கரப்பான்களை அழிக்க ஒருங்கிணைவோம்!

-வ.மு.முரளி

நமது வீடுகளில் கழிப்பறை போன்ற அசுத்தமான இடங்களில் கரப்பான் பூச்சிகள் பெருக்கம் அடைகின்றன. இருளடைந்த, சுத்தம் செய்யப்படாத சமையலறைகளிலும் அவை நுழைந்து தொந்தரவு செய்கின்றன. அவற்றைப் பார்த்து நாம் அசூயை கொள்கிறோம். அவற்றைத் தடுக்க செயற்கையான மருந்துகளைத் தெளிக்கிறோம். ஆனால் பிரச்சினை, கரப்பான் பூச்சிகள் அல்ல, நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாததால்தான் கரப்பான் பூச்சிகள் பெருகுகின்றன. தில்லியில் சில மாதங்களாக சதிராட்டம் ஆடிவிட்டு தற்போது அடங்கிக் கிடக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை (சிஜேபி) நாம் அணுக வேண்டிய வழி இதுதான்.

நாம் மிகச் சிறப்பாக வீட்டைக் கட்டி இருக்கலாம். அதற்காக பல்லாண்டுகள் நீங்கள் உழைத்திருக்கலாம். ஆனால், சுத்தமான பராமரிப்பில் கவனம் கொடுக்காவிட்டால் கரப்பான்பூச்சிகளும் கரையான்களும் வீட்டைச் சூழ்ந்துவிடும். அதன்பிறகு அவற்றை அப்புறப்படுத்த நாம் போராட வேண்டியிருக்கும். சிஜேபியின் சட்டவிரோத, அராஜகப் போராட்டங்கள் நமக்கு கற்பித்திருக்கும் பாடம் இது.

உண்மையில் சிஜேபி ஓர் அரசியல் கட்சி அல்ல, முறையான பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பும் கூட அல்ல. இது, அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தக் காத்திருக்கும் சில லட்சம் பேரின் பிரசார இயக்கம் மட்டுமே. எந்த விதமான சட்ட விதிமுறைகளுக்கும் உடன்படாமல், ஜனநாயக நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும் வம்பு மனோபாவம் தான் இந்தப் பிரசார இயக்கத்தின் அடிப்படை. எந்த ஆக்கப்பூர்வமான செயல்முறையோ திட்டமோ இந்தக் கும்பலிடம் இல்லை. வாய்க்கு வந்ததைப் பேசுவது, எவரையும் கீழ்த்தரமாக விமர்சிப்பது, அரசு நிர்வாகத்திற்கு சவால் விடுவது, சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் துறையினரைத் தாக்குவது ஆகியவையே சிஜேபியின் இலக்கணமாக இருக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதை, அண்மைக்காலமாக நீதிமன்றங்களில் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும் சிஜேபி பொறுப்பாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தில்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சியின் இன்னொரு வடிவம் தான் சிஜேபி. 2011இல் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஸாரே நடத்திய போராட்டத்தின் விளைவாக அரவிந்த் கேஜரிவால் ஆரம்பித்த ஆம் ஆத்மி கட்சி இரு ஆட்சிக் காலங்களில் (2015- 2024) தில்லியைப் படுத்திய பாட்டைப் பார்த்த மக்கள் அக்கட்சிக்கு விடைகொடுத்தார்கள். எனவே, இப்போது வேறு பெயரில் மேடைக்கு வந்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக 2020 – 2023 காலகட்டத்தில் பணியாற்றிய அபிஜித் திப்கே தான் இதன் ஒருங்கிணைப்பாளர். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் திப்கே, இந்த ஆண்டு மே மாதம் சமூக ஊடகங்களில் ஆரம்பித்த அரசியல் பகடி பிரசார இயக்கம் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இவருக்கு யார் பணம் செலவு செய்கிறார் என்பது மர்மப் புதிர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கில், போலி வழக்கறிஞர்களைக் கடிந்துகொள்ளும் வகையில் அவர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டார் (மே 15, 2026). அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டார்கள் அதிருப்தியாளர்கள். அவர்கள் ஏற்கனவே ஆளும் பாஜகவுக்கு எதிரானவர்களாக இருந்ததால், நீதிபதியையும் பாஜகவையும் ஒருசேர கேலி செய்யும் விதமாக ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் மறுநாளே பகடியாகத் தொடங்கியது தான் சிஜேபி. ‘சோம்பேறிகள் மற்றும் வேலையற்றவர்களின் குரல்’ என்பது தான் இதன் முழக்கம். ஆரம்பித்த சில நாட்களிலேயே 1.5 கோடி பின்தொடர்வோரைப் பெற்றது சிஜேபி. இந்தியாவில் பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்தால் போதும், அதன் எதிர்ப்பாளர்கள் உடனடியாக கோட்பாட்டு அடிப்படையிலும் நிதி ஆதரவிலும் தோள் கொடுக்க வந்து விடுவார்கள் என்ற அரசியல் தந்திரம் தான் இதன் ஆரம்ப வெற்றிக்கு அடிநாதம். இந்த 1.5 கோடி பேரில் இந்தியர்கள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்தால்  உண்மை நிலவரம் தெரியும். என்றபோதும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருமுகப்படுத்துவதில் சிஜேபி வெற்றி அடைந்திருக்கிறது என்பதை  மறுக்க இயலாது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது பாஜக (2014 முதல்). தவிர 28இல் 22 மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆள்கின்றன. வழக்கமான தேர்தல் நடைமுறையில் பாஜகவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் உடனடி ஆதரவு சிஜேபிக்குக் கிடைத்ததில் வியப்பில்லை.

நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மாணவ சமுதாயத்தில் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற போராட்டத்தை ஜூன் மாதம் சிஜேபி தொடங்கியது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன் 20 முதல் ஜூலை 18 வரை 26 நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் அந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்தது. மாணவர் போராட்டம் என்ற பெயரில் எஸ்.எஃப்.ஐ, ஏ.ஐ.எஸ்.எஃப், ஏ.ஐ.எஸ்.ஏ. போன்ற இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டத்தைக் கையகப்படுத்தின. இஸ்லாமிய, கிறிஸ்தவ இயக்கங்கள்,  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் சிஜேபிக்கு உறுதுணை புரிந்தன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தொடர் ஜந்தர்மந்தர் போராட்டத்தின் இறுதியில் நாடாளுமன்றம் நோக்கி அனுமதியற்ற பேரணியை நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது சிஜேபி. அதனைத் தடுக்க காவல் துறை தடியடி நடத்த வேண்டியதாகிவிட்டது.

‘ஜென்ஸி’ எனப்படும் புதிய தலைமுறையினரின் போராட்டமாக சிஜேபியின் போராட்டம் முன்னிறுத்தப்பட்டது. போராட்டம் வன்முறை வடிவெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அதற்கு வெளிப்படையாக அறைகூவல் விடுக்கவும் திப்கே உள்ளிட்டவர்கள் தயங்கவில்லை. ஆனால், போராட்டக்காரர்கள் எதிர்பார்த்தது போல எந்த அசம்பாவிதமும் நடைபெறாததால், அத்துடன் சிஜேபியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார் (ஜூலை 25). அதற்கு முன்னதாக காவல் துறையினரை பல வகைகளில் அவமதித்து, அவர்களை உசுப்பேற்ற சிஜேபி கும்பல் முயன்றது. காவல் துறை கட்டுப்பாடு காத்தது. அந்தப் போராட்டத்தில் 120 காவல் துறையினர் காயமடைந்தனர் (ஜூலை 18).

இந்தப் போராட்டத்தின் விளைவாக, போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது (ஜூலை 31). அத்துடன் நீட் தேர்வுக்கு எதிரான அமளிகள் அடங்கின. ஆயினும், மத்திய அமைச்சரையே பதவி விலகச் செய்த பெருமிதத்தில், சிஜேபி அடுத்த அஸ்திரங்களை ஏவத் தயாரானது.

