப்பதனால் என் நூல்கள் விற்றுக்கொண்டுமிருக்கின்றன.
இந்த வகையில் அரசியல் தலையீடு வழியாகவே நூலகத்துக்கு நூல்கள் வாங்குவதில் ஊழல் தொடங்கியது- ஆனால் இது ஒரு சிறிய அளவிலான முறைகேடுதான். 2000 த்துக்குப் பின் கணினி தொழில்நுட்பம் வந்து நூல்களை அச்சிடுவது எளிதாகி ஆண்டுக்கு பல ஆயிரம் நூல்கள் வெளிவரத்தொடங்கியதும் ஊழல் மலிந்து, மிக விரைவிலேயே நிறுவனமயமாக ஆகிவிட்டது. நூல்பரிந்துரையாளர்கள், நூலகத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், பதிப்பாளர்கள் இணைந்து நிகழ்த்தும் ஊழல் இது. அதன் உச்சமே இப்போது வெளிவந்துள்ளது
இதுவரை ஊழல் எப்படி நடைபெற்று வந்தது?
தமிழ்ப் பதிப்புத் துறையைச் சேர்ந்த மூன்றோ நான்கோ பதிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக அரசிடமிருந்து பெருந்தொகையைக் கமிஷனாக அள்ளிவிட்டு நூலக ஆணைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் இலவசமாகக் கிடைக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் பிற நூல்களையும் கலந்துகட்டி, பல்வேறு தலைப்புகளை உருவாக்கி, சாணித்தாள்களில் அச்சிட்டு, நூலக அடுக்குகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.அந்நூல்கள் சில ஆண்டுகளில் குப்பையாக ஆகும். வேறுநூல்கள் வாங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக நூலகங்களில்கூட தரமான நூல்களுக்குப் பதிலாகப் போலி நூல்களே பெருகிக் கிடக்கின்றன. கிராமிய நூலகங்களில் பெரும்பாலானவை போலி நூல்கள். நூலகங்களுக்குச் சென்று வாசிப்பவர்கள் சொற்பம். அவர்களையும் நூலகர்கள் போலிநூல்கள் பக்கம் செல்ல விடுவதில்லை.
ரா.பி சேதுபிள்ளையின் ஒரு நூலை எடுத்தால், அதன் உள்ளிருக்கும் பக்கங்கள் முழுவதும் வையாபுரிப்பிள்ளையின் நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய நூலை ஒருவர் ஆய்வுக்காக மேற்கோள் காட்டினால் என்ன வகையான பிரச்சினைகள் ஏற்படும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இதை இருவரையும் அறிந்த ஒருவர்தான் கண்டுபிடிக்கமுடியும். அவர் அதை சுட்டிக்காட்டினால் இங்கே எவர் கவனிப்பார்கள்?
நாட்டுடைமையாக்கப்பட்ட பல எழுத்தாளர்கள் அதிகபட்சம் முப்பது புத்தகங்கள்தான் எழுதியிருப்பார்கள். ஆனால், அவர்களுடைய படைப்புகள் வெவ்வேறு தலைப்புகளில் ஐம்பதும் நூறும் நூல்களாக மாற்றப்பட்டு, அச்சிடப்பட்டு, நூலகங்களுக்கு அனுப்பி விற்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
உதாரணமாக, உண்மையான அறிஞர்களின் நூல்களை வெவ்வேறு தலைப்புகளில் சம்பந்தமில்லாமல் வெட்டி ஒட்டிப் பல நூல்களாக வெளியிடும் நூல்களை நாம் சுட்டிக்காட்டியிருந்தால் இந்த விவாதம் கிளம்பியிருக்காது. வாசகர் குற்றம்சாட்டினால் அவற்றை அதிகாரபூர்வமான நூல்கள்தான் என்று உரக்கச் சொல்லியிருப்பார்கள். அவை போலியானவை என்பதை நிரூபிப்பதும் கடினம். இந்த போலிநூல்கள் இத்தனை அப்பட்டமாக இருப்பதே இவர்கள் சிக்கிக்கொள்ள வழியமைத்துள்ளது.
இந்தச் செயல்பாட்டின் உச்சம்தான் இப்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முற்றிலும் உள்ளடக்கமற்ற நூல்களை உருவாக்கி, அச்சிட்டு, நூலகங்களுக்குக் கொண்டுசென்று விற்பது. இவை முற்றிலும் பொருளற்றவையாக இருப்பதுதான் இப்போது உருவாகியிருக்கும் பிரச்சினை.
