அறிவுசார் சொத்துரிமை: தேவை விழிப்புணர்வு

-சேக்கிழான்

இந்தப் போட்டி மிகுந்த, தாராளமய உலகில், இந்தியாவின் சிந்தனைச் செல்வாக்கும் வர்த்தகச் செல்வாக்கும் உயர வேண்டுமானால், நாமும், அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது தொடர்பான விவரங்கள், சட்ட நெறிமுறைகளை பள்ளிக்கல்வியிலேயே நாம் அளிக்கத் துவங்க வேண்டும். நாம் ஒவ்வொருவருமேகூட, அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

.

இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனிநபராயினும், தொழில் நிறுவனங்களாயினும், தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் சிறப்பாக உயரவும், தங்கள் தயாரிப்பின் அடிப்படையைப் பாதுகாக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில், அதிக முதலீட்டு செய்யத் திறனுள்ள எவரும், எந்த ஒரு உற்பத்திப் பொருளையும் எளிதாக நகலெடுத்துத் தயாரித்துவிட முடியும். அதனால், அந்தக் குறிப்பிட்ட பொருளை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அல்லது தயாரித்தவர் எதிர்பாராத நஷ்டத்தை அடைய நேரிடும்.

இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கவே, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Prortey Right) என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுள்ளும், பல நாடுகளுக்கிடையேயும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான படைப்புக்கும் தனிநபரோ, ஒரு நிறுவனமோ உரிமையைப் பதிவு செய்யலாம். அந்த உரிமை உள்ள தனி நபர் அல்லது நிறுவனத்தின் படைப்பு அல்லது பொருளைப் பயன்படுத்துவோர், அதற்கு உரிமைத் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும். இதுவே அறிவுசார் சொத்துரிமைக்கான எளிய விளக்கம்.

இந்த அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் இந்தியாவில் இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. உலகமய பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைக்கு பிரதான இடம் இருப்பதால், அண்மைக்காலமாகத் தான் இந்தியாவில் இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.

உலக அளவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருவனவாக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமங்கள் உள்ளன. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் உடனடியாக காப்புரிமம் பெறுவது அந்த நாடுகளில் சுமார் 100 ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சாதாரண செயலிக்கும் கூட காப்புரிமம் பெறுவது அங்கு ஒரு வர்த்தக நடவடிக்கையாக உள்ளது. அதன்மூலமாக, அந்தச் செயலியைப் பயன்படுத்தும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான உரிமைத் தொகையை அளிக்கின்றன. இது ஓர் உதாரணம் மட்டுமே.

இயந்திரங்கள், ஆயுதங்கள், சாதனங்கள், மருந்துப் பொருட்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி- ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்படும்போது, அதனால் அந்தக் கல்வி நிறுவனமும், சார்ந்த நாடும் காப்புரிமங்களால் லாபம் அடைகின்றன. இந்த விஷயத்தில் நமது நாட்டின் கல்வி- ஆராய்ச்சி அமைப்புகள் மிகவும் பின்தங்கி உள்ளன. நமது அரசு 1990களுக்குப் பிறகே இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்தது; அப்போதுதான் அதற்கான சட்டங்களும் வடிவமைக்கப்பட்டன.

