பகவத் கீதை- பதின்மூன்றாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

நாம் தேகத்தையே (க்ஷேத்ரம்) பிறவி என நம்புகிறோம். அது இயற்கையின் ஒரு வடிவமே. இதனுள் இருந்து நம்மை ஆட்டுவிப்பது ஆத்மா. இதை அறிந்தவன் க்ஷேத்திரக்ஞன். “பிரகிருதி (இயற்கை), புருஷன் (ஆத்மா) இவ்விரண்டும் அநாதி என்றுணர். காரிய காரணங்களை ஆக்கும் ஏது இயற்கை; சுக துக்கங்களை உணரும் ஏது ஆத்மா” என்கிறான் கண்ணன், இந்த அத்தியாயத்தில்….

பதின்மூன்றாம் அத்தியாயம்: க்ஷேத்ர- க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

இதில் தேகம் – ஆத்மா இவைகளுடைய சொரூபமும், இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினொரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவுக்கு இவை ஒன்றும் இல்லை. அத்தகைய நிலையைப் பெற வேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விட வேணும். ஆசாரியனைப் பணிந்து  அவனருளால் தூய்மை பெற்று புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு –இறப்பு கிடையாது. தேக சம்பந்தமே பிறப்பெனவும் அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்திலும், ஞான யோகத்திலும் பெறலாம். *1 தாவர ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன், ஞானம், ஞேயம் என்னுமிவற்றை *2  அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

2. குந்தி மகனே! இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞனென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.

3. பாரதா! எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.

4. அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப் பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவர் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.

5. அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பல வகைகளிலே பலவேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நிச்சயமுடையவனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.

6. மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,

7. வேட்கை, பகைமை, இன்பம், டுன்பம், உடம்பு, உணர்வு, உள்ளத்துறுதி – இவையே க்ஷேத்திரமும் அதன் மாறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.

8. கர்வமின்மை, டம்பமின்மை, இம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்,

9. இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை,

10. பற்றின்மை, மகனையும் மனைவியையும் வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும், விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை,

11. பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை,

12. ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞானமெனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அஞ்ஞானம்.

13. ஞேயம் எதுவென்பதைச் சொல்லுகிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அது அநாதியாகிய பரப்பிரம்மம். அதை ‘சத்’ என்பதுமில்லை,  ‘அசத்’ என்பதுமில்லை.

14. அது எங்கும் கைகால்களுடையது; எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது;

15. எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது;

16. பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது;

17. உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டது போல் நிற்பது; அதுவே பூதங்களைத் தாங்குவது, அவற்றை உண்பது, பிறப்பிப்பது என்றறி.

18. ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்த தென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படு பொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.

19. இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம், ஞேயம் என்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.

20. பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலே பிறப்பனவென்றுணர்.

21. காரிய காரணங்களை ஆக்கும் ஏது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஏது புருஷனென்பர்.

22. புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜன்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

23. மேற்பார்ப்போன்; அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் – இங்ஙனம் உடம்பிலுள்ள பரம புருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

24. இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்கு வானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.

25. சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால்.

26. இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.

27. பரதக் காளையே! ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின், அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.

28. எல்லாப் பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேசுவரன். அழிவனவற்றில் அவன் அழியான். அவனைக் காண்போனே காட்சியுடையான்.

29. எங்கும் சமானமாக ஈசன் நிற்பது காண்பான். தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொள்ள மாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.

30. எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்.

31. பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

32. ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.

33. எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுவதிலன்.

34. சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுதையும் எங்ஙனம் ஒளியுறச் செய்கிறானோ, அதுபோல் க்ஷேத்திரத்தையுடையோன் க்ஷேத்திர முழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

35. ஞானக் கண்ணால் இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதபிரகிருதியினின்றும் விடுதலை பெற்றுப் பரம்பொருளை அடைகின்றனர்.

அடிக்குறிப்பு விளக்கம்:

*1. தாவர ஜங்கமம் என்றால் நிலைத்திணை, இயங்குதிணைப் பொருட்கள் i.e. the immovables and the movables. நிலம் வீடு போன்ற அசையாப் பொருட்களும், நகை, பொன், பொருட்கள் போன்ற அசையும் பொருட்களும் என்று பொருள்.
*2. க்ஷேத்திரம் = இடம்; க்ஷேத்திரக்ஞன் = இடத்தை அறிவோன்; பிரகிருதி = இயற்கை; புருஷன்= ஆத்மா; ஞானம் = அறிவு; ஞேயம்= அறியப்படு பொருள்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s