அமராவதித் தாயை வணங்குவோம்!

-பேரா. இராம.ஸ்ரீநிவாசன்

தாராபுரத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேரா. இராம.ஸ்ரீநிவாசன் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு.
அமராவதி ஆரத்தி

உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத பேறு இந்த நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பாரத மண்ணில் பிறப்பதே புண்ணியம் ஆகும். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகத் தெரியும். இங்கு மட்டுமே, தாய், தந்தையையும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்கிறோம். இங்கு மண்ணும் கடவுள்; மரமும் கடவுள்; ஆறும் கடவுள்; இயற்கையும் கடவுள்.

இன்று நாம் உலக வரைபடத்தில் காணும் பல உலக நாடுகள் உருவாவதற்கு முன்னரே மிகச் சிறந்த இலக்கியங்களை உருவாக்கிய, மிகச் சிறந்த பண்பாட்டை அமைத்த நாடு பாரதம். எனவே தான், இந்த மண்ணில் பிறந்தது பெருமை என்கிறோம். நதிகளைப் போற்றி வணங்குவது இந்த மண்ணின் குணம்.

அந்த வகையில், அமராவதி நதியை வழிபடும் இனிய ஆரத்தி நிகழ்வை தாராபுரத்தில் நடத்துவது சிறப்பாகும். ஒரு நதியை வழிபட வேண்டுமா? இது எதற்காக? என்ற கேள்விகள் எழலாம். நதியை நாம் வெறும் நீராதாரமாக மட்டும் பார்க்கவில்லை; அதை தெய்வத்தன்மை வாய்ந்த அன்னையாக உருவகிக்கிறோம். அதனால்தான் அதனை வழிபட இங்கே கூடி இருக்கிறோம்.

இந்த அமராவதி நதிக்கரைக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்திருப்பதாக நாம் மகாபாரதக் கதைகளில் படிக்கிறோம். இந்த நதிக்கரையில் அர்ஜுனன் வழிபட்ட சிவாலயம் (கடத்தூர்) இருக்கிறது. தமிழின் இலக்கணத்தை எழுத்திய அகத்திய மாமுனிவர் இந்த நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் தாராபுரத்தில் இருக்கிறது. அதனால் தான் இக்கோயில் அகஸ்தீஸ்வரர் கோயில் அன்று அழைக்கப்படுகிறது. அந்தப் புனித நினைவுகளுடன் நாம் இங்கு வந்திருக்கிறோம்.

நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரிகம், மஞ்சள் ஆற்று நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் என்று வரலாறு நெடுக நாம் காண்பது, நதிக்கரைகளில் உருவான குடியேற்றங்களே மனித வாழ்வின் பரிணாம வளர்சிக்கு முதல்படி என்பதாகும். நமது நாட்டிலும் நதிக்கரைகளில் தான் மக்களின் வாழ்க்கை முதலில் தோன்றியது.

உலகின் பிற நாடுகள் நதியைப் பார்ப்பதற்கும் நமது நாட்டு மக்கள் பார்ப்பதற்கு வேறுபாடு உள்ளது. பிற நாடுகளுக்கு நதி வெறும் ஆறு மட்டுமே (River). ஆனால் நாமோ நதியை தாயாக (Mother) வணங்குகிறோம். பாரதத்தில் தான் நிலத்தையும், நதியையும், மொழியையும் நாட்டையும் தாயாக பாவிக்கும் பண்பாடு உள்ளது. இந்த பாவனை மிகவும் முக்கியமானது.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.  

(குறள்- 1040)

– என்று எழுதுகிறார் திருவள்ளுவர். ‘சோம்பி இருப்பவரைக் கண்டால் பூமித்தாய் சிரிப்பாள்’ என்பது இதன் பொருள். அதாவது நிலம் வெறும் நிலப்பரப்பு அல்ல, இது பூமித்தாய்.

இதுபோலவே, தமிழை நாம் தமிழன்னை என்று அழைக்கிறோம். தேசத்தை பாரத அன்னை என்று அழைக்கிறோம். நதிகள் அனைத்தையும் அன்னையாகப் போற்றுகிறோம். தாய்மை உணர்வே அரவனைத்து வளப்படுத்தும் குணம் என்பதால் தான் நதிகளை தாய் என்கிறோம்.

இந்த நாடு முழுவதும் பின்னிப் பிணைந்தவையாக நூற்றுக் கணக்கான நதிகள் பாய்கின்றன. அவை இந்த நாட்டின் நரம்பு மண்டலம் போல விளங்குகின்றன. இந்த நதிகள் அனைத்திற்கும், கங்கை, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி, அமராவதி என்று பெண்களின் பெயர்களை மட்டுமே வைத்திருப்பது அதனால் தான். நதிகள் வளப்படுத்துவதால் தான் நாம் வாழ்கிறோம்.

