-டி.எஸ்.தியாகராசன்
உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது நாடார் சமூக மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

அற்றை நாள் அரசர்கட்கு அமைச்சர்கட்கு அவர்களின் ஆட்சி, அதிகாரங்கள் நிலைக்க உபாயமாக வள்ளுவப் பெருந்தகை,
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு (திருக்குறள்-633)
-என்று சொல்லிப் போந்தார். இக்குறள் வழி அரசர்கள் நடந்தார்களோ இல்லையோ, பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை சற்றும் பிசகாமல் பின்பற்றி நம் நாட்டை அடிமைப்படுத்தினார்கள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களில் முதன்முதலாக பிரித்தாளும் சூழ்ச்சியை 1757-இல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ். வங்காள நவாபாக இருந்த சிராஜ்-உத்-தௌலாவை பிளாசி யுத்தத்தில் வெல்ல முகலாய படைத் தளபதிகளில் ஒருவனும் சிராஜ்-உத்-தௌலாவின் உறவினனுமான மீர் ஜாபரை ரகசியமாகச் சந்தித்து “உன்னை வங்காளத்தின் புதிய நவாபாக ஆக்குகிறேன். இதற்கு பதிலாக நீ போரில் என் படைகளுக்கு எதிராகப் போரிடக் கூடாது என்றான். மீர் ஜாபர் கிளைவின் வேண்டுகோளுக்கிணங்க பிளாசி யுத்தத்தில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக போரிடவில்லை. பிளாசி போரில் கிளைவ் வெற்றி பெற்றான். மீர் ஜாபர் வங்காளத்தின் கவர்னரானான்.
பேரரசர் ஷா-ஆலம்-II இடமிருந்து வங்காளத்தில் நிலவரி, சுங்கவரி வசூலிக்கும் உரிமையை கிளைவ் பெற்றான். சிறிது காலத்திலேயே மீர் ஜாபரையும் தந்திரமாக வீழ்த்தினான். இதனால் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் எல்டர் “கிளைவ் போர்க் கலையைக் கற்கவில்லை. பல ஆண்டுகளாகப் பெற்ற பெரிய அதிகாரிகளில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஒரு சில ஆட்களைக் கொண்டு ஏராளமான படைகளைத் தகர்க்க அவர் பயப்படவில்லை. இந்தியாவைத் தவிர எல்லா இடங்களிலும் எங்கள் மகிமை, மரியாதை மற்றும் நற்பெயரை நாங்கள் இழந்து வருகிறோம். இந்தியாவில் பரலோகத்தில் பிறந்த ஒரு ஜெனரலாக கிளைவ் இருந்தார்” என்று புகழ்ந்தார். கிளைவின் பிரித்தாண்ட சூழ்ச்சியால் ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் கால்கொள்ளத் தொடங்கியது.
அரசியலில் கிளைவ் செய்த பிரித்தல் சூழ்ச்சியைப் போலவே, செயல்பட்ட மற்றொருவர் சர் வில்லியம் ஜோன்ஸ். பல மொழிகள் கற்றறிந்த மேதையான சர் வில்லியம் ஜோன்ஸ், கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் தனது 22ஆவது வயதில் முதுகலை படிக்கும் போதே டென்மார்க் அரசர் கிறிஸ்டியன் (ஏழாவது) வேண்டுக்கோளுக்கிணங்க பாரசீக மன்னர் அல் நாதிர்ஷாவின் வாழ்க்கை வரலாற்றை பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். இவர் தான் ‘ஏசியாட்டிக் சொஸைட்டி’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். இந்துக்களுக்கு என்று ஒரு சட்ட நூலை மனுதர்ம சாஸ்திரப்படி என்று கூறி, இந்து சமூகத்தில் உயர்ந்த, தாழ்ந்த சாதிகள் என்ற முறைக்கு என்று சட்ட நூல் ஒன்றை உருவாக்கினார் இதனை அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நெல்சன், “வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்ப்பு நூல் மேற்கத்திய சிந்தனைகளைக் கொண்டுள்ளது; பிழையாக இருக்கிறது” என்றார்.
