பகவத் கீதை- பனிரெண்டாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

இதுவரையிலான அத்தியாயங்களில் வில்விஜயனை சிறுகச் சிறுகச் செதுக்கிவந்த பரந்தாமன், இந்த அத்தியாயத்தில் பக்தி யோகத்தை மட்டுமே நாடுமாறு அறிவுறுத்துகிறான். “எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்” என்று வழிகாட்டுகிறான்…

பனிரெண்டாம் அத்தியாயம்: பக்தி யோகம்

ஞான யோக, பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பயனளிக்கு மென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தி யோகமோ கடுகப் பலனையளிக்கு மென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமான தென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன, பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்காரமற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில்தான் கடவுளுக்கு அதிகப் பிரீதி.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா, அல்லது நாசமற்ற  ‘அவ்யக்த’ வஸ்துவை வழிபடுவோரா, இவ்விரு திறத்தாரில் யோகஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

2. என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய், உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவரோ, அவர்களே யோகத்தில் சிறந்தாரென நான் கருதுகிறேன்.

3. இனி அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ,

4. இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.

5. ஆனால்,  ‘அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லை யதிகம். உடம்பெடுத்தோர் ‘அவ்யக்த’  நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

6. எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவரோ,

7. என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.

8. மனதை என்பால் நிறுத்தி; மதியை என்னுட் புகுத்து; இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.

9. என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னை யடைய விரும்பு.

10. பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின், என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.

11. இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால் என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

12. பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்து விடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.

13. எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,

14. எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்.

15. எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும், அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ, அவனே எனக்கினியவன்.

16. எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரத்தையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக்கினியவன்.

17. களித்தலும், பகைத்தலும், துயர்ப்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையுந் தீமையுந் துறந்த தொண்டனே எனக்கினியவன்.

18. பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் சமப்பட்டவன் பற்றுவிட்டவன்.

19. புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மெளனி, யாது வரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், குறியற்றான், ஸ்திர புத்தியுடையான் இத்தகைய பக்தன் எனக்கினியவன்.

20. இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s