முஸ்லிமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கோர முடியாது

உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள், பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கோர முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுதில்லி: ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள், பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கோர முடியாது’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்த விவரமாவது:

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர், 2015-ல் ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறினார். தன் பெயரை சமீர் அகமது என்றும் மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தனக்கு  ‘முஸ்லிம் லெப்பை’ என்ற சமூகப் பிரிவின் கீழ், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம், அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர், தன் முந்தைய ஜாதி அடையாளத்தைக் காட்டி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோர முடியாது’ என உத்தரவிட்டது. அத்துடன், ‘குறிப்பிட்ட சில சமூகத்தினர் முஸ்லிம் மதத்துக்கு மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கலாம்’ என, தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையையும் ரத்து செய்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு, கடந்த அக்டோபர் 15ல் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பின் விபரம்:

ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் உள்ளிட்ட பிற மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய ஜாதி அடையாளத்தின் அடிப்படையில், அரசியல் சட்டப்பிரிவு 16(4)-ன் கீழ், பிற்படுத்தப்பட்ட சமூக நிலைக்கான இட ஒதுக்கீட்டை கோர முடியாது.

அரசியலமைப்பின் பட்டியல் ஜாதி பிரிவின்படி, ஹிந்து, சீக்கியர், பௌத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுவோர், பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே, வேறு மதத்திற்கு மாறும்போது பட்டியல் ஜாதி அந்தஸ்தையும், அதன் பலன்களையும் அத்தகைய நபர் இழக்கிறார்.

எனவே, மதம் மாறிய நபருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உத்தரவையும் உறுதி செய்கிறோம். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுதும் இது போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

  • ஆதாரம்: தினமலர் (13.11.2026)

$$$

Leave a Reply