தேநீரும் விவேகானந்தரும்

-திருநின்றவூர் ரவிகுமார்

தேநீரில் இத்தனை விஷயமா? ஒரு கோப்பை தேநீருக்காக நீதிமன்றம் சென்றாரா சுவாமி விவேகானந்தர்? படியுங்கள் இந்தக் கட்டுரையை... கூடவே ஒரு கோப்பை தேநீரும் சுவையுங்கள்!

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் சுவாமி சாரதானந்தர். அவர் தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர். அவர் நிறைய தேநீர் (டீ ) குடிப்பார்.

சுவாமி விவேகானந்தரின் தம்பி பாரிஸ்டர் மகேந்திரநாத் தத்தா. இவரும் திருமணம் செய்துகொள்ளாமல், துறவியாக வாழ்ந்தவர். ஒருமுறை இவர் சுவாமி சாரதானந்தருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, “எப்படி நீங்கள் டீக்கு அடிமை ஆனீர்கள்? யார் சொல்லிக் கொடுத்தது இந்தப் பழக்கம்?” என்று கேட்டார்.

பட்டென வந்தது பதில். “வேறு யார், உன் அண்ணன் தான். உங்க குடும்பத்தில் இருக்கும் பழக்கத்தை பரநாகூர் மடத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படித் தான் நாங்கள் எல்லாம் டீ பைத்தியம் ஆனோம். உன் குடும்பத்தில் போதைப் பழக்கம் உள்ளது என்பது உனக்கு புரியுதா?” என்றார் சுவாமி சாரதானந்தர்.

உண்மை தான், சுவாமி விவேகானந்தரும் ஒரு டீ பைத்தியம் தான். அந்தக் காலத்தில் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் தேயிலைப் பழக்கத்தை எதிர்த்து வந்தனர். டீ குடிப்பது உடல்நலத்திற்குக் கேடானது என்று கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய் டீ குடிப்பதை எதிர்த்து பிரசாரம் செய்து வந்தார்.

பொதுவாக துறவிகள், அதிலும் இமயமலை, கங்கைச் சாரலில் வசிக்கும் துறவிகள் கஞ்சா, அபின் போன்றவற்றை உண்பது சகஜம். இந்நிலையில் சுவாமி விவேகானந்தர் தன்னுடைய மடத்தில் போதைப் பொருட்களை தடை செய்தார். ஆனால் டீ குடிப்பதை அறிமுகப்படுத்தினார் என்பது சுவாரசியமானது. சமுதாயத் தலைவர்கள் டீயை எதிர்த்தபோது அதை துறவியர் மடத்தில் அறிமுகப்படுத்தியது அவர் உண்மையில் ஒரு புரட்சித் துறவி என்பதையே காட்டுகிறது.

மகேந்திரநாத் தத்தா தன்னுடைய சரித்திரத்தில் தேநீர் வங்காளிகளின் வாழ்க்கையில் அறிமுகமானது அண்மையில் தான் என்று குறிப்பிடுகிறார். “நாங்கள் சிறுவயதில் ‘ச்சாய்’ (தேநீர்) என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அது என்ன, திடமா திரவமா என்று தெரியாது! எங்கள் அத்தைகளில் ஒருவருக்கு குழந்தை பிறந்தபோது டீயை மருந்துபோலக் கொடுத்தார்கள். கருப்பு நிறத்தில் ஒரு கொதிகலன் வாங்கி வந்தார்கள். அதில் சில இலைகளை கிள்ளிப் போட்டு கொஞ்சம் வெந்நீரை ஊற்றிக் கொதிக்க வைத்தார்கள். பிறகு அந்தத் திரவத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் பாலையும் சர்க்கரையையும் கலக்கி அவருக்குக் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் தேயிலை இந்தியாவில் விளையவில்லை. சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டது” என்று அவர் எழுதியுள்ளார்.