கிராமப்புறப் பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை என்ற பிரசாரத்தை மேற்கொண்டு, பள்ளிகளில் நுழைந்து படம் பிடித்து பிரசாரம் செய்யத் தொடங்கினர். அதனை உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக, பிறகு கைவிட்டுப் பம்மினர். இதனிடையே சிஜேபியின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கம் அரசு விதிமுறைகளை மீறியதால் முடக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் வாக்காளர் தீவிர சிறப்புத் திருத்தத்தில் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையர்களுடன் முரண்பட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டது (செப். 23). போராடுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருந்த சிஜேபி கும்பல், உடனே இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி, தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆயினும், முந்தைய கொடிய அனுபவங்களால் சிஜேபி கும்பலின் பின்புலத்தை அறிந்திருந்த மத்திய அரசும் தில்லி மாநில அரசும் கடுமையான கெடுபிடிகளால் அக். 10இல் அறிவிக்கப்பட்ட சிஜேபி போராட்டத்தை முடக்கின. அதுமட்டுமல்ல, இதுவரை போராட்டக் களமாக இருந்துவந்த ஜந்தர்மந்தரில் இனிமேல் போராட்டம் நடத்த இயலாத வகையில் தடையாணை பிறப்பிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்ல, முந்தைய போராட்டங்களில் அராஜகங்களில் ஈடுபட்டதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளையும் சிஜேபி கும்பல் எதிர்கொண்டு வருகிறது. இந்தக் கும்பலின் முன்னணி பொறுப்பாளர்களான  அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ‘இனிமேல் போராட்டங்களில் ஈடுபட மாட்டோம்’ உறுதிமொழிப் பத்திரம் அளித்து  நீதிமன்றப் பிணையில் வெளிவந்திருக்கின்றனர். இந்த உறுதிமொழியை மீறிய ரங்காவும் சௌரவும் கைதாகி, மீண்டும் உறுதிமொழிப் பத்திரம் அளித்து விடுதலையாகி இருக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தின் பலனை அறுவடை செய்ய பலரும் கழுகுகளாகக் காத்திருக்கின்றனர். ஏ.ஐ.எஸ்.ஏ. (நக்ஸல் ஆதரவு மாணவர் அமைப்பு) தலைவி நேஹா போரா இந்தக் கழுகுகளில் முக்கியமானவர். சிஜேபி போராட்டத்தை கம்யூனிஸ்டுகளின் போராட்டமாக மடை மாற்றியதில் இவரது பங்கு மிகப் பெரியது. தற்போது சிஜேபி போராட்டத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கிறார் நேஹா.

தவிர, அரசியல் களத்தில் தொடர் தோல்வியால் தொய்வடைந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜரிவால், மத்திய அரசின் விமர்சகர்கள் யோகேந்திர யாதவ், அருந்ததி ராய், பிரகாஷ்ராஜ், நசுருதீன் ஷா, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் (இவர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்), போராளிகளின் வழக்கறிஞராக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வசூலில் கொழிக்கும் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் போன்றவர்களுக்கு சில நாட்கள் போராட வாய்ப்பு கிடைத்தது; ஊடகங்களுக்கும் தீனி கிடைத்தது; சமூக ஊடகப் போராளிகளுக்கு ‘ரீல்ஸ்’ ஆயிரக் கணக்கில் கிடைத்தன.