இந்த ஊழல் இந்தியா முழுக்க நிகழ்கின்றதா? இதுவரை அப்படிச் செய்திகள் ஏதுமில்லை. நிகழ வாய்ப்புள்ளது.
இந்த ஊழல் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததா?
ஐயமே இல்லை. இப்போது வெடித்துள்ள பெரியார் நூலக ஊழல் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்தான். பதிப்புத்துறை சார்ந்த தொடர்பு கொண்ட அத்தனை பேருக்கும் ஊழல் நிகழ்வது தெரியும். பலமுறை பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் இதையெல்லாம் எழுதிவிட்டனர். இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இது நிகழ்ந்திருப்பதுதான் அனைவருக்கும் புதிய செய்தி.
பெரியார் நூலக ஊழல் வெடித்ததுமே “எங்கள் ஆட்சியில் எல்லாம் சரியாக நிகழ்ந்தன. இதெல்லாமே தவெகவின் புதிய ஆட்சியில் ஜூன் மாதத்திற்கு பிறகு நிகழ்ந்தவை, அவர்களால் செய்யப்பட்டவை” என்று திமுகவின் தொண்டர்களும் ஆதரவு எழுத்தாளர்களும் சத்தம்போட்டார்கள்.
ஆனால் பெரியார் நூலகத்துக்கு நூல்களை வாங்குவதற்கான உத்தரவுகள் எல்லாமே 2025 நவம்பர்- ஜனவரி வாக்கில் முடிவு செய்யப்பட்டுவிட்டன. நூல்களின் பட்டியல்களை கோரி, அவற்றின்மேல் பரிந்துரைகளைப் பெறுவதும் அதற்கு முன்னரே தொடங்கிவிட்டது.திமுக ஆட்சி நூல்களை வாங்கும் பணிகளை தேர்தல் அறிவிக்கும் முன்னரே முடித்துவிட்டது. இதை எல்லா பதிப்பாளர்களும் அறிவார்கள். நாங்களும் பதிப்பாளர்களே.
இந்த நடைமுறை எப்படிச் செயல்படுகிறது என்றால், முதலில் நூல்களின் பட்டியல் அளிக்கப்படும். அதன் மீது பரிந்துரைகள் பெறப்பட்டு, பின்னர் கொள்முதல் ஆணை வழங்கப்படும். அந்த ஆணையின் அடிப்படையில்தான் நூல்கள் அச்சிடப்படுகின்றன. இந்த சட்டபூர்வ நடைமுறை முழுமையாகவே இந்த ஊழலிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பெரியார் நூலகத்திலுள்ள கிட்டத்தட்ட இரண்டாயிரம் நூல்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கினால்கூட, அவற்றை நகல் எடுத்து, பக்க வடிவமைப்புசெய்து அட்டைப்படம் வடிவமைத்து, அச்சுக்குக் கொடுத்து நூல்களாகப் பெற்று வருவதற்கு குறைந்தபட்சம் ஆறு ஏழு மாதங்கள் ஆகியிருக்கும். இதை அறியாதவர்கள் புத்தகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.
ஆகவே, குறைந்தது ஆறு ஏழு மாதம் முன்னரே இந்த ஊழல் நிகழ்ந்து முடிந்திருக்க வேண்டும். அச்சிடும் பணி அதற்கும் முன் பலமாதக் காலமாக நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும். நூல்கள் பிப்ரவரி- மார்ச் மாதம் முதல் விநியோகிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பாளர்களும் தெளிவாக தன் பேட்டியில் சொல்கிறார், மார்ச் மாதமே அளித்துவிட்டோம் என.
திமுக ஆட்சிக்காலத்தில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இருக்க முடியாது. திமுக ஆதரவாளர்களின் கூக்குரல்கள் வெறும் அரசியல்.
பெரியார் நூலகம் மட்டும்தானா?
தொடக்கத்தில் கோவை பெரியார் நூலக ஊழல் வெளிவந்ததும் அது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்று சொல்லி, அதை த.வெ.க பக்கம் திசைதிருப்பி தப்பித்துக் கொள்ள முயன்றனர். ஆனால் தொடர்ச்சியான ஆய்வுகளில் அதற்கும் பலமாதகாலம் முன்னரே கன்னிமாரா, அண்ணா, கலைஞர் என அத்தனை பெரிய நூலகங்களிலும் இதே நூல்கள் வாங்கி அடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்ப் போலிநூல்கள் மட்டும் அல்ல, ஆங்கிலப் போலி நூல்களும் வாங்கப்பட்டுள்ளன. திமுக அரசின் பொருளியல் ஆலோசகர் ஜீன் டிரெஸ் பெயரில்கூட போலிநூல் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பாடுள்ளது. செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தமிழகத்தின் முதன்மையான பல்கலை நூலகங்களில் மிகப்பெரும்பாலான நூல்கள் போலியானவை. உண்மையான நூல்கள் குறைவு. தவிர்க்கமுடியாத நூல்கள் கூட இல்லை. என் நூல்கள் பெரும்பாலும் இல்லை. தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் பெரும்பாலான நூல்கள் இல்லை. ஆய்வு தொடரும்தோறும் திகைக்கவைக்கும் அளவுக்கு இது நடைபெற்றுள்ளது தெரிகிறது.