காந்தியடிகள் கூட “மனுஸ்மிருதி என்ற மூல நூலுக்கும் வில்லியம் ஜோன்ஸின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் முரண்பாடுகள் உள்ளன” என்றார். இவர் கல்கத்தாவில் தான் இருந்த 11 ஆண்டுகளில் தான் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டார். இந்துக்களுக்கு என்று ஒரு சட்ட நூலைத் தயாரித்தது போலவே இஸ்லாமியர்கட்கும் குரான் வழி ஒரு சட்ட நூலை உருவாக்கினார். இதனால் தான் இந்து- முஸ்லிம் உறவு சீர்கெட்டது.
இந்துக்களிடையே சமூக ஒற்றுமை குலைய இவரது தவறான மனுஸ்மிருதி மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். இவர் இந்த இரண்டு சட்ட நூல்களையும் முழுமையாக முடிக்கும் முன்பே 1794-இல் காலமானார்.
பாரதத்தின் இதிகாச நூல்களான ராமயணத்தைப் படைத்தவர் வேடுவ குல மகரிஷி வால்மீகி. மகாபாரத்தை யாத்தவர் செம்படவ இனத்தில் உதித்த பகவான் வியாசர். இன்று நாள்தோறும் பலகோடி மக்கள் உச்சாடனம் செய்யும் காயத்ரி மந்திரத்தை உலகிற்கு அளித்தவர் ஷத்திரியரான விசுவாமித்திர ரிஷி தான். ராமகாதையை அமுதத் தமிழில் வடித்த கம்பநாடர் உவச்ச குல மரபினர். இவர்களில் யாரும் அந்தணர்கள் இல்லை.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (திருக்குறள்- 423)
-என்ற வகையான் நாம் வாழாது, குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து பொருள் சொன்னாற்போல இன்றைக்கும் பல ஆயிரம் முன்னர் வாழ்ந்த மனுவை தவறாக அடையாளப்படுத்திய ஆங்கிலேய அறிஞரின் கூற்றை நம்பி நம்மை நாமே கூறுபோட்டுக் கொள்கிறோம்
தர்ம நூலை தவறான சட்டவடிவ நூலாக்கியது போலவே நமது தொன்மையான கல்வி முறையை அகற்ற லார்டு மெக்காலே என்பவர் பணியாற்றினார். அவர், 1835 பிப்ரவரி 2 ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தபோது, “நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தபோது பிச்சைக்காரனையோ, திருடனையோ பார்க்க இல்லை. அத்தகைய செல்வ வளம் நிரம்பிய நாடு, உயர்ந்த நன்னெறிகள் வாய்க்கப்பெற்ற இவர்களை, இவர்களது முதுகெலும்பாக இருக்கின்ற காலாச்சார தொன்மையான தெய்வ விழுமியங்களை அழித்தால் ஒழிய இந்தியாவை நம்மால் வெல்ல முடியாது. எனவே நான் அவர்களது புராதனமான கல்வி முறைக்குப் பதிலாக இந்தியர்கள் அவர்களாகவே ‘நமது (வெளிநாட்டவர்கள்) மொழி இவைகள், கலாச்சாரம் எதனைக் காட்டிலும் மிக மேலானது என்று எண்ணும் படியாக’ நாம் மாற்றி விட்டால் அந்த நாட்டை நம் ஆளுகைக்கு கொண்டுவந்து விடலாம். அப்போது இந்தியர்கள் ரத்தத்திலும், நிறத்திலும் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் குணங்களில், கருத்துகளில், ஒழுக் கநெறிகளில், அறிவாற்றலில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்” என்று சொல்லி மெக்காலே கல்வி திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
இதனால் தான் சுவாமி விவேகானந்தர் கூறியது போல “இந்தக் கல்வி முறையால் நமது முன்னோர்களின் ஆற்றலை, பெருமையை முழுமையாக உணரத் தவறிவிட்டோம்”. முதலாவதாக அரசியலில் தொடங்கி, பின்பு நீதிமன்ற வழக்காறு சட்டங்களில் தடம் பிறழச் செய்து கல்வி முறையிலும் இந்தியர்களை மதியிழக்க சதி செய்தார்கள்.
