திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ? 

-ராம் மாதவ் 

'நான் திமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'   என்று  முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...

தன் எதிர்ப்பாளர்களுக்கு அரிப்பு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி வல்லவர். செங்கோட்டையில் இருந்து ஆற்றிய சுதந்திரதின உரையில் அது போன்றதொரு விஷயத்தை அவர் ஏற்படுத்தினார். “ மாவோயிச சிந்தனை கொண்டவர்கள் பற்பல ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறார்கள். அரசின் கமிட்டிகளிலும் கூட அவர்கள் இருக்கிறார்கள். மாவோயிச சிந்தனை பல்வேறு அரசு அமைப்புகளையும் நிறுவனங்களையும் பாதித்துள்ளது” என்று கூறிய அவர், தனது அரசு ஆயுதமேந்திய நக்சல்களை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு ஆதரவான சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்கள் இன்னமும் பொது வாழ்வில் தொடர்கிறார்கள் என்றும் கூறினார்;  “நாம் அந்த  ‘திமாகி நக்சல்’களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

புறாக் கூண்டில் பூனையை விட்டது போல என்ற முதுமொழியை நினைவுபடுத்தியது,  பிரதமரின் ‘தமாகி நக்சல்கள்’ என்ற சொல்லாடல். சில பிரிவினருக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. சமூக வலைதளங்களில் பிரதமரின்  பேச்சை உற்சாகமாக ஆதரித்தவர்களின் பாராட்டுகளும் அவர்களது அசௌகரியத்தை மேலும் அதிகரித்து விட்டது. காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தான் அந்த அசௌகரியத்தை முதலில் வெளிப்படுத்தியவர். ‘நான் திமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’   என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் . அது ஏராளமான கண்டனத்தையும் கேலியையும் கொண்டு வந்தது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியையே தமாகி நக்சல்கள் கட்சி என்று முத்திரை குத்த வழி வகுத்தது.

சில பத்திரிகையாளர்களை திமாகி நக்சல்கள் என்று சித்தரிப்பது தவறு என்று பத்திரிகையாளர்கள் சங்கம் (எடிட்டர்ஸ் கில்ட்) புகார் கூறியபடி பிரச்சினையில் குதித்தது. எது எப்படியோ மேட்டுக்குடி லுட்டியன்களில் ஒரு பகுதியினரை பிரதமரின் சொல்லாடல் கலக்கி விட்டது.

இதுபோன்ற விஷயங்களை எல்லா நேரங்களிலும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் தெளிவற்று இருப்பதால் ஏற்படும் சர்ச்சைகள் கேடு விளைவிக்காத வரையில் சிரித்தபடி அனுபவிக்கத் தக்கவை. இதற்கு முன்பும் கூட ‘அர்பன் நக்சல்கள்’, ‘கான் மார்க்கெட் கேங்’  என்ற சொல்லாடல்கள் சூடான விவாதத்தைக் கிளப்பின. அதற்கு பொருள்  இதுதான் என்று யாரும் தெளிவாக விளக்கவில்லை என்ற போதும், விஷயம் தெரிந்தவர்கள் தங்களுக்கே உரிய வகையில் அர்த்தத்தை முடிவு செய்து கொண்டனர்.

நானும் பிரதமரின் சொல்லாடலுக்கு விளக்கம் அளிக்கப் போவதில்லை. மாறாக சூழலை சுட்டிக் காட்டுகிறேன். நக்சல் இயக்கத்தின் கருத்தியல் அடித்தளமான மாவோயிசம் வெறும் தீவிரவாதத் திட்டம் மட்டுமல்ல. அது உலகிலுள்ள பல நாடுகளில் பல்வேறு இயக்கங்கள் உருவாக்கிய, நன்கு கட்டமைக்கப்பட்டதொரு கருத்தியல். 1950 – 60 களில் சீனா – ரஷ்யா இடையே வேற்றுமை ஏற்பட்டபோது மாவோ இதை சீனாவில் முன்னெடுத்தார். பின்னர் பெரிய கருத்தியல் மரபாக இது உருவானது. வன்முறையுடன் கூடிய புரட்சி கருத்தாளர்கள், பாடலாசிரியர்கள்,  தத்துவவாதிகள், பிரிவினை/ஊடுருவல்வாதிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கினர்.

கியூபா-வில் சே குவேரா மாவோயிசக் கருத்திலான கொரில்லா போரை  ‘போகோ’ கொள்கை என்ற பெயரில் நடத்தினார். போகோ கொள்கை  ‘அதிதீவிரத்தன்மை கொண்ட ஆயுதம் ஏந்திய சிறு குழு தங்கள் செயல்பாடுகளால் அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியும்’ என்பதாகும். இது போன்ற தலைவர்கள் மற்ற பல நாடுகளிலும் இருந்தார்கள். பெருநாட்டில் கோன்சாலோ, பிலிப்பைன்ஸில்  ஜோஸ் மரியா சீசன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். நம்முடைய அண்டைநாட்டிலும் (நேபாளம்) புஷ்ப கமல் தஹால் –பிரசண்டா,  மாவோயிசப் போரை ‘பிரசண்டா பாதை’ என்ற பெயரில் நடத்தினார்.‌ அது மக்கள் யுத்தத்தையும் நகர்ப்புற எழுச்சியையும் இணைத்து உருவாக்கப்பட்டது.