நமது வாழ்வை எளிமைப்படுத்தும் எந்த ஒரு சிந்தனையும் செயலும் புதிய கண்டுபிடிப்பே. பாரத ரிஷிகள் கண்டறிந்த பூஜ்ஜியம் இல்லாவிடில் இன்று உலக நாகரிக வளர்ச்சியே சாத்தியம் ஆகி இருக்காது. 1 முதல் 9 வரையிலான எண்களும், 10, 100, 1000, என்ற வகையிலான தசமஸ்தானங்களும் இந்தியாவிலிருந்தே உலகம் முழுவதும் சென்றன என்பதை உலகமே தற்போது ஏற்கிறது. அதனால் தான் அறிவியல் வளர்ச்சியும் தொழில் புரட்சியும் உலகில் சாத்தியமாகின. அதற்காக, இந்தியா என்றும் உரிமை கொண்டாடியதில்லை. ஆனால், உலகில் கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும், முன்வைக்கப்படும் எந்த ஒரு புதிய சிந்தனைக்கும் இந்தியர்கள் பயன்பாட்டின்போது அதற்கான உரிமத் தொகையை நாம் அறியாமலே அளித்து வருகிறோம். ஒரு பொருளின் விலையிலேயே அதற்கான காப்புரிமத் தொகையும் அடங்கி இருக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இந்தப் போட்டி மிகுந்த, தாராளமய உலகில், இந்தியாவின் சிந்தனைச் செல்வாக்கும் வர்த்தகச் செல்வாக்கும் உயர வேண்டுமானால், நாமும், அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது தொடர்பான விவரங்கள், சட்ட நெறிமுறைகளை பள்ளிக்கல்வியிலேயே நாம் அளிக்கத் துவங்க வேண்டும். நாம் ஒவ்வொருவருமேகூட, அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

எவையெல்லாம் அறிவுசார் சொத்துரிமை?

1. பதிப்புரிமை (Copyright)

2. வணிகச் சின்னம் (Trademark)

3. படைப்புரிமம்/ காப்புரிமம் (Patent)

4. புவிசார் குறியீடு (Geographical Indication)

5. வணிக ரகசியம் (Trade Secret)

-மேற்கண்ட ஐந்தும் அடிப்படையான அறிவுசார் சொத்துரிமைகள் என உலக நாடுகளால் ஏற்கப்பட்டுள்ளன. உலக வர்த்தக நிறுவனமும், இதற்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. நாடுகளிடையிலான அறிவுசார் சொத்துரிமைத் தகராறுகளில் தீர்வு காண உலக வர்த்தக நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் உதவுகின்றன.

இதே அடிப்படையில், ஒரே நாட்டினுள்ளும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு பதிவு அலுவலகங்கள் உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சர்வதேச அளவில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பும் தனியே இயங்குகிறது. அங்குள்ல தரவுகளின் மூலமாக, எந்த ஒரு புதிய சிந்தனை அல்லது பொருள் புதிதாக காப்புரிமம் பெற்றுள்ளது என்பதை அறிய முடியும்.

தொழில்நுட்பப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமம் ((Patent) பெற முடியும். ஒரு கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்குவதற்கு முன்னதாகவே, அது ஏற்கெனவே பிறரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்தியக் காப்புரிமை இணையதளமான www.ipindia.nic.in தளத்தின் மூலமாக, இதனைத் தெரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள காப்புரிமை இணையதளங்களிலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

பதிப்புரிமை யாருக்கு?

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது மூலப் படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கியது.

இந்தப் பதிப்புரிமை என்பது, ஒருவரின் படைப்பாக்கத் திறனை மதிக்கவும், ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

ஒரு படைப்பை எழுதிய எழுத்தாளருக்கு அதற்கான பதிப்புரிமையானது, அதை அவர் எழுதி, வெளியானபோதே கிடைத்து விடுகிறது. அதற்கான பதிப்புரிமை என்பது, படைப்பாளியின் காலத்திலும், அவரது மறைவுக்குப் பிந்தைய 70 ஆண்டுகள் வரையிலும் இருக்கலாம். இந்தக் காலம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

கதை, கவிதை, நாடகம், கட்டுரை, நூல் போன்ற படைப்புகள் மட்டுமல்லாது, மென்பொருள் வடிவமைப்பு, கட்டடக்கலை வடிவமைப்பு, நிலப்படம், புகைப்படம், கிராபிக்ஸ் கலை, ஒளி- ஒலிப்பதிவுகள், இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைப்படைப்புகள், திரைப்படம், கணினி நிரல், தரவு சேமிப்புகள் போன்றவையும் படைப்பூக்கத்தால் உருவாகுபவை என்பதால், அவையும் பதிப்புரிமைக்கான பட்டியலில் வருகின்றன.