இன்றைக்கு குமாஸ்தா கல்வி முறையில் இருந்து விடுப்பட முடியாமல் தடுமாறுகிறோம். இதனால் தான் மகாகவி “பேடிக் கல்வி” என்று சீற்றத்துடன் பரிகாசம் செய்தார்.
ஆங்கிலேயர்கள் இவை போதாதென்று, சமயம், மொழி, சாதிகளில், பிரிவினையைத் தோற்றுவித்தார்கள். கிறித்துவ மதம் பரப்புகளமாக இந்தியாவை ஆளும் ஆங்கிலேய அரசின் துணையோடு ஆக்கி மதம் மாற்றலானார்கள். பல கோயில்கள் இடிக்கப்பட்டன. ஏழைகளையும் சமயத்தின்மை இல்லாதவர்களையும் எளிதாக மதமாற்றம் செய்தார்கள். இறைவன் இறைவித் திருமேனிகளை “கல்” என்றார்கள். சடங்குகளை ஏளனம் செய்தார்கள். இவர்களது சட்டங்களால் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்று பாழ்பட்டுப் போன சமூக மக்களை மேலும் புண்படுத்தினார்கள்.
1836-இல் அயர்லாந்து பாதிரி கால்டுவெல் இந்தியா வந்தார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள இடையன்குடியில் குடிபுகுந்தார். அங்கிருந்த இடையினத்தார் இவரது வலையில் சிக்க மறுக்கவே அங்கேயிருந்த பெரும்பான்மை சமூகமான நாடர்களைக் கண்டார். முதலில் தமிழ், சமஸ்கிருதம் இந்த இரண்டும், இரண்டறக் கலந்த உறவை வெட்ட, ஒப்பிலக்கணம் என்ற பெயரில் இந்திய மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தையும் தமிழையும் கொச்சைப்படுத்தினார். நம் மக்களோ, நம் மொழியைத் தாழ்த்தினாலும், பரவாயில்லை, சமஸ்கிருதத்தையும் அப்புறப்படுத்துகிறாரே என்ற மகிழ்ச்சியில் அவரைக் கொண்டாடினார்கள்.
பொதுவாக எந்த நாட்டில் கால் பதித்தாலும், ஆங்கிலேயர்கள் உள்ளுர் மொழிகளை அழித்து தம் நாட்டின் மொழியை வேர்விட செய்வார்கள். இப்படி கிறித்துவ மத போதகர்களால் உலகில் அழிக்கப்பட்ட மொழிகள் எப்ரூ, குரோன், கிரேக்கம், லத்தீன், காலிக் போன்றன. இதைப்போன்றே கால்டுவெல் 50 எழுத்துகளைக் கொண்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை 30 எழுத்துகளைக் கொண்ட தமிழுடன் இணைத்து இவை திராவிட மொழிக் குடும்பம் என்றும், சமஸ்கிருதம் திராவிட மொழிக் குடும்பத்துடன் சற்றும் தொடர்பு இல்லாதது எனும் பொய்யை உருவாக்கினார். அவர் தோற்றுவித்த மொழிக் காழ்ப்பு இன்று வரை புதைந்த வண்ணம் உள்ளது.
