-மகாகவி பாரதி
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்கு பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.... மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.

முன்னுரை- 8
‘அமிர்த சாஸ்திரம்’ – அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
இந்த ரகசியம் அறியாதவருக்கு பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.
க்ஷத்திரிய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள் எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.
மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா.
ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது, இந்நூல் ஞான சாஸ்திரங்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.
ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.
“முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, ‘தஸ்மாத் யுத்யஸ்வ பாரத’- ‘ஆதலால், பாரதா, போர் செய்’ என்ற பல்லவி வந்துகொண்டேயிருக்கின்றதன்றோ?” என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் – காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
(தொடர்கிறது)
$$$