-ச.சண்முகநாதன்
தமிழ் இலக்கியத்தின் பொன்முடி கம்ப ராமாயணம். வால்மீகி ரமாயணத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் கம்பர் (பொ.யு. 1180- 1250) இயற்றிய ’ராமாவதாரம்’ தனது இலக்கிய வன்மையால் கம்ப ராமாயணம் என்று சிறப்புப் பெயர் பெற்றுவிட்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்ட அற்புதமான இலக்கியம் இது. இந்நூலில் தேர்ந்த திரு. ச.சண்முகநாதன் எழுதியுள்ள இனிய கட்டுரை இது...

“காசில் கொற்றத்து ராமன்” என்றான் கம்பன். குற்றமற்ற (காசு = குற்றம்) வெற்றியையுடையவன் ராமன்.
பகைவரை வெல்லும் வழியாகட்டும், தவறுகளைத் தண்டிக்கும் வகையாகட்டும். காதல் செய்யும் முறையாகட்டும், மனங்களை வெல்லும் திறனாகட்டும், ராமனுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதையே கம்பன், ‘காசில் கொற்றத்து ராமன்’ என்று புகழ்ந்து பாடுகிறான்.
காசில்லாதவன் ராமன்
வரமாய் வரமிருந்த கோசலை வயிற்றில் அயோத்தி மாநகரில் பிறக்கிறான்.
எல்லோரிடமும் எல்லாச் செல்வங்களும் இருந்ததால் மக்களிடையே ஏற்றத்தாழ்வே இல்லை. அப்பேர்ப்பட்ட நகரம் அயோத்தி.
“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை”
அவன் கால் பட்டு விமோக்ஷணம் நீங்க ஒரு கல் காத்துக் கிடந்தது. கல்லுக்கும் உயிர் தரும் பாதம் கொண்டவன் ராமன்.
“தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான் கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி"
-என்று அகலிகைக்கு பாப விமோசனம் சொல்லி வைத்தான் கௌதம முனிவன்.
வில் முறித்து சீதையை மணந்து அவளுடன் கானகம் புகுந்து ஒரு நாள் கங்கையில் நீராடுகிறான். கங்கை நதியோ தான் புண்ணியம் பெற்றதாக எண்ணுகிறாள். எல்லோரும் என்னிடம் வந்து குளித்து புண்ணியம் பெறுவர். ராமா! நீ வந்து குளித்ததால் நான் புண்ணியம் அடைகிறேன் என்று பூரித்துப் போகிறாள்.
“பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர், என்னின் நீக்குவர்; யானும், இன்று என் தந்த உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்”
-என்கிறாள் கங்கை அன்னை.
குகன், அன்பின் இனிமையில் வெள்ளந்தியாக, “ராமா உனக்கு தேனும் மீனும் கொண்டு வந்திருக்கிறேன். நான் சமைத்த உணவைச் சாப்பிடுவாயா?” என்று அன்பொழுகக் கேட்கிறான்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?”
அவனையும் அணைத்து அருகில் உக்கார வைத்து அன்பு செய்தவன் ராமன். சமூகநீதியின் கரை கண்டவன். உடன் பிறந்தவர் தவிர்த்து முதன்முதலில் சகோதரனாக ராமன் ஏற்றுக் கொண்டது ஒரு மீனவனை.
பரதன் தேடி வந்து “நீயே வந்து ஆள வேண்டும்” என்று வேண்டிக்கொண்ட பொழுது, “ஒருவனுக்கு வாய்மை முக்கியம். கொடுத்த கொடுத்த வாக்கை மீறுவது அறமல்ல” என்று அறிவுறுத்தி அதன்படி வாழ்ந்து காட்டியவன்.
“வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம், ‘தூய்மை’ என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ?”
குற்றமில்லாதவன் ராமன்
அழகன்! குற்றமில்லாத அழகுடையவன் ராமன். “ஆடவர் ஆபரணங்கள் அணிந்து தங்களை அழகாக காட்டிக்கொள்வர். இவன் அழகை எந்த ரத்தினக்கல்லும் அதிகப்படுத்தி விட முடியாது” என்று அரக்கியரும் விரும்பும் அழகுடையவன் ராமன்.
“மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் வேறு ஒரு மணியினால் விளங்குமோ?”
சுக்ரீவன் “ஐய! நீ வாலியை வெல்லும் ஆற்றல் கொண்டவன் என்பதை அறிய, ‘ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ, நின் அம்பு போகவே, என் தன் மனத்து இடர் போம்’ என்று கேட்ட பொழுது, why not என்று புன்முறுவல் பூத்தபடியே, ஒன்றல்ல, அந்த ஏழு மரங்களையும் தன் வில்லால் துளைத்துக் காட்டிய வீரன்.
தன்னால் தோற்கடிக்கப்பட்ட வாலியும் தன் மகனை அழைத்து “இவன் உத்தமன். இவன் திருவடி சுமந்து வாழ்வாயாக!” என்று சொல்லும்படியான உத்தமன் ராமன்.
“பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய்! பொது நின்று, தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி”
-என்றான் வாலி.
ராவணனுடனான இறுதிப்போரில் அறத்தின் வழி நின்று வென்றவன் ராமன். மயங்கிய நிலையில் இருக்கும் எதிரியை வெல்வது நியாயமல்ல, என்று அவன் தெளிந்து எழுந்த பின் போரிட்டவன் ராமன்.
“படை துறந்து, மயங்கிய பண்பினான் இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?”
‘காசில் கொற்றத்து ராமன் – குற்றமற்றவன் ராமன்
மீண்டும் அயோத்திக்கு அரசனாய் முடிசூட்டிக்கொண்ட பின் தனக்கு உதவிய (குகனும், வானர சேனைகளும்) எல்லோரையும் அழைத்து அன்பு செய்தவன் ராமன். அனுமனிடம் அதிக அன்பு செலுத்தி “உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என்னை அணைத்துக்கொள்” என்று அனுமனை மார்போடு சேர்த்துக்கொண்ட புண்ணியன்.
“...அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை: பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!”
-என்றவன் ராமன்.
தந்தைக்கும், தாய்க்கும், சிற்றன்னைக்கும், மனைவிக்கும், தம்பியர்க்கும், நண்பர்களுக்கும், எதிரிக்கும் மற்றும் எதிரியின் சுற்றத்திற்கும் இனிமையானவன் ராமன்.
அந்தப் புண்ணியனை வணங்குதல் நமது பேறு!
“வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல் ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ! செய்ய தீ அனைய அத் தேவும் நீ!”
- குறிப்பு: ராமநவமியின் போது திரு. எஸ்.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது…
$$$