பிறகு 1849-ல் ‘தின்னவேலி சாணார்ஸ் தேர் ரிலிஜீன் அண்ட் தேர் மாரல் கண்டிஷன் மற்றும் கேரட்டர்ஸ்கள்’ என்ற பெயரில் லண்டனில் நூலை வெளியிட்டார். இதில் தான் நாடார்களை முழுமையாக மதம் மாற்ற முடியாமல் போனதற்கு மூன்று முக்கிய காரணங்களாக 1. சாணர்களின் பரம்பரைக் குணம் 2. அவர்கள் தங்களின் முன்னோரின் பாதையிலே பயணிக்க விரும்புவது 3. புதிய கருத்துகளை உள்வாங்கும் திறமையின்மை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடார்களை மிக கேவலமான முறையில் விமர்சித்திருக்கிறார். ‘சாணார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய வந்தேறிகள். சாணார்கள் கடவுளுக்குப் பயப்படுகிறவர்கள் அல்லர். பொய் சொல்லுபவர்கள், ஏமாற்று வேலையை, தாழ்வான குணங்களையும் உடையவர்கள். இவர் அறிவுப்பூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழைகள். நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள், வணிகப் பொருள்களைத் திருடுபவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், சோம்பேறிகள், மந்தபுத்தியுடையவர்கள். மொத்தத்தில் மேற்கிந்திய தீவிலுள்ள நீக்ரோ அடிமைகளைவிடச் சாணார்கள் அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள்’ என்று ஆங்கிலத்தில் இவர் எழுதிய இப்புத்தகம் இன்றும் சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ளது.
இதனை 1823-இல் பிறந்த அருமைநாயகம் என்ற கிறித்துவ சாணார் தமிழில் மொழிபெயர்த்து கால்டுவெல்லின் சுய உருவத்தை வெளிப்படுத்தினார். இக்காலத்தில் தான் இந்துக்களில் ஒரு பிரிவினர் கால்டுவெல் கூற்றை நம்பி நாடார்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனத் தடுத்தனர். இது தொடர்பாக நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதி மன்றத்தில் (ஓஎஸ் நம்பர் 88 / 1872) வழக்குத் தொடரப்பட்டது. ஈரோடு மாவட்டம், பாசூரைச் சார்ந்த பிராமண மடாதிபதி அய்யாசாமி தீட்சிதர் கால்டுவெல் பாதிரியின் பிரசாரம் பொய் என்றும், நாடார்கள் பாண்டிய குலத்தைச் சார்ந்த ஷத்ரியர்கள் என்றும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். பின்னர் நாடார்கள் மீதான ஆலயப் பிரவேசத் தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைப்போன்றே கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலயப் பிரவேச வழக்கில் (ஓ.எஸ் 33 / 1898) நாடார்களுக்காகத் தில்லைவாழ் தீட்சிதர்களும், பிற அந்தணர்களும் மதுரை சார்பு மன்றத்தில் சாட்சியம் அளித்தனர். நாடார்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆதாரமாக வைக்கப்பட்டவை கால்டுவெல்லின் நூல்கள்.
சாணார்கள் இழிந்த பிறவிகள் என்று கால்டுவெல் எழுதியுள்ளதை நம்பி இந்துகளில் சில பிரிவினர் நாடார்களின் கோயில் பிரவேசத்தை எதிர்த்ததால், அருப்புக்கோட்டை, மதுரை, கழுகுமலை, கமுதி, பாட்டகுளம், புதுப்பட்டி, சுக்கிரவார்பட்டி, ஐயம்பட்டி, குன்னூர், சங்கரலிங்காபுரம், கரிசல் குளம், கட்டமார்பட்டி போன்ற இடங்களில் 1860 முதல் 1900 வரை சாதிக் கலவரங்கள் நடந்தன. இவற்றிற்கு மூல காரணம் கால்டுவெல்லின் தவறான நூலே.
உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது இம் மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சரப்பாக்கம் தொண்ணீஸ்வரர் கோயில் கல்வெட்டிலும், மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டிலும், மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1230-14 ஆவது ஆட்சிக்காலக் கல்வெட்டிலும் “கண்டியூர் நாடாழ்வான்” சாத்தநேரி நிலங்களை கொடையாகப் பெற்றதும் விபரமாக குறிக்கப்பட்டுள்ளது.