நமது நாட்டின் நதிகள் பொதுவாக அதிகமான சீற்றம் கொள்ளாதவை. அதனால்தான் பெண்களின் பெயர்களை நமது முன்னோர்கள் வைத்தார்களோ? நம் நாட்டில் ஒரே ஒரு நதிக்கு மட்டுமே ஆண் பெயர் உள்ளது. அது பிரம்மபுத்திரா. அது ஆவேசமான ஆறு என்பதால் அதற்கு மட்டும் ஆண் பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. எனினும் அந்த நதியையும் நாம் அன்னையாகவே போற்றுகிறோம்.

"கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி |
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம் குரு ||"

-இது சநாதன தர்மத்தில் வழிபாட்டிற்கு முன்னரோ அல்லது குளிக்கும் போதோ சொல்லப்படும் புகழ்பெற்ற சுலோகம் ஆகும். “கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு புனித நதிகளின் நீரும் இந்த நீரில் சங்கமிக்கட்டும்” என்று வேண்டுவதே இதன் பொருள்.

நாம் நதிகளை அன்னையாக மட்டுமல்ல, புனிதத்தன்மை கொண்ட தெய்வமாகவும் வணங்குகிறோம். நாம் நதிகளை வழிபடுவது, அவை நம்மை வழிப்படுத்துகின்றன என்பதனால் தான்.

பேரா.இராம.ஸ்ரீநிவாசன் பேசுகிறார்…

“நிலமெல்லாம் காசி, நீரெல்லாம் கங்கை” என்ற சொல்வழக்கு நம்மிடையே உண்டு. இந்த பாவனைகள் தான் நிலத்தையும் நீரையும் தூய்மையாக வைக்குமாறு பல்லாயிரம், ஆண்டுகளாக நம்மைப் பழக்கி வந்துள்ளன. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில் நாம் இந்த புனிதத் தன்மையை மறந்ததனால், நதிகள் பாழ்பட்டு வருகின்றன.

உலகிலேயே நதிநீர்ப் பாசனப் பரப்பளவு அதிகமான நாடு இந்தியா தான். நம்மை விட பரப்பளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, அரேபியா போன்ற பல நாடுகள் பெரிதாக இருந்தாலும், அங்கு நிலவும் காலநிலையும் தட்பவெப்பமும் நதிநீர்ப் பாசனத்திற்கு ஏற்றதாக இல்லை. மாறாக, நம் நாட்டில் நிலவும் பருவநிலை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. எனவே தன் இங்கு முப்போகம் விளைவிக்கிறோம்.

இந்நாட்டிலுள்ள பலகோடி மக்களின் உயிராதாரம் நதிகள் தான். இந்த நதிகள் வழங்கும் தண்ணீர் தான் நமது குடிநீராகவும் அன்றாடப் பயன்பாட்டிற்கும் உதவுகிறது. நதிகள் வற்றிவிட்டால் மனிதகுலம் மாண்டுபோகும்.

ஆனால், நமது பாரம்பரியத்தை மறந்ததால், இன்று நாம் நதிகளுக்கு துரோகம் செய்கிறோம். ஊரின் குப்பை அனைத்தையும் கொட்டுமிடமாக நதிக்கரையை மாற்றி இருக்கிறோம். நமது சாக்கடைகளின் வடிகாலாக நதிகளை மாற்றி, அவற்றையும் சாக்கடையாக்கி வருகிறோம். இந்தப் பாவங்களைத் தீர்க்க ஒரு ஜென்மம் போதாது.

மதுரையில் வைகை ஆறு என்று ஒன்று இருக்கிறது. ஆண்டு முழுவதும் இதன் கரைகளை நாம்தான் நாசப்படுத்துகிறோம். கரையெங்கும் குப்பைமேடுகள். நகரின் சாக்கடைக் கழிவுகள் அனைத்தும் அதில் தான் ஓடுகிறது. இந்த வைகையில் தான் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். ஒருகாலத்தில் புனிதமான நதியாக ஓடிய வைகை இன்று சாக்கடையாகி இருக்கிறது. இதைப்பற்றிய கவலை நமக்கு இருக்கிறதா?

தமிழகத்தின் பிற நதிகளுடன் ஒப்பிடுகையில் அமராவதியின் தூய்மை பரவாயில்லை. ஆனால், தமிழகத்திலேயே அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெறும் ஆறாக அமராவதி மாறி வருகிறது. நதியைக் கொன்றுவிட்டால் நம்மால் வாழ முடியுமா?

பவானியிலும் நொய்யலிலும் காவிரியிலும் தொழிற்சாலைக் கழிவுகளையும் மனிதக் கழிவுகளையும் கலக்கிறோம். அதே ஆற்றில் தான் மக்களுக்கு குடிநீர் எடுக்கும் கிணறுகளையும் அமைக்கிறோம். நம்மை வாழவைத்த நதிகளே இன்று நோய் பரப்பும் மையங்களாகி இருப்பதை உணர்ந்திருக்கிறோமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கூவம் நதி ஓடுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஆற்றில் குளித்து சிரார்த்தம் போன்ற சடங்குகளைச் செய்திருக்கிறார்கள். இன்றைய கூவத்தில் யாராவது குளிக்க முடியுமா? அப்படிக் குளித்தால், அவருக்குத் தான் சிரார்த்தம் செய்ய வேண்டி இருக்கும். கூவம் இன்று சென்னை மாநகரின் மாபெரும் சாக்கடையாகி விட்டது. நதிக்கும் ஆன்மா உண்டு என்பதை நாம் மறந்ததன் வினை இது.

