-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -5)

தீபத்தூணா, நிலஅளவைக் கல்லா?
குன்றத்தில் தொல்லியல் துறை ஆய்வு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் இருப்பது தீபத்தூணா, நிலஅளவைக் கல்லா என, தமிழக அரசு தொல்லியல் துறையினர் டிச. 10இல் மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர்.
தொல்லியல் துறை முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தின் படி, மதுரை ஆட்சியர் உத்தரவை ஏற்று, டிச. 10 காலை 8:10 மணிக்கு தொல்லியல் துறை துணை இயக்குநர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறை குழுவினர், திருப்பரங்குன்றம் மலை மேல் சென்றனர்.
அங்கு, மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்து, தீபத்தூணை அளவீடு செய்து, காலை, 11:45 மணிக்குப் புறப்பட்டனர். அவர்களுடன், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் கவிதா, வருவாய் ஆய்வாளர், திருக்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தரேசன், முத்துசாமி, மனோஜ் ஆகியோர் சென்றனர்.
இதுதொடர்பாக, ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் எம்.சோலைகண்ணன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ளது எல்லைக் கல்லா, தீபத்தூணா என தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தது கண்டிக்கத்தக்கது.
தீபத்தூண் இருந்ததற்கான ஆதாரங்கள், ஆவணங்களையும், சட்டத்தின் அடிப்படையில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி தீர்ப்பளித்ததையும் மதிக்காமல், சிறுபான்மையினர் ஓட்டுக்காகவும், அவர்களைக் குளிர வைக்கவும், ‘தீபத்தூணில் தீபம் ஏற்ற விடமாட்டோம்; அது எல்லைக்கல்’ எனக் கூறும் தமிழக அரசு, இத்தனை நாட்கள் கழித்து தமிழக தொல்லியல் துறையை ஆய்வு செய்ய அனுப்பியது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகிறது.
தீபத்தூணை, தொல்லியல் துறை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா? தமிழக தொல்லியல் துறை, மலையை ஆய்வு செய்யப் போகிறோம் என உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனரா? ஆய்வுக்குச் செல்லும் போது, வழக்கு தொடர்ந்த மனுதாரரையோ, மாவட்ட நீதிபதி ஒருவரையோ ஏன் அழைத்து செல்லவில்லை?
நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிப்பதற்கு முன், மலை மீதுள்ள தீபத்தூணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்துள்ளார். அப்படி இருக்கையில், தமிழக தொல்லியல் துறை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்?
தன் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக தொல்லியல் துறையை ஏவி, தீபத்தூணில் உள்ள ஆவணங்களை அழித்து, அது எல்லைக்கல் தான் என நிறுவ, அரசு பார்க்கிறது. நீதிபதிகள் உத்தரவு இன்றி, தீபத்தூணை ஆய்வு செய்த தமிழக அரசின் தமிழக தொல்லியல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு, தீபத்தூணை ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் – என்று கூறியுள்ளார்.
- (தினமலர்- 11.12.2025)
$$$
தொல்லியல் துறை வெளியிட்ட நூலில் தீபத்தூணுக்கு ஆதாரம்!
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள், ‘உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோவில், வேற்கோட்டம்’ உள்ளிட்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் தொல்லியல் துறை 1981இல் வெளியிட்ட, ‘குன்றத்துக் கோயில்கள்’ நூலிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தீபத்தூண் அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நிலஅளவைக் கல் என்று திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டும், அறநிலையத் துறை முன்வரவில்லை. விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, மறுநாள் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. அதையும் அரசு அனுமதிக்காத நிலையில், ‘திருக்கார்த்திகை மறுநாள் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது’ என சிலர் வசைபாடினர்.
ஆனால், ‘கார்த்திகை மாதம் முழுதும் தீபம் ஏற்றலாம். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் பொதுமக்கள் தீபம் ஏற்றலாம் என நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என, மதுரை வழக்கறிஞரும், ஆகம நிபுணருமான சங்கரன் கூறுகிறார்.
தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தீபம் எங்கு ஏற்றுவது, எந்தக் காலத்தில், எந்த நட்சத்திரத்தில், எந்த நேரத்தில் ஏற்றுவது? யார் ஏற்றுவது, எதில் ஏற்றுவது? போன்ற எண்ணங்கள் இன்றைய ஆன்மிக அரசியலில் எழுவது இயல்பானது.