திமுக தொண்டர்களும் இலக்கிய விசுவாசிகளும் சொல்வது என்ன?
ஆரம்பத்தில் இருந்தே திமுக தொண்டர்கள், விசுவாசிகளால் ஒரு நாளுக்கு நூற்றுக்கணக்கான முகநூல் பதிவுகள் எழுதப்பட்டன. பெரியார் நூலக நூல்கள் விஜய் ஆட்சியில் வாங்கப்பட்டன என கூவிக்கொண்டே இருந்தனர். திரிஷா விஜய் என்னும் பெயரில் ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது, ஆகவே தவெக இதைச் செய்தது என்று கூச்சலிட்டனர். கருணாநிதி பெயரில் நூறுக்கும் மேல் நூல்கள் உள்ளன. எல்லா நடிகர்களின் பெயர்களிலும் நூல்கள் உள்ளன. இணையத்தில் கிடைத்த எல்லா பெயர்களையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
நூலகங்கள் அந்நூல்களை வரவு வைத்த தேதியில் முத்திரையிட்டிருப்பதை வைத்துக்கொண்டு, அந்த முத்திரையிடப்பட்ட தேதியில்தான் அந்நூல்கள் அச்சிடப்பட்டன, ஊழல் நிகழ்ந்ததே அப்போதுதான் என்ற வகையில் பேசிக்கொண்டிருந்த கேலிக்கூத்தையும் காணமுடிந்தது.
அச்சிடப்பட்ட நூல்கள் நூலகங்களுக்கு வந்துசேரும்போது, அவற்றைப் படித்துப் பார்த்து மதிப்பிடும் அதிகாரம் நூலக ஊழியர்களுக்கு இல்லை. அது அவர்களுடைய பணியுமல்ல.பெரும்பாலும் நூலகங்களில், வந்துசேர்ந்த நூல்கள் அடங்கிய பெட்டிகள் ஆறு, ஏழு மாதங்கள்கூட திறக்கப்படாமல் அங்கேயே கிடப்பது வழக்கம். பல கிராமப்புற நூலகங்களில் ஓராண்டுகூட நூல்கள் முத்திரையிடப்படாமல் இருப்பது உண்டு. பெட்டிகளைத் திறந்து, நூல்களை தலைப்பு பிரித்து, முத்திரையிட்டு அடுக்க பலமாதக் காலமாகும். அதற்கான ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆகவே பெரியார் நூலகம் திறக்கப்படுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் நூல்களைப் பிரித்து அடுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்த நூல்கள் அப்படியே ஓராண்டுக்கு பின் குப்பைக்குச் சென்று அடுத்த அணி நூல்கள் அடுக்குக்கு வந்திருக்கும். ஆனால் தவெக அரசு அமைந்து, விஜய் திறந்துவைத்த நாளில் நூல்களை எடுத்து அடுக்கி வைக்கப்போக, சிலநாட்களிலேயே பெருமாள் முருகன் வந்து பார்த்தமையால் ஊழல் வெளிவந்துவிட்டது. தற்செயலாக வெளிவந்த ஊழல்தான் இது.
இப்போது அத்தனை நூலகங்களிலும் போலிநூல்கள் நிறைந்திருப்பதை பெருமாள் முருகன் போன்றவர்களும், ஊடகங்களும் ,அரசும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் வாதிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இப்படிச் சொல்பவர்களின் மனநிலை என்ன? AI-ஐப் பயன்படுத்தி குப்பைகளை அச்சிட்டு நூலகத்தில் அடுக்கிவைத்தாலும் எவரும் பார்க்கப்போவதில்லை என்று நினைத்தவர்கள்தான் நூல்கள் பெறப்பட்ட தேதியில்தான் ஊழல் நடந்திருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொன்னால் தமிழர்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
வெறும் கட்சிவிசுவாசத்துக்காக அறிவியக்கத்தின் அடித்தளத்தையே இடிக்கும் இந்த ஆதரவாளர்கள் ஊழல் செய்தவர்களை விட கொடியவர்கள். மதமூடத்தனத்தை விட கட்சிமூடத்தனம் பத்து மடங்கு வெறிகொண்டது. ஏனென்றால் இதிலுள்ளது வெறும் பற்று மட்டும் அல்ல, நேரடியான சுயநலமும்கூட.