பிரெஞ்சு தத்துவவியலாளர்களான அலைன் பாடியோ, ஜீன் பால் சார்த்தர், மாவோயிச கருத்தியல் அடிப்படையில் பல பத்திரிகைகளை நடத்திய சிமோன் டி பியூவோயர் போன்றவர்களால், வன்முறைக்கு ஆதரவாக, வலுவான வாதங்களால், உறுதியான கருத்தியலாக  ‘மாவோயிசம்’ முன்னிறுத்தப்பட்டது.

இந்தியாவிலும் சாரு மஜும்தார், கனாய் சட்டர்ஜி, கணு சன்யால் போன்ற அறிவுஜீவிகளால் நக்சலிசம் தொடங்கப்பட்டது. அது வெறும் கொரில்லா இயக்கம் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட அரசுக்கு எதிரான கருத்தியல். வடஇந்தியாவில் வங்காளம் தொடங்கி பிகார் வரையிலும், தெற்கில் ஆந்திரா, கேரளா வரையிலும் உள்ள பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக, சுதந்திர இந்தியாவில், பெரும் அச்சுறுத்தலாக நக்சல் இயக்கம் வடிவெடுத்தது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற பழங்குடியினர் உள்ள மாநிலங்கள் நக்சல்பாரிகளின் ஊடுருவலுக்கு  முக்கிய தளங்களாக ஆகின.

பல தசாப்தங்களாக கல்வித்துறை சார்ந்தவர்கள் , பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பொதுவெளியில் புழங்கும் அறிஞர்கள் ஆகியோரின் துணையினால் அந்த இயக்கம் வலுவான கட்டமைப்பு கொண்டதாக ஆனது. கிராமப்புற, பழங்குடியினர் பகுதிகளில் ஆயுதமேந்திய நக்சல்கள் கொடூரமான, அர்த்தமற்ற வன்முறையை நிகழ்த்திய போது, நகர்ப்புறங்களில் அவர்களுக்கு ஆதரவான சிவில் அமைப்பினர் அந்த வன்செயல்களை அறிவார்ந்த தளத்தில் ஆதரித்தனர்.

கிஷோர் சம்ரிட் (எதிர்) இந்திய அரசு வழக்கில் (2013) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்துறை அமைச்சரகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:  “சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியினரும் அந்தக் கருத்தியலைக் கொண்டவர்களும் மாநகரங்களிலும் நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அரசுக்கு எதிரான திட்டமிட்ட ரீதியில் வலுவான பிரசாரத்தை செய்து வருகின்றனர். அரசை மிக மோசமாகச் சித்தரிப்பதுடன், பொய்யான தகவல்கள் மூலம் அரசை இழிவுபடுத்தியும் வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை. மேலும் அதில் “உண்மையில் மாவோயிச இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்தக் கருத்தியலாளர்கள் பலவிதத்திலும் ‘மக்கள் யுத்த கொரில்லா படை’யினரை விடவும் ஆபத்தானவர்கள்”  என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கை,  “மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களிடையே,  வெகுஜன அமைப்புகள் மூலம் ஒன்று திரட்டுவதும், அந்த அமைப்புகளை தங்கள்  முன்னணி இயக்கமாக முன்னிறுத்தவும் செய்கின்றனர்”  என்று குறிப்பிடுகிறது.

அந்த முன்னணி இயக்கங்கள் ‘மனித உரிமைக்கான அரசு சாராத அமைப்புகள்’ என்ற போர்வையில் நக்சல் கருத்தியலாளர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், களச்செயல்பாட்டாளர்களால் நடத்தப்படுகின்றன என்று, காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணம் செய்துள்ளது.

‘திமாகி நக்சல்கள் ‘ யார் என்று மோடி அரசு விளக்கம் அளிக்கிறதோ இல்லையோ, காங்கிரஸ் தலைமையிலான அரசு அவர்களை வரையறுத்து உச்ச நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தி உள்ளது.  “இந்தியாவில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற / சட்டமன்ற முறையிலான அரசு அமைப்பை ஆயுதப் போராட்டம், சமுதாயத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினரைத் திரட்டுதல், இவர்களிடையே குயுக்தியான கூட்டு மூலம் தூக்கி எறிவது என்ற கருத்தியலைக் கொண்டவர்கள். அதை பிரசாரம் செய்பவர்கள். முன்னெடுப்பவர்கள்”  என்று உச்சநீதிமன்றத்தில் அம்பலப்படுத்தி உள்ளது.

இன்று நம்மைச் சுற்றிப் பார்க்கும் போது மேற்சொன்ன மனநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்படுவதைக் காணலாம். நேபாளத்தில் அரசுக்கு எதிரான ஜென்ஸி புரட்சி ஏற்பட்ட போது இந்தியாவில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ‘இந்திய அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவோம்’ என்று கவர்ச்சிகரமாக முழங்கினார்.  ‘இந்திய ஜனநாயகத்தை நாடாளுமன்றத்திலோ அல்லது தேர்தல் மூலமாகவோ தீர்மானிக்க முடியாது. அது  தெருக்களில் முடிவு செய்யப்படும்’ என்று ஒரு லுட்டியன் அறிவுஜீவி அறைகூவல் விடுத்தார்.

இந்நிலையில்  ‘தமாகி நக்சல்கள்’  என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியம் என்ன ?

  • நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (28.08.2026) Do we really need a definition for ‘dimagi Naxal’?
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார் 
  • கட்டுரையாளர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்.

$$$

Leave a comment