நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம்-4

-தினமலர் செய்தி

கோவை பெரியார் அறிவுலக நூலக ஊழல் குறித்து மேலும் சில பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவை இங்கே ஆவணப்பதிவாக….

மகாகவி பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி:

கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஈ.வெ.ரா. நூலகத்தில் நடந்துள்ள புத்தக மோசடி வருத்தத்திற்கும், வெட்கத்திற்கும் உரியது. ‘சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்றார் பாரதி. தவறான வரலாற்றைப் படித்து நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு உண்மையான வரலாற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

பெரும் புலவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பாரதியாரும் இதில் தப்பிக்கவில்லை. ‘பாரதியார் கதைகள்’ என்ற பெயரில் உள்ள புத்தகத்தில் அவருடைய உண்மையான கதைகள் இடம் பெறவில்லை என்பதும், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யாரோ எழுதிய கதைகளை அச்சிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த, சாகித்ய அகாதெமி விருதாளர் நிர்மால்யா:

நூலகங்கள் ஊழலுக்குள் சிக்கி இருப்பது, அறிவின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய வன்முறை. ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய மேம்படுத்தப்படாத செயலியின் துணை கொண்டு, இத்தகைய போலி நுால்களைத் தயாரித்துள்ளனர். இந்த போலி நூல்களின் நச்சு வேர்கள், மாநகர நூலகங்கள் முதல் குக்கிராம நூலகம் வரை பரவி இருப்பது தெரிகிறது. இவை மாணவ உள்ளங்களை அரிக்கத் தொடங்குவதற்குள், போர்க்கால நடவடிக்கையாக போலி நூல்களைக் கண்டடைத்து அவற்றை அழித்தொழிப்பது அரசின் கடமை.

இதற்கு உடந்தையாக அரசியல் மட்டத்தைச் சேர்ந்தவர்களும், கள்ள மௌனம் காக்கும் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கை மட்டுமே உண்மையான பகுத்தறிவு முழக்கமாக இருக்கும்.

பாரதிதாசனின் கொள்ளுப் பேரன் கனகசிவா:

கோவை ஈ.வெ.ரா. நூலகத்தில் உள்ள பல புத்தகங்களை ஆய்வு செய்ததில், அவை முழுக்க முழுக்க போலி மற்றும் பொய்யான தகவல்களை கொண்டவை என்பது தெளிவாகியுள்ளது. நாலடியாரை ஒரு தனி நபராகவே சித்தரிக்கும் அளவுக்கு பொய்களை உண்மையாக்க முயல்வது, எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. நுாலகங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். போலி புத்தகங்களை நீக்கிவிட்டு, சரியான மற்றும் நம்பகமான தகவல்கள் அடங்கிய புத்தகங்களை மட்டுமே நூலகங்களில் நிரப்ப வேண்டும்.

$$$

மதுரை கலைஞர் நூலகத்திலும் புத்தகம் கொள்முதலில் முறைகேடு:  ஆராய்ச்சி மாணவர்கள் பகீர்

கோவையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் பிரேம்குமார், சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:

அறிவுலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகத்தின் நூல்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அவை ஏ.ஐ. வாயிலாக உருவாக்கப்பட்ட போலியான நூல்கள். இவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறோம். வேறு நுாலகங்களில் இதேபோல் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறதா என்று தேடினோம்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நுாலகத்திலும் இதேபோல் புத்தகக் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. அதற்கான முழுமையான ஆதாரங்களை ஒரு வாரமாகத் திரட்டியுள்ளோம்.

ஐ.எஸ்.பி.என். என்பது ஒவ்வொரு புத்தகத்துக்கும் தரக்கூடிய எண். அறிவுலகத்தில் உள்ள புத்தகங்களில் ஐ.எஸ்.பி.என்.  எண்கள் போலியானவை என தெரிவிக்கப்பட்டது. அவை போலியானவை அல்ல. அனைத்து நூல்களுக்கும் ஐ.எஸ்.பி.என்., எண்கள் பெறப்பட்டு இருக்கின்றன.

2022 ஜனவரியில் மதுரையில் கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நடப்பட்டது. 2022 மார்ச் 30இல் தேன்மொழி என்பவர்,  ஐ.எஸ்.பி.என். அமைப்பில் வெவ்வேறு பெயர்களில் ஆங்கில புத்தகங்களுக்கு பதிவு செய்திருக்கிறார்.

அதில், ஆங்கில புத்தகங்கள், அறிவியல் சம்பந்தமான புத்தகங்களில் மோசடி நடந்திருக்கிறது. கலைஞர் நூலகத்தின் ஆன்லைன் கேட்லாக் தேடினோம். பீனீக்ஸ் பப்ளிகேஷன், பீனிக்ஸ், பீனிக்ஸ் யுஎஸ்ஏ  மற்றும் லண்டனில் இயங்கும் பீனிக்ஸ் நிறுவனம் என பல்வேறு பதிப்பகம் பெயர்களில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பெறப்பட்ட ஐ.எஸ்.பி.என்.  எண்கள் ஒரு நபரால் வாங்கப்பட்டிருக்கிறது. இது, ஐ.எஸ்.பி.என். வெப்சைட் மூலம் கிடைத்தது.

கணித நூல்களுக்கான பெயரில் எண் வாங்கியுள்ளனர். ஆனால், புத்தகத்தின் பெயர் வேறாக இருக்கிறது. 200 பக்கங்களே உள்ளன. அதன் விலை 3,000 ரூபாய் என இருக்கிறது. கெட்டி அட்டையுள்ள புத்தகங்களாக உள்ளன.

அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகங்கள் நேற்று முளைத்த காளான்கள் அல்ல. கலைஞர் நூலகம் கட்டப்பட்டு, புத்தகங்கள் கொள்முதல் செய்யும்போதே தொடங்கியிருக்கிறது.

மதுரை நுாலகத்தில் பீனிக்ஸ் பெயரில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பது தெரிகிறது. வேறு என்னென்ன பெயர்களில் போலியானவை இருக்கின்றன என தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • நன்றி: தினமலர் (07.11.2026)

$$$

Leave a Reply