இந்த ஏ.ஐ. ஊழல் எப்படி நிகழ்ந்திருக்கும்?
நூலக ஊழலின் முதிர்ச்சிநிலை ஏ.ஐ ஊழல். இனி இதை பெரியார் நூலக ஊழல் என சொல்லக்கூடாது. ஏனென்றால் எல்லா நூலகங்களிலும் பல்லாயிரம் நூல்கள் போலியாக ஏ.ஐ வைத்து அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏ.ஐ ஊழல் எப்படி நடந்தது? தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு கமிஷன் அளித்து நூலக ஆணைகளைப் பெற்றுக்கொண்டு போலி நூல்களை அச்சிட்டு அடுக்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் கவனிக்கப்பட்டதில்லை. எந்த வகையிலும் மக்கள் கவனிக்கும்படி பொது விவாதத்துக்கு வந்ததும் இல்லை. இவ்வாறு ஒரு மோசடி நடக்கிறது என்பதே பதிப்பகச் சூழலில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அது அளித்த தைரியத்தில்தான் மிக கவனமில்லாமல் மேலும் பெரிய ஊழல் நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த நூல்களுக்கான கொள்முதல் ஆணைகளைப் பிறப்பித்த அதிகாரிகளோ, அந்த ஆணைகளைப் பெற்றுக்கொண்டு ஊழல் பணத்தைப் பெற்ற போலிப் பதிப்பாளர்களோ இப்படி இது பிடிக்கப்பட்டு பிரச்சினை ஆகும் என எண்ணியிருக்க மாட்டார்கள். போலி ஆணை பெற்ற பதிப்பாளர்கள் நூல்களைத் தயாரிக்கும் பணியை இன்னொருவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறு சிலரிடம் அந்தப் பணியை அளித்திருக்கிறார்கள்.
இறுதியாக அச்சிடும் பணியைப் அவுட்சோர்சிங் முறையில் பெற்றுக்கொண்டவர்கள் எந்த வகையிலும் எவருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் இவ்வளவு தலைப்புகளில் நூல்கள் தேவை என்று மட்டும் சொல்லப்பட்டிருக்கும். அதற்கான பணம் அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் பத்துப் பதினைந்து ஊழியர்களை அமர்த்தி, ஏ.ஐ செயலியை பயன்படுத்தி ஆறேழு மாதங்களில் இந்தச் போலிநூல்களை உருவாக்கி, அச்சிட்டு அளித்திருக்கிறார்கள். அவை நூலகங்களுக்கு பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டுள்ளன. இறுதியாக அளிக்கப்பட்ட பெரியார் நூலகம் சிக்கிக்கொண்டுள்ளது.
இவ்வாறு நடந்ததுகூட ஒருவகையில் நல்லதுதான். இல்லையென்றால் இந்தியா முழுவதும் நிகழக்கூடிய சாத்தியமுள்ள இத்தகைய மாபெரும் ஊழல் இவ்வளவு வெளிப்படையாக செய்திக்கு வந்திருக்காது.
இதனை வெளிக்கொண்டுவந்த பெருமாள் முருகன் இந்திய அறிவுலகத்தின் நன்றிக்குரியவர். அவருடைய தைரியமும் நேர்மையும் பாராட்டுக்குரியது.
என்ன செய்ய முடியும்?
இதில் உடனடியாக ஊழல்வாதிகளைத் தண்டிப்போம் என்றெல்லாம் முதல்வர் போன்றவர்கள் கூறுகிறார்கள். நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, உடனடியாக என்னென்ன செய்யப்பட்டது என்னும் அறிக்கையை அளிக்கும்படிச் சொல்கிறது. தமிழக நூலகங்கள் தோறும் ஊழல் தடுப்பு துறை ஆய்வு செய்கிறது. தமிழக நூலகங்கள் தோறும் போலிநூல்களை கண்டறிய அரசு முயலும் என்று சொல்லப்படுகிறது.