பதிப்புரிமையைப் பாதுகாப்பது என்பது, ஒருவரின் எண்ண வெளிப்பாடுகளைப் பாதுகாப்பதல்ல; எடுத்துக்காட்டாக, ஒருவர் பதிப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது; அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது ஏதாவது ஒரு கலை வடிவமாக வெளிப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதைக்கரு யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை அதன் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையில் நிகழ்ந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். இதுபோன்ற சர்ச்சையில், காப்புரிமைச் சட்டங்களின் அடைப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்.

வணிகச் சின்னம் என்பது என்ன?

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர் அதற்கு ஒரு பெயரிடுவது அவசியம். அதே பெயரை மற்றொருவர் பயன்படுத்துவது வர்த்தக நாணயமாகாது. அதேசமயம், புதிய பொருளைத் தயாரிப்பவருக்கும் தனது பொரூளின் பெயரைக் காக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்காக அவர் செய்ய வேண்டியது வணிகச் சின்னப் பதிவாகும்.

வணிகச் சின்னம் என்பது, ஒரு வார்த்தையாகவோ, அல்லது சொற்றொடராகவோ, அடையாளச் சின்னமாகவோ, ஒரு வடிவமைப்பாகவோ, இவை அனைத்தின் ஒருங்கிணைப்பாகவோ இருக்கலாம். உதாரணமாக, கோவையில் இயங்கும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் நிறுவனம் தனது வணிக அடையாளச் சின்னமாக கோட்டமைப்பில் வரையப்பட்ட லட்சுமியின் உருவத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வணிகச் சின்னமே, ஐம்பதாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட அந்த நிறுவனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

டைட்டான் கடிகாரங்கள், கிளாசிக் போலோ பின்னலாடைகள், அடையாறு ஆனந்தபவன் இனிப்புகள், அமுல் ஐஸ்கிரீம் தயாரிப்புகள், தலப்பாகட்டு பிரியாணி,… என வணிகச் சின்னங்களின் எண்ணிக்கை பெருகும். இந்தியாவைப் பொருத்த வரை, அறிவுசார் சொத்துரிமைகளில் அதிக எண்ணிக்கையில் பதிவாகுபவை வணிகச் சின்னங்களே. ஊடக விளம்பரங்களில் இவையே பிரதானமாக கவனிக்கப்படுகின்றன.

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இரு ஜவுளி விற்பனை நிறுவனங்களிடையிலான வர்த்தகப் போட்டி நீதிமன்றம் வரை சென்றது. சென்னையில் ஏற்கனவே குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் ஒரு ஜவுளிக்கடை வணிகச் சின்னத்துடன் இயங்கி வந்த நிலையில், கோவையைச் சேர்ந்த மற்றொரு குமரன் சில்க்ஸ் சென்னையில் கடையைத் துவங்கியபோது, அதற்கு எதிராக வழக்கு தொடுத்து, சென்னை நிறுவனம் வென்றது. ஆனால், அந்தத் தடையே தி சென்னை சில்க்ஸ் என்ற புதிய வணிக சின்னம் உருவெடுக்கவும், தமிழகம் முழுவதும் அந்நிறுவனம் பரந்து விரியவும் காரணமானது.

படைப்புரிமத்தின் முக்கியத்துவம்:

எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் பதிப்புரிமம் அல்லது காப்புரிமம் பெறுவது அவசியம். இல்லாவிடில் அதை நகலெடுத்து தனது கண்டுபிடிப்பாக வேறு யாரேனும் சொந்தம் கொண்டாட முடியும். அதனால், பெரும் உழைப்பையும் நிதியையும் செலவிட்டுக் கண்டறிந்த பொருள் மீதான உரிமையை அதன் கண்டுபிடிப்பாளர் இழக்க நேரிடும்.

இதற்கென பதிப்புரிமை அலுவலகங்களில் தனித்த ஏற்பாடுகள் உள்ளன. புதிய கண்டுபிடிப்பு அல்லது தயாரிப்பின் முழு விவரத்தை, தகுந்த ஆதாரங்களுடன் பதிப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்தால், அதனை அரசு அதிகாரிகள் பரிசீலிப்பர். பிறகு அதுதொடர்பான அறிவிப்பு மேற்படி அலுவலகத்தில் வெளியிடப்படும். அதற்கு குறிப்பிட்ட காலத்தில் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காவிடில், அவருக்கு பதிப்புரிமை வழங்கப்படும்.