கோயிலின் உரிமை, கோயில் சொத்து சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் வரிசைகட்டி நிலுவையில் உள்ள நிலையில், முருகனின் முதல் படையான திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கும் இருந்தது. அதில், தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்ற சர்ச்சையில் லண்டன் பிரிவியூ கவுன்சில் முதல், உயர் நீதிமன்றம் வரை தீர்ப்புகளை வழங்கி உள்ளன. தற்காலத்தின் தீர்ப்புகளும் அதில் அடங்கும்.
நீதிமன்றங்களில் வெற்றி பெற்று விடுகிறோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களிடம் தோற்றுப் போகிறோம் என்பது உண்மை.
உத்தர காமிகம், உத்தரகாரணாஹமம் என்ற ஆகம நூல்களில் கோயில், வீடு, ஊர் கிராம மையப்பகுதியில், கோபுர, விமான உச்சியில், அரசர் அரண்மனை, மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் ஊரின் மையமாகிய மலை உச்சியில் தீபத்தூணை அமைத்து, அதில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை தீபம் ஏற்றியுள்ளனர். அதை அறியாதவர்கள் சிலர் ‘எல்லைக்கல்’ என்று வாதிடுகின்றனர்.
தீபத்தூண் உயரம், அகலம், வடிவம், தீபம் ஏற்றும் மேல் பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணும் அதன் அடிப்படையிலேயே உள்ளது.
அன்றைய தினம் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் பின்பும் எவ்வளவு நாழிகை கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்றும், அந்த மாலை வேளையில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி கூடிய அல்லது பௌர்ணமி இல்லாமல் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாளில் ஏற்ற வேண்டும்.
மற்ற நாட்களில் தீபம் ஏற்றக்கூடாதா என்று கேள்வி எழும். கார்த்திகை முதல் நாளில் இருந்து, மாதம் முடியும் வரை ஏற்றினால் சிறப்பாகும்.
நம் வீடுகளில் இன்றும் தினமும் மாலை பூஜை அறை, வாசலின் இருபுறம், நடுக்கூடத்தில் வீட்டு முற்றத்தில் தீபம் ஏற்றலாம் அல்லது பௌர்ணமி இல்லாமல் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாளில் ஏற்ற வேண்டும்.
கோயிலில் தீபம் ஏற்றுவதை உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று வகையாகப் பிரித்து, அதில் சிறந்தது முதல் நாள் பரணி தீபம், அடுத்த நாள் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் டிச. 2ஆம் தேதி பரணி தீபமும், 3ஆம் தேதி பெரிய கார்த்திகை தீபத்திருநாளும், 4ஆம் தேதி கார்த்திகை, ரோகிணியோடு கூடிய பௌர்ணமியன்று சர்வ தீப நாளாகவும் ஆகமம் கூறுகிறது. தீபத்தை பக்தர்கள் யார் வேண்டுமானாலும் ஏற்றலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த ராம.ரவிகுமாரை, தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆகம விதிமீறலும் இல்லை. அப்படி தீபம் ஏற்றியவரை, ஊரார் முன்பு கோயில் சார்பில் கௌரவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம்காலமாக தொன்றுதொட்டுத் தொடர்கின்ற ஒரு சமூக கலாசார அடையாளமாகப் பார்க்கப்பட்டதை அழியாமல் பாதுகாப்பது நம் கடமை. இன்றும் குன்றத்துார் உள்ளிட்ட சில கோயில்களில் தீபத்தூணில் பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றி வருகின்றனர் – என்று கூறினார்.
***
நாயக்கர் காலத்து தீபத்தூண்; தொல்லியல் துறை ஒப்புதல்
‘குன்றத்துக் கோயில்’ நூலை, 1981இல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்டது. அதில், 129ஆம் பக்கத்தில், ‘தீபத்தூண்’ என்ற தலைப்பில் ‘மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் சென்றால் தீபத்தூண் இருப்பதைக் காணலாம். இத்தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்த தீபத்தூணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம். இத்தூணில் கார்த்திகை தோறும் ஊர் மக்கள் விளக்கேற்றி வந்தனர்’ என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. எம்.பி., கனிமொழி உள்பட பலர் தீபத்துாணை ‘நிலஅளவைக் கல்’ என்று கூறி வருவது முற்றிலும் தவறு என்பதை தொல்லியல் துறை நூலே உறுதி செய்கிறது.
- (தினமலர் -09.12.2026)
$$$
2 thoughts on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 5”