இந்த நிலையை மாற்ற முடியாதா? பிரிட்டனில் பாயும் தேம்ஸ் நதியும் பல ஆண்டுகளுக்கு முன் கூவம் போல மாறி இருந்தது. அந்நாட்டு அரசும் மக்களும் பெரும் முயற்சி எடுத்ததால், இன்று தேம்ஸ் நதி புத்துயிர் பெற்று தூய நதியாக ஓடிக் கொண்டிருக்கிரது. அதுபோன்ற முயற்சியே நமக்கும் தேவை.

நம் நாட்டிலும் இதே போன்ற உதாரணம் உண்டு. 2014ஆம் ஆண்டுக்கு முன் காசி சென்றவர்களுக்குத் தெரியும், அங்கு ஓடும் கங்கை நதியின் அவலநிலை. இன்று அதே கங்கையும் காசியும் எப்படி இருக்கிறது என்று, அண்மையில் அங்கு சென்று வந்தவர்களைக் கேளுங்கள். நரேந்திர மோடி பிரதமரான பிறகு அளித்த தனிப்பட்ட கவனத்தால் கங்கை அங்கே தூய்மையாகி இருக்கிறது; உண்மையாலுமே புனித நதியாகி இருக்கிறது. அரசியல் ரீதியாக யாரும் பிரதமர் மோடியை பல வகையில் குறைகள் கூறலாம்; ஆனால், காசியில் கங்கையின் புனிதத்தை மீட்டெடுத்தற்காகவேனும் அவரைப் பாராட்ட வேண்டும்.

நமது நதிகள் இறந்து கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது நதிக்காக அல்ல; நமது எதிர்காலத்திற்காக. நாம் எத்தனை சொத்துகள் சேர்த்தாலும், தண்ணீர் இல்லையேல் எந்தப் பயனும் இல்லை. எனவே இப்போதேனும் விழிப்புடன் செயல்படத் தொடங்குவோம். அதற்கான சிந்தனையை விதைப்பதே அமராவதி ஆரத்தி விழாவின் அடிப்படை நோக்கம்.

ஆறுகளைக் காக்கும் இயக்கத்தை நாம் அமராவதியில் இருந்து தொடங்குவோம். 282 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு, காவிரியில் கலந்து தஞ்சை டெல்டாவுக்கும் செல்கிறது. நாம் ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் நதியின் தூய்மையைப் பேணினால் ஒட்டுமொத்த நதியும் தூய்மையாகும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன?

  • நாம் ஒவ்வொருவரும் நதிகளில் குப்பை போடுவதைத் தவிர்ப்போம்.
  • ஆறுகளை அசுத்தப்படுத்தாமல் பராமரிப்போம்.
  • நமது வீடுகளின் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதைத் தவிர்ப்போம். உள்ளாட்சி அமைப்புகள், வீடுகளின் கழிவுநீரை மறுசுழற்சி (Recycling) செய்து சுத்தப்படுத்திய பிறகே ஆற்றில் விட வேண்டும். இதனை மக்கள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
  • தொழிற்சாலைக் கழிவுகள், சாயஆலைக் கழிவுகளை ஆற்றில் கலக்க விடுவதைத் தடுப்போம். இதை அரசு நிர்வாகம் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம். அதுவே குப்பைகளில் அரக்கன்.
  • நதியை வெறும் நீராகக் கருதாமல் தாயாகக் கருதினால், அதனை நாம் இழிவுபடுத்த மாட்டோம்.

நதியைப் பாழாக்கினால் தாயைப் பாழாக்கியதற்கு சமம் என்று உணர்ந்தாலே, நமக்கு பொறுப்புணர்வு கூடும்.

மேற்கண்டவற்றைச் செய்வதற்கு நமக்கு மனஉறுதி தேவை. அந்த மனஉறுதியை இங்கு நடைபெறும் அமராவதி ஆரத்தி வழிபாடு நமக்கு அளிக்கட்டும்.

நாம் ஒவ்வொருவரும் அமராவதித் தாயின் படத்தை நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்குவோம்.

ஆரத்தியுடன் இவ்விழா முடிவடையவில்லை. இங்குதான் அமராவதி நதியைக் காப்பதற்கான சுய போராட்டம் தொடங்குகிறது.

நம் அனைவருக்கும் அமராவதித் தாய் அருள்மழை பொழியட்டும்!

  • தொகுப்பு: வ.மு.முரளி

$$$

Leave a comment