உ.வே.சா. எழுதியுள்ள நிகண்டில் (1842) நாடாழ்வான் எனும் சொல் சாணார்களின் பட்டப்பெயர் என்று எழுதியுள்ளார். இந்திய சென்சஸ் அறிக்கை (1891) வால்யூம் 12. பக் 297-இல் நாடாழ்வான் என்பவர் நாடு எனும் பகுதியை ஆளுமை, செய்பவர் என்ற குறிப்பு உள்ளது.
1907-ஆண்டு வி.தாகம்மையாவரால் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பில் சாணார் வம்சத்தில் “உடுமால்கட்டு” என்ற பெயரில் தலைப்பாகையும், வீரத்தின் அடையாளமாக ஷத்ரிய பாரம்பரியம் மிக்க “உடைவாள்” அணிவதையும் சம்பிரதாயமாகக் கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பீடும் பெருமையும் வாய்ந்த சமூகத்தை தன் சுய மத வணிகத்திற்காக கீழ்மைப்படுத்தி எழுதிய நூலை, அருமைநாயகம் என்ற கிறித்துவரைப் பின்பற்றி, வரலாற்று ஆய்வாளர் உமரி காசிவேலு எழுதியுள்ள ‘திருநெல்வேலி சாணார்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலில் இன்னும் நிறைய செய்திகளும் வரலாற்று குறிப்புகளும் உள்ளன.
தென்காசியில் காசி விசுவநாதர் திருக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைத்து அதன் பிறகு தன்னால் கட்ட முடியாததால் பாண்டிய மன்னர்களின் ஒருவன், “வருங்காலத்தில் கட்டி முடிக்கின்றவனது திருவடிகளை என் சென்னியில் வைத்து போற்றுவேன்” என்று கல்வெட்டாக எழுதி வைத்தான். இன்றைக்கு நாடார் குலத்தோன்றல் சிவந்தி ஆதித்த நாடார் தன் காலத்தில் அதனைக் கட்டி குடமுழுக்கும் செய்து புகழாய்ந்தார்.
தற்போது திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஹெச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் ரூ. 200 கோடி அளித்துள்ளார்.
வணிகம் இயற்றி வாழ்க்கை நடத்த வந்தவர்கள் நம்மிடையே வேற்றுமையுணர்வை, அரசியல், நீதிமன்ற சட்டம், மொழி, சமயம், சாதி போன்றவற்றில் உயர்வு, தாழ்வினைக் கற்பித்து நம்மைப் பிரித்தாண்டார்கள்.
இதனால் தான் 1902 பிப்ரவரி 4-ஆம் நாள் ‘சென்னை மகாஜன சபை’ தனக்கு அளித்த வரவேற்பு வைபவத்தில் “இந்திய மக்களாகிய உங்களிடம் மற்ற நாடுகளுக்குத் தருவதற்கு ஆன்மிகக் கருத்துகள் நிறைய இருக்கின்றன. இந்தியா மேற்கு நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ளுவதற்கு ஆன்மிகத்தில் எதுவும் இல்லை. இந்தியாவிற்குத் தேவைப்படும் சமுதாய மாற்றங்களைச் செய்வதற்கு உரிய முழுத் தகுதியும் இந்தியர்களாகிய உங்களிடம் இருக்கிறது. இதில் தலையிட்டு அறிவுரை கூறுவதற்கு வெளியில் இருக்கும் யார்க்கும் உரிமையில்லை. மூன்றாயிரம் வருட நாகரிகம் கொண்டியிருக்கும் உங்களை சமீபத்தில் தோன்றிய மேற்கு நாடுகள் வழிநடத்தும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?” என்று மகாகவியின் குருமணி சகோதரி நிவேதிதை கேட்டார்.
- நன்றி: தினமணி (10.10.2022)
$$$