புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா

-தஞ்சை வெ.கோபாலன்

வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....

எம்.பி.டி.ஆச்சார்யா (1887- 1954)


இந்திய சுதந்திரம் காந்தியடிகள் முன்னின்று நடத்திய அகிம்சை வழிப் போராட்டத்தினால்தான் இறுதியில் கிடைத்தது என்பது உண்மை. ஆனாலும் பாலகங்காதர திலகரின் வழிவந்த பலர் காந்திஜி இந்திய அரசியலுக்கு வருவதற்கு முன், ‘அகிம்சை’ எனும் கோட்பாடு அறிமுகமாகாத வரை, எந்த வகையிலேனும், அது வன்முறை வழியாக இருந்தாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுவது என்று முடிவெடுத்தார்கள். காந்திஜியின் தொண்டர்கள் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், ஆளுவோரின் அராஜகங்களால் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர்; அடிபட்டிருக்கின்றனர். தீராக் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அதுபோலவே திலகர் வழி வந்தவர்கள் வன்முறை, கொலை இவற்றில் ஈடுபட்டாலும் அவர்களது தியாகங்கள் மட்டும் சாதாரணமானதா? உயிரைத் துச்சமாக மதித்து அன்னியனை இந்த மண்ணை விட்டு அகற்றிட அவர்கள் பட்டபாடு, நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

இந்த இருவகை தேசபக்தர்களின் நோக்கம் ஒன்றுதான்; எனினும் வழிமுறை மட்டும் வேறுவேறானது. எந்த வழியில் பாடுபட்டால் என்ன, நாம் சுதந்திரம் பெற வேண்டும், அன்னிய ஏகாதிபத்தியம் மூட்டை முடிச்சுக்களுடன் கப்பல் ஏற வேண்டுமென்பதுதான் அந்த இரு சாராரின் கருத்து என்பதால், இத்தகைய தியாகிகளுக்கிடையே நாம் பாரபட்சம் பார்க்க முடியாது.

இந்திய சுதந்திர வரலாற்றில் அதிக அளவில் வன்முறையில் நம்பிக்கை வைத்து போராடிய தியாகசீலர்கள் வடநாட்டில் மிக அதிகம். தெற்கே ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் நடந்த போதிலும் வ.வே.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், எம்.பி.டி.திருமலாச்சாரி, பாஷ்யம் எனும் ஆர்யா, ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை போன்ற சிலர் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கத்தான் செய்தார்கள். இவர்களுள் குறிப்பிடத் தக்கவர், எம்.பி.டி.ஆச்சார்யா எனப்படும் மண்டையம் திருமலாச்சாரி (1887- 1954).

இந்திய சுதந்திரம் பற்றி ரஷ்யாவின் ஒப்பற்ற தலைவர் லெனினைச் சந்திக்க பல குழுவினர் சென்றனர். அதில் இடம்பெற்ற இரு தமிழர்கள் எம்.பி.டி.ஆச்சார்யா, வீரன் செண்பகராமன் பிள்ளை ஆகியோர். மண்டையம் பிரதிவாதி திருமலை ஆச்சார்யா என்ற பெயரின் சுருக்கம்தான் எம்.பி.டி.ஆச்சார்யா.

மண்டையம் என்பது மைசூர் பக்கம் உள்ள ஒரு கிராமம். இங்கிருந்து குடிபெயர்ந்து சென்னையில் குடியேறிய மண்டையம் குடும்பத்தார் இந்திய விடுதலைக்காகப் பல தியாகங்களைச் செய்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தார் செய்திருக்கிற மாபெரும் காரியங்களைத் திரட்டி வெளியிட வேண்டாமோ?

புரட்சிக்கவி பாரதிக்கும் இந்தக் குடும்பம்தான் பல பெரிய உதவிகளைச் செய்திருக்கிறது. இவர்கள் தொடங்கிய ’இந்தியா’ பத்திரிகை மூலம்தான் பாரதி தனது அக்கினி ஜ்வாலையை ஆங்கில அரசுக்கு எதிராக வீசினான். இந்த மண்டையம் குடும்பத்தில் குறிப்பிடத்தகுந்த தேசபக்தர்கள் மண்டயம் திருமலாச்சார்யா, மண்டயம் எஸ்.என்.திருமலாச்சார்யா, மண்டையம் சீனிவாசாச்சார்யா போன்றவர்கள்.

‘இந்தியா’ பத்திரிகையை சென்னையிலும், பிறகு புதுச்சேரியிலும் நிறுவி சுதந்திரக் கனல் பரப்பி வந்தார்கள். 1917இல் ரஷ்யாவில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. கொடுங்கோலன் ஜார் மன்னன் வீழ்ந்தான். இது குறித்து, அப்போதே மார்க்சீயத்திலும், வன்முறையிலும் நம்பிக்கை வைத்திருந்த எம்.பி.டி.ஆச்சார்யாவின் செல்வாக்குதான் பாரதி ரஷ்ய புரட்சியைப் போற்றிப் பாட காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இவர் இந்தியாவில் இருந்த வரை அதிகம் கவனிக்கபடாதவராக இருந்த போதிலும், கடல் கடந்து அயல்நாட்டுக்குப் போய் அங்கு புரட்சி இயக்கங்களில் ஈடுபட்ட போதுதான், அடடா, இவர் இந்தியாவில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார் என்று சிந்தித்தார்கள் போலும். இவர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமான ‘இந்தியா ஹவுஸ்’ எனும் இல்லத்தில் வீர சாவர்க்கர், வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். உலகங்கெனும் புரட்சி இயக்கத்துக்கான வித்தை இவர் பல நாடுகளிலும் சென்று விதைத்தார். பெர்லின், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களிலும் இவர்கள் தங்கள் கிளைகளை நிறுவினார்கள். ‘உலக சோஷலிஸ்ட் இயக்கங்கள் இந்திய விடுதலையில் அதிக அக்கறை காட்டவில்லை’ என்று கருதினார்கள்.

ரஷ்யாவில் நடந்த மாபெரும் மக்கள் புரட்சி எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கு ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. இந்த புரட்சி ‘யுகப்புரட்சி’ என்று மகாகவி பாரதியால் புகழப்பட்டது. இந்தப் புரட்சியின் விளைவாக இந்தியாவிலும் ஓர் புரட்சியைத் தோற்றுவிக்க முடியும் என்றும் இவர் நம்பினார். ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ எனப்பட்ட குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாயகனாகக் கருதப்படும் எம்.என்.ராய்க்கும் எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. கிலாபத் இயக்கத்தையொட்டி ஆப்கானிஸ்தானில் இந்திய விடுதலைக்காக ஒரு ராணுவப் பயிற்சிக்குத் திட்டமிட்டார். ஆனால் அன்றைய ஆப்கன் அரசு ஒத்துழைப்பு இல்லாமல் இந்த்த் திட்டம் தோல்வியுற்றது.

பல காலம் அன்னிய மண்ணில் இந்திய விடுதலை நாடி சுற்றித் திரிந்து, உலக நாடுகளில் பலவற்றிலும் புரட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு எந்த வகையிலும் எதுவும் பயனளிக்கவில்லை என்ற நிலை வந்ததும், அவர் இந்தியா திரும்பி பம்பாயில் பலகாலம் வாழ்ந்து பின் மறைந்து போனார்- எவ்வளவோ புரட்சிக்காரர்களின் வாழ்க்கையைப் போலவே. வாழ்க புரட்சிகாரர் எம்.பி.டி.ஆச்சார்யா புகழ்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s