சென்ற ஆண்டு அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் இடையே அவர்களது மொபைல் போன் தயாரிப்பு தொடர்பான பதிப்புரிமைச் சச்சரவு நிகழ்ந்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பில் உள்ல பல தொழில்நுட்பங்களை சாம்சங் நகலெடுத்துவிட்டது என்பதே குற்றச்சாட்டு. தனது ஐ-போன் தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் பதிப்புரிமை பெற்றிருந்ததால், அந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்துக்கு பலகோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவைப் பொருத்த வரை, நமது நாட்டின் முதல் காப்புரிமம் பெற்றவர் விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ். 1904-ஆம் ஆண்டு, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து, அதற்கு காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்ற போஸ், அதன்மூலம், ‘இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி’ என்ற பெருமையைப் பெற்றார். அவர் காப்புரிமை பெற்றதே ஒரு சுவையான வரலாறு.

ஆனால், போஸ் முதலில் தனது கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு காப்புரிமம் பெறாமல் இருந்தார். தனது கண்டுபிடிப்பால் வர்த்தக லாபம் அடைய அவர் விரும்பவில்லை. எனினும் சகோதரரி நிவேதிதையின் வற்புறுத்தல் காரணமாகவே அவர் தனது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் காப்புரிமம் பெற்றார்.

அதற்கு முன், ரேடியோ அலைக்கதிர்கள் குறித்த கண்டுபிடிப்பை முதன்முதலில் போஸ்தான் நிகழ்த்தினார். ஆனால் அதனை அவர் முறையாகப் பதிவு செய்யாததால், மார்கோனி என்பவர் அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டார் என்பதை நாம் உணர வேண்டும்.

புவிசார் குறியீட்டின் அவசியம்:

1998ஆம் ஆண்டு, ரைஸ் டெக் என்ற அந்த அமெரிக்க நிறுவனம், வாசனையுள்ள அரிசி ரகம் ஒன்றை தன ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு ‘டெக்ஸ் ரைஸ்’ என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் அமெரிக்காவில் காப்புரிமை கோரியிருந்தது. அது வேறெதுவும் இல்லை, இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசி ரகம் தான்.

அந்த காப்புரிமைப் பதிவு வெற்றி பெற்றிருந்தால், உலகம் முழுக்க, இதுவும் பாசுமதி ரைஸ் ரகம் என்று நினைத்து மக்கள் வாங்கி இருப்பார்கள்; இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க நிறுவனத்தின் வஞ்சக வர்த்தகத் திட்டத்தை அறிந்த இந்திய அரசு உடனே களத்தில் இறங்கியது. இந்திய தொழிலக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.எஸ்.ஐ.ஆரின் தலைவர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கரை அதற்காக நியமித்தது.

மஷேல்கர், சர்வதேச அளவிலும் அமெரிக்காவிலும் அதற்கான சட்டப் போராட்டங்களை நடத்தினார். இந்த பாசுமதி அரிசிக்குத் தேவையான தட்ப வெட்ப நிலை இந்தியாவில் மட்டுமே இருப்பதையும், இந்திய / பாகிஸ்தான் மண்ணுக்கே மட்டுமே பிரத்யேகமான ரகம் இது என்பதையும் அவர் ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டினார். அதன்மூலமாக பாசுமதி அரிசி மீதான நமது உரிமை நிலைநாட்டப்பட்டது.

இந்தச் சிக்கல் நேரிtஅக் காரணம், இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் பாசுமதிக்கு நாம் அதுவரை புவிசார் குறியீடு பெற்றிருக்கவில்லை என்பதுதான். இப்போது இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.

புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடு. குறிப்பிட்ட உற்பத்திப் பொருள், முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தைக் காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருப்பதி லட்டு போன்றவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன. எனவே இவற்றை வேறு நாடுகளிலும் வேறு இடங்களிலும் யாரும் தயாரிக்க முடியாது. அதாவது, இவற்றின் அறிவுசார் சொத்துரிமை புவிசார் குறியீடாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி பலாப்பழம், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, மார்த்தாண்டம் தேன், மணப்பாறை முறுக்கு, பவானி ஜமுக்காளம், சுவாமிமலை வெண்கலச் சிலைகள், சிவகாசி பட்டாசு, கோவில்பட்டி கடலை மிட்டாய், சேலத்து மாம்பழம், பத்தமடைப் பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ள சில பொருட்கள்.

வர்த்தக ரகசியம்- வருவாயின் மூலம்:

ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியல் அதன் போட்டி நிறுவனத்துக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் அவை ரகசியமாகப் பேணப்படுகின்றன. எனினும் நிறுவனத்திலிருந்து விலகி போட்டி நிறுவனத்தில் சேர்பவர் மூலமாக அந்தப் பட்டியல் வெளியாகலாம்; அதனால் அந்த நிறுவனம் நஷ்டமடையலாம். தனது வாடிக்கையாளர் பட்டியலை வர்த்தக ரகசியமாக அந்த நிறுவனம் பதிவு செய்திருக்குமானால், அதனை கசியச் செய்தவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

கோகோ கோலா பானங்களின் தயாரிப்பு மூலப்பொருள் ரகசியம் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள நால்வருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதுவே அந்த பானத்தின் விற்பனை தளராமல் தடுக்கிறது. இதுவே வர்த்தக ரகசியம். இதை முறைப்படி பதிவு செய்துவிட்டால் அறிவுசார் சொத்துரிமை ஆகிவிடும். வால்மார்ட் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி அமைப்பு, அமேசான் நிறுவனத்தின் பொட்டலமிடும் அமைப்பு, பிரிட்டானியா மில்க் பிக்கீஸின் மூலப்பொருள் சேர்க்கை போன்றவை அந்த நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணியாக உள்ளன. அதுவே வர்த்தக ரகசியம்.

ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள் சேர்க்கை, வடிவமைப்புகள், தொழில்நுட்பங்கள், பதப்படுத்தும் முறைகள், உற்பத்திச் செயல்முறைகள் போன்றவை வர்த்தக ரகசியத்தின் கீழ் வருபவை.

கோலா நிறுவனத்துக்கு ஒற்றை ஆளாக சவால் விடும் தமிழகத்தின் காளி மார்க் குளிர்பானங்களின் (குறிப்பாக பொவன்டோ) ரகசியத்தை அறிய பல வெளிநாட்டு நிறுவனங்கள் முயன்றதை அறிவோம். அத்தகைய சூழலில், வர்த்தக ரகசியத்தை அரசுரீதியாகப் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

இதுவரையிலும், பல வகையான அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம். இந்தத் துறையில் நாம் இன்னமும் வளர வேண்டி உள்ளது. நமது கல்வி நிறுவன மாணவர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து பதிவு செய்தால் நமது நாட்டுக்கும் பெருமை சேரும். அதற்கான முனைப்புகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும்.

இந்திய விஞ்ஞானி அருண் நேத்ராவளி அமெரிக்காவின் பெல் லேபாரட்டரிஸ் நிறுவனத்தில் கண்டறிந்த உயர் வரையறு தொலைக்காட்சி தொழில்நுட்பம் (ஹெச்.டி. டெலிவிஷன்) அவரை உலக அளவில் புகழ் பெறச் செய்தது. 70-க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமங்கள் பெற்றுள்ள அவரால் இந்தியாவை விட அமெரிக்காவே அதிக லாபம் அடைகிறது. இந்த நிலையை மாற்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கு கூடுதல் செலவிட்டு, அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் நமது மானவர்களின் அறிவுத்திறன் மடைமாறிச் செல்வது தடுக்கப்பட்டு, இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைகள் பெருகும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s