மகேந்திர நாத் தத்தா பிறந்தது 1869-இல். அவர் மேலே குறிப்பிட்டுள்ளது ஓரளவுக்கு உண்மை. ஆனால் தேயிலை இந்தியாவில் விளையவில்லை என்பது உண்மையல்ல. 1820-லேயே உலகப் புகழ்பெற்ற அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் இந்தியாவில் தொடங்கிச் செயல்பட்டு வந்தது. துவாரகா நாத் தாகூர் மற்றும் சில வங்காளி வியாபாரிகள் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்கள். 1864-லேயே அந்த நிறுவனம் லண்டனுக்கு மூன்று மில்லியன் பவுண்டுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இவை நடக்கும்போது சுவாமி விவேகானந்தருக்கு வயது ஒன்று. எனவே வங்காளிகளுக்கு தேநீர் தெரியாத ஒன்று அல்ல. ஆனால் அதனை தேவபானமாக ஆங்கிலேயர்களும் அவர்களுடன் தொடர்புடைய மேட்டுக்குடியினர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

மகேந்திரநாத் தத்தா வேறொரு இடத்தில், “எங்கள் அண்ணன் ஒருமுறை ஆங்கிலோ இந்தியன் ஏலக்கடையில் ஐந்து அணாவுக்கு ஒரு தேயிலைக் கொதிகலனை வாங்கி வந்தார். அதன் மேலெல்லாம் ஏகமாக கரி படிந்திருந்தது. நான் அதை நன்கு தேய்த்துக் கழுவினேன். கழுவிய பிறகு தான் எனக்குத் தெரிந்தது, அது முழுவதும் சுத்தமான வெள்ளியில் செய்யப்பட்டது என்று” என எழுதியுள்ளார்.

சுவாமி விவேகானந்தருக்கு சிறுவயதிலேயே டீ குடிக்கும் பழக்கம் இருந்தது. அவரது தந்தை விஸ்வநாத தத்தர் வசதி படைத்த வழக்கறிஞர். அவர் திடீரென காலமான பிறகு குடும்பம் கஷ்டப்பட்டது. அப்போதும் கூட சுவாமி விவேகானந்தர் டீ குடிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்தார். ஒருமுறை அவரது நண்பர் காளி (பின்னாளில் சுவாமி அபேதானந்தர்) அவர் வீட்டில் இரவு தங்கினார். குடும்பச் சூழல் வறுமையாக இருந்தது. எனவே காளிக்கு உண்ணக் கொடுக்க எதுவுமில்லை. அதுவோ குளிர்காலம். பசியும் குளிரும் சேர்ந்து காளியை வாட்டியது. அவரது கஷ்டத்தைப் பார்த்த சுவாமிஜி எங்கிருந்தோ ஒரு தேநீர்க் கொதிகலனைக் கொண்டுவந்தார். தேநீர் தயாரித்து நண்பருக்குக் கொடுத்து, துன்பத்தை விலக்கினார். இப்போது போல எரிவாயு அடுப்போ மின்சார அடுப்போ இல்லாத அந்தக் காலத்தில் இரவு வேளையில் சுவாமிஜி தேநீர் தயாரித்துக் கொடுத்தது கவனிக்கத்தக்கது.

ராமகிருஷ்ணா மிஷனில் பரவலாக அனைவரும் டீ குடிப்பது பற்றி சுவாமி சாரதானந்தர் ஒருமுறை விளக்கியுள்ளார். “சிவராத்திரி விரதத்தின் போது கூட நாங்கள் டீ குடிப்பது உண்டு. ஏன் தெரியுமா? கவனி. ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதி அடைந்த (16 ஆகஸ்டு 1886) அன்று நாங்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தோம். சோகத்தில் எவரும் எதையும் சாப்பிட முடியாமல் இருந்தோம். அந்த நேரத்தில் யார் அடுப்பைப் பற்றவைத்து சமையல் செய்வது? ஆனால் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, எப்படியோ தேநீர் தயாரிக்கப்பட்டது. நாங்கள் அதை ஒரே முட்டாகக் குடித்தோம். மிக ஆழ்ந்த சோகத்தில் தேநீர் குடிக்க முடியுமென்றால் சாதாரண சிவராத்திரிக்கு ஏன் குடிக்கக் கூடாது?” என்று அவர் விளக்கினார்.