 ‘போராடுவதற்கான உரிமை’ என்ற பெயரில் சக மனிதர்களின் வாழ்வதற்கான உரிமையையும், வியாபாரிகளின் வர்த்தக உரிமையையும் ஒதுக்கிவிட முடியாது என்று நீதிமன்றம் இப்போது விசாரணையின்போது தெரிவித்திருக்கிறது. அராஜகம் மூலமாக மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க நினைத்த சதிகாரர்கள், இப்போது காவல் துறையின் நடவடிக்கைகளால் நீதிமன்றங்களில் படியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதத்தின் அண்ட நாடுகளான இலங்கை (2022), பங்களாதேஷ் (2024), நேபாளம் (2025) ஆகியவற்றில் நடந்தது போல, வன்முறை மூலம் ஆட்சி மாற்றம் காண்பதே தங்கள் இலக்கு என்று முழங்கிய சிஜேபி, கம்யூனிஸ்ட் அமைப்புகள் இப்போது நிதர்சனத்தை உணர்ந்து அடக்கி வாசிக்கின்றன. ஜனநாயகத்தில் தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சிமாற்றம் நிகழ வேண்டும்; தெரு வன்முறை மூலமாக அல்ல. இதனை இப்போது தான் உணர்ந்தது போல அமைதி காக்கின்றனர் சதிகாரர்கள். நரேந்திர மோடி போன்ற உறுதியான அரசியல் தலைமையும், அரசுக்கு ஆதரவான ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகளின் வலிமையும் இல்லாமல் இருந்திருந்தால், பாரதத்திலும் ரத்த ஆறு ஓடச் செய்திருப்பார்கள். அவ்வாறு நடக்காமல் தடுத்த இறைவனுக்கு நன்றி.

சதிகாரர்கள் இப்போதைக்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். மத்திய அரசோ, மாநில அரசுகளோ (தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் அரசுகள்) செய்யும் சிறு தவறையும் பூதாகரமாக்க அன்னிய உதவி பெற்ற ஊடகங்கள் தயாராக இருக்கின்றன. சிஜேபியும் பாஜகவின் எதிர்க்கட்சிகளும் அடுத்தகட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றன. அவர்கள் தேர்தல் நடைமுறையில் பாஜகவை வெல்ல முடியாது என்பதை பூரணமாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். எனவே நாட்டுநலன் விரும்புவோர் மிகவும் கவனமுடன் இருந்தாக வேண்டும்.

தற்போதைய மத்திய அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. அரதப்பழசான மதச்சார்பின்மையை இனிமேலும் பாஜக மீது பிரயோகித்தால் பலனில்லை என்பதை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அறியும். எனவே, அரசு செயல்பட இயலாத பகுதிகளை இலக்காக்கி, வரும் நாட்களில் தாக்குதல்கள் நடக்கும். குறிப்பாக, இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினை அடுத்த சில ஆண்டுகளில் பெரிதாக வாய்ப்புள்ளது. புவி அரசியல் சூழலும் அதில் பெரும் பங்கு வகிக்கும். எனவே, வேலையின்மை பிரச்சினையில் மத்திய அரசு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும்.

பாஜகவை எதிர்ப்பதற்காகவே நாட்டுநலனையும் ஒருசேர எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அதை நாட்டுநலன் கருதுவோர் கண்டும் காணாமல் செல்வது தான் கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்திற்கு காரணம். எனவே, நாடு முன்னேற வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று விரும்புவோர் அனைவரும் தத்தமது பகுதியில் அரசியல் தூய்மைப் பிரசாரம் செய்ய வேண்டும். இது நமது கடமை.

ஆட்சியில் இருப்போரே அனைத்தையும் செய்ய முடியாது. ஜனநாயகத்தில் பொதுக்கருத்து உருவாக்கம் மிகவும் முக்கியமானது. அந்த இடத்தை ஆக்கிரமிக்கவே சதிகாரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்களால் வெல்ல முடியவில்லை. அதற்காக நாம் பொறுமை காக்கக் கூடாது. அதுவும்  வெளிநாட்டு சக்திகள் மறைமுக ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் நல்லோரின் அமைதியும் நிதானமும் சதிகாரர்களுக்கு வாய்ப்பாகிவிடும். இதுவே கரப்பான்பூச்சிகள் நமக்கு அளித்திருக்கும் படிப்பினை.

$$$

Leave a Reply