எவரேனும் தண்டிக்கப்படுவார்களா? நடைமுறையில் எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால், பணம் அளிக்கப்பட்டிருக்கிறது; அப்பணத்திற்குரிய பொருள் வந்து சேர்ந்திருக்கிறது; அதற்கு அரசு கோரும் சட்டபூர்வமான எல்லா நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அரசுத்துறையில் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும், இங்கே இப்போது சட்டப்படி ஊழலே இல்லை. பணம் அளிக்கப்பட்டு அதற்கான பொருளும் வந்துவிட்டிருந்தால் ஊழல் எங்கே?
இந்த ஊழல் அந்த நூல்களின் உள்ளடக்கத்தில் இருக்கிறது. அது போலி. ஏ.ஐ செய்த உளறல். ஆனால் அந்த உள்ளடக்கத்தை யார் முடிவு செய்ய முடியும்? அதற்கு ஓர் அறிஞர் குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் சட்டபூர்வமானவர்களாக இருக்கவேண்டும், அதாவது பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் மட்டுமே நியமிக்கப்படமுடியும். அந்த அறிஞர் குழு இந்த பல்லாயிரம் நூல்களையும் ஆய்வுசெய்து, அவை போலியான நூல்கள் என்பதை அறிவிக்க வேண்டும். அதற்கு எத்தனை காலமாகும்?
அப்படியே நேர்மையாக அவ்வாறு அறிவிக்க முன்வரும் கல்வியாளர்களும் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள். நீங்களே சிந்தனை செய்து பாருங்கள் அப்படி எத்தனைபேர் இன்று நம் கல்வித்துறையில் உள்ளனர்? பெருமாள் முருகனே கல்வித்துறை ஊழல்கள் பற்றி இரு நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் நம் கல்வியாளர்களிலேயே இந்த நூலகக் கொள்முதல் மோசடிகளை கல்விநிறுவனங்களில் மேற்கொண்டவர்களும் இருக்கக்கூடும். நம் கல்விநிறுவனங்கள் எப்படி நூல்களை வாங்குகின்றன என தெரியாத பதிப்பாளர்கள் எவருமில்லை. இந்த நூலக மோசடியை ஒப்புக்கொண்டால், நமது கல்வி அமைப்பின் எல்லாத் துறைகளிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்கள் மோசடி நூல்கள் என்பதை ஒப்புக்கொள்வதுபோலாகிவிடும். ஆகவே, அவர்கள் அப்படியே அமுக்கிவிடவே முயல்வார்கள். பெரும்பாலும் இதில் எதுவுமே நடக்கப்போவதில்லை.
இந்தக் கொந்தளிப்பு அடங்கிய பிறகு, இந்த நூலக ஊழல் விவகாரம் அப்படியே கைவிடப்பட்டுவிடும். எவரும் தண்டிக்கப்படப்போவதில்லை. எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை.
குறைந்தபட்சம் என்ன செய்யலாம்?
நம்முடைய நூலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் , ஏராளமான கிராமப்புற நூலகங்களிலும் இருக்கும் நூல்களில், இவ்வாறு ஒட்டுமொத்தக் கொள்முதலாகப் போலிப் பதிப்பகங்களிலிருந்து பெறப்பட்ட நூல்கள் அனைத்தையும் வெளியேற்றுவதுதான் உடனடியாகச் செய்யத்தக்கது.
அவற்றைக் கண்டுபிடிப்பது அத்தனை கடினமானதல்ல. ஏனென்றால் இந்த நூல்கள் எதுவும் தனித்தனியாகக் கொள்முதல் ஆணை பெற்று வாங்கப்பட்டவை அல்ல. நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்ற எண்ணிக்கையில்தான் இந்த நூல்களுக்கான கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. சரியான பதிப்பாளர்களின் பொருட்படுத்தத் தக்க நூல்கள் ஓரிரண்டு என்னும் அளவிலேயே வாங்கப்பட்டிருக்கும்.
ஆகவே, உடனடியாக செய்யத்தக்கது இந்த மோசடியின் அறிவுலக விளைவுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. எங்கெல்லாம் போலி நூல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றை நூலகங்களிலிருந்து அகற்றலாம். அதுதான் இந்த அரசு உடனடியாகச் செய்யக்கூடிய ஒரே நடவடிக்கை. அதைச் செய்வார்களா என்பதுதான் கேள்வி. அந்நம்பிக்கைகூட எனக்கு வரவில்லை. ஏனென்றால் கடைசியில் அப்பணியும் இதே அதிகாரிகளிடம்தான் கொடுக்கப்படும்.
- நன்றி: எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளம் (12.11.2026)
$$$