சாரதானந்தர், மகேந்திர நாத் தத்தா, குட்வின் (இவர் தான் சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து, எழுதியவர்) பாக்ஸ் (இவர் விவேகானந்தரின் நண்பரும் சீடரும் ஆவார்) ஆகிய நால்வரும் லண்டனில் இருந்தபோது, ஆங்கிலேயர்கள் தேநீர் தயாரிப்பதைப் பார்த்து எழுதியுள்ளார் மகேந்திரநாத்:

“வயதான அந்த வீட்டுக்காரம்மா ஒரு தேநீர்ப் பானையில் தேநீர், ஒரு சின்னப் பானையில் பால், வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டுகள், சர்க்கரைக் கட்டிகள், ஒரு பெரிய சொம்பில் வெந்நீர்  ஆகியவற்றைக் கொண்டு வந்தார்.

டீ ‘லைட்’ டாக வேண்டுமென்றால் வெந்நீரைக் கலந்து கொள்ளலாம். பொதுவாக ஆங்கிலேயர்கள்  ‘லைட்’ டீதான் குடிப்பார்கள். வங்காளிகள் ‘ஸ்ட்ராங் டீ’ குடிப்பார்கள். ஆங்கிலேய மாலுமிகள் ஸ்ட்ராங் டீ குடிப்பார்கள். எனவே இங்கிலாந்தில் ஸ்ட்ராங் டீக்கு  ‘மாலுமி டீ’ என்றே பெயர்.

குட்வின் எங்களுக்கு டீ பரிமாறினார். எல்லோரும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் டீயையும் எடுத்துக் கொண்டனர். பொதுவாக வெள்ளைக்காரர்கள் டீயில் பால் சேர்க்க மாட்டார்கள். நான் டீயில் சூடான பாலை சிறிதளவு கலந்து கொண்டேன்.

ஆனால் அந்தப் பால் சற்று உப்புக் கரிப்பாக இருந்ததால் என்னால் டீயைக் குடிக்க முடியவில்லை. அவர்கள் பசுவுக்கு அதிக உப்பு கலந்து தீனி போடுகிறார்கள். அவர்கள் பாலை காய்ச்சுவது இல்லை என்பதால், வங்காளத்தில் ஏற்படுவதுபோல, ஆடைகட்டுவதும் இல்லை. அதனால் பாலாடைக்கு ஆங்கிலத்தில் வார்த்தையே இல்லை!

அவர்கள் பயன்படுத்தும் சர்க்கரை பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குல சதுரக்கட்டியாக இருக்கும் 3 கட்டி சேர்த்தால் ஒரு கியூப். அதை சர்க்கரைக் கட்டி என்கிறார்கள். அதை எடுக்க ஒரு கரண்டி. எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் கையால் எடுக்கக் கூடாது”

-என்று மகேந்திர நாதர் எழுதியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் தனது நண்பருக்கு டீ தயாரித்ததைப் பார்த்தோம். வெளிநாட்டில் சுவாமிஜி டீ குடித்தது பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் மாலை 4 மணிக்கு சுவாமிஜி தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பி வந்தார்; டீ குடித்தார். டீயில் பாலுக்குப் பதிலாக எலுமிச்சைத் துண்டுகளைப் போட்டு, அதில் டீயையும் சர்க்கரையையும் சேர்த்தார்; கலக்கிவிட்டு, மெதுவாக டீயை உறிஞ்சிக் குடித்தார். பிறகு “இப்போதெல்லாம் எனக்கு டீ பிடிக்கவில்லை. இதில் பாலை சேர்க்கக் கூடாது. அது வயிற்றுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் உள்ள மக்கள் டீயில் எலுமிச்சையைச் சேர்ந்துக் குடிக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது” என்று சொன்னார்.

அமெரிக்காவைப் புகழ்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். வேறு ஒரு இடத்தில், “அமெரிக்கர்கள் எல்லா விஷயத்திலும் அளவுக்கதிகமாகத் தான். அவர்கள் டீயில் எலுமிச்சைப் பழத்தைச் சேர்த்துக் குடிக்கிறார்கள். ஐஸ் கட்டிகளைக் கூடப் போட்டுக் குடிக்கிறார்கள்! கோடைக்காலத்தில் ஐஸ் சேர்த்த டீயை விரும்பிக் குடிக்கிறார்கள். அவர்கள் கோப்பை நிறைய ஊற்றிக் கொள்கிறார்கள் ஆனால் கொஞ்சம் தான் குடிக்கிறார்கள் மீதி வீணாகிறது. இது மிகவும் கொடுமை” என்று குறிப்பிடுகிறார்.

சுவாமிஜி ஏழைகளின் மீது பரிவு கொண்டவர். அவர் நினைவிலிருந்து அவர்கள் அகலுவதே இல்லை. ஏழைகள் டீ குடிப்பதைப் பற்றியும் சுவாமிஜி குறிப்பிட்டுள்ளார். அது சுவாரசியமானது.

“ஏழைகள் தங்கள் வாயில் வெல்லக்கட்டியை வைத்துக்கொண்டு டீ குடிப்பார்கள். ஒருவர் டீ குடித்த பின்பு வாயிலிருந்து வெல்லக்கட்டியை எடுத்துக் கொடுப்பார்கள். அடுத்தவர் அதை வாயில் போட்டுக் கொண்டு டீ குடிப்பார். இது இப்படியாகத் தொடரும் என்று தனது பரிவ்ராஜக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் அமெரிக்காவை இவ்விஷயத்தில் சாடுகிறார்.

வேறொரு இடத்தில் பேசும்போது, “டீயை இங்கிலாந்து, ரஷ்யா தவிர வேறு எந்த நாட்டிலும் அதிகமாகக் குடிப்பதில்லை. ரஷ்யர்கள் மிக அதிக அளவில் டீ குடிக்கிறார்கள். அது குளிர்ப் பிரதேசம். எனவே அப்படியிருக்கலாம். ரஷ்யாவுக்கு அருகிலுள்ள சீனாவிலும் டீ குடிக்கிறார்கள். சீனா டீ நன்றாக உள்ளது. அது பெரும்பாலும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகிறது. ரஷ்யர்களும் சீனர்களைப் போலவே பால் சேர்க்காமல் டீ குடிக்கிறார்கள். பொதுவாக டீ குடிக்கும் இனத்தினர் – சீனா, ஜப்பான், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் எல்லோரும் பால் சேர்க்காமல் தான் டீ குடிக்கிறார்கள். ரஷ்யர்கள் மட்டுமே எலுமிச்சையையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்கிறார்கள்” என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

டீ இந்தியாவில் அந்நியர் வருகைக்குப் பின் அறிமுகமானது என்று பலரும் கருதினாலும், அது உண்மை அல்ல என்கிறார் சங்கர் முகர்ஜி. இவர் சிவகாளி பட்டாச்சாரியாவை மேற்கோள் காட்டுகிறார். சிவகாளி பட்டாச்சாரியா வங்காளத்தைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர். இவர் டீக்கு சமஸ்கிருதத்தில் ஐந்தாறு சொற்கள் உள்ளன என்றும் அந்த வார்த்தைகளை விளக்கியும் உள்ளார். இது சங்கர் எழுதிய நூலில் உள்ளது.

டீ குடிக்கின்ற பழக்கத்தினால் ராமகிருஷ்ண மடத்திற்கு தொல்லையும் வந்துள்ளது. ராமகிருஷ்ண மடத்தில் எல்லோரும் டீ குடிப்பதால் அதற்கு வரியை அதிகரிக்க முடிவெடுத்தது பாலி பேரூராட்சி நிர்வாகம். நிர்வாகத் தலைவரின் ஒப்புதலுடன் வரி அதிகரிக்கப்பட்டது.

அநியாயத்தை சகித்துக் கொள்ளும் பழக்கமே இல்லாத சுவாமி விவேகானந்தர் முனிசிபாலிட்டியை எதிர்த்து சின்சுரா ஜில்லா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களும் மடத்தில் டீ குடித்ததாக ஒப்புக் கொண்டனர்.

நீதிபதியாக இருந்த ஆங்கிலேயர் முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருந்தார். விஷயத்தைப் புரிந்துகொண்ட அவர் மடத்திற்கு குதிரையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இறுதியில் வரி விதிப்பு தள்ளுபடி செய்யப்பட்டது. வெறும் டீ தானே என்று சுவாமிஜி வாளாயிருக்கவில்லை. இந்தத் துணிவும் தன்னம்பிக்கையும் தானே நமக்கு புரட்சியாளர் விவேகானந்தரைப் பெற்றுத் தந்தது?

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s